புதன், 25 மார்ச், 2015

வாட்ஸ்அப் மூலம் பிளஸ் 2 கணிதத் தேர்வுத்தாளை பகிர்ந்ததாக கைது செய்யப்பட்ட 4 ஆசிரியர்களுக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஒசூரில் வாட்ஸ்அப் மூலம் பிளஸ் 2 கணிதத் தேர்வுத்தாளை பகிர்ந்ததாக கைது செய்யப்பட்ட 4 ஆசிரியர்களுக்கும் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஓசூர் பரிமளம் மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில் கடந்த 18-ம் தேதி நடந்த கணிதத் தேர்வுக்கு அறைக் கண்காணிப்பாளராக சென்ற விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர் செல்போன் மூலம் வினாத்தாளை படம் எடுத்து, சக ஆசிரியர் களான உதயகுமார், கார்த்தி கேயன் ஆகியோருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பினர்.

இதுதொடர்பான புகாரின்பேரில் ஆசிரியர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஒசூர் ஜெ.எம்.-2 ல் ஆசிரியர்கள் உதயகுமார், கோவிந்தன், கார்த்திகேயன், மகேந்திரன் ஆகிய 4 பேரும் இன்று ஆஜர் படுத்தப்பட்டனர்.

ஆசிரியர்கள் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது ஆனால் ஜாமீன் கொடுத்தால் சாட்சியங்கள் களைக்கப்பட வாய்ப்பிருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து, ஒசூர் ஜெ.எம்.-2 நீதிபதி சுரேஷ் குமார், ஆசிரியர்கள் நால்வரின் ஜாமீன் மனுவை ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும், ஆசிரியர்கள் நால்வரையும் 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளிப்பதாக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 404, 420, 606 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, ஆசிரியர்களை போலீஸ் காவலில் எடுப்பதற்கான நடைமுறைகள் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக