உணர்வுகளைச் சமநிலையில் வைத்திருப்பது உடல் நலத்துக்கு அவசியம்.
"இன்னிக்குக் காலையிலே என்ன ஆச்சு, தெரியுமா?" என்று சஸ்பென்சாக ஆரம்பித்தார் நண்பர். "இன்னிக்குக் காலையிலே என் பேத்தி அமெரிக்காவிலிருந்து வந்தாளா! ஏர்போர்ட்டிலே என்னைப் பார்த்ததும் தாத்தான்னு கூவி என்னை இறுகக் கட்டிக் கொண்டாளா! அவள் என்னைத் தொட்டதுதான் தெரியும், அதுக்கப்புறம் என்ன நடக்கிறதுன்னு சில விநாடிகளுக்குத் தெரியவில்லை. நன்றாக அயர்ந்து தூங்குகிறவனை அடித்து எழுப்பினால் சிறிது நேரம் திருதிருவென்று முழிப்பானே, அந்த மாதிரி முழித்தேன். நல்ல வேளையாக உடனே முழு நினைவு வந்துவிட்டது. பயந்துபோய் நேராக டாக்டரிடம் சென்று ஆலோசனை கேட்டேன்."
"அது ஒன்றுமில்லை, உங்களுக்குச் சடார்னு ஆக்சிடோசின் அளவு எகிறிப்போச்சு, அவ்வளவுதான்" என்று சொல்லிவிட்டுச் சிரித்திருக்கிறார் டாக்டர்.
"ஆக்சிடோசினா, அப்படி என்றால்..?" என்று கேட்டார் நண்பர்.
ஆக்சிடோசின் - ஹார்மோன்
ஆக்சிடோசின் என்பது ஒருவகை ஹார்மோன். அது உடம்பில் நன்னம்பிக்கை, நட்பு, அன்பு, பக்திப் பரவசம், பாசம், காதல், காமம் போன்ற உணர்வுகளைத் தூண்டிவிடுவது. அது கூடுதலாகப் போனால் சில விநாடிகளுக்கு மூளை செயலிழந்து சிந்தை மறந்துபோகும். புதிதாகத் திருமணமான தம்பதிகளுக்குக் கலவியின் உச்சக்கட்டத்தில்கூட அந்த நிலைமை ஏற்படும். பிரசவத்தின்போதும், குழந்தைக்குப் பாலூட்டுகிறபோதும் ஆக்சிடோசின் அதிகமாகச் சுரக்கும். அது தாய்க்கும் சேய்க்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையையும் ஒன்றிப்போகும் உணர்வையும் உண்டாக்குகிறது.
நடந்துபோகிறபோது எதிரே வருகிற ஒருவர் -அவர் இளம் பெண்ணாகவோ, சிறு குழந்தையாகவோ இருந்துவிட்டால் இன்னும் சிறப்பு -நம்மைப் பார்த்துப் புன்னகை செய்தால்கூட நம் உடலில் ஆக்சிடோசின் சுரப்பு அதிகமாகிறது. நின்று அவருடன் சில நிமிஷங் களாவது பேசிவிட்டுப் போகலாம் என்று தோன்றுகிறது. அந்தத் தற்செயல் சந்திப்பு மீண்டும் ஓரிரு முறை நிகழுமானால் அது நட்பாகவும் மலரக்கூடும். பல சமயங்களில் அது பரஸ்பர உதவிப் பரிமாற்றங்கள், காதல், திருமணம் என்றுகூட முடியலாம்.
செல்வந்த நாடுகளில் இது சகஜம். வசதிகுறைந்த ஏழை நாடுகளில் உள்ள எளியவர்களிடம் பரஸ்பர அவநம்பிக்கை அதிகம்; சுயநம்பிக்கை குறைவு. காலையில் எடுத்த ஒரு முடிவு தவறாகப் போய்விட்டால், அன்று முழுவதும் மற்ற பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வு காண்பது என யோசிக்கக்கூடத் தயங்கி நிற்பார்கள். ஆட்டிசம், மூளைச்சேதம் போன்ற வற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ஆக்சிடோசின் சுரப்பு குறைவாகவோ, சுரந்தது உடலால் உட்கிரகிக்கப் படாமலோ இருக்கும். அவர்கள் தம் நெருங்கிய உறவினர்களிடம்கூடச் சிடுசிடுப்பதும் எரிந்துவிழுவதுமாக இருப்பார்கள். அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளைச் சரளமாக அள்ளி வீசுவார்கள். நிலைமை முற்றிவிட்டால் அடிக்கவும் துன்புறுத்தவும்கூட முயற்சிப்பார்கள். அவர்களுக்கு ஆத்மார்த்தமாக நெருங்கிய நண்பர்கள் என யாரும் இருக்க முடியாது.
தனிமை தரும் வலி
பாதுகாப்பான குடும்பச் சூழல் இன்மை, புறக்கணிக்கப்பட்டதாகவோ, தனிமைப்படுத்தப்பட்ட தாகவோ உணர்தல், யாரிடமும் நம்பிக்கை கொள்ளாமை போன்றவை உடலில் ஆக்சிடோசின் சுரப்பதால் ஏற்படும் நல்விளைவுகளை அனுபவிக்க விடாமல் தடுக்கும். தன்னை யாரும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்ற எண்ணமே உடலில் டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் சுரப்பை அதிகமாக்கும். அதன் காரணமாக ஆட்டிசம் அல்லது மூளைச்சேதம் உள்ளவர்களுக்கு ஆக்ரோஷமும் விரோத மனப்பான்மையும் அதிகமாகும்.
பிள்ளைகள் வெளிநாட்டுக்கோ தனிக்குடித்தனம் வைத்தோ பிரியும் நிலையில், பெற்றோர்களுக்குத் தனிமையுணர்வும் எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை பற்றிய கவலைகளும் உண்டாகக்கூடும். வயதாக வயதாக அவை அதிகமாகும். ஆக்சிடோசின் பற்றாக்குறையும் சேர்ந்துவிட்டால், சிடுமூஞ்சித்தனமும் எரிச்சலான பேச்சுகளும் தாங்க முடியாத அளவுக்குப் போய்விடும். ஆக்சிடோசின் இயல்பாக உடலில் சுரந்தாலும் அவசரத்துக்கு, மூக்குக்குள் பீய்ச்சும் மருந் தாகக்கூடக் கிடைக்கிறது.
அவ்வாறானவர்கள் பிள்ளைகளுக்கும் பிற உறவினர்களுக்கும் தம்மால் ஏற்படும் துன்பங்களையும் தொந்தரவுகளையும் உணர முடியாத நிலையில்கூட இருக்கலாம். கலாச்சார மரபுகளும் பண்பாட்டு நெறிகளும் பிள்ளைகளைப் பெரும் சுமையாக அழுத்தும். வயது முதிர்ந்தவர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற வீட்டுப் பெண்மணிகள் படும்பாடு சொல்லி மாளாது. முதியவர்களின் பிடிவாதப் போக்கை மருந்துகொடுத்துச் சரிப்படுத்தக்கூடிய நோய்களாகவும் வரையறுக்க முடியாது. மனநோய் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றால், 'பெரியவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது' என்று அக்கம்பக்கத்தார் ஏளனம் செய்வார்களோ என்ற தயக்கமும் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடும்.
தீர்வை வழங்கும் தியானம்
முதியவர்களின் இத்தகைய நோய்க் குறிகளைக் குறைக்கத் தியானம் சிறந்த வழி. தியானம் நரம்பு மண்டலத்திலும் மூளையிலும் மாற்றங்களை உண்டாக்கி, அதன் மூலமாக உடல் நிலையிலும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவரீதியாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. தியானம், நோய்வாய்ப்படும் சாத்தியங்களைக் குறைப்பதுடன் நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகமாக்குகிறது. மனச் செயல்பாடுகளும் உடலியல் செயல்பாடுகளும் ஒன்றுக்கொன்று இடை விடாத தாக்கங்களை ஏற்படுத்துவதுடன் ஒன்றோ டொன்று ஊடாட்டமும் செய்கின்றன.
உண்பதை பொறுத்து மட்டும் உடலின் உயிரியல் தன்மை அமைவதில்லை. அது, மனதில் ஓடும் சிந்தனைகளையும் பொறுத்திருக்கிறது. சத்தான உணவும் உடற்பயிற்சிகளும் உடலை நல்ல நிலையில் வைத்திருக்கும் என்ற கற்பிதமும் முழுமையானதல்ல. மன இறுக்கத்தின் காரணமாக உடலில் சுரக்கும் கார்டிசால், எபினப்ரின் ஆகிய வேதிகள் நோய் எதிர்ப்புத் திறனை மழுங்கச் செய்யக்கூடியவை. அவை சத்துணவினாலும் உடற்பயிற்சியினாலும் ஏற்படும் நற்பயன்களைக் குறைத்துவிடும்.
மனஇறுக்கம் என்பது மிகப் பரவலாக உள்ள நோய். தீராத பல பிணிகளுக்கு அது காரணமாகிறது. நமது நடத்தையும் மற்றவர்களிடம் நாம் நடந்துகொள்ளும் முறைகளும் நம் உடலில் பற்பல வளர்சிதை மாற்ற வேதிகளை உண்டாக்குகின்றன. அவற்றின் காரணமாக உடலின் உயிரியல் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. துன்பம், அச்சம், சினம், கவலை போன்றவை பசியுணர்வை மழுக்கி, செரிமான மண்டலத்தைச் செயலிழக்கச் செய்வதும் வயிற்றிலும் குடலிலும் புண்களை உண்டாக்குவதும் பெரும்பாலானவர்களுக்கு அனுபவபூர்வமாகத் தெரிந்திருக்கும். அச்சத்தில் வயிறு கலங்கி வயிற்றோட்டம் ஏற்பட்டது என்று சொல்வதுண்டு. தீவிரமான கவலைகள் வயிற்றில் அல்சர் புண்களை உண்டாக்குவது பலரின் அனுபவம். அத்தகைய உணர்ச்சிகள் இதயத் துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் எகிறச் செய்யும்.
தியானம் மனதிலிருந்து சிந்தனைகளை விலக்கி உடலிலும் சுவாசத்திலும் கவனத்தைக் குவிக்கும் பயிற்சி. அப்போது உடலின் இயற்கையான செப்பனிட்டுக்கொள்ளும் திறனும் ஒழுங்குபடுத்திக் கொள்ளும் திறனும் செயலாற்றத் தொடங்குகின்றன. நோய் தீர்க்க உதவும் ஹார்மோன்களின் உற்பத்தி மேம்படுகிறது.
எண்ணங்களும் உணர்ச்சிகளும் மனிதனைக் குணப்படுத்தவும் செய்யும், கொல்லவும் செய்யும். மனச்சோர்வு உடலை வலுவிழக்கச் செய்து, நோய் வாய்ப்புகளை அதிகமாக்கும். ஆகவே, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது உடலுக்கும் நல்லது உள்ளத்துக்கும் நல்லது.
- கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக