பொருள் இலக்கணம் தமிழுக்கே சிறப்பாக அமைந்தது. இது அகம், புறம் என்ற இரு பிரிவுகளுள் அடங்கும் இலக்கியங்களை உருவாக்கும் படைப்பாளன் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வகுத்துக் கூறுகின்றது. இது தமிழரின் கவிதை இயலாகும். அரிஸ்டாட்டிலின் கவிதை இயலோடு இதனை ஒப்பிடலாம். பொருளதிகாரம் கூறும் செய்திகளில் குறிப்பிடத்தக்கனவற்றை மட்டும் இங்கு விளக்குவோம். ஏழு அகத்திணைகளும், அவற்றின் கூறுகளும் அகத்திணை இயலுள் சொல்லப்படுகின்றன. அகத்திணை இலக்கியத்திற்கு ஏற்ற யாப்பாக, பரிபாடலும் கலியும் ஆசிரியரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அகத்திணை ஒவ்வொன்றுக்கும் புறமாக, ஒவ்வொரு புறத்திணை வகுத்துரைக்கப்பட்டுள்ளது. இம்மரபு பின்னர் மாறிவிட்டது. அகத்திணை ஏழு என்றும், புறத்திணை பன்னிரண்டு என்றும் பின்னாளில் கொள்ளப்பட்டன. புறத்திணை இயல் தமிழரின் போர் முறையை விவரிக்கிறது. இறந்துபட்ட மறவர்களுக்குக் கல்நட்டு வழிபாடு செய்யும் மரபினைத் தொல்காப்பிய ஆசிரியர் வெட்சித்திணையில் கூறியுள்ளார். அகவிலக்கியம் களவு, கற்பு என்ற இரு நிலைகளில் இயற்றப்படுகிறது. இவ்விரு ஒழுக்கங்களிலும் இடம் பெறும் மாந்தர், அவர்கள் பேசும் சூழல்கள் முதலியனவே களவியலிலும் கற்பியலிலும் விவரிக்கப்பட்டுள்ளன. கற்பு என்பது திருமணச் சடங்குடன் தொடங்குகின்றது. ஒரு காலத்தில் சடங்கு ஏதும் இன்றி ஆணும் பெண்ணும் இணைந்த வாழ்க்கை நிலை இருந்தமையை ஆசிரியர் குறிப்பாகக் கூறுவார். பெற்றோர் ஒத்துக் கொள்ளாதபோது காதலர் உடன்போய், சடங்குடன் திருமண வாழ்வில் புகுவது உண்டு என்றும் ஆசிரியர் கூறுகின்றார். கவிதைக்கலைக்கு அழகு தருவது அணிகளாகும். அணியிலக்கண நூல்கள் பல பிற்காலத்தில் தோன்றின. தொல்காப்பியர் அணிகளுக்கெல்லாம் தாயாகிய உவமையை மட்டும் ஓர் இயலில் விளக்குகின்றார். வினை, பயன், மெய், உரு என்னும் நான்கும் உவமையின் தோற்றத்திற்கு நிலைக்களங்கள் என்கிறார் ஆசிரியர். உள்ளத்தில் தோன்றும் இன்பம், துன்பம் முதலிய உணர்வுகள் உடம்பின் வாயிலாக வெளிப்படுகின்றன. அங்ஙனம் வெளிப்படுதலை மெய்ப்பாடு என்பர். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம் வெகுளி, உவகை, என அவை எட்டாகும். இவற்றையும் இவற்றுக்குரிய நிலைக்களன்களையும் ஓர் இயலில் விளக்குகின்றார். இது இயற்றமிழுக்கும், நாடகத் தமிழுக்கும் பொதுவானதாகும். பொருளதிகாரத்தில் அமைந்த செய்யுள் இயலும், மரபியலும் பழந்தமிழரின் அறிவு மேம்பாட்டிற்குச் சான்றாக அமைந்துள்ளன. வெண்பா, அகவல், வஞ்சி, கலி என்று நான்கு வகையான யாப்புகளை விளக்கும் ஆசிரியர், முதற்கண் மாத்திரை முதலாக 26 அகவுறுப்புகளைச் சொல்லி அம்மை, அழகு, தொன்மை, தோல் முதலான எட்டுவகைப் புற உறுப்புகளையும் சொல்லியுள்ளார். ஆசிரியர் பல்வேறு இலக்கிய வகைகளைக் குறிப்பிடுகிறார். அவற்றுள் அடி வரையில்லாதனவாக ஆறு உள்ளன. பிசி, அங்கதம், மந்திரம், முதுமொழி, வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ முதலிய செய்யுள் வகைகள் அன்று வளர்ச்சியுற்றிருந்தமை அறியப்படுகின்றது. மரத்தையும், புல்லையும் ஆசிரியர் வேறுபடுத்திக் காட்டுவதும், உயிர்களை ஆறு வகையாக வகுத்துக் காட்டுவதும், ஆசிரியரின் நுண்ணிய அறிவியற் பார்வைக்குச் சான்றாகும். இவர் விலங்குகள், பறவைகள், செடி கொடிகள் முதலியவற்றோடு தொடர்புடைய மரபுகளையும், அரசர் அந்தணர் முதலான பிரிவினர்க்குரிய மரபுகளையும் மரபியலில் கூறியுள்ளார். இறுதியில், இலக்கியப் படைப்பாளி கையாள வேண்டிய 32 வகையான உத்திகளைத் தொகுத்துக் கூறியுள்ளார். இங்ஙனம், வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பகுத்து, அவற்றைப் பற்றிய இலக்கியப் படைப்பிற்கு வேண்டிய கூறுகளையெல்லாம் நிரல்படத் தொகுத்துக் கூறும் பேரிலக்கணத்தைப் படைத்த தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி எனப் போற்றப்படுவதில் வியப்பில்லை. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக