வியாழன், 17 அக்டோபர், 2013

சித்த மருத்துவம், ஓமியோபதி மருத்துவப்படிப்பில் சேர கலந்தாய்வு சென்னையில் 21– ந்தேதி முதல் 24–ந்தேதி வரை நடக்கிறது

சித்தமருத்துவம், ஓமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, நேச்சிரோபதி ஆகிய படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னையில் 21–ந்தேதி முதல் 24– ந்தேதி வரை நடக்கிறது. 
இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– 
கலந்தாய்வு 2013–2014–ம் ஆண்டுக்கான சித்தமருத்துவம், ஓமியோபதி, யுனானி, நேச்சுரோபதி, ஆயுர்வேதம் ஆகிய மருத்துவ பட்டப்படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்தமருத்துவ கல்லூரியில் 21–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு மத்திய அரசின் அனுமதியையும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழக இருக்கை அனுமதியையும் ஒருசேர பெற்ற அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு மட்டுமே ஆகும். தகுதியான கல்லூரிகள் பட்டியல் கலந்தாய்வு நடைபெறும் 21–ந்தேதி தெரிவிக்கப்படும். 
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளன. எஸ்.எம்.எஸ். மூலமும் அனுப்பப்பட்டுள்ளன. இணையதளம் அழைப்புக்கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள் இணையதளத்தில் (www.tnhealth.org ) இருந்து விண்ணப்ப பதிவு எண்ணை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவரவர்களுக்கு உரிய கட் ஆப் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். 
வருபவர்கள் உரிய சான்றிதழ்களுடன் வரவேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.5,500–க்கான கேட்பு வரைவோலையுடன் வரவேண்டும். கலந்தாய்வில் இட ஒதுக்கீடு ஆணை பெறுபவர்கள் 30–ந்தேதியோ அல்லது அதற்கு முன்பாகவோ கல்லூரியில் சேரவேண்டும். 
கலந்தாய்வு கட் ஆப் மதிப்பெண் 
21–ந்தேதி 197.25 முதல் 186 வரை கட் ஆப் மதிப்பெண் உள்ளவர்களும், 
22–ந்தேதி 185.75 முதல் 176 வரை கட் ஆப் உள்ளவர்களும், 
23–ந்தேதி 175.75 முதல் 166 வரை கட் ஆப் உள்ளவர்களும், 
24–ந்தேதி 165.75 முதல் 152வரை கட் ஆப் உள்ளவர்களும் 
கலந்துகொள்கிறார்கள். 
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக