சங்க காலம் / தேடல் – 08
தமிழ்ப் பேச்சாளர்கள் சிலர், "சங்ககாலத்தில் காதல்திருமணமே இருந்தது" என்றும் "காதலும் வீரமுமே அவர்களின் பண்பாடு" என்றும் மேடையில் முழங்குவதனை நாம் கேட்டிருக்கின்றோம். அவர்களின் கருத்து சரியன்று. அக்காலத்தில் பெற்றோர்கள், நெருங்கிய உறவினருக்குள் கூடிப்பேசித் திருமணத்தை நடத்தியுள்ளனர்.அத்திருமணங்கள் பெரும்பாலும் பலர் அறிய இருக்காது. ஜார்ஜ் எல். ஹார்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.
தூரத்து உறவினர் அல்லது உறவற்றவர்கள் பெண்கேட்டு மணமகள் வீட்டுக்கு வரும் வழக்கமும் அவர்கள் மணப்பெண்ணின் தந்தைக்குப் பெரும்பொருள்கொடுத்துத் திருமணத்தை உறுதிசெய்வதும் பரவலாக அக்காலத்தில் இருந்துள்ளது. இதனைக் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள 171, 374, 385 ஆகிய பாடல்களின் வழியாக அறியமுடிகின்றது.
உறவற்ற பெண்ணைக் காதலித்து, தன்பெற்றோருடன் வந்து அவளைப் பெண்கேட்டு அவளின் பெற்றோர் இசைவுடன் அவளை மணந்துகொண்ட ஆடவனைப் பற்றியும் குறுந்தொகையின்351ஆம் பாடல் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு பெற்றோர் முனைப்புடன் செயல்பட்டு, நடத்திவந்த திருமணங்களின் மத்தியில்,பிள்ளைகள் தன்னிச்சையாக நடத்திக்கொள்ளும் காதல் திருமணங்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில் இருந்ததால்தான் அவற்றைச் சங்க இலக்கியங்கள் வியப்புடன் நோக்கியுள்ளன.ஆதலால்தான், குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள 40ஆவது பாடல் (எல்லோருக்கும் தெரிந்தபாடல் "யாயும் யாயும் யாராகியரோ") எவ்வகையிலும் உறவற்ற இருவர் காதலராக மாறி மணமுடிப்பதனைச் சிறப்பித்துள்ளது. ஆக, "திருமணம்" என்ற கற்பொழுக்கம் மிகுதியாகவும் "காதல்" என்ற களவொழுக்கம் குறைவாகவும் அக்காலச் சமுதாயத்தில் இருந்துள்ளது. தொடக்கக் காலத்தில் திருமணங்கள் ஊரறிய நடத்தப்படவில்லை. ஆனால், ஊரறிய திருமணத்தை நடத்தவேண்டிய தேவை ஒருகாலத்தில் அவர்களுக்கு ஏற்பட்டது.
காதற்கள்வன்
களவொழுக்கத்தில் சில தருணங்களில் ஒழுக்கமின்மையும் இருந்தது. அதுதான் காதலித்த பெண்ணைக் கைவிடுதல் - ஏமாற்றுதல். ஒருவகையில் இவ்வகையான ஒழுக்கமின்மைதான் "அனைவருக்கும் தெரிவிக்கும் வகையிலான திருமணம்" (எல்லோர் முன்னிலையிலும் மணமக்களுக்குத் திருமணம் செய்துவைத்தல்) என்ற கருத்தாக்கத்தைத் தோற்றுவித்தது எனலாம்.அதற்குமுன்பு, காதலர்கள் தங்களுக்குள் மனமொத்தநிலையில் தாங்களாகவே திருமணம் செய்துகொண்டனர். மண ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தினை அவர்களுள் ஒருவர் மீறும்போது அல்லது மறுக்கும்போது அவர்கள் மட்டுமே அறிந்த அத்திருமணம் கேள்விக்குறியதானது.
இது, கபிலர் இயற்றியுள்ள குறிஞ்சித் திணைசார்ந்த குறுந்தொகைப் பாடல் ஒன்றில் மிகச் சிறப்பாகப் பதிவாகியுள்ளது. அந்தப் பாடலுக்கு விளக்கமே தேவையில்லை. எல்லோருக்கும் எளிதில் புரியும் வகையில் அமைந்த சில சங்க இலக்கியப் பாடல்களுள் அதுவும் ஒன்று.
"யாரு மில்லை தானே கள்வன், தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ … குருகு முண்டுதான் மணந்த ஞான்றே" என்ற இப்பாடலில் காதலித்து மணந்துகொண்டவன் இப்போது ஊரறிய வரைந்துகொள்ள (மணமுடித்துக்கொள்ள) காலம்தாழ்த்துகிறான். ஒருவேளை அவன் "அவளைத் தனிமையில் மணக்கவில்லை" என்று பொய் கூறிவிட்டால், அதனை மெய்ப்பிக்க அவளிடம் ஏதொரு சாட்சியமும் இல்லை. ஆதலால், தன் காதலனை - தன் கணவனை - தன் அழகினைக் கவர்ந்தவனை அவள் "கள்வன்" என்று குறிப்பிடுகின்றாள்.
இத்தகைய கள்வர்கள் நிறைந்ததால்தான், அவர்களின் பொய்யும் வழுவும் (குற்றம்) பெண்களின் வாழ்வைப் பாதித்ததால்தான் "கரணம்" (எல்லோர் முன்னிலையிலும் திருமணம்) என்ற "ஓப்பன் திருமணம்" தோற்றிவிக்கப்பட்டதாக தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
சிலம்பைக் கழற்றுதல்
அக்காலத்தில் பெண்ணுக்கு அவள் பருவமடைந்த பின்னர்தான் திருமணம் செய்வித்துள்ளனர்.குழந்தைத் திருமணம் வழக்கத்தில் இல்லை. பொதுவாகப் பன்னிரண்டு வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்வித்துள்ளனர்.
அக்காலத்தில் சிறுமிகள் தங்களின் கால்களில் சிலம்பு அணிந்திருந்தனர். அவர்கள் திருமணத்தின்போது தங்களின் கால்களில் உள்ள சிலம்புகளை அகற்றும் வழக்கம் இருந்துள்ளது.இதனைச் "சிலம்பு கழி நோன்பு" என்று குறிப்பிடுகின்றனர். இதுபற்றி ஐங்குறுநூற்றின் 399ஆம் பாடல் குறிப்பிட்டுள்ளது.
இருவீட்டார் சம்மதத்தோடு நடைபெறும் திருமணங்களில் இச்சடங்கு செய்யப்பெற்றுள்ளது.ஒருவீட்டார் சம்மதத்தோடு மட்டும் நடைபெறும் திருமணத்தில் இச்சடங்கு பின்பற்றப்படவில்லை.இதுகுறித்து நற்றிணையின் 279ஆம் பாடல் சுட்டியுள்ளது.
குறுந்தொகையின் ஏழாவது பாடலில், தலைவி தன் தலைவனுடன் வீட்டைவிட்டு ஓடிப்போனபோது(நடந்துதான்) அவர்களை வழித்தடத்தில் சந்திப்பவர்கள் தலைவியின் காலில் சிலம்பு இருப்பதனைக் கண்டு, "அவளுக்குத் திருமணமாகவில்லை" என்று கருதுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏன் தலைவி தன் காலில் சிலம்புடன் ஓடிப்போனாள்? ஒருவேளை மறந்திருக்கலாம்.இம்மறதியினை அகநானூற்றின் 17ஆவது பாடல் உறுதிப்படுத்தியுள்ளது.
பலவேளைகளில் தலைவிகள் சிலம்பினைக் கழற்றிவைக்க மறப்பதில்லை. இதனை, நற்றிணையின்9 மற்றும் 279 ஆகிய பாடல்களும் அகநானூற்றின் 321ஆவது பாடலும், "தலைவி தன் தலைவனுடன் உடன்போக்கு மேற்கொள்ளும்போது (ஓடிப்போகும் முன்) தன் காற்சிலம்பினைத் தன் தாய்வீட்டிலேயே கழற்றி வைத்துவிட்டுச் சென்றாள்" என்று குறிப்பிட்டுள்ளதால் அறியமுடிகின்றது.
"நோன்பு" என்று அதனைக் குறிப்பிடப்படுவதால், அது எதற்காக நோற்கப்பட்டது என்ற வினா எழுகிறது. ஒருவேளை அது அவர்களின் கன்னிமையைக் காக்க, அறிவுறுத்த அவர்களுக்கு அணிவிக்கப்பெற்றதாக இருக்கலாம். திருமணத்தின்போது அது நீக்கப்பெற்றாகவேண்டுமே!அதற்காகத்தான் இந்தச் சடங்கு.
திருமணத்தின்போது வேறு புதிய சிலம்பு அணிவிக்கப் பெற்றிருக்கவேண்டும். காரணம்,திருமணத்திற்குப் பின்னும் கண்ணகியும் கோப்பெருந்தேவியும் சிலம்பு அணிந்திருந்தனர். அப்புதிய சிலம்பு அப்பெண்ணுக்கு மிகவும் முதன்மையானதாக இருந்திருக்கவேண்டும்.
ஆம்! அதனால்தான் கண்ணகி தன்னிடமுள்ள அனைத்து செல்வங்களையும் கோவலனுக்கு அளித்தபின்னர், இறுதியாக அவனுக்குத் தன் காற்சிலம்புகளுள் ஒன்றினை மட்டும் வழங்கினாள்.திருமணமான பின்னர் பெண்ணுக்குத்தான் அணிந்துள்ள மங்கலநாணும் சிலம்பும் முதன்மையானதாக இருந்துள்ளன. தாலியை "ஈகையரிய இழையணி" என்று புறநானூற்றின்127ஆவது பாடல் சுட்டியுள்ளது.
திருமணத்தில் பெண்ணுக்குத் தாலி என்ற மங்கல நாணினை அணியும் சடங்கு பற்றிய குறிப்பு கிடைக்கப்பெறவில்லை. ஆனால், நெடுநெல்வாடை என்ற இலக்கியத்தில் 136ஆவது அடியில் அரசி தன் அரசனைப் பிரிந்த காலத்தில் கழுத்தில் இருந்த மங்கலநாணிணைத் தவிர மற்ற எல்லா அணிகலன்களையும் நீக்கிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆஹா கல்யாணம்
"கரணம்" என்ற இந்தத் திருமணங்களைத் தமிழர்கள் எவ்வாறு நிகழ்த்தினர் என்ற வினாவுக்குச் சங்க இலக்கியப் பாடல்கள் சில வீடியோ ஆதாரம்போல உள்ளன. குறிப்பாக, அகநானூற்றில் இடம்பெற்றுள்ள 86, 136 ஆகிய பாடல்கள்.
பெரிய பந்தல் அமைத்தனர். அதன் கீழே வேற்றிடத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புதுமணலைப் பரப்பினர். வீட்டில் விளக்கினை ஏற்றி வைத்தனர். மாலைகளைத் தோரணமாகத் தொங்கவிட்டனர்.உழுத்தம் பருப்புடன் சேர்த்துச் சமைத்த குழைதலையுடைய பொங்கலினை வைத்தனர். சந்திரன்,ரோகிணி நட்சத்திரத்தை அடைந்த நன்நாளின் விடியல் காலையில் மணச்சடங்குகளைத் தொடங்கினர். மணம்செய்துவைக்கும் மங்கலமுடைய முதிய மகளிர் தங்களின் தலையில் குடத்தினையும் கைகளில் அகன்ற "மண்டை" என்ற கலத்தினையும் வைத்துக்கொண்டு,ஆரவாரத்தோடு முறைப்படி பலவற்றை வழங்கினர். நன்மக்களைப் பெற்ற நான்கு மகளிர்கூடி,மணமகளைக் "கற்பினை வழுவாது நன்பேர் பெற்று கணவனை விரும்பிப் பேணுக" என வாழ்த்தினர் என்ற செய்தினை அகநானூற்று 86ஆவது பாடலில் நல்லாவூர்க் கிழார் கூறியுள்ளார்.
இறைச்சியுடன் கூடிய நெய்மிக்க (எண்ணெய்) வெள்ளியசோற்றை வள்ளல் தன்மையுடைய உயர்ந்த சுற்றத்தாருக்கு விருந்தாகக் கொடுத்தனர். புள் (பறவை) நிமித்தம் இனிதாக அமைந்தது.பெரிய வானம் தெளிவான ஒளியையுடையதாக விளங்கியது. சந்திரன் உரோகிணியைக் கூடிய நன்னாளில் மணம் நிகழும் வீட்டினை அழகுபடுத்தினர். கடவுளை வழிபட்டனர். மணமுழவினையும் பெரிய முரசினையும் ஒலிக்கச் செய்தனர். மணப்பெண்ணை மகளிர்கூடி நீராட்டினர் என்ற செய்தியை அகநானூற்று 136ஆவது பாடலில் விற்றூற்று மூதெயினனார் கூறியுள்ளார்.
ஒற்றுமைகளின் பின்னணி
இந்த இரு பாடல்களின் வழியாகப் பெறப்படும் ஒரே தன்மையான செய்திகள் சில. பந்தல் அமைத்தல். தன் வீட்டின் முன் ஒரு பெரிய பந்தலை நிறுவுவதற்குக் காரணம், பலரையும் அழைத்து அவர்களின் முன்னிலையில் திருமணத்தை நடத்துவதே ஆகும்.
மணமுழவும் முரசும் ஒலிக்கச்செய்வதன் காரணம், அப்பகுதியில் ஒரு திருமணம் ஊரறிய நடத்தப்படுகிறது என்றும் அதனைக் காண அனைவரும் வாரீர் என்றும் தெரிவிப்பதே.
குறிஞ்சிப்பாட்டு என்ற இலக்கியத்தின் 231ஆம் அடியில், "நேரிறை முன்கை பற்றி நுமர்தர நாடறி நன்மணம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து, அத்திருமணத்தில் பெண்வீட்டார் தன் மகளின் கைகளைப் பிடித்து மணமகனின் கைகளில் ஒப்படைத்ததும் அத்திருமணம் எல்லோராலும் அறியப்பட்டதும் விளங்குகின்றது.
சந்திரன் உரோகிணியைக் கூடிய நாளில் (நன்னாளில்) திருமணம் நடத்தப்பட்டுள்ளமைக்கான காரணத்தில் தொல்வழக்கமும் புராணமும் அறிவியலும் கலந்துள்ளது. அந்த நல்ல நாள் குறித்து ரிக்வேதமும் குறிப்பிட்டுள்ளது. ரிக்வேதத்தின் காலம் குறித்து சுவாமி நாதன், "பாலகங்காதர திலகர் என்ற சுதந்திரப் போராட்ட வீரர் ரிக் வேதத்தில் உள்ள வான சாத்திரக் குறிப்புகளை வைத்து அதன் காலம் கி.மு.6000 என்று கணித்தார்"2என்று சுட்டியுள்ளார். ஆக, மிகப் பழமையான ஒரு வழக்கத்தினைத் தமிழர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.
வரதட்சணை வாங்கியது யார்?
ஆண் ஒரு பெண்ணை மணக்கவேண்டுமெனில், அவன் அப்பெண்ணின் தந்தைக்குப் பெரும் பொருள் கொடுக்கவேண்டும் என்ற நிலை அக்காலத்தில் வழக்கிலிருந்தது. அது வரதட்சணைதான். இது பற்றிய விளக்கத்தினைப் புறநானூற்றில் இடம்பெற்றுள்ள 343ஆம் பாடல் உட்குறிப்பாகத் தெரிவித்துள்ளது.
அக்காலம் தாய்வழிச்சமூகம் என்பதால் ஆண், பெண்ணுக்குத் தரவேண்டியிருந்தது. அக்காலத்தில் மாப்பிள்ளைவீட்டார் பணத்தில் பெண்ணைப் பெற்றவர்கள் மஞ்சள்குளித்தனர். இக்காலம் தந்தைவழிச்சமூகம் என்பதால் பெண், ஆணுக்குத் தரவேண்டியுள்ளது. இக்காலத்தில் பெண்வீட்டார் பணத்தில் ஆணைப் பெற்றவர்கள் மஞ்சள்குளிக்கின்றனர்.
இல்லறம் இனித்ததா?
ஓடிச்சென்று திருமணம் செய்துகொண்டவர்களும் பெற்றோர்களால் உறுதிசெய்யப்பட்டுத் திருமணம் செய்துவைக்கப்பட்டவர்களும் இனிய இல்லறத்தையே நடத்தினர். அவர்களைத் தனிக்குடித்தனம் செய்யப் பணித்தனர். முன்னதற்குக் குறுந்தொகையின் 167ஆம் பாடலும் பின்னதற்குச் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள "மனையறம் படுத்த காதை"யும் சான்றுகளாகின்றன.
தலைவனோடு உடன்போக்குமேற்கொண்ட தலைவி, தலைவனோடு எப்படி வாழ்கின்றாள் என்பதனைப் பார்க்கச்சென்ற செவிலித்தாய் (தலைவியை வளர்த்த அன்னை), "அவள் இனிதாகத் தனிக்குடித்தனம் செய்து வாழ்கின்றாள்" என்பதனை அறிந்து, அதனை நற்றாய்க்கு (தலைவியைப் பெற்ற தாய்) உணர்த்துவதாகக் குறுந்தொகையின் 167ஆம் பாடல் அமைந்துள்ளது. தலைவி தன் தலைவனுக்குத் தன் கைகளால் "தீம்புளிப்பாகர்" (மோர்க்குழம்பு) செய்து உணவளித்ததாகக் கூறப்பெற்றுள்ளது. அதனை உண்ட தலைவன் மகிழ்ந்ததாகவும் சுட்டப்பெற்றுள்ளது.அக்காலத்தில் பன்னிரண்டு அல்லது பதின்நான்குவயதுக்குட்பட்ட தலைவி சமையல்கலையில் தேர்ச்சிபெற்றவளாக இருந்துள்ளாள். அவள் இல்லறத்தை இனிதாக நடத்தியுள்ளாள். களவு வாழ்க்கையைக் (ஓடிப்போதல்) கற்பு வாழ்க்கையாக (நல்லறம்) மாற்றிக்கொண்டாள் அந்த இல்லறக்க(ன்)னி.
ஓப்பன் திருமணம் எதைச் சாதித்தது?
ஆண்கள் பெண்களையோ, பெண்கள் ஆண்களையோ ஏமாற்றாமல் இருப்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட "கரணம்" என்ற திறந்தவெளி திருமணம் சமுதாயத்தில் உள்ளீடாக ஒரு மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பி.டி. சீனிவாச ஐயங்கார் சிந்தித்து, அது சமுதாயத்தில் தனிச்சொத்துரிமை வளர்ச்சிக்கு வித்திட்டதாகவும் ஆண்வழிச் சமுதாயத்திற்கு அடிகோலியதாகவும்3கருத்துத்தெரிவித்துள்ளார்.
ஆம், "கரணம்" தனிச்சொத்துரிமைக்குக் காரண கர்த்தாவாக விளங்கியது. ஆக, ஒன்றினைத் தடுக்க உருவாக்கப்பட்ட வழக்கம் பிரிதொன்றினைப் பழக்கமாக்கிவிட்டது.
- – -
George L. Hart, The poems of Ancient Tamils, p. 48.
History of Tamils, p.10.
DR P.SARAVANAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக