புதன், 14 டிசம்பர், 2016

போட்டதேர்வு எழுத முயற்சிப்பவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து முறையான பயிற்சி எடுக்காவிட்டால் நேரம் வீணாகும்

யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுத முயற்சிப்பவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து முறையான பயிற்சி எடுக்காவிட்டால் நேரம் வீணாகும் எனக் கூறுகிறார் ஐ.பி.எஸ். பணி செய்தபடியே ஐ.ஏ.எஸ். பெற்ற எஸ்.ராஜலிங்கம். 2008 பேட்ச்சின் உ.பி. மாநில அதிகாரியான இவர், உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்ட ஆட்சியராக உள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். பொறியியல் பட்டம் பெற்ற பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியபோது யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் ஆர்வம் வந்தது. சென்னையின் அண்ணா தமிழக அரசின் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்டில் பயிற்சி எடுத்தார். 2004-ல் அளித்த முதல் முயற்சியிலேயே நேர்முகத் தேர்வு வரை சென்றவருக்குக் கிடைத்த குறைந்த மதிப்பெண்ணால் எந்தப் பணியும் கிடைக்கவில்லை. மறு முயற்சியில் ஐ.பி.எஸ். வென்று, 2006-ம் ஆண்டு பேட் உ.பி. மாநிலப் பிரிவு அதிகாரியாகப் பொறுப்பேற்றார். இதில் ஐதராபாத் போலீஸ் அகாடமியின் பயிற்சி எடுத்தவாறே மூன்றாவது முறை முயன்றபோது மீண்டும் ஐ.பி.எஸ்.தான் கிடைத்தது. கடைசியாக ஒரு முறை முயற்சிக்கலாம் என்று நான்காவது முறை எழுதி வெற்றிகரமாக ஐ.ஏ.எஸ். ஆனார்.

பயிற்சியின் பலன்

"நமக்கு விருப்பமில்லாத பணியைச் செய்துவிட்டுச் சில வருடங்களுக்குப் பிறகு வருந்துவதை விட ஆரம்பக் கட்டத்திலேயே வேறு முயற்சி செய்யலாம் என முடிவெடுத்தேன். இதற்கு என்னுடைய பெற்றோரும் ஆதரவளித்தனர். வேலையை ராஜினாமா செய்துவிட்டு யூ.பி.எஸ்.சி. தேர்வுக்கு விருப்பப் பாடங்களாகப் பொது நிர்வாகத்தையும் தமிழையும் தேர்ந்தெடுத்தேன். தமிழில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்காததால் அதை நானாகவே படித்தேன். சொந்த ஊருக்கு அருகிலுள்ள மேலகரத்தின் நூலகம், சென்னையின் கன்னிமாரா, தேவ நேயப் பாவணர் ஆகிய நூலகங்களிலும் படித்தது உதவியாக இருந்தது. ஆனால், தானாகத் தேடிப் படித்ததால் நேரம் கூடுதலாகச் செலவழிக்க வேண்டிவந்தது. பயிற்சி நிலையங்களில் சேர்வதன் மூலம் எதைப் படிப்பது என்பது உட்பட நல்ல வழிகாட்டுதல் கிடைக்கும் என்பதை உணர்ந்து அண்ணா அரசு பயிற்சி நிலையத்தில் சேர்ந்தேன். அதன் முதல்வரான பிரபாகரன் எனக்குச் சிறந்த வழிகாட்டியாக இருந்தார். அடுத்தடுத்து நான் செய்த முயற்சிகளில் என்னை ஊக்கப்படுத்தினர் எனது கல்லூரி தோழி நித்யா. அவரே எனது வாழ்க்கைத் துணையாகவும் பின்பு மாறினார்" என்கிறார் ராஜலிங்கம்.

ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்-ல் வகித்த பணிகள்

2006-ம் ஆண்டு பேட்ச்சில் உபி மாநிலப் பிரிவின் ஐ.பி.எஸ். பெற்ற ராஜலிங்கம், அலிகர் மாவட்டத்திலும் மொராதாபாதிலும் ஏ.எஸ்.பி.யாகப் பணியாற்றினார். 2009 பேட்ச்சின் ஐ.ஏ.எஸ். பெற்றவர் பாந்தாவில் துணை ஆட்சியர் (பயிற்சி), தேவரியாவில் தலைமை வளர்ச்சி அதிகாரி, ஒரய்யாவின் ஆட்சியர், உ.பி.யின் பால்வளத்துறையின் சிறப்புச் செயலாளர் ஆகிய பணிகளை வகித்துள்ளார்.

பணி அனுபவம்

தனியார் நிறுவனங்களுக்கு இணையாக உபியின் 'பராக்' பால்வளத்துறையை ராஜலிங்கம் தலைமையிலான குழுவினர் செயல்பட வைத்தைப் பாராட்டி உபி மாநில முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் பால்வளத் துறையின் மறுசீரமைப்பிற்காக ரூ.1200 கோடி நிதியை ஒதுக்கினார். நாடு முழுவதிலும் நடைமேடைகளில் கூடாரங்கள் அமைத்துப் பல வருடங்களாக வசிக்கும் குடும்பங்கள் உண்டு. இதுபோல், சுல்தான்பூரின் நடைமேடைகளில் 50 ஆண்டுகளாக 18 குடும்பங்கள் வாழ்ந்தனர். நதிக்கரையில் வளரும் கோரைப்புல்லில் தார்பாய், மூங்கில் பொருட்கள் தயாரித்து விற்றுப் பிழைப்புநடத்தினார்கள். இவர்களிடம் அவ்வப்போது பேசி அதன் ஆண்கள் சுயதொழிலுக்கு வங்கி கடன், பெண்களுக்குச் சுயதொழில் பயிற்சி, குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு, உ.பி. மாநிலத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு அளிக்கப்படும் மாத பென்ஷன் தொகை, பல்வேறு வயதிலான குழந்தைகளுக்குப் பள்ளியில் சேர்ப்பு, ரேஷன், அடையாள அட்டை என அனைத்தையும் வழங்கினார். இவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்களுக்கு விற்பனை வசதியும் அவர்களுக்குச் சாதிச் சான்றிதழ்களும் வழங்குவதற்குத் தற்போது முயன்று கொண்டிருக்கிறார் ராஜலிங்கம்.

புதியவர்களுக்கான ஆலோசனை

கடந்த ஆண்டுகளின் கேள்வித்தாள்களைப் படித்துப் பயிற்சி எடுத்தால் என்ன படிக்க வேண்டும் என்பது ஓரளவிற்குத் தெரிந்துவிடும்.

அன்றாடம் எவ்வளவு படிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல. நாள் ஒன்றுக்கு நாம் எத்தனை மதிப்பெண்ணுக்கு உரியதைப் படித்தோம் என்பது முக்கியம்.

படிப்பதற்குப் பல பக்கங்கள் கொண்ட நூல்கள் உள்ளதாகக் கருதி, நாளிதழ்கள் படிக்காமல் விடக் கூடாது.

நேர்முகத் தேர்வின்போது படபடப்பு காரணமாகத்தான் முதல் மூன்று முயற்சிகளிலும் எனக்கு மதிப்பெண் குறைந்து. திடீரென்று பயத்தைப் போக்க முடியாது. நமது வீடுகளிலிருந்து இது தொடங்க வேண்டும். வெற்றியைப் பற்றி யோசிக்காமல் பள்ளிக் காலம் முதல் பேச்சுப் போட்டிகளிலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது பலன் தரும்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக