மதுரை மாவட்டத்தில், அரசு உயர்நிலை பள்ளிகளில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் உள்ளது போல், தமிழ் பாடத்திற்கும் இரண்டு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என, தமிழாசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில், 90க்கும்மேல் அரசு உயர் நிலை பள்ளிகள் உள்ளன. பல பள்ளிகளில் 200க்கும் மேல் மாணவர்கள் படிக்கின்றனர். இதில், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் நடத்த இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், 300 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில்கூட ஒரு தமிழாசிரியர் மட்டுமே உள்ளார். இதனால், தாய் மொழியை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அன்சுல் மிஸ்ரா கலெக்டராக இருந்தபோது, அப்போதைய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாகராஜ முருகன் மேற்பார்வையில், 15 கல்வி ஒன்றியங்களில் மூன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களிடையே தமிழ் பாடத்தில் "கல்வித்திறமை' குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில், 12,074 பேருக்கு உயிரெழுத்துக்களை கடைசி வரை வாசிக்க தெரியவில்லை. 27,556 பேர் பிழையாக வாசித்தனர். 14,053 பேருக்கு முழுவதுமாக எழுத தெரியவில்லை. 27,335 பேருக்கு வாக்கியம் அமைத்து எழுத தெரியவில்லை என கண்டறியப்பட்டது. ஆனால், இதற்கான தீர்வு குறித்து எந்த நடவடிக்கையும் கல்வி அதிகாரிகள் இதுவரை எடுக்கவில்லை.
தமிழாசிரியர் கழக தலைவர் முனியாண்டி, செயலாளர் முருகேசன் ஆகியோர் கூறியதாவது:அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட உயர்நிலை பள்ளிகளுக்கு தமிழாசிரியர் தேவைப்பட்டது. அப்போது, பணிநிரவல் அடிப்படையில், உயர் நிலைப்பள்ளியில் இரண்டு தமிழாசிரியர்களில் ஒருவரை பணிமாற்றம் செய்தனர். ஆனால், புதிய ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கவில்லை. பற்றாக்குறையால், உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்களை கொண்டு தமிழ் பாடம் எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது, என்றனர். சங்கம் வளர்த்த மதுரையில், தமிழுக்கு ஏற்பட்டுள்ள சோதனை குறித்து, கல்வி அதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டும்.
Source : DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக