காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்த தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா - ஜோஷ்னா ஜோடிக்கு தலா ரூ.50 லட்சம் ஊக்கப் பரிசை, முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட வாழ்த்துக் கடிதத்தில், "ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2014 காமன்வெல்த் விளையாட்டில், மகளிர் இரட்டையர் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
காமன்வெல்த் விளையாட்டின் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பதை அறிந்தேன். தீபிகா பல்லிக்கல் - ஜோஷ்னா சின்னப்பா இருவரும் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள். இந்த மகத்தான சாதனைக்காக, தமிழக மக்கள் சார்பில் என் உளமாற வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்கள், வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி 2011-ம் ஆண்டில் நான் அறிவித்ததை நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில் உங்கள் இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் ஊக்கப்பரிசு வழங்கப்படும்.
உங்களுக்கும் உங்கள் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கும் பாராட்டு தெரிவிப்பதுடன், வரும் காலத்தில் தமிழகத்துக்காகவும், இந்தியாவுக்காகவும் நீங்கள் மேலும் பல பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
வரலாறு படைத்தது தமிழக ஜோடி
முன்னதாக, காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் - ஜோஷ்னா சின்னப்பா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
இதன்மூலம் காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்து புதிய வரலாறு படைத்துள்ளது தீபிகா - ஜோஷ்னா ஜோடி.
தீபிகா - ஜோஷ்னா இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் இறுதிச்சுற்றில் தீபிகா - ஜோஷ்னா ஜோடி 11-6, 11-8 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் ஜென்னி டங்காப் - லாரா மஸாரோ ஜோடியைத் தோற்கடித்தது.
கடந்த 1998-ல் காமன்வெல்த் போட்டியில் ஸ்குவாஷ் விளையாட்டு சேர்க்கப்பட்ட பிறகு, அதில் இந்தியா ஒரு பதக்கம்கூட வெல்லவில்லை என்ற குறை நீண்ட நாட்களாக இருந்தது. இப்போது அந்தக் குறையை தீபிகா - ஜோஷ்னா ஜோடி தீர்த்துள்ளது.
பிரிட்டிஷ் ஸ்குவாஷ் சாம்பியன் ஷிப்பில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரியவரான ஜோஷ்னா, இப்போது தீபிகாவுடன் இணைந்து காமன்வெல்த்திலும் சாதித்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக