அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) மற்றும் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தின் (MIT) ஆய்வாளர்களின் ஆய்வு வெற்றி பாதையில் நீளுமானால், மூக்கு கண்ணாடிக்கும், கான்டாக்ட் லென்ஸ்-க்கும் டாட்டா சொல்லிவிடலாம்.
இந்தப் புதிய தொழில்நுட்பத்தில், ஒருவரின் பார்வைக் கோளாறை கணினி வழிமுறைப்படி சரிசெய்ய இயலும். பார்வை திருத்தும் காட்சிகள் (Visual correcting displays) என்ற தொழில்நுட்பத்தின் மூலம், கண்ணாடியின் உதவியோ, கான்டாக்ட் லென்ஸின் உதவியோ இல்லாமல் எழுத்துகளைப் படிக்கவும், படங்களைத் தெளிவாகப் பார்க்கவும் முடியும்.
அருகில் இருக்கும் பொருட்களைப் பார்ப்பதற்குக் கூடச் சிரமப்படும் முதியோர்கள், இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் கண்ணாடி இல்லாமல் சிறந்த பார்வை பெற முடியும். இதுகுறித்துக் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ப்ரென் பார்ஸ்கை கூறுகையில், "இந்தத் தொழில்நுட்பத்தால், பிற்காலத்தில் மிகவும் கடினமான கண்பார்வைக் கோளாறுகளைக்கூடச் சரிசெய்ய முடியும்", என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தூரப் பார்வை கொண்டவர்கள் கண்ணாடி அணியாமல் பார்த்தால், மங்கலாகத் தெரியும் புகைப்படங்கள் சிலவற்றை, ஒரு கேமராவின் லென்ஸில் இந்தத் தொழில்நுட்பத்தின் முன்மாதிரியைப் பயன்படுத்தி பார்த்தபோது, மங்கலான படங்கள் தெளிவாகத் தெரிந்தன. "பார்வைக் கோளாறை திருந்துவதற்கு ஒளியியலைப் (optics) பயன்படுத்துவதற்குப் பதிலாக, நாங்கள் கணிக்கை முறையைப் (Computation) பயன்படுத்துவதுதான் இந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பு", என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஃபூசுங் ஹுவாங் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக