'இ' என்ற ஒலியுடன் முடியும் சொற்கள் பூனையை ஈர்க்குமாம்…
சிறந்த உதாரணம் 'எலி' தானே?
*
உணவுக் கட்டுப்பாட்டால் இனி பூச்சிகளை உட்கொள்ள நேரிடலாமாம்.
மரவட்டை சாம்பார், கட்டெறும்பு ரசம், ஈசல் பொரியல் என மெனு அமையுமா?
*
கொலையாளிகளைக் கண்டுபிடிக்க ஆவியுடன் பேச்சு.
கொலையானவரின் ஆவியுடனேவா?
*
கிரிக்கெட் விநாயகர் கோயிலில் 'ஓம் சிக்ஸர் அடிப்போனே போற்றி' என்று தொடங்கி அர்ச்சனை.
போற்றிகள் செஞ்சரி போட்டு 108 ஆக இருக்கும் அல்லவா?
*
ஒரு லட்சம் வாங்கும் பாடகர்கள் ரூ.14,000 சேவை வரி கட்ட வேண்டும்.
ககன குதூகலத்துக்கு பதில் இனி முகாரியில் முனகுவார்கள்.
*
இனி, கிணறு தோண்ட அனுமதி பெற ரூ.5000 கட்டணமாம்.
கிணறு வெட்ட லஞ்ச பூதம் கிளம்பாம இருக்குமா?
*
கால் டாக்ஸிபோல் கால் டிரக் சேவை அறிமுகம்.
எல்.கே.ஜி. மாணவர்கள் புத்தகங்களை எடுத்துச்செல்ல வசதியாக இருக்கும்.
*
யோகா நிலையங்கள் இனி வழக்குகளிலிருந்து விடுபடுவார்கள்.
பாபா ராம்தேவுக்கு அரசு போடும் சிறப்பு ஆசனம்தானே?
*
பொய் சொன்னால் நாய்க்குத் தெரியுமாம்.
லேட்டாக வந்த எஜமானர், மனைவியிடம் ரீல் விட்டால் ஜிம்மி 'வள் வள்' என்று குலைக்குமா?
*
ஐரோப்பிய பயணத்தில் டால்பினுக்கு ஹன்சிகா முத்தம் கொடுத்தார்.
டால்பின் அழகிய ராஜகுமாரனாக மாறிவிட்டதா?
*
ஓய்வுபெற்ற ரேஸ் குதிரைகளுக்கு ஹைதராபாத்தில் வசதியான புகலிடம்.
அசுவமேத யோகம்?!
*
எந்த ஊருக்கு மாறினாலும் அதே செல் நம்பரை வைத்துக் கொள்ளலாமாம்.
புழல், வேலூர், திகார்னு எங்கே உள்ளே போனாலும் ஒரே செல் நம்பரா? என்று வியக்கிறார் ஒரு ஊழல் அரசியல்வாதி.
*
முதலையுடன் பாத் டப்பில் நெடுநேரம் குளிக்கும் விலங்கியல் ஆர்வலர்.
நேரம் ஆக ஆக முதலைக் கண்ணீரால் தண்ணீரின் அளவு அதிகரிக்காதோ?
*
திருச்சி மாவட்டத்தில் மீசை வைத்த புத்தர் சிலையைப் பார்த்து வியப்பு.
ஆசையைத்தானே அவர் ஒழிக்கச் சொன்னார். மீசையை இல்லையே.
*
சவூதி அரேபிய எஜமானிகள் அழகில்லாத பெண்களையே வேலைக்கு வைக்கிறார்களாம்.
'அழகான பொண்ணு நான்… அதுக்கேத்த கண்ணுதான்'னு கணவரை மயக்கிவிடக்கூடாதே என்று இருக்கும்.
*
30 பேரை ஊசி போட்டுக் கொன்ற ஜெர்மானிய நர்ஸுக்கு ஆயுள் தண்டனை.
1000 பேரைக் கொன்று அரை வைத்தியனாக மாற ஆரம்பித்திருப்பாரோ?
*
டிவி பார்க்கவேண்டி அழும் குழந்தையை மேஜை டிராயரில் பூட்டிய ஆயா...
டிவி சீரியலின் அழுகைச் சத்தத்தைக் கேட்கப் போகவா?
*
'தாரை தப்பட்டை' படத்தில் நடிக்கும் ஹரிதுவார மங்கலத்தின் சோலோ தவில் இசை.
கெட்டி மேளம் முழக்கி லய விரும்பிகளை அசத்துவாரல்லவா?
*
இணையத்தின் மூலம் வாக்களிக்க முடியும் — தேர்தல் கமிஷனர் பிரம்மா அறிவிப்பு.
இதன்மூலம், பல வேட்பாளர்களின் தலை எழுத்தை பிரம்மா மாற்றிவிடலாம்.
*
தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் வட்டி.
பத்தரை மாற்றுத் தங்கமாயிருந்தால் பத்தரை சதவிகித வட்டி கிடைக்குமா
*
ஸ்மார்ட் போன் இசையால் 100 கோடி இளைஞர்களின் கேட்கும் திறன் பறிபோகும் அபாயம்.
பாட்டுச் சத்தத்தில் எச்சரிக்கையை காதில் போட்டுக்கொள்ள மாட்டார்கள்.
*
எமகண்டத்தில் பிறக்கும் பிள்ளைகள் கூடுதல் சுறுசுறுப்புடன் இருப்பார்களாம்.
படிப்பிலும் விளையாட்டிலும் 'எமன்' என்று பெயர் எடுப்பார்கள்தானே?
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக