முதலில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காமமே இருந்தது. அந்த முரட்டுக்காமம் காலவோட்டத்தில் தன்னிலையில் சற்று வீரியம் குறைந்து,காதலாகக் குவிந்து, பெண் மீதும் ஆண்மீதும் அன்பாக மலரத் தொடங்கியது. இதற்குக் காரணங்கள் பல. ஆண் – பெண் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களாக இருக்கலாம்.பெண்வழிச் சமுதாயத்தின் ஆளுகையாக இருக்கலாம். "வன்முறையால் எவற்றையும் அடைந்துவிடமுடியாது" என்ற உயரிய சித்தாந்தமாகக்கூட இருக்கலாம்.
அந்த அன்புமலரைக் காதலாகவும் காமமாகவும் சற்றுக் கூடுதலாக முரட்டுக்காமமாகவும் மாற்றும் வித்தையை ஆணும் பெண்ணும் படிப்படியாக அறியத்தொடங்கினர். ஆம்! அவர்கள் காமத்தை அன்பாகவும் அன்பைக் காமமாகவும் கையாளக் கற்றுக்கொண்டனர். ஆனால், அவர்களால் அவற்றை ஒருபோதும் காதலாக மட்டும் வைத்துக்கொள்ள முடியவில்லை. குளிர்ந்த நீரானது பனிக்கட்டியாக உறையுமுன் உள்ள தனிநிலை போலவோ, பனிக்கட்டி வெப்பமாகிக் குளிர்ந்த நீராவதற்குமுன் உள்ள தனிநிலை போலவோ காதலும் ஒரு பிடிபடாத சமமற்ற தனிநிலை.
காதற்திணைகள்
தொல்தமிழர் தங்கள் நிலங்கள் நான்கினுள் பாலையையும் சேர்த்து அவற்றை மொத்தமாக "அன்பின் ஐந்திணை" என்று கூறும் வழக்கம் உள்ளது. அதாவது, அவை காமம் கனிந்து, காதற்கனியாக விளைந்த அன்பின் ஐந்திணை. அந்த ஐந்து நிலத்திலும் காதல் இருந்தது. ஆனால், தன் வீரியத்தில் மாற்றங்களைப் பெற்றிருந்தது.
குறிஞ்சி என்றால் ஆண்-பெண் சேர்க்கை (பின்னிப்பிணைந்த இல்லறம்), முல்லை என்றால் பெண் தன் கற்பினைக் காத்திருத்தல் (இடைவெளியோடு கூடிய இல்லறம்), மருதம் என்றால் ஆண்-பெண் இல்லறவாழ்வில் இடைச்செருகலாக "சக கிழத்தி" (சக்காளத்தி) வந்ததால் ஏற்பட்ட மனக்கசப்பு (ஊடல்), நெய்தல் என்றால் தலைவனைப் பிரிந்த தலைவி "அவன் வருவான்" என்ற நம்பமுடியாத நம்பிக்கையில் இரங்கியிருத்தல் அல்லது புலம்புதல் (கேள்விக்குறியான இல்லறம்),பாலை என்றால் ஆண்-பெண் இல்லறவாழ்வில் ஏற்பட்டுவிட்ட, தாற்காலிகத்திலிருந்து நிரந்தரத்தை நோக்கிய பிரிவு (கேள்விக்குறியான வாழ்க்கை).
இப்படி வேறுபட்ட இல்லற வாழ்வுடைய ஐந்நிலங்களிலும் காதல் இருந்ததா? இருந்தது. அது இல்லையெனில் நெய்தல் திணையிலும் பாலைத் திணையிலும் தலைவி உயிருடன் இருந்திருக்க மாட்டாள். ஆம்! தலைவி உயிர்த்திருக்க அருமருந்தாக இருந்தது காதல்தான். ஒருவிதத்தில் அது அவளின் உயிராகவும் இருந்தது.
காதலும் காதல் நிமித்தமும்
சங்க இலக்கியங்களை அதன் பாடுபொருள் சார்ந்து அகம், புறம் எனப் பாகுபாடுசெய்துள்ளனர்.அகம் என்றால் அகத்திணை, புறம் என்றால் புறத்திணை. இங்குத் திணை என்பதனை ஒழுக்கம் என்ற பொருளில் கருதவேண்டும். ஆக, அகம் என்பது அகம் சார்ந்த ஒழுக்கம். அதாவது, அன்பு,காதல், காமம் மற்றும் பிறரிடத்தில் வெளிப்படையாகச் சொல்லத்தகாத அனைத்தும் அகத்திணையுள் அடக்கம். புறம் என்பது புறம் சார்ந்த, அகம் சாராத மற்ற ஒழுக்கங்கள்.அவையனைத்தும் புறத்திணையுள் அடக்கப்படும். சங்க இலக்கியப் பாக்கள் 2381. அவற்றுள் அகத்திணையைச் சார்ந்தவை 1862. அதாவது, 78.20 சதவிகிதப் பாடல்கள் அகத்திணையைச் சார்ந்தவை.
"காதல்" என்ற சொல் சங்க இலக்கியத்தில் எத்தனை இடங்களில் இடம்பெற்றுள்ளது என்பதனைத் தானே எண்ணி, "89 இடங்களில் காதல் என்ற சொல் இடம்பெற்றுள்ளது" என்ற கருத்தினை முனைவர் பெ. மாதையன் தெரிவித்துள்ளார்.iஅதாவது, புள்ளிவிவரப்படி பார்த்தால் 21 பாடலுக்கு ஒருமுறை "காதல்" என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
எல்லாத்திணைகளிலும் காதல் இலைமறை காயாகத்தான் இருந்துவந்துள்ளது. அதனால்தான் அதனைக் களவு (திருட்டுத்தனம்) என்ற சொல்லால் நாசுக்காகக் குறிப்பிட்டனர். ஒழுக்கம் என்பது, பெற்றோருக்குத் தெரியாத, அவர்கள் ஏற்றுக்கொள்ளாத காதல் "களவொழுக்கம்" என்றும் அவர்களுக்குத் தெரியவந்து, அது அவர்களால் ஏற்கப்பட்டால் அது "கற்பொழுக்கம்" என்றும் இருவகையில் பொருள்படுத்தப்பட்டது.
தேவதைகள் காத்திருக்கிறார்கள்
தலைவியும் தலைவனும் முதன்முதலில் சந்திக்கும் இடமாகப் பூம்பொழில் (சோலைவனம்),நீர்நிலை (அருவி, குளம், ஆறு,), விளைநிலங்கள் (தினைப்புனம்), விளையாட்டு ஆயம்(ஆடுகளம்) ஆகிய நான்கும் இருந்தன. இந் நான்கு இடங்களும் தலைவி தன் பெற்றோரின் அனுமதியினைப் பெற்றுத் தன் தோழியுடன் உலாவும் அல்லது சிறுசிறு பணிகளைப் புரியும் இடமாக இருப்பதனால் அங்கு அவளைத் தனித்துக் காணத் தலைவனுக்கு வசதியாக இருந்திருக்கலாம்.
பூக்களைப் பறித்து மாலைகட்டி மகிழ பூம்பொழிலுக்குத் தலைவிசெல்வது உண்டு. குளித்துக் கரையேறவோ அல்லது நீராடி மகிழவோ நீர்நிலைகளுக்குத் தலைவிசெல்வதும் உண்டு. தன் வீட்டாருக்குச் சொந்தமான நிலங்களில் தினை, சோளம், சாமை, வரகு முதலான பயிர்களை விளையச் செய்திருந்தால், அவற்றின் கதிர்முற்றிய காலங்களில் அவற்றைப் பறவைகளிலிருந்து காக்கப் பரணமைத்து, கவன்கற்களின் உதவியுடன் அவற்றை விரட்டும் பணிக்குத் தலைவிசெல்வதும் உண்டு. பந்து விளையாட, மணல்வீடு கட்ட மற்றும் இன்னபிற விளையாட்டுகளில் பொழுதினைக் கழிக்கும் பொருட்டு தலைவி தன் தோழியுடன் விளையாட்டுத் திடலுக்குச் செல்வதும் உண்டு. இந்த இடங்களிலெல்லாம் இளம்பெண்கள் தங்கள் பெற்றோரின் துணையின்றி வருவார்கள் என்பது இளைஞர்களுக்குத் தெரியும். இங்கெல்லாம் இளைஞர்கள் தங்களைக் காண ரகசியமாக வருவார்கள் என்பது இளம்பெண்களுக்கும் தெரியும். தலைவியின் தாய்க்கும் தெரியும். அத்தாயும் ஒருகாலத்தில் தலைவியாக இருந்தவள்தானே! இருந்தாலும் மகள் மீது கொண்ட நம்பிக்கை அவள் கண்களை மறைத்துவிடுகின்றது.
காதற்தீ
தலைவி மருதநிலத்துக்காரியாகவோ முல்லைநிலத்துக்காரியாகவோ இருக்கலாம். அதேபோல,தலைவன் மலைநாடனாகவோ, நெய்தல்நிலத்துக்காரனாகவோ இருக்கலாம். இருவரும் எதிர்ப்படும்போது அவர்களுக்குள் இருக்கும் உணர்வுத் தீ அவர்களை இணைத்துப் பற்றிக்கொண்டால் போதும். பின்னர், அத் தீ அணையாமல் இருக்கத் தோழியும் பாங்கனும்(தலைவனின் நண்பன்) காவல் காப்பர்.
முதல்சந்திப்புக்குப் பின்னர் அடுத்தடுத்த சந்திப்புகளை ஒழுங்குபடுத்திக்கொடுப்பது தோழியும் பாங்கனும்தான். அவர்களின் பகற்சந்திப்பினைப் பகற்குறி என்றும் இரவுச்சந்திப்பினை இரவுக்குறி என்றும் அழைப்பர். சந்திப்பு என்பது வெறும் பேச்சுமட்டுமல்ல. உடல்சார்ந்த அன்புறவும்தான்.
அவர்களின் காதலை அதாவது நட்புறவினைக் குறுந்தொகைப் பாடல் நிலத்தைவிட,கடல்நீரைவிட, வானைவிடப் பெரியதாக உயர்த்திக் கூறியுள்ளது.
ஊர் சிரித்தது
தலைவியின் காதலை அவளின் நடவடிக்கைகளிலிருந்தும் அறிந்துகொண்ட ஊரார் நீர்த்துறைகளில் கூடும்போது தங்களுக்குள் பேசிக்கொள்வர். இதனைச் சங்க இலக்கியங்கள் "அம்பல்" என்று குறித்துள்ளன. இவ்வாறு இவர்கள் பேசிக்கொள்வதனைத் தலைவியோ அல்லது தலைவியின் உறவினர்களோ அறியமாட்டார்கள். தலைவியை அவளது காதலனோடு இணைத்துக் கண்டுவிட்ட ஊரார் அவர்களின் உறவு பற்றி தலைவியின் உறவினர் அறியுமாறு வெளிப்படையாகவே பேசுவர்.இதனைச் சங்க இலக்கியங்கள் "அலர்" என்று சுட்டியுள்ளன. ஒரு பெண்ணைப் பற்றி "அலர்" எழுந்தால், அது அப்பெண்ணின் கற்புக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிடும். இந்த அலர் ஊர்முழுவதும் பரவுவதனைத் தோழி, தலைவனுக்குத் தெரியப்படுத்துவாள். இதனை "அலர் அறிவுறுத்தல்" என்று கூறுவர். "உங்கள் காதல் ஊராருக்குத் தெரிந்துவிட்டது. ஊர் சிரிக்கிறது.உடனே வந்து தலைவியை மணந்து கொள்" என்பது இதன் உட்குறிப்பு.
நல்ல தோழி
இந்தக் களவு உறவு நீட்டித்தால் தலைவி கருவுற நேரிடும். ஆதலால், தோழி, தலைவன் –தலைவியின் திருமணம் குறித்து (அதனை வரைவு என்பர்) தலைவனிடம் வலியுறுத்திக்கொண்டே இருப்பாள். திருமணத்துக்காகப் பொருள்தேட(செல்வம்) தலைவன் வெளியிடங்களுக்குச் செல்லத் துணிவான். அப்போது, தலைவி தன் தலைவனைப் பிரிந்து தனித்திருக்க நேரிடும்.தலைவனின் பிரிவினைத் தாங்கிக்கொள்ள இயலாத தலைவியின் மனவோட்டத்தைச் சங்க இலக்கியப் பாடல்கள் பல எடுத்துக்கூறியுள்ளன. இரவில் அவள் தனித்து விழித்திருப்பாள். இரவுப் பொழுதில் ஏற்படும் சிறுசிறு ஒலிகளையும் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருப்பாள். இதனால்,அவள் உடல், தோள்வளைகள் மற்றும் கை வளையல்கள் நெகிழ்ந்து கழன்றுவிடும் அளவுக்கு மெலிவுறும். இதனைக் கண்ட தாய், தன் மகளைத் தெய்வம் அணங்கியதாகக் கருதி வேலனைக் கொண்டு வெறியாட்டு நிகழ்த்துவாள். இதுகுறித்து கடந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்தோம்.
இத்தருணத்தில்தான், தோழி தன் தலைவியின் காதல் புராணத்தை விரிவாகவும் நுட்பமாகவும் தலைவியின் தாய்க்கோ அல்லது தலைவியின் செவிலித்தாய்க்கோ (வளர்ப்புத் தாய்) தெரிவிப்பாள்.இப்பணியினைச் சங்க இலக்கியங்கள் "அறத்தொடுநிற்றல்" என்று அருமையாகச் சொல்லியுள்ளது.அதாவது, உண்மையைப் போட்டுடைத்தல்.
களவா? கற்பா?
எந்தப் பெற்றோர்தான் காதலை ஏற்பர்? இக்காலப் பொற்றோர் மட்டுமல்ல அதற்குச் சங்ககாலப் பெற்றோரும் விதிவிலக்கல்ல. சங்ககாலக் காதல் பெரும்பாலும் களவுதான். பின்னர் தலைவியின் வீட்டில் தோழியும், தலைவனின் வீட்டில் பாங்கனும் அவர்களின் பெற்றோருக்கு எடுத்துக்கூறி,தலைவன் – தலைவியின் களவொழுக்கத்தினைக் கற்பொழுக்கமாக மாற்ற முயல்வர். அம்முயற்சி கைகூடினால், பெற்றோர்கள் அவர்களுக்கு மணமுடித்து அல்லது அவர்களை ஏற்றுக்கொண்டு,தங்களுக்கு அருகிலேயே வைத்துக்கொள்ளவர். அம்முயற்சி கைகூடவில்லையெனில் தலைவன் –தலைவி உடன்போக்கினை மேற்கொள்வர். அதாவது, குடும்பத்தைவிட்டுப் பிரிந்துசென்று,தங்களுக்கென்று ஓர் இல்லமைத்துக் கற்பொழுக்கத்தில் வாழ்வர்.
பெற்றோர்கள் தலைவன் – தலைவியின் காதலை ஏற்காதுபோது அவர்களைத் தன்வழிப்படுத்துவதற்காகவும் அவர்கள் ஓடிப்போய்விடக்கூடாது என்பதற்காகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதும் உண்டு. தலைவின் பெற்றோர் தலைவியைத் தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள "இச்செறித்தல்" (இல்லத்தில் வைத்தல்) உண்டு. அதாவது, ஹவுஸ் அரெஸ்ட் - வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிடுதல். கூண்டுக்கிளியாக்கப்பட்ட தலைவியின் நிலையினைத் தலைவனுக்கு எடுத்துக்கூறித் தலைவி தன் உயிரைவிட்டுவிடுவாள். ஆதலால், எப்படியாவது அவளைக் காப்பாற்றி அழைத்துச்சென்று மணம்செய்துகொள் என்று தோழி, தலைவனிடம் மன்றாடுதல் உண்டு.
பெத்தமனம் பித்து
வீட்டைவிட்டுத் தன் தலைவனுடன் வெளியேறிய தலைவியின் நிலையினைக் குறித்துத் தாயும் செவிலித்தாயும் அடையும் துயரம் அளவற்றது. தன் மகள் விளையாடிய பாவைகள் (பொம்மைகள்),பந்து முதலானவற்றைப் பார்த்துப் புலம்பும் புலம்பல்கள் குறித்தும் தன் மகள் இவ்வழியே சென்றிருக்கலாம் என்று கருதி சில பாதைகளின் வழியே சென்று அவளைத் தேடி தந்தைகளின் ஆற்றாமை குறித்தும் யார்வழியாகவோ தன் மகள் இன்ன ஊரில் இன்ன இடத்தில் இப்படி வாழ்கிறாள் என்பதனைக் கேள்வியுற்று மனம்வெதும்பும் பெற்றோர்கள் குறித்தும் தன் மகள் எங்கிருந்தாலும் அங்கு அவள் நன்றாக இருக்கவேண்டும் என்று தன் தெய்வத்தை வணங்கும் தாயின் மனவோட்டம் குறித்தும் சங்க இலக்கியத்தில் பதிவுகள் பல உள்ளன. பிள்ளைகள் புதிய தம்பதியராக மாறி மகிழ்வுறும்போதும் அவர்களைப் பெற்ற பழைய தம்பதியரான பெற்றோர்கள் கலங்குவது ஒரு முரண்தான்.
அழியாக் காதல்
பெரும்பாலும் காதலுக்குத் தடையாக இருந்தவை நிலம்சார்ந்த வேறுபாடுகளும் வருவாய் சார்ந்த ஏற்றத்தாழ்வுகளும்தான். வயல்சார் வாழ்க்கையையுடைய தன் மகளை ஒரு மலைநாடனுக்கு மணம்முடித்துவைக்கத் தந்தை விரும்புவதில்லை. காரணம், மருதம், குறிஞ்சி என்ற நிலம்சார்ந்த வேறுபாடு. நாவாய்கள் (கப்பல்கள்) பல வந்துபோகும் துறைமுகத்துக்கு உரிமையுடையவர் தன் மகளை முல்லைநிலத்தில் பசுக்கள் சிலவற்றை மேய்க்கும் இளைஞனுக்கு மணம்முடித்துவைக்க விரும்புவதில்லை. காரணம், பொருளாதாரம் சார்ந்த ஏற்றத்தாழ்வு. இவையே இப்போதும் வேறுவடிவில் உள்ளன. அவற்றாலும் காதலை அழிக்க முடியவில்லை. காரணம், காதல் என்றும் அழிவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக