ஞாயிறு, 6 அக்டோபர், 2013

 குழந்தை வளர்ப்பில் ஏன் அதிக கவனம் தேவை? 

“அப்ப எல்லாம் யாரு குழந்தைகளைப் பார்த்துகிட்டது?
நாங்களேத்தான் வளர்ந்தோம். நாங்களே தான்சாப்பிட்டோம், நாங்களே தான் படிச்சோம்.
எங்கப்பாவுக்கு நாங்க என்னவகுப்பு படிக்கிறோம்னு கூடத் தெரியாது. இப்ப
இருக்கற பெத்தவங்க குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளக்கறாங்க. கண்ணுல
வெச்சி வளக்கறாங்கன்னு, அவங்க குழந்தைகளை வளர விடறதே இல்லை” என்ற ரீதியில் வயதானவர்கள்பேசுவதைக் கேட்கலாம். முன் எப்பொழுதைக் காட்டிலும் தற்போது குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டியஅவசியமும் தேவையுமும் தான் என்ன? 

சுமார் முப்பது முதல் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்சிறுவர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? தினமும் பள்ளிக்குச் செல்வார்கள், பள்ளியிலே ஆட்டம்பாட்டம் விளையாட்டு, வீடு திரும்பியதும் வசதிக்கு ஏற்றாற் போல மாலை உணவு / தேநீர்,
புழுதி நிரம்பிய தெருக்களில் இரவு வரையில் விளையாட்டு,கொஞ்ச நேரப் படிப்பு, உறக்கம். வாரஇறுதிகளிலும் விடுமுறை நாட்களிலும் காலை வீட்டைவிட்டுக் கிளம்பினால் இரவு தான் திரும்பும் பழக்கம். மிகச் சில குடும்பங்களில் புத்தகம் வாசிக்க வைக்கும் பழக்கம். சொந்தக் காசிலே சிறுவர்புத்தகங்களை வாங்கும் பழக்கம். கூட்டுக் குடும்ப வாழ்க்கை என்பதால் ஒரே வீட்டில் நிறையப்பொடிசுகள் இருக்கும், பெரியவர்கள் இருப்பார்கள். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தும்,அன்பினைப் பொழிந்துகொண்டும் வாழ்ந்தனர். சரி, இதில் என்னென்ன நன்மைகளை நாம் இழந்துவிட்டோம்? 
மிக முக்கியமாக விளையாட்டுகளை நாம்பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம். கிராமப்புறங்களைத் தவிர்த்துத் தெருக்களில் சிறுவர்கள்புழுதிகளில் விளையாடுவது அரிதாகிவிட்டது. விளையட்டுகளுக்குப் பதிலாக மாணவர்களின் நேரம்தொலைக்காட்சியிலும், வீடியோ கேம்களிலும், டியூஷன்களிலும் சென்றுவிடுகின்றது. விளையாட்டுகள் கொடுக்கும் உடலுறுதியும் மன உறுதியும் அசாத்தியமானது. நம் தாத்தா பாட்டிகள் போல வயதான காலத்திலும் உறுதியாக, திடமாக இருக்க முடியுமா என்பது சந்தேகமே.
 அதனை விட நம் குழந்தைகள் நிலைமையை நினைத்தால்அச்சமே மிஞ்சுகின்றது. உளவியல் ரீதியாகவும் வெற்றி தோல்விகளைச் சரிசமமாகப் பாவிக்கும்மனநிலை பாதிக்கப்படுகின்றது. தோல்வியைக் கண்டால் ஓடி ஒளிந்துக் கொள்கின்றனர். கூட்டாகசிறுவர்கள் விளையாடும்போது ஏற்படும் நன்மைகள் ஏராளம். மற்ற குடும்பங்கள் பற்றிய அறிதல்,விட்டுக்கொடுக்கும் பாங்கு, வெற்றி மற்றும் தோல்வி இரண்டையும் ருசிபார்த்தல்ஆகியவை சாதாரணமாக நிகழும். அடுத்தது, அந்நாட்களில் தொலைக்காட்சி குறைந்த நேரத்தையே எடுத்துக்கொண்டிருந்தது. நிகழ்ச்சிகளும் குறைவு, தொலைக்காட்சி பெட்டிகளும் குறைவு. ஆனால் இன்று இல்லம் தவறாமல்
பெட்டி ஓடிக்கொண்டே இருக்கின்றது. பெரும் நேரத்தை இது விழுங்கிவிடுகின்றது.
தொலைக்காட்சியில் நன்மைகள் இருந்தாலும் அதன் சதவிகிதம் மிகக்குறைவே. குழந்தைகள்
தொலைக்காட்சியை அதிக நேரம் பார்க்காமல் இருக்க வைப்பது பெரும் போராட்டமே. 

கல்வியைப் பற்றிய எதிர்ப்பார்ப்பிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தனது பிள்ளை பெரும் மதிப்பெண்பெற்றால் போதும் என்ற எண்ணம் ஆரம்ப பாடசாலையில் இருந்தே ஆரம்பித்துவிடுகின்றது. இதனால்இதர விஷயங்களில் குழந்தைகள் கவனம் செல்வதைப் பெற்றோர்கள் விரும்புவதில்லை. பாடம், படிப்பு,டியூஷன், மனப்பாடம், மதிப்பெண். இது போதும் என்ற மனநிலையில் உள்ளனர். இதனைத் தவிர, ஏராளமான கவனச்சிதறல்கள், எதிலும் நாட்டமில்லாமை ஆகியவை பெரும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. சிதறிப்போன கூட்டுக்குடும்ப வாழ்கை நம் சிறுவர்களை வரும்காலத்தில் பாதிக்கலாம். பெரியவர்கள்
பல விஷயங்களில் சமன் செய்தார்கள். உணவு முதற்கொண்டு கதை சொல்வது,
கண்டித்து வளர்ப்பது என குழந்தை வளர்ப்பின் பெரும் பகுதிகளை அவர்கள் செய்துவந்தார்கள். 
இத்தகைய சூழலில் குழந்தை வளர்ப்பு கவனமும் முக்கியத்துவமும் பெறுகிறது. உடல் ரீதியாகவும்,உலகமயமாக்கப்பட்ட சூழலும், நமக்குள் புகுந்துள்ள உணவு பழக்கம் தொடங்கி,குழந்தைகளை அணுகுதல், கல்வியை அணுகுதல், ஊடகங்களைப் பயன்படுத்துதல், உறவுகளைப்பேணுதல், குழந்தைகளுக்கான கதைச் சொல்லலின் அவசியம், தரமான நேரத்தை குழந்தைகளுடன்செலவழித்தல், விளையாட ஊக்கப்படுத்துதல், அதற்கான தளங்களை உருவாக்குதல், இன்னும் ஏராளமான விஷயங்களைக் குழந்தை வளர்ப்பின் அவசியத்தை உணர்த்துகின்றன.
 நம்மிடம் காணக்கிடைக்கும் குழந்தை வளர்ப்பு கட்டுரைகளில் வெளிநாட்டு தரவுகளும் அவர்களின் குழந்தை வளர்ப்பு அணுகுமுறைகளுமே தென்படுகின்றது. நம் சூழல், நம் குடும்ப கட்டமைப்பு, நம் உணவுப் பழக்கம், நம் கல்விச்சூழல் எல்லாம் நமக்குத்தான் நன்கு விளங்கும். எல்லா குழந்தைகளும் ஒன்று, எல்லோர் உளவியலும் ஒன்று என்றாலும் இன்னபிற விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் நமக்கு கட்டுரைகள் வந்து சேர்கின்றன. அவைகளை நாம் எப்படி வழிகாட்டியாக எடுத்துக்கொள்ள முடியும்? நம்மூர் பெற்றோர்கள் அவர்களின் சொந்த அனுபவங்களைச் சக பெற்றோர்களுடன் பகிரவேண்டும், அதற்கான தளங்களையும் அமைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள், அவர்களுக்கான அணுகுமுறையை அந்தப் பெற்றோர்களே முடிவு செய்ய முடியும். மற்றவர்களின் அறிவுரைகளும் அனுபவங்களும் ஒரு வழிகாட்டி மட்டுமே. அதே வழிமுறை நம் குழந்தைக்கு ஒத்துவராமல் போகலாம்
. குழந்தை வளர்ப்பு ஒரு கலை. குழந்தை வளர்ப்பில் அழகிய சிக்கலே எந்த நேரத்தில் அவர்களைத் தோளில் சுமக்க வேண்டும், எப்போது அவர்கள் விரல் பிடித்துக் கூட நடக்க வேண்டும், எப்போதுவழிகாட்டியாக முன்னே நடந்து செல்லவேண்டும், எப்போது அவர்களை முன்னே நடக்கவிட்டுப் பின்னே நாம் செல்லவேண்டும் என்று அறிந்து,புரிந்து நடப்பதே. குழந்தை வளர்ப்பினை புரிந்து, குழந்தைமையைக் கொண்டாடி, ஆனந்தமான, வலுவான , செறிவான இளைய சமூகத்தைக் கட்டமைக்க முற்படுவோம். 

விழியன், கட்டுரையாளர் - தொடர்புக்கு umanaths@gmail.com
 Thanks:Tamil the hindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக