தமிழில் பிற எழுத்தாளர்கள் மொழியின் எல்லைக்குள் நின்றபடி, மொழியின் சாத்தியங்களைப் பயன்படுத்தி மொழியின் எல்லை வரை சென்றிருக்கிறார்கள்.

இதில் பற்பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆனால், மௌனி தொடங்கிய இடமே மொழியின் எல்லைதான். பிரபஞ்சத்தின் விளிம்பில் நின்றுகொண்டு அப்பால் எட்டிப் பார்க்க முயல்வதுபோல்.

மொழியை மீறிச் செல்ல முயன்றவர் என்று மட்டும் மௌனியை வர்ணித்தால் அது பெரும் பிழை. அனுபவத்தையும் சிந்தனையையும் மீற முயன்றவர் அவர். அதனால்தான், 'காதலின் வசீகரக் கடுமை', 'எவற்றின் நடமாடும் நிழல்கள்', 'வாழ்க்கை? ஒரு உன்னத மனவெழுச்சி' போன்ற அற்புதங்களெல்லாம் சாத்தியமாகியிருக்கின்றன.

'நினைவுச் சுவடு' கதையில் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று ஒரு வீட்டு வாசலில் நிற்கிறான் நாயகன் சேகரன். வீட்டின் வாயிற்புறம் இருட்டாக இருக்கிறது அப்போது 'சேகரா- வரக் கூடாதா' என்ற அசரீரியான சப்தம் கேட்கிறது. அந்த சப்தம் எப்படித் தோன்றியிருக்கக்கூடும் என்று மௌனி சொல்வது பேரற்புதம்: 'எத்தனையோ காலம் மௌனமாக நின்ற அந்த இருட்டு அப்போது ஒரு உணர்ச்சி வேகத்தில் சப்தமாக உருவாகியது போலும்!'

கால-வெளி

மௌனியின் தருணங்கள் காலமும் இடமும் முயங்கியவை, ஐன்ஸ்டைன் சொன்ன கால-வெளி போன்று. நகுலன் கவிதையில் வருவதுபோலக் காலம் இடமாகத் தெரியும் தருணங்கள் அவை.

மௌனியின் கதைகளைப் படிப்பவர் கனவுலகத்தில் நடமாடுவதுபோல உணர்வார். கனவைப் போன்று தர்க்கத் துக்குள் அகப்படாத சம்பவங்கள் மௌனியின் கதைகளில் நிறைய வரும். நாம் கனவு காணும்போது ஒரு சாதனம் நம் கனவை அப்படியே மொழி வடிவில் பிரதியெடுத்தால் எப்படி இருக்கும்?

அதைப் போன்றவைதான் மௌனியின் கதைகளும். ஆனால் வெறுமனே சம்பவங்களைக் குலைத் துப் போடுவதாலோ கால-வெளி பின்னணியைச் சரித்துவிடுவதாலோ மட்டும் மௌனி இதையெல்லாம் சாதிக்கவில்லை. அர்த்தமற்ற சம்பவங் களின் மங்கிய பின்புலத்தில் அவற்றை ஒன்றுசேர்த்து ஒரு சரடுபோல் ஓடும் மொழிதான் அவரது சாதனைக்குப் பிரதானக் காரணம். அர்த்தமின்மையின் கடலிலிருந்து திடீர் திடீரென்று தெறித்து விழும் மொழியின் அந்தத் தெறிப்புகள் அபாரமானவை.

பிரபஞ்ச ஒருமை

மொழியின் மீறல்கள், சிதைந்த கால-வெளி ஆகிய எல்லாவற்றுக்கும் அடியில் பிரபஞ்ச ஒருமையைப் பற்றிய ஆழ்ந்த தேடல் ஒன்று மௌனியின் கதைகளில் புதைந்திருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் எல்லா சப்தங்களையும் ஆழ்ந்த நிசப்தம் ஒன்றின் வெளிப்பாடுகளாகத்தான் அவர் காண்கிறார்:

'எவ்வித உலக சப்தமும் பிரபஞ்ச பயங்கர நிசப்தத்தைத்தான் உணர்த்தியது.' 'மாபெரும் காவியம்' கதையில் தனது காவியம் அழிந்ததில் ஆனந்தப்படும் கிட்டு இப்படி உணர்கிறான்: "மலரினின்றும் பிரிந்து வதங்கிய இதழை விட்டுச் சென்ற மணத்தை எங்கும் உணர்ந்தான். எதற்காக மலரையும் மணத்தையும் 'அவன்' ஒன்று சேர்த்தான். கேவலம் இது தொழில் செய்வதில் கொள்ளும் ஆனந்தத்திற்காகவா?' இதேபோல், 'பிரபஞ்ச கானம்' சிறுகதையிலும், பிரபஞ்சமும், பிரபஞ்சத்தின் சப்தங்களும் காட்சிகளும் ஏதோ குறைவுபட்டவைபோல் தோன்றுகின்றன. காரணம்?

"அவள்தான் சங்கீதம்; பிரபஞ்ச கானம் அவளுக்குள் அடைபட்டுவிட்டது… அவளுடைய சங்கீதம் வெளி விளக்கம் கொள்ளாததால் இயற்கையே ஒரு வகையில் குறைவுபட்டது போலவும் வெளியில் மிதப்பது வெறும் வறட்டுச் சப்தம்தான் என்றும் எண்ணலானான்."

பிரபஞ்சமும் தன்னிடம் குறைவு பட்ட ஒன்றை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளத் துடிக்கிறது. அவளிடம் அடைபட்டுக்கிடக்கும் பிரபஞ்சத்தின் அம்சமும் ஆரம்பத்திலிருந்து வெளிப்படத் துடிக்கிறது. இறுதியில் பாடிப்பாடி பாடலின் முடிவில் உயிரை விடு கிறாள். பிரபஞ்சத்திடம் குறைவுபட்ட அம்சம் மறுபடியும் பிரபஞ்சத்தோடு இணைந்து கொண்டது. அப்போது 'உலகப் பேரிரைச் சல் ஒரு உன்னத சங்கீதமாக ஒலித்தது'.

பிரபஞ்சமும் பிரபஞ்ச அம்சமும் ஒன்றுதான் எனினும் ஏதோ ஒரு விஷயம் அவற்றைப் பிரிக்கிறது. பிறகு ஒன்றை யொன்று அடைய முயல்கின்றன. இதன் நிழலாட்டம்தான் வாழ்க்கையோ என்று மௌனி கேள்வி எழுப்பிவிட்டுச் செல்கிறார்.

நீண்ட முத்தத்தில் வாழ்க்கை

மௌனி கதைகளில் வரும் உறவுகள் விசித்திரமானவை. வழக்கமான உறவு களில்கூட அசாதாரணமான பிணைப்பை ஏற்படுத்திவிடுவார் மௌனி. 'சிகிச்சை' கதை அற்புதமான அன்பைச் சுமந்த கதை. சாகும் தறுவாயில் இருக்கும் மனைவி (கமலா) 'தான் இறப்பினும் தன் ஜீவிய ஞாபகத்தை ஒரே பார்வை யில் பதித்துச் செல்ல முயலுவது போன்று' தன் கணவனைப் (சீனு) பார்த்துக்கொண்டிருப்பாள்.

அவள் இறந்த பின் தன் வாழ்க்கை எப்படிக் கழியும் என்று அரற்றிக்கொண்டிருந்த கணவனை அருகில் வரச் சொல்லி ஒரு முத்தம் அளித்துவிட்டு இப்படிச் சொல்வாள்:

"இப்போது தெரிந்ததா உங்களுக்குப் பின்னால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்குமென்று?" ஒரு நீண்ட முத்தத்தில் கழியும் போலும்.' இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் மருத்துவர் கோமதி ஆண்களையும் திருமணத்தையும் வெறுப்பவர். ஆனால், அவர் மனதிலும் ஒரு சலனம் ஏற்படுகிறது.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இவ்வளவு அன்பு இருக்க முடியுமா என்று தோன்றுகிறது. பிறகு, சீனுவைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் கோமதி இறுதியில் சொல்கிறாள்: "உங்களைத் தனியாக உங்களுக்காகவே நான் உங்களை மணக்கவில்லை. என்னுடைய மனதைக் கவர்ந்து ஆட்கொண்ட கமலாவின் நினைவு ததும்பி இருக்கும் உங்களைத்தான் நான் காதலித்து மணம் செய்துகொண்டேன்.

"ஒருவரின் நினைவு எப்போதும் ததும்பி இருக்கும் மனது எவ்வளவு களங்கமில்லாத, அற்புதமான மனது! அதற்காகவே அந்த மனதைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் மனது இன்னும் எவ்வளவு அற்புதமானது! அந்த உறவுதான் எவ்வளவு ஆனந்த வசீகரம்!

ஒருவரில் இன்னொருவரைக் காண்பது, ஒருவரின் இருத்தல் இன்னொருவரின் இருத்தலை (அந்த இன்னொருவர் இறந்துவிட்டாலும்கூட) நிஜப்படுத்திக்கொண்டிருப்பது, நீட்டித்துக்கொண்டிருப்பது என்பன தொடர்ந்து மௌனியின் கதைகளில் (மலைக்கோட்டை, பிரக்ஞை வெளியில், நினைவுச் சுழல், எங்கிருந்தோ வந்தான்) வரும்.

மௌனியின் சிறுகதைகளைப் பற்றிச் சொல்லும்போது 'தமிழர்கள் பாக்கியசாலிகள்' என்றார் க.நா.சு. தமிழ் மொழியின் சாத்தியங்கள் எவையெவை என்பதை ஒருவர் அறிய விரும்பினால் மௌனியின் கதைகளைப் படித்தே ஆக வேண்டும். ஒருவர் மகத்தான எழுத்தாளராகக் கொண்டாடப்படுவதற்கு 24 கதைகள் மட்டுமே போதுமா என்று மௌனியைப் படிக்காத ஒருவர் கேட்கலாம்.

ஆனால், அவரே மௌனியை ஊன்றிப் படிப்பாரெனில் ஒரு வாழ்க்கைக்கு இந்தக் கதைகள் மட்டுமே போதுமானவை என்றும் சொல்லத் தோன்றும். ஆம், மௌனியின் கதைகளைப் படிப்பதென்பது வாழ்க்கையை நீண்ட முத்த மொன்றில் கழிப்பதுபோலத்தான்.

-asaithambi.