டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்விந்த் கேஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை சந்தித்தார்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கேஜ்ரிவால் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடியை அவர் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
பிரதமருடனான சந்திப்பின்போது, டெல்லியின் புதிய முதல்வராக வரும் 14-ம் தேதி தான் பதவியேற்பதால், அந்த விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
முன்னதாக, நேற்று பாஜக மூத்த தலைவரும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சருமான வெங்கய்ய நாயுடுவை அவர் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது டெல்லி மாநிலத்தின் பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக அமைச்சரிடம் நீண்ட பட்டியலை அளித்தார்.
அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, கேஜ்ரிவால் சந்தித்துப் பேசினார். அப்போது டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கேஜ்ரிவால் வலியுறுத்தினார்.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றவுடனேயே, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். டெல்லி அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக