அறியாமை என்ற இருளை நீக்கி வாழ்வில் ஒளியேற்றும் ஆசிரியர்களை வீதிக்குக்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது தமிழக அரசு!அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்தஆசிரியர்களின் பிரமாண்ட கண்டனப் பேரணி தமிழக அரசை திகைக்க வைத்திருக்கிறது.அரசு மற்றும்அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தொடக்க நிலை, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின்
ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து, 'ஜாக்டோ' என்ற கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றனர். ஆட்சிக்கு எதிரான முதல்போராட்டத்தைஜாக்டோ நடத்தி இருக்கிறது.
'ஜாக்டோ' கூட்டமைப்பின் மதுரை உயர்மட்ட குழு உறுப்பினரான கே.பி.ஓ.சுரேஷிடம்பேசினோம். ''தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய
ஆசிரியர்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது. எங்களுடைய நியாயமான கோரிக்கைகள்கூட மாநில அரசால்கண்டுகொள்ளப்படுவது இல்லை. தேர்தல் நேரத்தில் எங்களுடைய ஓட்டுகளைப் பெறுவதற்கு அரசியல்வாதிகளின் நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், 6-வது ஊதியக் குழு பரிந்துரையைஅமல்படுத்துதல், அகவிலைப்படி 100 சதவிகிதத்தைக் கடந்துவிட்டதால் 50 சதவிகித அகவிலைப்படியை அடிப்படைஊதியத்துடன் சேர்த்து வழங்குதல், தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல அமல்படுத்தப்பட்ட புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், பல ஆண்டுகளாக வழங்காமல் இருக்கும் அலவன்ஸ்களை
வழங்குதல் போன்ற 15 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி அதிகாரிகளோடு பேச்சுவார்த்தைநடத்தினோம்.அவர்களும் 25-ம் தேதி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திக்க வைப்பதாகஉறுதியளித்திருந்தனர். சொன்ன தேதியில் நாங்கள் குழுவாகச் சென்று முதல்வரைப் பார்க்க மனுவோடு நின்றுகொண்டிருந்தோம். மூன்று மணி நேரமாகியும்அவரைச் சந்திக்க முடியவில்லை. இனி ஆட்சியாளர்களை நம்பினால் ஏமாற்றமே மிஞ்சும்... போராட்டம் ஒன்றுதான் தீர்வாக இருக்க முடியும் என்றுகூட்டத்தில் முடிவு எடுத்தோம். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரமாண்ட பேரணிகளை நடத்தினோம்.தொடக்க நிலை, இடைநிலை, முதுநிலை என கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் இந்தப் பேரணியில்கலந்துகொண்டனர். எங்களுடைய போராட்டம் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கவனத்துக்குச் சென்றிருக்கும் என்றுநம்புகிறோம். போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவோம்'' என்றார் உறுதியாக.
'ஜாக்டோ' கூட்டமைப்பின் சென்னை
உயர்மட்ட குழு உறுப்பினரான அ.மாயவன், ''இந்த15 கோரிக்கைகளை முன்வைத்து நீண்ட காலமாகப் போராடி வருகிறோம். மத்திய அரசு புதிய பென்ஷன் திட்டத்தைப் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தத் துடித்தபோது அதை தைரியமாக எதிர்த்தவர் மம்தா பானர்ஜி. இன்று வரை மேற்கு வங்கத்தில் பழைய பென்ஷன் திட்டமே நடைமுறையில் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் 2004-ல் அமல்படுத்த வேண்டிய இந்தத் திட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 2003-லேயே அமல்படுத்தினார். அதன் எதிரொளி 2006-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோற்கடிக்கப்பட்டது.ஆட்சிக்கு வந்த தி.மு.கவும் ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவில்லை. 2011 சட்டமன்ற தேர்தல்
வாக்குறுதியில் ஜெயலலிதா 'புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படும்' என்று உறுதியளித்திருந்தார். ஆட்சி அமைத்து மூன்றாண்டுகள் முடிந்துவிட்டன. முன்னாள் முதல்வர் கொடுத்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.கல்வித் துறை அதிகாரிகளுக்கு எங்களைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. செய்த தவறுகளை மறைக்கவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. ஒளிவுமறைவின்றி நேர்மையாக செயல்பட வேண்டிய கல்வித் துறை காலிப் பணியிடங்களை வெளிப்படையாக நிரப்பவே தயங்குகிறார்கள். கிட்டதட்ட 3,000-க்கும் அதிகமான இட மாறுதல்களை ஆதாயங்களின் அடிப்படையில் நிரப்புகிறார்கள்'' என்று ஆவேசப்பட்டார் அவர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாநில அரசுக்கு எதிரான இந்த கண்டனப்
பேரணி நடந்து முடிந்துள்ளது. வருகின்ற 21-ம் தேதி சென்னையில் ஜாக்டோ கூட்டமைப்பின் தலைமைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. 27 ஆசிரியர் சங்கங்கள் இணைந்துள்ள நிலையில் மேலும் சில ஆசிரியர் சங்கங்கள் ஜாக்டோ கூட்டமைப்பில் இணைந்து போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாகக் கூறுகின்றனர்.இந்தப்பிரச்னை தொடர்பாகப் பேச கல்வித் துறை அதிகாரிகளோ, துறையின் அமைச்சரோ தயாராக இல்லை. துறை செயலரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, 'ஆசிரியர்களின் பெரும்பாலான பிரச்னைகள் மத்திய அரசை சார்ந்தது. மாநில அரசு இதில் ஏதும் செய்ய முடியாது' என்று கருத்து தெரிவித்தனர்.மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக