திங்கள், 14 அக்டோபர், 2013

நேர்முக உதவியாளருக்கு கூடுதல் பொறுப்பு :சி.இ.ஓ.,க்கள் பணிச்சுமை குறைப்பு 

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின்பணிச்சுமையை குறைக்க, மேல்நிலைப்பள்ளி நேர்முக உதவியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, 67 கல்வி மாவட்டங்களில், தலா ஒரு கல்வி மாவட்டத்திற்கு ஒரு முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) நியமிக்கப்பட்டு,
கல்வித்துறை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனித்து வருகின்றனர். அவருக்கு உதவியாக, மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு இணையான தகுதியுள்ள நேர்முக உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளிக் கல்வி சார்பில் செயல்படுத்தப்படும், முப்பருவ கல்விமுறை, சத்துணவு சாப்பிடும் மாணவருக்கு,
நான்கு செட் சீருடை, நோட்டு புத்தகம், பாடப்புத்தகம், புத்தகப் பை, கல்வி உபகரணம், செருப்பு, நிலவரைபடம், சைக்கிள், லேப்டாப்,சத்துணவு திட்டம், மலைவாழ் குழந்தைகளுக்கு கம்பளி சீருடை, சிறப்பு ஊக்கத்தொகை, கல்வி உதவித் தொகை ஆகிய திட்டங்கள் குறித்த அனைத்து விபரங்களும் முதன்மை கல்வி அலுவலர் ஒப்புதலோடு, மாநில உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது. 
இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும் அரசு நிகழ்ச்சிகள், மாநில கல்வி அதிகாரி, அமைச்சர்,எம்.எல்.ஏ., கலெக்டர் உள்ளிட்டோர் விழாக்களில் சி.இ.ஓ., கட்டாயம் பங்கேற்க வேண்டியுள்ளது. பள்ளி மாணவருக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களில், அமைச்சர்கள் பங்கேற்கும் போது, சி.இ.ஓ.,வும் கட்டாயம் பங்கேற்க வேண்டியுள்ளது. வாரம்தோறும், அமைச்சர்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் இருப்பதால், சி.இ.ஓ.,க்கள், அரசின் திட்டங்கள், தேர்வுத்துறை அறிவுரைகள், தலைமை ஆசிரியர்கள் கண்காணிப்பு, நிர்வாகம், புகார்கள் என தொடர் பணிகளில் திணிக்கப்படு கின்றனர். அதனால், மாநில கல்வி அதிகாரிகளுக்கு உரியபுள்ளிவிபரங்களை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அதை தவிர்க்க, சி.இ.ஓ.,க்கள் பணிச்சுமைகள் குறைக்கப்பட்டு, மேல்நிலைப் பள்ளி நேர்முக
உதவியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு மற்றும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
அதன்படி, நேர்முக உதவியாளர் அரசின் திட்டங்கள் குறித்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசின் கல்வித்துறை திட்டங்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி நேர்முக உதவியாளர்கள் மூலம்,சி.இ.ஓ.,வின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஆனால், சி.இ.ஓ., க்களின் தொடர் பணிச்சுமையை குறைக்க,மேல்நிலைப்பள்ளி நேர்முக உதவியாளருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.உயர்நிலைப்பள்ளி நேர்முக உதவியாளர், அவர் சார்ந்த பள்ளிகளின் விபரங்களை மேல்நிலைப் பள்ளி நேர்முக உதவியாளரிடம் ஒப்படைக்க வேண்டும். 16 வகையான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறையால், கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் நேர்முக உதவியாளர் கண்காணிப்பில் இருக்கும். அவருக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டாலும், சி.இ.ஓ., தான், ஒட்டுமொத்த நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளுக்கு பொறுப்பானவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Source dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக