செல்போனில் இணைய சேவைக்கான (நெட் பேக்) பயன்பாட்டுக் கட்டணம் நேரடியாக வும், மறைமுகமாகவும் தொடர்ந்து உயர்த்தப் பட்டு வருவதால் அக்டோபர் 31-ம் தேதிக் குப் பிறகு அதைப் புறக்கணிக்க கோரும் பதிவு சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.
இன்டர்நெட் வசதியுடன் கூடிய செல் போன்களை பயன்படுத்துபவர்களின் எண் ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. இதை உணர்ந்த சில செல்போன் சேவை நிறுவனங்கள் அண்மைக்காலமாக, 'நெட் பேக்' கட்டணத்தை ஓசையின்றி உயர்த்தி வருகிறது.
செல்போன் சேவை நிறுவனங்களின் இந்த போக்கைக் கண்டித்து பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் செல்போன் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்துகளைக் காட்டமாக பதிவு செய்துவருகின்றனர். "மொபைல்கள் மூலம் இணையதளத்தை பார்ப்பதற்கான கட்டணம் கடந்த 4 மாதங்களில் 90 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலத்தில் 3 நிறுவனங்கள் இணைய பேக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளன. இந்த மூன்று நிறுவனங்களும் மொபைல் இன்டர்நெட் சந்தையில் 50 சதவிகிதத்துக்கும் அதிக பங்கை வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது" என்று பேஸ்புக்கில் பயன்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களின் இந்தக் குற்றச்சாட்டை செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடைக்காரர்களும் ஆமோதிக்கின்றனர். இந்நிலையில் அக்டோபர் 31-ம் தேதிக்குப் பிறகு செல்போன் நெட்பேக்-ஐ புறக்கணிக்கவேண்டும் என்று 'வாட்ஸ் ஆப்' போன்ற செல்போன் செயலி மூலமாகவும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. அதில், "இங்கிலாந்தில், ஒரு ரொட்டி நிறுவனம் விலையை அடிக்கடி உயர்த்தியது. இதைத் தொடர்ந்து, அந்த ரொட்டியை வாங்காமல் புறக்கணிப்பது என அங்குள்ள மக்கள் முடிவெடுத்தனர். இதையடுத்து, அந்த நிறுவனம் இறங்கி வந்தது. அதுபோல், செல்போன் இணைப்பை அளிக்கும் நிறுவனங்கள், கட்டணத்தை குறைக்க முடிவெடுக்கும் வரை அவ்வசதியைப் புறக்கணிப்போம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள், பேஸ்புக், வாட்ஸ் ஆப் ஆகியவற்றில் படுவேகமாக பரவிவருகிறது.
வாடிக்கையாளர்களின் இந்தப் புதுமையான போராட்டத்துக்கு அந்நிறுவனங்கள் அசைந்து கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக