வியாழன், 15 டிசம்பர், 2016

தமிழ் ஊடக உலகின் தனித்த குரலாக இருந்த சோ ராமசாமி


தமிழ் ஊடக உலகின் தனித்த குரலாக இருந்த சோ ராமசாமி  'துக்ளக்' இதழின் ஆசிரியராக இருந்த அவர், தமிழக அரசியலிலும் தேசிய அரசியலிலும் மிகுந்த தாக்கம் செலுத்தியவர்.

சென்னை மயிலாப்பூரில் ஸ்ரீநிவாச ஐயருக்கும், ராஜம்மாளுக்கும் மகனாக 1934 அக்டோபர் 5-ல் பிறந்தவர் ராமசாமி. இளங்கலை அறிவியலும் சட்டமும் பயின்று வழக்கறிஞரானார். அவரது குடும்பத்தில் அவரது தந்தை புகழ்பெற்ற வழக்கறிஞர், தந்தைவழி, தாய்வழித் தாத்தாக்கள் புகழ்பெற்ற நீதிபதிகள். அந்த மரபில் அவரும் இணைந்தார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும் டிடிகே நிறுவனத்தின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றினார். பொழுதுபோக்காக அந்தக் காலகட்டத்தில் நாடக உலகில் நுழைந்தவரை வெகுசீக்கிரம் சினிமா உலகம் அரவணைத்துக்கொண்டது. 'முகமது பின் துக்ளக்', 'என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்', 'இன்பக் கனா ஒன்று கண்டேன்', 'சட்டம் தலை குனியட்டும்', 'நேர்மை உறங்கும் நேரம்' ஆகிய அரசியல் நாடகங்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் என்று கலை உலகோடு கலந்துபோனவர், பத்திரிகையாளராக உருவெடுத்தது ஒரு சுவாரஸ்ய திருப்பம்.

நண்பர்களுடனான ஒரு உரையாடலின்போது, "பத்திரிகை நடத்த முடியுமா?" என்று நண்பர்கள் விட்ட சவாலின் தொடர்ச்சியாக, பத்திரிகை உலகில் அடியெடுத்து வைத்தவர் அவர். பத்திரிகை தொடங்கலாமா, வேண்டாமா என்று 'தி இந்து' ஆங்கில நாளிதழில் வாசகர்களிடம் யோசனை கேட்டு அவர் கொடுத்த விளம்பரமும், "சோவின் பத்திரிகை வந்துவிட்டதாமே, ஆம்.. இனி நமக்கு நல்ல தீனிதான்" என்று இரு கழுதைகள் பேசிக்கொள்வது போன்ற முதல் இதழின் அட்டைப் படமும் அவரது குறும்பையும் புதுமையான சிந்தனை வீச்சையும் கணத்தில் உணர்த்தக் கூடியவை. உற்ற நண்பரும் 'விகடன் குழும'த் தலைவருமான எஸ்.பாலசுப்பிரமணியனின் நிபந்தனையற்ற ஆதரவும் ஊக்கமும் உடனிருக்க… மிக விரைவில் தமிழ் ஊடகப் பரப்பில் தவிர்க்க முடியாத ஓரிடத்தை சோவின் 'துக்ளக்' பிடித்துக்கொண்டது.

ஒரு பத்திரிகையாளராக ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் மீது தனக்கே உரிய எள்ளலும் கூரிய பார்வையும் கொண்ட துணிச்சலான விமர்சனங்களைத் தன்னுடைய 'துக்ளக்' பத்திரிகையின் மூலமாக அவர் முன்வைத்தார். பொதுவெளியின் மனநிலையைப் பொருட்படுத் தாமல், அது சரியோ, தவறோ - தான் நம்பியதை உரக்கச் சொன்ன அவருடைய துணிச்சல் அவரைத் தமிழகத்தின் முக்கியமான அரசியல் விமர்சகர்களில் ஒருவராக்கியது. முக்கியமாக நெருக்கடிநிலைக் காலகட்டத் தில் சோ காட்டிய துணிச்சல் என்றும் நினைவுகூரப்பட வேண்டியது. அவர் ஒரு வலதுசாரியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டாலும்கூட, அவருடைய 'துக்ளக்'அனைத்துத் தரப்புகளாலும் தொடர்ந்து கவனிக்கப் படும் பத்திரிகையாக இருந்தது. ஆண்டுதோறும் அவர் நடத்திவந்த 'துக்ளக்' ஆண்டு விழாவில் கூடிய ஆயிரக்கணக்கானோரின் கூட்டம், வேறு எந்தப் பத்திரிகையாளருக்கும் கிடைக்காத சோவின் வெகுஜன செல்வாக்குக்கு ஒரு சாட்சியம். இந்தச் செல்வாக்கு மாநிலத்தில் காமராஜர் முதல் கருணாநிதி, ஜெயலலிதா வரை மத்தியில் மொரார்ஜி தேசாய் முதல் மோடி வரை அவருக்குப் பெரும் தொடர்புகளை உருவாக்கித் தந்தது. ஒருகட்டத்தில் அரசியல் கூட்டணிகளை உருவாக்குபவராகவும் ஆட்சி மாற்றங்களுக்கு வழிவகுப்பவராகவும்கூட அவர் விளங்கினார். பாஜக சார்பில் தேர்வுசெய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை மாநிலங்களவை உறுப்பினராக சோ இருந்தார்.

தமிழ் ஊடகத் துறை, கலைத் துறை, அரசியல் துறை, சட்டத் துறை எனப் பல்துறை வித்தகராகத் திகழ்ந்த சோ, எங்கும் தன்னுடைய முத்திரைகளை அழுத்தமாகப் பதித்துவிட்டே வாழ்வைக் கடந்திருக்கிறார். சோவின் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்!


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக