வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

Srmu 2 குறிப்பிசை


4.8.7 குறிப்பிசைi
 

எழுத்தாகவோ சொல்லாகவோ இல்லாத சில ஓசைகளை நாம் பேச்சில் பயன்படுத்துகிறோம் அவை குறிப்பிட்ட சில பொருள்களை (அர்த்தங்களை)  உணர்த்தப் பயன்படுகின்றன.  வீளை (Whistle),  முற்கு (முக்குதல்) போன்றவை அவை. அவற்றுடன் சோவென, கோவென, பளீரென,  படபடவென்று என்பன போன்ற ஒலிக்குறிப்புச் சொற்களும் பேச்சில் பயன்படுகின்றன. இத்தகையவை குறிப்பிசை எனப்படும். இவை செய்யுளிலும் வரும். செய்யுளில் வரும்போது ஏனைய சொற்களைப் போலவே சீர், தளை, அடி, தொடை பிழையாமல் அவற்றை அலகிட வேண்டும்.
 

(எ-டு)
பொள்ளென ஆங்கே புறம்வேரார்; காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

(திருக்குறள், 487)
 

மேற்கண்ட திருக்குறள் பாவில் 'பொள்ளென' எனும் சொல் 'உடனடியாக' எனும் பொருளைத் தரும் ஒலிக் குறிப்புச் சொல். பொள்/ளென என அசைபிரித்துக் கூவிளச் சீராகக் கொண்டு இதனை அலகிட வேண்டும்.
 

4.8.8 ஒப்பு
 

ஒப்பு =  ஒப்புமை.   புலவர்களின் செய்யுட்களில் சில யாப்பிலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ள சீர்,  தளை,  அடி,  பா,  பாவினம் ஆகியவற்றின் இலக்கணங்களிலிருந்து சற்றுத் திரிந்தும்,  மிகுந்தும், குறைந்தும் வருவதுண்டு.  அவற்றை என்ன செய்வது?  அத்தகைய செய்யுட்களை ஓரளவு ஒப்புமை  நோக்கி, ஒப்புமையுடைய செய்யுளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 

(எ-டு)
கோழியும் கூவின குக்கில் குரல்காட்டும்
தாழியுள் நீலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வையத் தறிவன் அடியேத்திக்
கூழை நனையக் குடைந்து குரைபுனல்
ஊழியும் மன்னுவான் என்றேலோர் எம்பாவாய்.

(யாப்பருங்கலக் காரிகை, உரைமேற்கோள்)
 

மேற்காட்டிய பாடல் கலிவிருத்தத்தோடு ஓரளவு ஒத்துள்ளது.  கலிவிருத்தம் நான்கடியுடையது. இப்பாடல் ஐந்தடியாயினும் ஓரளவு ஒப்புமை நோக்கி இதனைக் கலிவிருத்தத்தில் அடக்கிக் கூறுவர்.
 

4.8.9 வண்ணம், புனைந்துரை, அடியின்றி நடப்பன ஆகியவை
 

இவ்விலக்கணங்கள் நூற்பாவில் நேரடியாகக் குறிப்பிடப்படாதவை.  உரையாசிரியர் இவற்றை விளக்கிக் கூறுகிறார். 
 

 வண்ணம்
 

வண்ணம் என்பதற்கு இசை என்பது பொருள்.  இசைப்பாடலை வண்ணப்பா என்று சொல்வர். பாக்களில் தோன்றும் இசை,  வண்ணம் ஆகும்.  அடிப்படையாக வண்ணம் தூங்கிசை வண்ணம், ஏந்திசை வண்ணம், அடுக்கிசை வண்ணம், பிரிந்திசை வண்ணம், மயங்கிசை வண்ணம் என ஐந்தாகும். இவை ஒவ்வொன்றும் 20 வகைப்படும். ஆக வண்ணம் மொத்தம் 100 ஆகும். இது அவிநயனார் போன்ற யாப்பிலக்கண ஆசிரியரின் பாகுபாடு.  தொல்காப்பியர் இருபது வண்ணங்களைக் கூறியுள்ளார்.  நூறு வண்ணங்களின் வகைமையை யாப்பருங்கலக் காரிகை உரையில் காண்க.
 

செய்யுளில் அமையும் எழுத்தொலிகளின் தன்மை கொண்டு வண்ணங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இங்குச் சிலவற்றுக்கு எடுத்துக் காட்டுகள் காண்போம்.
 

வல்லின எழுத்து மிகுந்து வருவது வல்லிசை வண்ணம் ஆகும்.
 

(எ-டு)
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

(திருக்குறள், 350) 
 

மெல்லின எழுத்து மிகுந்து வருவது மெல்லிசை வண்ணம் ஆகும்.
 

(எ-டு)
பொன்னின் அன்ன புன்னை நுண்தாது

(யாப்பருங்கலக் காரிகை, உரை மேற்கோள்)
 

நெட்டெழுத்து மிகுந்து வருவது நெடில் வண்ணம்.
 

(எ-டு)
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.

(திருக்குறள், 397)


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக