பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. தேர்வு என்றதும் பலருக்கும் இனம் புரியாத காய்ச்சல் ஒன்று எட்டிப்பார்க்கும். நன்றாக படிப்ப வர்களுக்கும் சேர்த்துதான். உண்மையில் அப்படி எல்லாம் ஒரு காய்ச்சல் இல்லவே இல்லை. எல்லாம் நாமாக கற்பிதம் செய்துகொள்வதுதான்.
தேர்வு பயத்தை விரட்டி அடிப்பது எப்படி என்பதை முதலில் கண்டறி யுங்கள். அதற்கு நான் உதவுகிறேன். தேர்வு சமயத்தில் உங்களை எந்தெந்த விஷயங்கள் பயமுறுத்துகின்றன என்பதை முதலில் பட்டியலிடுங்கள். ஒன்று, அந்த விஷயங்களை நினைக் காதீர். அவற்றை மனதிலிருந்து விலக்கி வையுங்கள் அல்லது அதனை துணிச்சலுடன் அணுகி சமாளிக்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அடிப்படை இதுதான்.
நாளை தேர்வு எனில் முதல் நாள் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படித்ததையே மீண்டும் மீண்டும் படிப்பதை நிறுத்துங்கள். தூக்கம் கெட்டால் புத்தி கெடும். மூளையின் நியூரான் சோர்வடைந்து அங்குமிங்கும் நினைவலைகள் அலைபாயும். நேற்று வரை தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் ஒப்பிக்க முடிந்த பதில் தேர்வு அறையில் மறந்து போவதற்கான மருத்துவ ரீதியான காரணங்களில் முக்கியமானது இது.
மாதிரி தேர்வுக்கு இப்போது படித்துக் கொண்டிருப்பீர்கள் அல்லவா. அதுபோலவே படியுங்கள் போதும். நாள் ஒன்றுக்கு நான்கு மணி நேரம் படித்தாலும் படிப்பதை விரும்பி, ரசித்து, கதையை படிப்பது போல படியுங்கள். அதெப்படி கெமிஸ்டிரி பாடத்தை கதையைப் படிப்பது போல படிக்க முடியும்? என்று கேள்வி எழுகிறதா? கணிதம் தொடங்கி அறிவியல் வரை எல்லாமுமே ஒரு புதிர்தான். புதிரை அவிழ்ப்பதில்தான் சுவாரஸ்யமே இருக்கிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? புரிந்து கொண்டுப் படியுங்கள். ஆராய்ந்துப் படியுங்கள். ரசித்துப் படியுங்கள். இப்படி படிப்பீர்களேயானால் கெமிஸ்ட்ரி, கணிதம் முதலான பாடங்கள் சுவாரஸ் யமான சதுரங்க விளையாட்டைப் போல... காமிக்ஸை, கதைப் புத்த கத்தைப்போல... ஒரு த்ரில் சினிமாவைபோல... உங்களை உள்ளே இழுத்துக் கொண்டு போய்விடும். அப்புறம் என்ன? பாடப் புத்தகத்தையும் தாண்டி புதிர் அவிழ்ப்பீர்கள் நீங்கள். படிப்பதின், வெற்றி பெறுவதின் மிக முக்கிய சூட்சுமம் இதுதான்.
மாதிரி தேர்வின்போதே பொதுத் தேர்வுக்கு பயிற்சி எடுங்கள். கேள்வித்தாளை கையில் வாங்கியதும், சாய்ஸில் விட வேண்டிய கேள்விகளை பார்க்காமல், நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு பதில் எழுதலாம். சாய்ஸில் விட்ட கேள்வி அடுத்த மாதிரி தேர்வில் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தை கைவிடுங்கள். தெரியாமல் விட்ட கேள்விகளை குறிப்பெடுத்துக் கொண்டு, அந்த கேள்விகளுக்கான பதிலை நன்றாக மனதில் பதித்து படிக்கலாம். இதனால், தெரியாத கேள்வி மீதுள்ள பயம் பறந்து போகும். மாதிரி தேர்வில் விட்ட கேள்விக்கான பதில் அல்லது தவறாக எழுதிய பதிலை மீண்டும் மீண்டும் எழுதிப் பாருங்கள்.
சரி வந்தே விட்டது தேர்வு. தேர்வு அறைக்கு செல்லும் முன்பு நண்பர் களுடன் ஆலோசிக்க வேண்டாம். நமக்கு தெரியாத கேள்வி, பதில் குறித்து நண்பர்கள் கூறினால், பதற்றம் தொற்றிக்கொள்ளும். தெரிந்த பதிலைக்கூட பயம் மறக்கடித்துவிடும். அன்றைய தினம் காலை 8 மணி முதல் 9.30 மணிவரை தனிமையாக இருங்கள். புத்துணர்வுடன் இருங்கள். மனதை தெளிவாக வையுங்கள். தேவையற்ற பேச்சுகளையும், சுய சந்தேகங்களையும் தவிருங்கள். இதனால், நினைவு சக்தி அதிகரிக்கும். கண்ணை மூடி நான்கு முறை மூச்சை ஆழ்ந்து இழுத்து, மெதுவாக மூச்சை விடுவதன் மூலம் புத்துணர்வு பெறலாம்.
தேர்வு அறையில் கேள்வியை படிக்க அளிக்கப்படும் ஐந்து நிமிடத்தை பதற்றம் இல்லாமல் பயன் படுத்திக்கொள்ளுங்கள். தெளிந்த மனதுடன் புரிதலுடன் கேள்வித்தாளை படியுங்கள்.
தேர்வுக்கு செல்லும் போது பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேலை தேடி அலைவதை தவிர்க்கவும். பெற் றோர்கள் இதற்கு உதவ வேண்டும். பெரும்பாலும் மாதிரித் தேர்வில் பயன்படுத்திய பேனாவையே பொதுத் தேர்விலும் பயன்படுத்துங்கள். பழைய பேனா தவறில்லை. புதுப் பேனா மக்கர் செய்தால், தேவையில்லாத குழப்பம் தானே.
தெரியாத கேள்விக்கான விடையை எழுத வேண்டாம். சென்ற ஆண்டு ஒரு மாணவி மூன்றாம் கேள்விக்கான விடையைத் தெரியாமல் எழுதிவிட்டு, பின், அதனை அடித்து விட்டு நான்காம் கேள்விக்கான விடையை அருமையாக எழுதி முடித்தார்.
ஆனால், கேள்வி எண் மூன்று என்பதை நான்காக மாற்றத் தவறியதால், மதிப்பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதில் மிகுந்த கவனம் தேவை.
குளிர் காலத்தில் இருந்து கோடை காலம் ஆரம்பிக்க உள்ளதால், உடல் நிலையை பராமரிப்பதும் அவசியம். படிப்பு... படிப்பு... என்று வீட்டில் முடங்கியிருக்காமல், தினமும் ஒரு மணி நேரமாவது நடைப்பயிற்சி செல்லுங் கள். தேர்வு அறையில் தலைவலி, ஜல தோஷம் உள்ளிட்ட உடல் உபாதை களைத் தவிர்க்க உணவு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. அடிக்கடி காஃபி, சாக்லெட், குளிர்பானங்கள் அருந்த வேண்டாம். காஃபியில் உள்ள கோக்கைன் ரசாயனம் மந்தநிலையை ஏற்படுத்தக் கூடியது.
பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி கொண்டிருக்கும்போது பெற்றோர்கள் வீட்டு பிரச்சினைகளை பேச வேண்டாம். குடும்ப சச்சரவுகளை தவிர்க்கவும். தொலைக்காட்சி சீரியல் களையும் தவிர்க்கவும். அதேபோல் குழந்தைகளிடம் தாழ்வு மனப் பான்மையை உருவாக்கும் வகையில் பேச வேண்டாம்.
தவிர்க்க வேண்டியவை...
* கணித தேர்வுக்கு ஏழு நாட்கள் விடுமுறை உள்ளதால் கேள்வித்தாள் கடினமாக இருக்கும் என்கிற பயத்தை கைவிடுங்கள்.
* தேர்வு முடிந்ததும் எழுதி முடித்த வினா - விடை குறித்து ஆலோசனை செய்வதும், அதனை மறுமதிப்பீடு செய்வதும் வேண்டாம். முடிந்ததை நினைத்து அடுத்தத் தேர்வை சொதப்பிக்கொள்ள வேண்டாம்.
* இறுக்கமான ஆடை அணிந்து தேர்வுக்கு செல்ல வேண்டாம். அது இனம் புரியாத அசவுகர்யத்தை ஏற்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக