புதன், 15 அக்டோபர், 2014

இதை தெரிஞ்சிக்குவோம்....

கண்ணெழுத்து என்பது பழங்கால தமிழகத்தில் ஏற்றுமதியாளர்கள் பண்டப் பொதிகளின் மீது சரக்கின் பெயரையும், அளவையும் படமாக வரைந்தனுப்பிய அடையாள எழுத்தாகும்.

அசன்பே சரித்திரம் என்பது 1885 ஆம் ஆண்டில் தமிழில் எழுதப்பட்ட இரண்டாவது புதினமாகக் கருதப்படுகிறது.

தமிழ் நாவலர் சரிதை என்பது 17 ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ஒரு தமிழ் திரட்டு நூல் ஆகும்.

சோளகர் தொட்டி என்பது தமிழக-கருநாடக வனப்பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடியினரான சோளகர்களைப் பற்றி ச. பாலமுருகன் எழுதிய எதிர் வெளியீட்டின் மூலம் வெளியிடப்பட்ட சமூகப் புதினமாகும்.

14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியாரின் நெஞ்சுவிடு தூது என்ற நூல் தூது இலக்கிய வகையில் எழுந்த முதற் சிற்றிலக்கியமாகும்.

கந்தியார் என்போர் சமண சமயத்தில் துறவு பூண்ட பெண்மணிகளாவர்.


நிடத நாட்டை ஆண்டு வந்த மன்னனான நளன் என்பவனின் கதையைக் கூறும் தமிழ் நூலே நைடதம் ஆகும்.

புத்தரின் வாழ்க்கை வரலாற்றினைச் சிறப்புறக் கூறும் ஆசிய ஜோதி என்ற நூல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையால் இயற்றப்பட்டது.

பரிமேலழகர் திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் மிகப் புகழ்பெற்றவர் ஆவார்.

வடக்கிருத்தல் என்பது ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதாகும்.

அசும்பு என்பது சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படும் மலைப்பகுதியிலும், வயலோரங்களிலும் நீர் கசிந்தோடும் வாய்க்காலாகும்.

காஞ்சி மரத்துக்கு 'செம்மருது' என்னும் பெயரும் உண்டு.

நரிவிருத்தம் என்பது 6-7 ம் நூற்றாண்டுகளில் திருத்தக்க தேவர் என்ற சமணரால் எழுதப்பட்ட நிலையாமைக் கோட்பாட்டை விளக்கும் ஒரு தமிழ் அறநூல் ஆகும்.

தூங்கெயில் என்பது சங்கப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கோட்டையாகும்.

சாற்றுக்கவி என்பது முந்தைய காலத்தில் நூல் உருவாக்குவோர் தங்கள் நூலுக்காக பெரும் புலவர்களிடம் கேட்டுப் பெறும் கவிதையாகும்.


திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட "திருஎழுகூற்றிருக்கை" ஓவியப் பாங்குடன் அமைந்த சித்திரக் கவி ஆகும்.

ஆயிரமசலா கிபி 1572 இல் வண்ணப் பரிமளப் புலவரால் இயற்றப்பட்ட தமிழில் முதலில் தோன்றிய இசுலாமிய இலக்கியங்களில் ஒன்று.

மேரு மந்தர புராணம் என்பது சமண சமயத்தின் சாரம் எனக் கருதப்படும் தமிழ் நூலாகும்.


தமிழ் இலக்கியத்தில் பாயிரம் என்பது பழங்காலத் தமிழ் நூல்களிலும், தமிழ் மரபைத் தழுவி அமையும் இக்கால நூல்களிலும் அவற்றுக்கான முன்னுரை போல் அமையும் பகுதி ஆகும்.

இந்து சமயக் கோவில்களின் பழம்பெருமையினையும் வரலாற்றுச் சிறப்பினையும் எடுத்துவிளக்கும் நூல்களே தலபுராணங்கள் ஆகும்.

எழுத்துவர்த்தனம் என்பது சித்திரக் கவி வகைகளில் ஒன்று. பாடலில் எழுத்தின் விரிவு வளரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக