ஒரு மொழிக்கு இலக்கணம் எந்த அளவு முக்கியம்? இதுபற்றி மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. சொல்லும் விஷயம் எதிராளிக்குச் சரியானபடி சென்று சேரவேண்டும், அதற்கு அநியாயச் சுருக்க எஸ்.எம்.எஸ். மொழியே போதும் என்பது ஒரு கட்சி, அந்த எஸ்.எம்.எஸ்.ஸில்கூட இலக்கண சுத்தமாக எழுதமுடியாவிட்டால் எழுதாமலே இருக்கலாம் என்பது வேறொரு கட்சி.
ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன், நான் இதில் இரண்டாவது கட்சியைச் சேர்ந்த தொண்டன். அதுவும் மிகத் தீவிரமான வன்தொண்டன்.
அதற்காக என்னை இலக்கணப் பண்டிதன் என்று எண்ணிவிடவேண்டாம். எல்லாரையும்போலப் பள்ளியில் 'தமிழ் இரண்டாம் தாள்' தேர்வுக்காகமட்டுமே இலக்கணம் படித்து, மனப்பாடம் செய்து பரீட்சை எழுதிவிட்டு, பின்னர் அதைச் சுத்தமாக மறந்துவிட்ட சராசரி மாணவன்தான் நானும்.
பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் சென்றபின், தமிழ் இலக்கணத்தோடு எனக்கும் தொடர்பறுந்துபோனது. நல்லவேளையாக, செய்தித்தாள்கள், பத்திரிகைகள், புத்தகங்கள், மாத நாவல்கள் என்று கைக்குக் கிடைத்தவற்றையெல்லாம் வாசிக்கிற பழக்கம்மட்டும் தொடர்ந்தது.
வெகுஜன மீடியாவையோ, இலக்கியச் சிற்றிதழ்களையோ, ஏன் பெரும்பாலான தமிழ்ப் புத்தகங்களையோகூட தொடர்ந்து வாசிப்பதில் ஒரு பிரச்னை, அங்கே மொழி விஷயத்தில் பொதுத்தன்மை என்று எதுவும் இல்லை. சிலர் நல்ல இலக்கண சுத்தமாக எழுதுவார்கள், வேறு சிலருடைய எழுத்தில் பிழைகள் மலிந்திருக்கும். எது சரி, எது தவறு என்று பிரித்துப் புரிந்துகொள்கிற ஞானம் நமக்கு இல்லாவிட்டால், இதுவும் உள்ளே போகும், அதுவும் உள்ளே போகும், இரண்டிலும் ஒரே வார்த்தை வெவ்வேறுவிதமாக எழுதப்பட்டிருக்கிறதே என்றுகூட யோசிக்கமாட்டோம், யோசிக்கத் தோன்றாது.
காரணம், பள்ளியில் எனக்குச் சொல்லித்தரப்பட்ட தமிழ் இலக்கணப் பாடங்கள் எவையும், 'பின்னர் நீ வாசிக்கப்போகிற, எழுதப்போகிற, பேசப்போகிற எல்லா எழுத்துகளுக்கும் இவைதான் அடிப்படை' என்கிற கண்ணோட்டத்தில் முன்வைக்கப்படவில்லை. அப்படிச் சொல்லித்தரப்படவில்லை.
மாறாக, இலக்கணப் பாடம் என்பது செய்யுள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு என்றுதான் நான் அப்போது நினைத்தேன். பாடத் திட்டங்களும் அப்படிதான் அமைந்திருந்தன.
சரி, அதைப் படித்துச் செய்யுள் எழுதவாவது கற்றுக்கொண்டிருக்கலாமே என்றால் எனக்கு வாய்த்த வாத்தியார்கள் அதையும் சரியாகச் செய்யவில்லை. இலக்கணத்தை ஒரு கட்டாய விதிமுறைமாதிரி மூளைக்குள் சிரமப்பட்டுத் திணித்தார்களேதவிர, அதனால் ஆய பயன் என்ன என்று ஒருவரும் சொல்லவில்லை. நாங்களும் அவர்களைக் கேட்கவில்லை.
இதனால், இலக்கணப் பாடம் என்பது வெறும் மனப்பாடம்தான். பரீட்சையில் எழுதும்வரைதான் அதற்கு மரியாதை, அதன்பிறகு அதை இரட்டைக் கிளவி, அடுக்குத்தொடர், ஆகுபெயர், ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று ஞாபகத்தில் வைத்திருப்பதுகூட, சும்மா பழைய நினைவில் மிதக்கும் விஷயம்தான், பயன் கருதி அல்ல.
பயன் என்றால், காசு சம்பாதிப்பதை நினைத்துவிடாதீர்கள். இன்றைக்கு எல்கேஜியில் சேரும்போதே 'கேம்பஸ் இண்டர்வ்யூ உண்டா?' என்று விசாரிக்கிறார்கள். நான் சொல்வது அதுவல்ல.
இலக்கணம் என்பது ஒரு மொழிக்கு ஆணி வேர் போன்றது. அதைச் சரியாகக் கற்றுக்கொண்டவர்கள் பிழையின்றி எழுதலாம், ஒவ்வொரு சொல்லையும் சரியாக உச்சரிக்கலாம், அப்படிப் பிழையின்றி எழுதுவது, பேசுவது மொழியின் தூய்மைக்கு முக்கியம், அசுத்தம் குறைவான மொழி நீண்ட நாள் பிழைக்கும், ஆகவே, நீங்கள் இலக்கணத்தைச் சரியாகப் படிக்கவேண்டும், பயன்படுத்தவேண்டும், பிழை இல்லாமல் எழுதுவதில், பேசுவதில் பெருமை கொள்ளவேண்டும்… இந்தக் கண்ணோட்டத்தில் சொல்லித்தந்திருந்தால், பள்ளி இலக்கணப் பாடங்கள், வகுப்புகளை நான் இன்னும் கொஞ்சம் உருப்படியாகப் பயன்படுத்திக்கொண்டிருப்பேன்.
இப்படி இலக்கணத்தை ஒழுங்காகப் படிக்காமல் (அல்லது, படித்து, அதை மறந்துவிட்டு) கல்லூரிக்கு வந்த நான், பத்திரிகைகளில், புத்தகங்களில் படித்த தமிழை நம்பிக் கதையெல்லாம் எழுத ஆரம்பித்தேன். பத்திரிகைகள் அவற்றை அதிவேகத்தில் திருப்பி அனுப்ப, அவர்களைத் திட்டித் தீர்த்தேன். மறுபடி அதே கதைகளை எந்த மாற்றமும் இல்லாமல் வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பித் தோற்றேன்.
இங்கே மாற்றம் என்பது இலக்கண மாற்றம் அல்ல, கதையே திராபையாக இருந்திருக்கலாம், ஆனால் அப்போது நான் எழுதிய மொழி இன்னும் திராபையாகதான் இருந்திருக்கவேண்டும்.
இது எனக்குப் புரியவே இல்லை. மேலும் மேலும் பிழை மலிந்த வணிக எழுத்துகளைமட்டுமே படித்து, அதே பாணியில் கதைகளை எழுதித் தள்ளினேன், அவற்றில் சிலது பிரசுரமாயின, ஆனால் அப்போதும், எழுத்து நடையிலும் பாத்திரப் படைப்பிலும் செலுத்திய கவனத்தில் ஒரு துளிகூட, மொழியைச் செம்மையாக்க நான் தரவில்லை.
அதிகம் வேண்டாம், என் கதைகளைப் பிரசுரித்த பத்திரிகைகள், அவற்றில் என்னமாதிரி மாற்றங்களைச் செய்துள்ளார்கள் என்பதைமட்டும் கவனித்திருந்தாலே போதும், நான் நிறைய கற்றுக்கொண்டிருப்பேன்.
ஆனால், அப்போது அந்தச் சிந்தனையே வரவில்லை. கதை பிரசுரமாகிறதா? காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு காலேஜைச் சுற்று. அடுத்த கதை எழுது, அவ்வளவே!
இந்தச் சுழலில் சிக்கிக்கொண்ட நான், அடுத்தடுத்த கதைப் பிரசுரங்களால் மேலும் மிதப்படைந்தேன். நிறைய எழுதிக் குவித்தேன், அதேசமயம், எந்தப் பத்திரிகைக்கு எதை எழுதினால் பிரசுரமாகும் என்ற நுட்பமும் புரிந்துவிட்டது, அதனால், கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய கதைகள் திரும்பி வருவது குறையத் தொடங்கியது.
இப்போது யோசித்தால், மிக வெட்கமாக இருக்கிறது. அப்போது நான் எழுதிய சிறுகதைகளைப் பிரசுரித்த உதவி ஆசிரியர்கள் அதில் பிழை திருத்தம் செய்ய என்ன பாடு பட்டார்களோ!
அவர்கள் அங்கே சிவப்புப் பேனாவோடு மாங்கு மாங்கென்று உழைக்க, இங்கே நான், என் எழுத்தில் பிழைகள் இருப்பதுகூடத் தெரியாமல், அவற்றை நானே சரி செய்வதன் முக்கியத்துவத்தை உணராமல், திரும்பத் திரும்ப அதே பிழைகளோடு எழுதிக் குவித்துக்கொண்டிருந்தேன்.
முதன்முறையாக, இந்தச் சுழலில் இருந்து என்னை விடுவித்தவர், பா. ராகவன். அவர் பத்திரிகையில் வேலை செய்தபோது என்னுடைய பல சிறுகதைகள், கட்டுரைகளை அவரே பிழை திருத்திப் பிரசுரித்திருக்கிறார். ஆனால், நான் புத்தகம் எழுதத் தொடங்கியபோது, 'இந்த வேலையே கூடாது, நீதான் பிழை திருத்தணும்' என்று சொல்லிவிட்டார்.
'பிழை திருத்தறதுன்னா? ப்ரூஃப் ரீடிங்கா?' என்று நான் முகம் சுளித்தேன்.
'பேப்பர்ல பிழை திருத்தறதுதான் ப்ரூஃப் ரீடிங், அதைச் செய்யப் பல ஆளுங்க இருக்காங்க' என்றார் அவர், 'நான் சொல்றது, உன் புத்தியில திருத்தணும், அடுத்தவாட்டி இந்தப் பிழையைச் செய்யவேகூடாது, அது உன்னாலமட்டும்தான் முடியும்.'
அப்போதும் எனக்குப் புரியவில்லை. இத்தனை சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறேன், மிக விரைவில் நோபல் பரிசு வாங்கப்போகிறேன், என் எழுத்தில் என்ன பிழை இருக்கமுடியும்? ஹ்ஹா!
ராகவன் பொறுமையாகச் சொல்லித்தந்தார். ஒவ்வொரு புத்தக மேனுஸ்க்ரிப்ட் தயாரானதும், அதை வாசிக்கும்போதே என்னையும் மின் அரட்டைப் பெட்டியில் அழைத்து, வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை திருத்தம் சொன்னார், அதற்கான காரணங்களையும் விளக்கினார், எப்படிச் சரியாக எழுதவேண்டும் என்று கற்றுத்தந்தார்.
அந்த அனுபவத்தை என்னால் வாழ்நாள்முழுவதும் மறக்கமுடியாது. என் எழுத்தில் இத்துணை பிழைகளா? இதையா ஊர்முழுக்கப் பெருமையுடன் காட்டிக்கொண்டு திரிந்தேன்? கூனிக் குறுகிப்போனேன்.
பள்ளியிலேயே இலக்கணத்தின் முக்கியத்துவத்தைச் சொல்லித்தராத வாத்தியார்மீது பழியைப் போடுவது சுலபம், ஆனால் அதனால் என் எழுத்து மேம்பட்டுவிடுமா என்ன? நான்தானே ஏதாவது செய்யவேண்டும்?
முதலில், ராகவன் சொன்ன பிழைகளை என் எழுத்தில் தவிர்க்கத் தொடங்கினேன். அவற்றையும், மூளையிலேயே திருத்துவது அத்தனை சுலபமாக இல்லை, எழுதி முடித்தபின் தேடித் திருத்தினேன், கொஞ்சம் கொஞ்சமாக அவை புத்தியில் பதிந்துகொண்டன.
அதன்பிறகு, அடுத்த புத்தகம், அதிலும் வேறு புதுப் பிழைகளை ராகவன் கண்டுபிடித்துச் சொல்வார், சளைக்காமல் திருத்துவேன், இப்படி நான் அவரிடமிருந்து கேட்டுக் கேட்டுத் தெரிந்துகொண்டு சேமித்துவைத்த (மிக நீளமான) திருத்தப் பட்டியல் இன்னும் என்வசம் இருக்கிறது.
ஆனால், எவ்வளவுதான் ராகவனால் சொல்லித்தரமுடியும்? பிழை செய்துவிட்டுப் பாடம் கேட்பதைவிட, எழுதுமுன் காப்பது மேல் அல்லவா?
அவரிடமே கேட்டேன், 'நான் என்ன செய்யணும் சார்?'
'அது ரொம்ப ஈஸி' என்றார் அவர், 'நன்னூலும் தொல்காப்பியமும் படி!'
'சரி' என்று தலையாட்டிவிட்டேனேதவிர, அவற்றை உடனே படித்து உள்வாங்கிக்கொள்ளமுடியவில்லை. கடந்த ஏழெட்டு வருடங்களாக மெதுவாக வாசிக்கிறேன், ஒவ்வொரு நூற்பாவிலும் ஒவ்வொரு சூத்திரத்திலும் புதுப்புது விஷயங்கள் புரிகிறது. குறித்துவைத்துக்கொள்கிறேன், வேறு விஷயம் வாசிக்கிறேன்.
இப்போதும், என் எழுத்து பிழையற்றது என்று சொல்லமாட்டேன். அப்படி யாருமே சொல்லமுடியாது என்று நினைக்கிறேன், ஆனால், பிழையற்று எழுதவேண்டும் என்ற முனைப்புடன்தான் ஒவ்வொரு வரியையும் எழுதுகிறேன் என்றுமட்டும் உறுதியாகச் சொல்வேன். அதுதான் இலக்கணப் பயிற்சியின் நோக்கம் என்று நான் நினைக்கிறேன்.
நன்னூல் மற்றும் தொல்காப்பியத்திலிருந்தும், வேறு சில இலக்கண நூல்களிலிருந்தும் நான் கற்றுக்கொண்ட விஷயங்களை நண்பர்களிடம் அவ்வப்போது சொல்லும்போது, அவர்கள் இதுபற்றி மேலும் கேள்விகளைக் கேட்டார்கள், என் விரல் நுனியில் பதில் இல்லை, தேடிப் படித்துப் பதில் தெரிந்துகொண்டேன்.
அப்போதுதான், தமிழ்மீது பிரமிப்பும் பலமடங்கு அதிகரித்தது. எழுத்து, சொல், புணர்ச்சி, செய்யுள், உச்சரிப்பு, கவிதை அழகு என ஒவ்வொன்றுக்கும் இத்துணை தெளிவான வரையறை, கச்சிதமான கட்டமைப்பைக் கொண்ட வேறு மொழி இலக்கணம் உலகில் உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை!
தமிழ் இலக்கணத்தின் சிறப்பு, it is pure common sense. சூத்திரங்களை மனப்பாடம் செய்யக்கூட வேண்டாம், பெரும்பாலான நேரங்களில், உங்கள் பொதுச் சிந்தனை அடிப்படையில் அங்கே என்ன வரவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதுதான் சரியாக இருக்கும். Very Predictable & Consistent!
அப்படியானால், பள்ளி மாணவர்கள் இதைப் பயில்வதில் ஏன் இத்தனை பாடு? நானும் என் நண்பர்கள் பலரும் பள்ளி, கல்லூரியை விட்டு வந்து வேலை பார்க்க ஆரம்பித்தபிறகும் இலக்கணம் படிப்பது என்றால் தலையைச் சொறிகிறோமே, அது ஏன்? யோசித்தபோது, ஒரு விஷயம் புரிந்தது, பள்ளியில் தமிழ் இலக்கணம் சொல்லித்தருவது சரிதான், ஆனால் அங்கே நாம் பயன்படுத்தும் உதாரணங்கள் தவறு, அவற்றை முன்வைக்கும் விதம் தவறு.
உதாரணமாக, 'செம்மலர்' என்பது பண்புத்தொகை என்று பள்ளியில் சொல்லித்தந்தார்கள். அதை ஞாபகம் வைத்துக்கொள்ள செம்மை + மலர் என்று பிரித்துக் காட்டினார்கள், இதில் 'மை வருவதால் அது பண்புத்தொகை' என்று மனப்பாடம் செய்துகொண்டோம்.
இன்றைக்கும் 'மை வந்தால் பண்புத்தொகை' என்கிற சூத்திரம் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அது எத்துணை அழகான இலக்கண வகை என்பது தெரியாது.
'செம்மை' என்பது ஒரு பண்பு, இங்கே 'செம்மலர்' என்ற வார்த்தையில் அந்தச் 'செம்மை' நேரடியாக வெளிப்படாமல், 'மை' என்பதுமட்டும் தொக்கி நிற்கிறது, அதாவது மறைந்து நிற்கிறது, பண்பு ஒன்று தொக்கி நிற்பதால், அது பண்புத் தொகை : இப்படிச் சொல்லித்தந்திருந்தால், 'ஒமாஹசீயா' ரேஞ்சுக்கு 'மை வந்தா பண்புத்தொகை' என்று மனப்பாடம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
அடுத்து, 'செம்மலர்' என்ற பெயரே நமக்கு அந்நியமானது, நிஜ வாழ்க்கையில் சகஜமாகப் பயன்படுத்தும் பெயர் அல்ல அது, ஆகவே, அதைக் கேட்கும்போதே, 'இது ஏதோ செய்யுள் மேட்டர் டோய்' என்று மனத்துக்குள் ஒரு மணி அடித்துவிடுகிறது. ஒதுங்கி நிற்கத் தயாராகிவிடுகிறோம்.
அதற்குப் பதிலாக, 'செம்மண்', 'கருங்கல்' போன்ற உதாரணங்களைப் பயன்படுத்தினால்? 'இந்த இலக்கணமெல்லாம் நிஜ வாழ்க்கைலகூடப் பயன்படும்போலிருக்கே' என்று மாணவன் யோசிப்பான் அல்லவா? அடுத்தமுறை வீட்டுத் தோட்டத்தில் செம்மண்ணைப் பார்த்தால் பண்புத்தொகை பளிச்சென்று ஞாபகம் வருமே.
இவ்விதமான எதார்த்த அணுகுமுறைதான் இலக்கணப் பாடத்தில் குறைவு. அதனை மொழிக் கட்டுமானத்துக்கான அடிப்படைக் கல்லாகப் பார்க்காமல், செய்யுள் எழுதுவதற்கான அவசியப் பாடமாகவே சொல்லித்தருவதால், அது அத்துணை முக்கியமல்ல என்ற சிந்தனை மாணவர்களுக்கு வருவது நிச்சயம். நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது மாணவர்கள் நிஜ வாழ்க்கையில் செய்யுள் எழுதப்போவதில்லையே.
ஆனால், அவர்கள் அறிவியல், வரலாறு என்று பல பாடங்களில் பரீட்சை எழுதுவார்கள், நண்பர்கள், உறவினர்களுக்குக் கடிதம் எழுதுவார்கள், வேலைக்குச் சேர்ந்தபின் லீவ் லெட்டர் எழுதுவார்கள், இணையத்தில் ட்வீட் எழுதுவார்கள், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுவார்கள், வலைப்பதிவு எழுதுவார்கள், என்னைப்போல் கதை, கட்டுரை, புத்தகம்கூட எழுதுவார்கள்… ஆனால் அங்கெல்லாம், பள்ளியில் படித்த இலக்கணப் பயிற்சியைப் பயன்படுத்தவேண்டும், அதன்மூலம் தங்களுடைய மொழி நடையைச் செம்மையாக்கவேண்டும் என்று அவர்களுக்குக் கொஞ்சம்கூடத் தோன்றாது. காரணம், அது அப்படிச் சொல்லித்தரப்படவில்லை.
இந்தத் தொடரில், வழக்கமான அந்த இலக்கணப் பாடமுறையைக் கொஞ்சம் மாற்றிப்பார்க்கலாம் என்று விழைகிறேன். செய்யுள் உதாரணங்களுக்குப் பதிலாக, நாம் தினமும் பயன்படுத்தும் சொற்கள், வாக்கியங்கள், சினிமாப் பாடல்கள், டிவி விளம்பரங்கள், பட்டிமன்ற ஜோக்ஸ் என்று கலந்துகட்டுவேன்.
அதேசமயம், இலக்கணம் படிக்கிறோம் என்கிற எண்ணமும் நீர்த்துப்போய்விடக்கூடாது, இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் என்று தாவிச் சென்று அரைகுறை ஞானமோ அலட்சியமோ வந்துவிடக்கூடாது, ஆகவே, நன்னூல், தொல்காப்பியம் சொல்லும் அடிப்படை இலக்கணப் பாடங்கள் அனைத்தையும், ஆனா, ஆவன்னாவில் தொடங்கி வரிசையாகப் பார்க்கவிருக்கிறோம்.சும்மா வேடிக்கைக்காக அல்ல, நிஜமாகவே ஆனா, ஆவன்னாவில் தொடங்கிதான் பாடம் படிக்கப்போகிறோம். இதில் சிலது உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும், பல்லைக் கடித்துக்கொண்டு இன்னொருமுறை படித்துவிடுங்கள்.
நான் பயன்படுத்தும் உதாரணங்கள் சிரமமாக இருந்தாலோ, பொருத்தமாக இல்லாவிட்டாலோ, அல்லது, என் புரிதல் தவறாக இருந்தாலோ, தயவுசெய்து திருத்துங்கள். நான் இங்கே வாத்தியார் இல்லை, இது நான் சொந்தமாக எழுதும் பாடமும் இல்லை, நன்னூல், தொல்காப்பியம் கொஞ்சம்போல் படித்து குறிப்பெடுத்துக்கொண்டு வந்து அமர்ந்திருக்கிறேன், உதாரணங்களைமட்டும் செய்யுள்களில் இருந்து எடுக்காமல், நமக்குப் பரிச்சயமான சொற்களைப் பயன்படுத்தப்போகிறேன், உங்களுக்கு அதைப் படித்துக் காட்டிக் கருத்துக் கேட்கிறேன், அவ்வளவுதான்!
ஆரம்பிக்கலாமா?
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக