விதைகள்…….நாளைய உலகின் விழுதுகள்
’குக்கூ…..குழந்தைகள் வெளி…’ பெயரே இனிக்கின்றதல்லவா ! திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் செயல்பட்டுவரும் இந்த தன்னார்வ அமைப்பின் சார்பில் அங்குள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்றுவரும் 30 க்கும் மேற்பட்ட சுட்டிகள் கைத்தமலைக் குன்றுக்கு வித்தியாசமான விதை சேகரிக்கும் பயணத்தை மேற்கொண்டனர்…
கைகளில் துணிப் பைகள் ..உள்ளத்தில் குதுகலம்.என புறப்பட்ட அவர்கள் மா, சப்போட்டா, நாவல் என வழிநெடுக கிடைத்த விதைகளையெல்லாம் சேகரித்தபடி கொளுத்தத் தொடங்கிய கோடைவெயிலையும் பொருட்படுத்தாமல் உற்சாக நடைபோட்டனர்…
வளர்மதி |
“வறண்டுகிடக்கின்ற இந்த பூமியை வளமாக்கறது மரங்கள்தான்….அவை பலவிதங்களில் அழிக்கப்பட்டு வருகின்றன..அதனால் கைத்தமலைப் பகுதியில் உள்ள பலன் தரக்கூடிய பாலை, ஆயா, வேம்பு, நாவல், ஆல், அரசு போன்ற நமது பாரம்பரிய மரங்களின் விதைகளை சுட்டிகளைக் கொண்டு சேகரித்து மீண்டும் மரம் வளர்க்கச்செய்வதுதான் இப்பயணத்தின் நோக்கம் ” என்றார் இந்த பயண அமைப்பளர்களில் ஒருவரான வளர்மதி
சுட்டிகள் கைத்தமலையை அடைந்தவுடன் அங்குள்ள பல வகையான மரங்களின் கீழிருந்த விதைகளை ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு சேகரிக்க... சில சுட்டிகள் மரங்களின் மீது ஏறி விதைகளை உலுக்கி அதனையும் தங்களது பைகளில் நிரப்பினர்.
“நாங்க சேகரிக்கும் இந்தவிதைகளை முதலில் செம்மண் கொண்ட ‘மதர் பெட்டில்’ ஊன்றி… மண்புழு உரமெல்லம் போட்டு நீர்பாய்ச்சுவோம்…கொஞ்சம் பெரிதானதும் தனித்தனி கவர்களில் போட்டு வளர்ப்போம்.. நடுவதற்கேற்ற அளவு வளர்ந்ததும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகள் கோயில்கள் சமுதாய இடங்களில் நடுவதுடன் தேவை என கேட்ப்போர்க்கும் இலவசமாக கொடுப்போம்” என்றார் கண்ணன் எனும் சுட்டி பெருமையாக
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இவ்வாறு ஊத்துக்குளி சுற்றுவட்டாரத்தில் நடப்பட்டுள்ளன. இப் பணியில் ஈடுபட சுட்டிகளுக்கு அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களான மூர்த்தி மற்றும் லக்ஷ்மி ஆகியோர் ஊக்கமூட்டி வருகின்றனர்…
அழகேஸ்வரி |
“வகுப்பறையில் இறுக்கமான சூழ்நிலையிலிருக்கும் சுட்டிகளை அதிலிருந்து விடுவித்து சுதந்திரமாகவும் உயிர்ப்போடும் வாழ்க்கையை அனுகச் செய்வதற்கு நாங்கள் செய்யும் முயற்சிதான் இது… நிலம் நீர் காற்று ஆகாயம்னு மாசுபட்டு கிடக்கின்ற இந்த பூமியை மாற்றுவதற்கு சுட்டிகளுடன் கைக்கோர்த்துள்ளோம்..இந்த பயணத்தின் மூலம் இயற்கயை நேசிக்கவும் பாதுகாக்கவும் கற்றுக்கொள்கின்றனர் சுட்டிகள்…அவர்கள் சேகரித்த விதைகளை தங்கள் வீட்டுக்கருகில் ஊன்றி வளர்க்கவும் ஊக்கப்படுத்திவருகின்றோம்…ஊன்றப்படும் ஒவ்வொரு விதையும் செடியாய்.. மரமாய்.. வளர்ந்து, பூத்தும் காய்த்தும் இவர்களை நிச்சயம் வாழ்த்தும்…” என்று நெகிழ்வோடு கூறினார் உடனிருந்த குக்கூ குழந்தைகள் வெளியின் வழிகாட்டியான அழகேஸ்வரி
கைத்தமலையிலிருந்து பைநிறைந்த விதைகளுடனும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் திரும்பினர் சுட்டிகள். அவர்கள் விதைகளை விதைப்பது மண்ணில் மட்டுமல்ல நம் மனதிலும்தான்!
’குக்கூ…. குழந்தைகள் வெளி’ சுட்டிகளின் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் நாட்டுப்பு நடனம், நடிப்பு,ஓவியம், களிமண்சிற்பம்,புகைப்படக்கலை போன்றவற்றிலும் பயிற்சி அளித்துவருகின்றது..இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நாடகக்கலை பேராசிரியர் வேலுசரவணன் போன்றவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஊத்துக்குளியில் சமீபத்தில் குழந்தைகள் நூலகம் ஒன்றும் தொடங்கி செயல்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கதாகும்
சி.தாமரை
சுட்டி ஸ்டார்
தருமபுரி
நன்றி சுட்டிவிகடன்