பகுபதம் பகுபதம் : எப்படி உடைப்பது?
பேனா என்பது நமக்கு எழுதும் சமாசாரம். அதையே ஒரு சின்னக் குழந்தை கையில் கொடுத்தால், அரை விநாடியில் இப்படிப் பிரித்துக் கையில் கொடுத்துவிடும்: * மூடி
* கீழ்ப்பகுதி
* அதன்மீது வைத்துத் திருகக்கூடிய மேல் பகுதி
* மைக்குச்சி எனப்படும் ரீஃபிள் உலகம் முழுக்க எல்லாப் பேனாக்களிலும் இந்த பாகங்கள்தான் இருக்குமா? இல்லை. ரீஃபிள் இல்லாத பேனாக்கள் உண்டு, கீழ்ப்பகுதி, மேல் பகுதி என்று தனித்தனியே பிரியாமல் ஒன்றாக இருக்கும் பேனாக்கள் உண்டு. மூடி இல்லாத பேனாக்கள் உண்டு, இன்னும் கூடுதலாக ஸ்ப்ரிங் உண்டு, ஒன்றுக்கு மேற்பட்ட வண்ணங்களில் ரீஃபிள்களைக் கொண்டிருக்கும் மல்ட்டி கலர் பேனாக்கள் உண்டு. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஆக, ஒரு பேனாவைப் பகுக்கமுடியும் என்பதுமட்டும் உண்மை. அதை எப்படிப் பகுப்பது, எத்தனையாகப் பகுப்பது என்பதெல்லாம் அந்தந்தப் பேனாவைப் பொறுத்து மாறுபடும். பகுபதமும் அப்படிதான். அதைப் பல துண்டுகளாகப் பகுக்கமுடியும். ஆனால், எத்தனை துண்டுகள் என்பது சொல்லைப் பொறுத்து மாறும். ஆனால் ஒன்று, பகுபதத்தில் அதிகபட்சம் இத்தனை துண்டுகள்தான் உண்டு என்று இலக்கணம் தெளிவாகச் சொல்கிறது, அவை எந்த வரிசையில் வரக்கூடும் என்பதையும் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். அந்த ஆறு துண்டுகளும், பகாப்பதங்களாக இருக்கும். அதாவது, ஒரு பகுபதத்துக்குள் அதிகபட்சம் ஆறு பகாப்பதங்கள் இடம்பெறமுடியும். அவை: * பகுதி
* விகுதி
* இடைநிலை
* சந்தி
* சாரியை
* விகாரம் இந்த ஆறையும் சேர்த்து 'பகுபத உறுப்பிலக்கணம்' என்று அழைப்பார்கள். இவை என்னென்ன, சொல்லில் எங்கே எப்படி வரும் என்று உதாரணங்களுடன் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். ஒரு விஷயம், பகுபத உறுப்புகளாகிய இந்த ஆறையும் நாம் இப்போது பார்க்கப்போகும் வரிசை வேறு, சொற்களில் அவை தோன்றுகிற வரிசை வேறு. உதாரணமாக, பகுதிக்குப்பிறகு விகுதி, அதன்பிறகு இடைநிலை என்று அமையாது. ஆகவே, நம்முடைய கருத்துத் தெளிவுக்காக முதலில் இந்த ஆறு பகுதிகளையும் தனித்தனியே தெரிந்துகொள்வோம். அதன்பிறகு, அவற்றைப் பொருத்திப் பார்ப்போம். இப்போதைக்கு வரிசையைத் தாற்காலிகமாக மறந்துவிட்டு விஷயத்தைமட்டும் பாருங்கள். முதலில், பகுதி. எல்லாப் பகுபதங்களிலும் இதுதான் முதலில் வரும், நேரடிப் பொருள் தரும், அந்தச் சொல்லையே அதுதான் உருவாக்கும். உதாரணமாக, 'நடந்தான்' என்ற சொல்லில் உள்ள 'நட' என்பதுதான் பகுதி. அதிலிருந்துதான் அந்தச் சொல் 'நட'ப்பதைக் குறிப்பதாக மாறுகிறது. இங்கே 'நட' என்ற பகுதியை எடுத்துவிட்டுப் 'பற' என்ற இன்னொரு பகுதியைச் சேர்த்தால், அந்தச் சொல் 'பறந்தான்' என்று மாறிவிடும், 'பற'ப்பதைக் குறிப்பதாகிவிடும். சில நேரங்களில் பகுதி இப்படி நேரடியாக வராது, உருமாறிக் காணப்படும், வளைத்துதான் வெளியில் எடுக்கவேண்டும். உதாரணமாக, 'வந்தான்' என்ற சொல்லின் பகுதி, 'வா', 'சென்றான் என்ற சொல்லின் பகுதி, 'செல்'. அடுத்து, விகுதி. இது சொல்லின் நிறைவாக நிற்கும். பகுதியில் தொடங்கிய பொருளை முழுமை செய்யும். இதை மாற்றினால் சொல்லின் தன்மையும் மாறக்கூடும். உதாரணமாக, அதே 'நடந்தான்' என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்: * தொடக்கத்தில் வரும் 'நட' என்பது பகுதி
* நிறைவாக வரும் 'அன்' என்பது விகுதி இங்கே 'அன்' என்ற விகுதிக்குப் பதிலாக 'அள்' என்ற விகுதியைச் சேர்த்தால், இந்தச் சொல் 'நடந்தாள்' என்று மாறிவிடும். ஆண்பால் பெண்பாலாகிவிடும். அதே இடத்தில் 'அள்'க்குப் பதில் 'அது' என்ற விகுதியைச் சேர்த்தால், இந்தச் சொல் 'நடந்தது' என்று மாறிவிடும். உயர்திணை அஃறிணையாகிவிடும். இதேபோல் நடந்தது, நடந்தன, நடந்தனர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். முக்கியமான விஷயம், இந்தச் சொற்கள் அனைத்திலும் பகுதி ஒன்றுதான் (நட), ஆனால் விகுதி மாற மாற, அந்தச் சொல்லின் தன்மை, பயன்பாடு எல்லாமே மாறிவிடுகிறது. ஆக, பகுதி என்பது சொல்லின் பொருளை உருவாக்குகிறது, விகுதி என்பது அதை வேறுபடுத்துகிறது. ஆண், பெண், அஃறிணை, உயர்திணை, ஒருமை, பன்மை என்று பிரித்துக் காட்டுகிறது. இதைப் புரிந்துகொள்ள ஓர் எளிய உதாரணம் வேண்டுமென்றால், பெரிய உணவகங்களுக்குச் சென்று பாருங்கள். அவற்றைப் பல பகுதிகளாகப் பிரித்திருப்பார்கள்: * சுய சேவை(Self Service)ப் பிரிவு
* வழக்கமான சேவை(Regular Service)ப் பிரிவு
* குளிர்பதன அறைச் சேவை (A/C Service)
* வீட்டுக்குப் பொட்டலம் கட்டும் பார்சல் சேவை
* உங்கள் வீட்டு விழாக்களுக்குப் பரிமாறும் (Catering) சேவை இப்படிப் பல பிரிவுகள் இருந்தாலும், அனைத்துக்கும் சமையலறை ஒன்றுதான். அங்கே சமைக்கப்படும் உணவு தென்னிந்திய வகையா, வட இந்திய வகையா, சைவமா, அசைவமா, துரித உணவா என்கிற மாற்றங்கள் இருக்கும். இவைதான் ஒரு சொல்லின் பகுதியைப்போல. சமையலறையில் ஒரு குறிப்பிட்ட உணவு சமைக்கப்பட்டபிறகு, அது எங்கே பரிமாறப்படுகிறது என்பதைப் பொறுத்து விலையும் மாறும், மரியாதையும் மாறும். ஒரே இட்லியை செல்ஃப் சர்வீஸில் சாப்பிட்டால் பத்து ரூபாய், உள்ளே உட்கார்ந்து சாப்பிட்டால் பன்னிரண்டு ரூபாய், ஏஸி அறை என்றால் பதினைந்து ரூபாய். அதுபோல, பகுதிதான் ஒரு சொல்லின் பொருளை உருவாக்குகிறது (சமைக்கிறது), விகுதி அதனை எப்படிப் பயன்படுத்துவது என்று தீர்மானிக்கிறது (பரிமாறுகிறது). ஆக, பகுதி, விகுதி இரண்டும் ஒரு பகுபதத்துக்கு முக்கியம். மற்ற நான்கு உறுப்புகளும் இல்லாவிட்டால்கூட, இவை இரண்டுமட்டுமே ஒரு சொல்லை உருவாக்கிவிடமுடியும். உதாரணமாக, 'நம்மை' என்ற சொல்லில், நாம் + ஐ எனப் பகுதி, விகுதிமட்டுமே வந்துள்ளது. மற்ற பகுபத உறுப்புகள் எவையும் இல்லை. அடுத்து, இடைநிலை. பெயரைக் கேட்டதும் புரிந்திருக்கும், பகுதிக்கும் விகுதிக்கும் நடுவே இருக்கும் உறுப்புதான் இது. உதாரணமாக, 'வருகிறான்' என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதை எப்படிப் பிரிப்பீர்கள்? இதில் 'வா'தான் பகுதி என்பது புரிகிறது, நிறைவாக வரும் 'ஆன்' விகுதி என்பதும் புரிகிறது. இரண்டுக்கும் நடுவில் 'கிறு' என்று ஏதோ இருக்கிறதே. அதுதான் இடைநிலை. வா + கிறு + ஆன் = வருகிறான். பகுதி என்பது ஒரு பெயரையோ செயலையோ காட்டும், விகுதி என்பது ஆண், பெண், உயர்திணை, அஃறிணை, ஒருமை, பன்மை வித்தியாசத்தைக் காட்டும், இடைநிலை என்ன செய்யும்? அது காலத்தைக் காட்டும். உதாரணமாக இந்த மூன்று சொற்களைப் பாருங்கள்: செய்தான், செய்கிறான், செய்வான். இந்த மூன்றிலும் பகுதி ஒன்றுதான் (செய்), விகுதியும் ஒன்றுதான் (ஆன்), ஆனால் இடைநிலை மாறுகிறது. இப்படி: * செய் + த் + ஆன்
* செய் + கிறு + ஆன்
* செய் + வ் + ஆன் 'த்' இடைநிலையாக உள்ளபோது, அந்தச் சொல் கடந்த காலத்தைக் குறிக்கிறது, அதே சொல்லில் 'கிறு' இடைநிலையாக இருந்தால், நிகழ்காலம், 'வ்' இடைநிலையாக இருந்தால், எதிர்காலம். இப்படி ஒரு பகுபதத்தின் இடைநிலையை வைத்து அது எப்போது நிகழ்ந்தது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்: கடந்த காலத்தைக் காட்டும் இடைநிலைகள் நான்கு. அவை, த், ட், ற், இன். இந்த நான்குக்கும் உதாரணங்கள், செய்தான், உண்டான், விற்றான், பாடினான். நிகழ் காலத்தைக் காட்டும் இடைநிலைகள் மூன்று. அவை கிறு, கின்று, ஆநின்று. இவற்றுக்கு உதாரணங்கள்: செய்கிறான், செய்கின்றான், செய்யாநின்றான். இதில் 'ஆநின்று' என்பது இப்போது புழக்கத்தில் இல்லை. சும்மா தெரிந்துவைத்துக்கொள்வோம். எதிர் காலத்தைக் காட்டும் இடைநிலைகள் இரண்டு: ப், வ். இவற்றுக்கு உதாரணங்கள்: உண்பான், செய்வான். இப்போது, உங்களுக்கு ஒரு பயிற்சி. இந்த அத்தியாயத்தில் நாம் இதுவரை தெரிந்துகொண்ட விஷயங்களை வைத்து இந்தச் சொற்களைப் பகுதி, விகுதி, இடைநிலை என்று பிரித்துப் பாருங்கள். * வந்தான்
* வருவான்
* நடக்கின்றான்
* படித்தான்
* உண்டோம்
* உண்போம் * எழுதுவேன்
* பாடினாள்
* குதித்தது
* குதிக்கின்றனர் இந்தச் சொற்களில் பகுதி, விகுதி, இடைநிலை ஆகியவற்றை எளிதாகக் கண்டுபிடித்திருப்பீர்கள். அவைதவிர வேறேதும் கண்ணில் பட்டதா? உதாரணமாக, 'படித்தான்' என்ற சொல்லைப் பிரிப்போமா? * 'படி' பகுதி
* 'ஆன்' விகுதி
* நடுவில் 'த்' என்பது இடைநிலை அப்படி எஸ்கேப் ஆகமுடியாது நண்பீர். கொஞ்சம் கவனமாகப் பாருங்கள். அங்கே ஒரு 'த்' இல்லை, இரண்டு 'த்' இருக்கிறது. படி + த் + த் + ஆன். இவற்றில் ஒரு 'த்' இடைநிலை, புரிகிறது, இன்னொரு 'த்'? அதற்குப் பெயர் 'சந்தி'. மேலே நாம் பார்த்த பகுபத உறுப்பிலக்கணப் பட்டியலில் நான்காவதாக உள்ளது. ஒருவரை நேரில் பார்த்துப் பேசும்போது, அதைச் 'சந்திப்பு' என்கிறோம். பல ரயில் பாதைகள் ஒருங்கிணையும் இடத்துக்கும் 'சந்திப்பு' என்றுதான் பெயர். ஆக, 'சந்தி' என்றால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விஷயங்கள் ஒன்றுகூடுவது. பகுபத உறுப்பிலக்கணத்தில் பகுதி, இடைநிலை ஆகியவற்றைச் சேர்ப்பது சந்தி. 'படித்தான்' என்பதை நான்காகப் பிரித்துப் பார்ப்போம். முதலில் வருவது (1) 'படி', நிறைவாக வருவது (4) 'ஆன்', நடுவில் வருபவை (2) 'த்' மற்றும் (3) 'த்'. இதில் (1) 'படி' பகுதி, (4) 'ஆன்' விகுதி என்பதில் யாருக்கும் எந்தக் குழப்பமும் இருக்காது. (2), (3) என வரும் 'த்'களில் எது இடைநிலை, எது சந்தி? இதுமாதிரி குழப்பம் வரும்போது, விகுதிக்குப் பக்கத்தில் இருப்பதுதான் இடைநிலை என்று எடுத்துக்கொள்ளவேண்டும். அதாவது (3) 'த்' இடைநிலை. அப்படியானால், (2) 'த்' சந்தி. அது என்ன செய்கிறது? (1) 'படி' என்கிற பகுதியையும், (3) 'த்' என்கிற இடைநிலையையும் சேர்க்கிறது. இப்போது, மீண்டும் ஒரு பயிற்சி, மேலே நாம் பார்த்த அதே பத்து சொற்களில் எங்கெல்லாம் சந்தி வருகிறது என்று இன்னொருமுறை உங்களுடைய கணக்கைச் சரி பாருங்கள். அடுத்து, 'கண்டான்' என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதை எப்படிப் பிரிப்பீர்கள்? * காண் : பகுதி
* ட் : இடைநிலை
* ஆன் : விகுதி இதையே கொஞ்சம் மாற்றி 'கண்டனன்' என்று எழுதுவோம். இது நாம் சாதாரணமாகப் பயன்படுத்துகிற சொல் இல்லைதான். ஆனாலும், இலக்கணப் பாடத்துக்காக ஒருமுறை அப்படி எழுதிப் பார்ப்போம். தவறில்லை! 'கண்டனன்' என்ற சொல்லை நீங்கள் எப்படிப் பிரிப்பீர்கள்? காண் + ட் + அன் + அன் வழக்கம்போல், இவற்றுக்கு நம்பர் போடுவோம். (1) 'காண்', (2) 'ட்', (3) 'அன்', (4) 'அன்'. இதில் (1) 'காண்' பகுதி, (4) 'அன்' விகுதி. அதில் சந்தேகமில்லை. நடுவில் வரும் (2) 'ட்', (3) 'அன்' ஆகியவற்றை என்னவென்று அழைப்பது? 'ட்' என்பது கடந்த காலத்தைக் காட்டுகிறது. ஆகவே (2) 'ட்'தான் இடைநிலை. அப்படியானால் (3) 'அன்' சந்தி. இல்லையா? ம்ஹூம், இல்லை. சந்தி என்பது பகுதி, இடைநிலைக்கு நடுவே வரவேண்டும். ஆனால் இந்த 'அன்', இடைநிலைக்கும் விகுதிக்கும் நடுவே வருகிறது. விகுதியைச் சார்ந்து வருவதால் அதன்
பெயர் சாரியை. சந்திக்கும் சாரியைக்கும் நாம் தந்துள்ள இலக்கணங்கள் பெரும்பாலும் இப்படி அமைபவை. சில நேரங்களில் இந்த ஒழுங்கு மாறுவதும் உண்டு. உதாரணமாக, 'மனத்தில்' என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதில் 'மனம்' என்பது பகுதி, 'இல்' என்பது விகுதி, நடுவில் வரும் 'அத்து' என்பது இடைநிலையா? இல்லை. அது காலம் காட்டுவதில்லையே. ஆகவே, 'அத்து' என்பது இடைநிலை அல்ல, சாரியை. இப்படிப் பதினேழு வகையான சாரியைகள் உண்டு. அவை: 'அன்', 'ஆன்', 'இன்', 'அல்', 'அற்று', 'இற்று', 'அத்து', 'அம்', 'தம்', 'நம்', 'நும்', 'ஏ', 'அ', 'உ', 'ஐ', 'கு', 'ன'. சந்தியுடன் ஒப்பிடும்போது, நாம் தினசரி பயன்படுத்தும் சொற்களில் சாரியை அதிகம் வருவதில்லை. பத்துக்கு ஒன்று தென்பட்டாலே அதிகம். ஆக, நாம் இதுவரை பார்த்துள்ள ஐந்து அம்சங்களைத் தொகுத்தால்: * பகுதி என்பது பகுபதத்தின் முதல் பகுதி
* விகுதி என்பது பகுபதத்தின் நிறைவுப் பகுதி
* பகுதிக்கும் விகுதிக்கும் நடுவே அமைந்து காலம் காட்டுவது இடைநிலை
* (பெரும்பாலும்) பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவே அமைவது சந்தி
* (பெரும்பாலும்) இடைநிலைக்கும் விகுதிக்கும் நடுவே அமைவது சாரியை ஒரு வகுப்பில் ஐந்து மாணவர்கள் எப்போதும் (அல்லது பெரும்பாலான நேரங்களில்) ஒரு குறிப்பிட்ட வரிசையில்மட்டுமே அமர்ந்திருப்பதுபோல் கற்பனை செய்துகொள்ளுங்கள். இதை நினைவில் வைத்துக்கொள்வது எளிது. இன்னும் மீதமுள்ளது விகாரம் ஒன்றுதான். அதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள். * பகுபத உறுப்புகள் (6)
* பகுதி
* விகுதி
* இடைநிலை
* சந்தி
* சாரியை
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக