ஜப்பானைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு
உலக வெப்பமயமாதலைத் தூண்டாத அளவுக்குக் குறைந்த அளவில் கரியமில வாயுவை வெளியிடும் எல்.ஈ.டி. விளக்குகளை உருவாக்கிய சாதனைக்காக, ஜப்பானைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த இசாமு அகசாகி, ஹிரோஷி அமனோ,சுஜி நகமுரா (தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்) ஆகியஆராய்ச்சியாளர்கள் இந்தப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நோபல்பரிசு தேர்வுக் குழு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. பரிசுத் தொகையான 11லட்சம் டாலர்கள் அவர்கள் மூன்று பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
நோபல் பரிசை நிறுவிய ஆல்பிரட் நோபலின் நினைவுநாளான டிசம்பர் 10ஆம் தேதியன்று ஆண்டுதோறும், ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தப் பரிசு அவர்களுக்கு வழங்கப்படும். இதுகுறித்து நோபல் பரிசு தேர்வுக் குழு வெளியிட்ட அறிக்கையில்கூறியிருப்பதாவது:
புதிய ஆற்றல் வாய்ந்த, சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானஒளியை வழங்கக்கூடிய நீல வண்ண ஒளியை உமிழும் எல்.ஈ.டி.விளக்குகளை இந்த விஞ்ஞானிகள் மூவரும் கண்டுபிடித்துள்ளனர்.கண்டுபிடிப்புகள் வரலாற்றில் இது மாபெரும் புரட்சியாகும். 20ஆம் நூற்றாண்டு காலத்தை தாமஸ் ஆல்வா எடிசன் வடிவமைத்தஒளி விளக்குகள் ஒளிர்வித்தன என்றால் 21ஆம் நூற்றாண்டை இந்த எல்.ஈ.டி.விளக்குகள் ஒளிர்விக்க உள்ளன. முன்னதாக, 1990களின் துவக்கக் காலகட்டத்தில் குறைந்த மின் கடத்திகளைப்
பயன்படுத்தி பிரகாசமான நீல வண்ண ஒளிக்கற்றைகளை இந்தமூன்று விஞ்ஞானிகளும் உருவாக்கியபோது, ஒளியூட்டும்தொழில்நுட்பத்தின் அடிப்படை தத்துவத்திலேயே முக்கிய பரிணாமவளர்ச்சியைத் தோற்றுவித்தது. விளக்குகளில் நெடுங்காலமாக சிவப்பு,
பச்சை டயோடுகள் பயன்படுத்தப்பட்டதால் வெண்மை நிற வெளிச்சத்தை ஏற்படுத்த முடியாமல் இருந்த நிலையை, அவர்களது நீல வண்ணஒளிக்கற்றைகள் மாற்றின. 30 ஆண்டுகால கடும் முயற்சிக்குப் பின் நீல வண்ணம் மிளிரும் டயோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தகண்டுபிடிப்பின்மூலம் மற்ற ஆராய்ச்சியாளர்களை இசாமு அகசாகி,ஹிரோஷி அமனோ, சுஜி நகமுரா ஆகிய விஞ்ஞானிகள் பின்னுக்குத்
தள்ளியுள்ளனர். இந்த வகை எல்.ஈ.டி. விளக்குகள் நீண்டகாலம் உழைக்கக் கூடியவையும்,
பழைய ஒளிவிளக்குகளைக் காட்டிலும் கூடுதல் ஆற்றல் படைத்தவையும் ஆகும். குறைந்த மின் சக்தியில் வெண்ணிற ஒளியைப் பாய்ச்சக்கூடியஎல்.ஈ.டி. விளக்குகள் சூரிய வெப்ப ஆற்றலால் இயங்கும் தன்மை படைத்தவை. இதனால், உலக அளவில் மின் கம்பிகள் அமைக்க முடியாத தொலைதூரப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 150 கோடி மக்களுக்கான வரப்பிரசாதமாக அவை விளங்கும் என்று அந்த அறிக்கையில் நோபல் பரிசு தேர்வுக்
குழு குறிப்பிட்டுள்ளது.
ஹிரோஷி அமானோ ஜப்பானின் ஹமாமாட்சூ நகரில் 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி பிறந்தவர் ஹிரோஷி அமானோ, 1983-இல் மின்னணுப் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். 1988-இல் நகோயா பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்டம் பெற்றார். ஜப்பானின் மெய்ஜோ, நகோயா பல்கலைக்கழகங்களில் பல
ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். குறைமின் கடத்திகள்,
சூரிய ஒளி சேமிப்புக் கலன்கள், ஒளி உமிழும் டயோடுகள் தொடர்பான ஆராய்ச்சிகளில் நிபுணத்துவம் பெற்றவர். மின்னணுவியல் ஆராய்ச்சிகளில்
அவரது குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக ஜப்பான், பிரிட்டன் ஆகிய
நாடுகளின் முக்கிய விருதுகளைப் பெற்றவர்.
சுஜி நகமுரா அமெரிக்கவாழ் ஜப்பானியரான சுஜி நகமுரா(60) ஜப்பானின் இகாடா நகரில்
1954ஆம் ஆண்டு மே 22-இல் பிறந்தார். டோகுஷிமா பல்கலைக்கழகத்தில்
பொறியியில் பட்டப்படிப்பை முடித்தார். தற்போது, அமெரிக்காவின்சான்டா பார்பரா நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். நீல வண்ணம் உமிழும் டயோடு கண்டுபிடிப்பில் முக்கியப் பங்களிப்பைத் தந்தவர். அமெரிக்காவின் பெருமைக்குரிய பெஞ்சமின் பிராங்க்ளின் விருது உள்பட பல்வேறு உயரிய
விருதுகளைப் பெற்றவர்.
இசமு அகசாகி ஜப்பானின் காகோஷிமா நகரில் 1929ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம்
தேதி பிறந்தவர் இசமு அகசாகி (85), அந்நாட்டின் பிரபல மெய்ஜோ,
நகோயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆவார். 1952-இல் கியோடோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். 1964-இல் மின்னணுப் பொறியியல் ஆராய்ச்சிக்கான முனைவர்பட்டத்தை நகோயா பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது. 1989ஆம் ஆண்டில் காலியம் நைட்ரைடு வேதிப் பொருளைப் பயன்படுத்தி நீல
வண்ணம் உமிழும் எல்.ஈ.டி. விளக்கைக் கண்டுபிடித்ததன்மூலம் பிரபலம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, பெருமைக்குரிய கியோடோ விருது, சர்வதேச மின் மற்றும் மின்னணுப் பொறியியல் தொழில்நுட்பத்துக்கான எடிசன் பதக்கம் ஆகியவற்றைப் பெற்றவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக