சனி, 14 மார்ச், 2015

பிளஸ் டூ தேர்வுகள் :அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தலைமை யில் சிறப்பு பறக்கும் படைகள்

 பிளஸ் டூ கணிதம் உள்பட முக்கிய பாடத் தேர்வுகள் வரும் 18-ம் தேதி தொடங்க இருக்கின்றன. இத்தேர்வுகளை கண்காணிக்க அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 33 பேர் தலைமை யில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ் டூ தேர்வு கடந்த 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொழிப் பாடங்கள் உள்ளிட்ட தேர்வுகள் முடிந்திருக்கின்றன. பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளுக்கான கணிதம், விலங்கியல் தேர்வுகள் 18-ம் தேதியும் வேதியியல் தேர்வு 20-ம் தேதியும், இயற்பியல் தேர்வு 27-ம் தேதியும், உயிரியல், தாவரவியல் தேர்வுகள் 31-ம் தேதி அன்றும் நடைபெற உள்ளன.

ஏற்கெனவே, தேர்வு மையங் களில் காப்பி அடிப்பது, பிட் அடித்தல் உள்ளிட்ட முறைகேடு களை தடுக்க மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப் பட்டுள்ளன. இவை தவிர, வருவாய்த்துறையினரும் தேர்வு மையங்களில் திடீர் சோதனை மேற்கொள்கிறார்கள். கணிதம், இயற்பியல்,வேதியியல், தாவர வியல், விலங்கியல் ஆகிய தேர்வுகளுக்கு கண்காணிப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழக மூத்த பேராசிரியர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு 33 பேராசிரியர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார். இவர்களில் 3 பேர் சென்னை மாவட்டத்திலும், எஞ்சிய 30 பேர் தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களிலும் பணியில் ஈடுபடுவார்கள்.

அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் தனியாக சென்று திடீர் ஆய்வு மேற்கொள்வர். தேவைப்பட்டால் கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்தும் சோதனை நடவடிக் கைகளில் ஈடுபடுவர் என்றும் பதிவாளர் கணேசன் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக