மக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத சம்பளத் தொகை பெறுவதற்கான உரிமை உள்ளது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றிய சுமார் 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் கடந்த 2011-ல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பல கட்ட சட்டப் போராட்டங்களில் மக்கள் நலப் பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும்படி கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆகஸ்ட் 19-ம் தேதி உத்தரவு தொடர்பாக விளக்கம் கோரும் மனுவை தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் டி.மதிவாணன் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "8.11.2011 அன்று பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை 31.5.2012 வரை தொடர்ந்து பணியில் நீடிக்க அனுமதித்து இருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஆகவே, 31.5.2012 வரை 7 மாத சம்பளம் பெற எங்களுக்கு உரிமை உள்ளது. இது தொடர்பாக தகுந்த உத்தரவை அரசுக்கு நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கூறியதாவது:
ஏற்கெனவே 5 மாத சம்பளத்தை தர அரசு ஒப்புக் கொண்டதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. சில பணியாளர்கள் 5 மாத சம்பளத்தைப் பெற்றுக் கொண்டனர். ஆனால் அன்றைய சூழ்நிலைகள் காரணமாக எங்கள் சங்க உறுப்பினர்கள் அப்போது 5 மாத சம்பளத் தொகையைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவால் 7 மாத ஊதியம் பெற எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு உரிமை உள்ளது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "ஏற்கெனவே 5 மாத ஊதியத்தை வாங்காத மக்கள் நலப் பணியாளர்களுக்கு அதைப் பெற உரிமை உள்ளது என்றும், 4 வாரங்களுக்குள் இந்த ஊதியத் தொகை வழங்கப்பட வேண்டும்" என்றும் உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக