வாட்ஸ் அப் மூலம் பிளஸ் 2 வினாத்தாளை கசியவிட்ட விவகாரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் 131 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்
பிளஸ் 2 வினாத்தாளை செல்லிடப் பேசியின் வாட்ஸ் அப் மூலம் கசியவிட்ட விவகாரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 5 தனியார் பள்ளிகளில் தேர்வறைக் கண்காணிப்பாளர்களாக இருந்த 131 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட 5 பள்ளிகளிலும் வரும் திங்கள்கிழமை முதல் நடைபெற உள்ள தேர்வுகளில் ஓர் அறைக்கு 2 பேர் வீதம் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் தின்னூரில் தனியார் பள்ளி உள்ளது. கடந்த 18-ஆம் தேதி பிளஸ் 2 கணிதத் தேர்வு நடந்தபோது இங்கு கண்காணிப்பாளராக இருந்த ஒசூர் தனியார் பள்ளி ஆசிரியர் மகேந்திரன், கணித வினாத்தாளை வாட்ஸ் அப் மூலம் சக ஆசிரியர்களான கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு அனுப்பினார். இது தொடர்பாக ஆசிரியர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒசூர் தனியார் பள்ளித் தேர்வு மையக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்றியவர்களையும்,வாட்ஸ் அப் மூலம் வினாத்தாளை அனுப்பிய ஆசிரியர்கள் பணியாற்றிய பள்ளி, அதன் குழுமப் பள்ளி என மொத்தம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 பள்ளிகளைச் சேர்ந்த 93 கண்காணிப்பாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரி கூறியது: கணித வினாக்களுக்கான விடைகள் மாணவர்கள் சிலருக்குத் தெரிவிப்பதற்காக செல்லிடப்பேசியில் இருந்து கணித வினாத்தாள் புகைப்படம் எடுக்கப்பட்டு வாட்ஸ் அப் மூலம் சிலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிலரது செல்லிடப்பேசி எண்களில் இருந்த வினா, விடைகள் அழிக்கப்பட்டுள்ளன. அழிக்கப்பட்ட தகவல்களைத் திரும்ப எடுக்க உள்ளோம். இப்பிரச்னையில் சுமார் 20 முதல் 30 பேருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். தற்போது கைதான ஆசிரியர்கள் 4 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு ஆகியவற்றில் வழக்குப்பதிவு செய்துள்ளோம் என்றார். ஒசூர் கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகள் சிலரும் இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகத் தெரிகிறது. அதனால் இது தொடர்பாக விசாரணை நடத்த சென்னையில் இருந்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஒசூர் வருகை தர உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில்...: கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிக் குழுமத்தினருக்கு தருமபுரியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகள் உள்ளன. இந்த 2 பள்ளிகளின் தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர்களாக இருந்த 38 பேரும் இரு பள்ளிகளிலும் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக இருந்த 2 பேரும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தெரிவித்தார். இவர்களுக்குப் பதிலாக வரும் திங்கள்கிழமை முதல் நடைபெறும் தேர்வுகளுக்கு ஒவ்வொரு தேர்வறைக்கும் தலா 2 பேர் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளதாகவும் மகேஸ்வரி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக