புதன், 11 மார்ச், 2015

அனிமேஷன் முறையில் ஆய்வகங்கள்!


கற்பித்தல், கற்றலின் உத்திகளாகச் சுமார் 100-க்கும் மேற்பட்ட முறைகள் கல்வியாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், நடைமுறையில் சொற்பொழிவு முறையையே பெரும்பாலான ஆசிரியர்கள் தற்போதும் கடைப்பிடிக்கின்றனர். மேலும் சில முறைகளும் சில கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தப்படுவது உண்மைதான்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கல்வி கற்பிப்பது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தற்போது அதிகரித்து வருகிறது. "ஸ்மார்ட் கிளாஸ்" (smart class) எனப்படும் கணினி தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய வகுப்பறைகள் அரசுப் பள்ளிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன. அரசு வழங்கிய மடிக்கணினிகளிலும் மேல்நிலைப் பாடப்புத்தகங்கள் மின்னூல்களாக வழங்கப்பட்டுள்ளன.

மெய்நிகர் ஆய்வகங்கள்

தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கற்பித்தலை மேம்படுத்த அரசும் பலவகைகளில் முயன்று வருகிறது. இத்தகைய மேம்பாட்டு முறைகளில் ஒன்றாக, மத்திய மனித வள அமைச்சகத்தினால் செயல்படுத்தப்படும் மெய்நிகர் ஆய்வகங்கள் (virtual labs) உள்ளன.

தேசியக் கல்வி செயல் திட்டத்தில் தகவல் தொழில் நுட்பப் பயன்பாட்டின் அடிப்படையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினால் மெய்நிகர் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டு அண்மைக் காலமாகப் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளன.

நாட்டிலுள்ள முக்கியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கழகங்களால் பி. எஸ்ஸி, எம். எஸ்ஸி, பி. டெக், எம். டெக் போன்ற அறிவியல் தொழில்நுட்ப மாணவர்களைக் கருத்தில் கொண்டு அவர்களின் செய்முறை பாடத்திட்டத்தின் அடிப்படையில் மெய்நிகர் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வகங்கள் மின்னணுத் தகவல் தொழில்நுட்பம், கணினித் தொழில்நுட்பம், இயந்திரவியல், வேதியியல் மற்றும் வேதி தொழில்நுட்பம், உயிரித்தொழில்நுட்பம் மற்றும் மருத்துவப் பொறியியல் தொழில்நுட்பம் எனப் பல பிரிவுகளில், அந்த அந்த பாடத்திட்டங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன.

எப்படி நுழைவது?

பேராசிரியர்களும் மாணவர்களும் www.vlab.co.in என்ற இணையத்தில் தங்களுக்கென்று ஒரு பயனர் கணக்கினை இலவசமாகத் தொடங்கி இந்த ஆய்வகங்களுக்குள் நுழையலாம். செய்முறைகளை மேற்கொள்ளலாம். இந்த ஆய்வகத்தில் ஒருங்கிணைவு மைய (nodal centre) பயனாளராக கல்வி நிறுவனங்கள் தங்களை இணைத்துக்கொள்ள அதற்குரிய படிவத்தை நிரப்பிப் பதிவு செய்துகொள்ளலாம். ஒருங்கிணைவு மையமாகச் செயல்படும் கல்விநிறுவனத்துக்கு மென்பொருள், இணைய வகுப்புகள் உள்ளிட்ட பலவிதச் சேவைகள் மற்றும் மெய்நிகர் ஆய்வகங்கள் தொடர்பான பயிற்சி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன.

அனைவருக்கும் அனைத்துவிதமானச் செய்முறைகளும் சென்று சேரும் வகையிலும் இந்த ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எளிய முறையில் அனிமேஷன் முறையில் உருவாக்கப்பட்ட ஆய்வுகளால் சராசரி மாணவனும் அறிவியல் கோட்பாடுகளை எளிதில் புரிந்துகொள்ள முடியும். செய்முறைத் தேர்வுகளுடன் கூடிய இந்த ஆய்வகங்களில் காட்சிவழிச் சொற்பொழிவுகள் கூடுதல் வசதிகளாகக் கிடைக்கின்றன.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக