12. 55 PM: அதிமுக தொண்டர்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்க்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது என ஜெயலலிதா அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.
12. 50 PM: சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12.45 PM: ஜெயலலிதா இன்று (வெள்ளிக்கிழமை) மாலையோ அல்லது நாளை (சனிக்கிழமை) காலையோ சிறையில் இருந்து விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
12.43 PM: ஜாமீன் சூரிட்டி வழங்கிய பின்னர், நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ஜெயலலிதாவை சிறையில் இருந்து விடுவிக்க முறைப்படி உத்தரவிட்ட பின்னர் அவர் விடுவிக்கப்படுவார்.
12.40 PM: ஜெயலலிதா ஜாமீன் மனு தீர்ப்பு நகலை பெற்று அதனை அவரது வழக்கறிஞர்கள் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
12.35 PM: நீதிபதிகள் கூறியதாவது: "ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. 6 வாரத்துக்குள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும்" என்றனர்.
12.30 PM: டிசம்பர் 18-ம் தேதி வரை ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
12. 27 PM: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12.00 PM: ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. ஜெயலலிதா தரப்பில், ஃபாலி எஸ்.நாரிமன் வாதாடி வருகிறார்.
11. 30 AM: கட்சி மேலிட உத்தரவை அடுத்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று அதிமுகவினர் எவரும் குழுமவில்லை. படிக்க:கட்சி மேலிட ஆணை: உச்ச நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவினர் ஆப்சென்ட்
11. 15 AM: ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணையை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து அமர்வு விசாரணை நடத்தும் அறையில் ஏராளமான வழக்கறிஞர்கள் குவிந்தனர். இதனால், பெண் வழக்கறிஞர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தலைமை நீதிபதி கண்டனத்துக்குப் பிறகு வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர்.
11. 12 AM: ஜெயலலிதா ஜாமீன் மனு, வரிசை எண்படி 65-வது மனுவாக இருந்தாலும், இன்று விசாரிக்கப்பட வேண்டிய 20 முதல் 45-வது எண் வரையிலான வழக்குகளில் ஆஜராக வேண்டிய வழக்கறிஞர்கள் வருகை தராததால் அவை ஒத்திவைக்கப்பட்டன. இதனால், ஜெயலலிதா ஜாமீன் மனு மீது இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் விசாரணை நடைபெறுகிறது.
11.10 AM: ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் நடைபெறும்.
11. 05 AM: சுப்பிரமணியன் சுவாமி மனுவில், "ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தது தொடர்பாக நான்தான் முதன்முதலாக வழக்கு தொடுத்தேன். எனவே எனது கருத்தை கேட்ட பிறகே அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
10. 45 AM: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றம் வந்தடைந்தார். சுவாமி நேற்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
10. 43 AM: பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் முன்பு அதிமுகவினர் குழுமியிருந்தது போல் இங்கு யாரும் இல்லை.
10.42 AM: உச்ச நீதிமன்ற வளாகத்தில் வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
10.42 AM: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியும் நீதிமன்றம் வந்துள்ளார்.
10.40 AM: ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி வாதிடும் வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன் நீதிமன்றம் வந்தடைந்தார்.
10.32 AM: ஜெயலலிதா ஜாமீன் மனு, 65-வது வழக்காக விசாரணைக்கு வருகிறது. சசிகலா, இளவரசி மனுக்களுக்கு 68, 69 எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மூன்று மனுக்களும் ஒரு சேர விசாரிக்கப்படும் என தெரிகிறது.
10.30 AM: ஜெயலலிதா மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, மதன் பி லோகூர், ஏ.பி.சிக்ரி ஆகியோர் நீதிமன்றம் வந்தடைந்தனர்.
10.27 AM: ஜெயலலிதா மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தயக்கம் காட்டுவதற்கு இந்த வழக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததே காரணம் என கூறப்படுகிறது. மேலும், ஜாமீன் மனு மீதான தீர்ப்புகள் தமிழகத்தில் சட்டசிக்கலை ஏற்படுத்துவதாலும் நீதிபதிகள் தயக்கம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10.20 AM: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன. இந்நிலையில், ஜெயலலிதா மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தயக்கம் காட்டியுள்ளனர்.
10. 15 AM: ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவையும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது.
10. 12 AM: ஜெயலலிதாவின் ஜாமீனுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இது தவிர சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ஜெயலலிதா சார்பாக மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதே போல தேமுதிகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராவதை ஆட்சேபித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
10.10 AM: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக