தமிழகத்தில் மத்திய அரசின் நேரடி சமையல் எரிவாயு மானிய திட்டத்தில் இணைந்த பின்பும் மானிய தொகை கிடைக்காதவர்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) இணையதளத்தில் உள்ள புகார் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் 15 நாட்களுக்குள் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐஓசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் நேரடி எரிவாயு மானிய திட்டம் கடந்த மாதம் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதுவரை இந்த திட்டத்தில் இண்டேன், பாரத், ஹிந்துஸ்தான் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த ஒரு கோடியே 11 லட்சத்து 700 நுகர்வோர் இணைந்துள்ளனர்.
இவர்களில் 64 லட்சத்து ஆயிரத்து 183 பேருக்கு முன்பணம் மற்றும் மானியம் என மொத்தம் சேர்த்து ரூ.286 கோடியே 75 லட்சம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் எரிவாயு மானியம் பெற விண்ணப்பித்த 2 லட்சத்து 60 ஆயிரம் நுகர்வோர்களை திட்டத்தில் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பல ஆயிரக்கணக்கான நுகர் வோர்களுக்கு முன்பணம் கிடைத் திருந்தாலும் மானியம் கிடைக்க வில்லை. எரிவாயு சிலிண்டர் வாங்கிய பிறகு அந்த மாதத்துக்கான மானியம் கிடைக்கவில்லை என சிலர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஐஓசி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சில நுகர்வோர்களுக்கு நேரடி எரிவாயு மானியம் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அதேபோல் திட்டத்தில் இணைந்துள்ளனர் என தெரிவிப்பதிலும் சில தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளன. இந்த பிரச்சினைகள் ஆராய்ந்து சரி செய்யப்படும். மானிய திட்டத்தில் இணைந்த பின்பும் மானியம் கிடைக்காத நுகர்வோர்கள் indane.co.in அல்லது mylpg.in என்ற இணையதளத்தில் புகார் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த புகார் படிவத்தை பூர்த்தி செய்து நேரடியாக ஐஓசி அலுவலகத்திலோ எரிவாயு ஏஜென்சியிடமோ கொடுக்கலாம். புகார் கொடுத்த 15 நாட்களில் நுகர்வோர்களுக்கு நேரடி எரிவாயு மானியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக