திங்கள், 27 ஜூலை, 2015

நாட்டி கார்னரில் நிற்க வைக்க வேண்டியவை நமது மனப்பாடக் கல்வி முறையும், அதன் வணிகக் கொள்ளை முறையும்தானே!


அண்மையில் ஒரு பகல் நேரத் தொடர் வண்டிப் பயணத்தின்போது ஓர் இளம் தாயையும், அவரது எட்டு வயதுப் பெண் குழந்தையையும் சந்தித்தேன். நாங்கள் பயணித்த அந்தத் தொடர் வண்டி சில நிலையங்களில் நின்றபோதெல்லாம், அந்தக் குழந்தை நடைமேடை புத்தகக் கடைகளைச் சுட்டிக் காட்டுவதும், உடனடியாக அந்தத் தாய் இறங்கிச் சென்று பருவ இதழ்கள் சிலவற்றை வாங்கிவந்து தன் மகளிடம் கொடுப்பதுமாக அந்தப் பயணம் தொடர்ந்தது.
 அந்த இதழ்களைப் படிப்பதும், தான் படித்தவற்றைக் குறித்துக் கூடுதல் விளக்கங்களைத் தன் தாயிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதுமாக இருந்த அந்தக் குழந்தையைப் பாராட்டி விசாரித்தபோது, அக்குழந்தை பள்ளியில் சேர்க்கப்படாத இல்லப் பள்ளிக் (Home School) குழந்தை என்றும், தானும், தன் கணவருமே அந்தக் குழந்தையின் முதன்மை ஆசிரியர்கள் என்றும் அந்தத் தாய் தெரிவித்தார்.
 அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் சிலவற்றில் நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிற இல்லப் பள்ளி முறை இப்போது இந்தியாவிலும் ஆங்காங்கே தோற்றம் கண்டிருக்கிறது. 
 இப்போது நம் நாட்டில் நடைமுறையில் இருக்கும் சிக்கல்கள் மிகுந்த பள்ளிக் கல்வி முறையே பல பெற்றோர்களை இத்தகையத் தீர்வுக்குத் தள்ளியிருக்கிறது என்றும் சொல்லலாம்.
 ஹோம் ஸ்கூல் என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கிற இல்லக் கல்வி முறையில் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படாமல் வீட்டிலேயே படிப்பார்கள். தாயும், தந்தையும், உறவினர்களும், நியமிக்கப்படுகிற பயிற்றுனர்களும் அவர்களுக்கு ஆசிரியர்களாக இருந்து எளிய முறையிலும், நெருக்கடிகளைத் தராத சுதந்திரமான முறையிலும், வேண்டியவற்றை அவர்களுக்குப் பயிற்றுவிப்பார்கள்.
 வலிய வலியக் கற்றுக் கொடுப்பதைக் காட்டிலும், தானே விரும்பிக் கற்றுக் கொள்வதற்குக் குழந்தைகளைத் தூண்டுவதே இந்த இல்லக் கல்வி முறையின் சிறப்பாகும். 
 இக்கல்வி முறையில், தங்களது குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய தேவையின் காரணமாக பெற்றோர்களும் புதிது புதிதாகக் கற்றுக் கொள்ள முனைகின்றனர். குழந்தைகளும் தாங்கள் விரும்பியதையெல்லாம் தங்களது பெற்றோர்களின் துணையோடு படித்துத் தெரிந்து கொள்கின்றனர். 
 தாங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளையெல்லாம் எத்தகைய அச்சமும் இன்றிக் கேட்டு விடைகளைத் தெரிந்து கொள்கின்றனர். விரும்பும்போது உறங்குகின்றனர். பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து நடைமுறை காட்சிகளையும் கண்கூடாகக் கண்டு அறிகின்றனர்.
 அறிவியல் அறிஞர்களையும், அறவியல் சிந்தனையாளர்களையும், விளையாட்டு வீரர்களையும், இசை, நடனம், ஓவியம், சிற்பம் போன்ற பல்துறைக் கலைஞர்களையும், சூழல் நல ஆர்வலர்களையும், பொதுநலச் செயற்பாட்டாளர்களையும், வேளாண் வல்லுநர்களையும், மருத்துவர்களையும், பொருளாதாரம் - வணிகவியல் சேவையாளர்களையும், நிர்வாகம் - காவல் பணியாளர்களையும், இலக்கியவாணர்களையும், மிகவும் குறிப்பாக, நல்ல குடிமக்களையும் உருவாக்குவதுதான் நிறுவனமயமாக்கப்பட்ட இன்றைய நமது கட்டட வளாகக் கல்வி முறையின் நோக்கம் என்றால், அத்தகையோரை இன்னும் எளிதாகவும், இன்னும் சிறப்பாகவும் வளாகங்களுக்கு வெளியே இருந்தும் உருவாக்க முடியும் என்பதே இல்லக் கல்வி முறை ஆர்வலர்கள் முன்வைக்கும் வலிமையான கருத்தாகும்.
 குழந்தைகளுக்கான கல்வி முறைக்குப் பள்ளி முறை மட்டுமே ஒற்றைத் தீர்வா? குழந்தைகளின் அறிவுக்கு வேண்டிய அனைத்து வகைக் கல்வியும் பள்ளியைக் காட்டிலும் கூடுதலாகவும் இலகுவாகவும், அதிகமாகவும், குழந்தைகள் விரும்பும் வகையிலும் வீட்டிலேயும், வெளியேயும் கிடைக்கும்போது அவற்றைக் கொண்டு பயிற்றுவித்து அவர்களை உருவாக்கி உயர்த்தலாம்தானே. 
 இவ்வகையில் பயின்றவர்களை ஒருங்கிணைத்து அங்கீகரித்து வழிநடத்திப் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் அரசின் கல்விச் சட்டங்கள் இருக்கலாம்தானே. கல்வி பெறுவது குழந்தைகளுக்கான உரிமை என்றால், அந்தக் கல்வியை அவர்கள் எங்கிருந்தும், எம்முறையிலும் பெற்றுக் கொள்ளலாம் என்பதும் அவர்களுக்கான உரிமை அல்லவா? 
 இல்லக் கல்வி முறைக் கலாசாரம் பரவும்போது தற்போதையப் பள்ளிக் கல்வி முறையில் நிலவும் நெருக்கடிகள் சற்றுக் குறையும்தானே என்பன போன்ற கேள்விகளையும் அவர்கள் முன் வைக்கின்றனர். 
 பெற்றோர்களின் வாழ்நிலைக்கும், வசதிக்கும், குழந்தைகளின் விருப்பத்துக்கும் ஏற்பவே கல்வி முறை அமைய வேண்டும். இல்லக் கல்வி முறையில் பயிலும் குழந்தைகள் விரும்பினால் பள்ளிக் கல்வி முறைக்குச் சென்று சேரவும், பள்ளிக் கல்வி முறையில் பயிலும் குழந்தைகள் விரும்பினால் இல்லக் கல்வி முறைக்கு மாறிக் கொள்ளவும் அல்லது அவரவர் நிலையிலேயே கல்வியைத் தொடரவும் இயல வேண்டும். அதற்கான அங்கீகாரங்கள் வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
 இன்றைய பள்ளிக் கல்வி முறையில் நிர்பந்தம், நெருக்கடி, தண்டனை, ஒப்பீட்டு அவமானம், தேர்வு நேரப் பதற்றங்கள், உணவில் ஈடுபாடின்மை, தன் பொருட்டான பெற்றோரின் பண இழப்பு, பாடப் புத்தகச் சுமை, வீட்டுப் பாடச் சுமை, தனிப் பயிற்சி அல்லல்கள் ஆகிய இவ்வளவையும் நமது பிள்ளைகள் ஒருசேர அனுபவிக்கின்றனர். 
 உனக்கு எவ்வளவு பணம் கட்டிப் படிக்க வைக்கிறோம் தெரியுமா என்கிற தாய், தந்தை, உறவினர்களின் சுட்டிக்காட்டல்களும், வசவுகளும் குழந்தைகளைக் குற்ற உணர்ச்சிகளில் தள்ளி மனமொடித்து விடுகின்றன.
 கல்வி எனும் பெயரில் தங்களது பிள்ளைகளின் மீது முதலீடு செய்யும் நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் பெருகி வருகின்றனர். இவ்வகையில் உற்பத்தியாகிற மாணவர்கள் சமூகத்துக்குக் கொடுப்பார்களா அல்லது சமூகத்தில் இருந்து வலுக் கட்டாயமாக எடுப்பார்களா என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 இதுபோன்ற அவலங்களின் காரணமாகவே இல்லக் கல்வி முறை எனும் கருத்துரு இப்போது வலுப்பெற்று வருகிறது. பள்ளிக் கல்விக்குச் செலவழித்தாக வேண்டிய பல லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை என் பிள்ளையின் பேரிலேயே வங்கியில் முதலீடு செய்து அதன் வட்டியிலேயே அவனைச் சிறப்பானவனாக உருவாக்கி அந்த அசலையும் அவனுடையதாகவே புழங்கச் செய்வேன் என்கிறார் இல்லப் பள்ளி முறையின் ஆதரவாளர் ஒருவர்.
 அமெரிக்கா போன்ற நாடுகளில் வீட்டில் இருந்து கொண்டே இணையவழியில் தேர்வுகளை எழுதலாம் என்பதுபோல சமூகத்தின் அனைத்துச் செயல்பாட்டுத் தளங்களிலும் மேம்படுத்தப்பட்ட மாற்று வழிகள் நடைமுறைக்கு வந்துள்ளன, 
 வந்துகொண்டும் இருக்கின்றன. 
 இப்படியான மேம்படுத்தல் முறைகளை நமது கல்வி முறையில், மிகவும் குறிப்பாக வளரிளம் பருவத்துக் குழந்தைகளுக்கான கல்வி முறையில் கொண்டு வந்தேயாக வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். விருப்பம் போல் படித்துத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுப் பட்டம் வாங்கலாம் என்று நமது சமூகத்தின் பெரியவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற வாய்ப்பு பாவம் நமது பிள்ளைகளுக்குக் கிடைக்கப் பெறவில்லை. 
 கடந்த காலங்களில் தங்களது வளரிளம் பருவத்தைப் பலி கொடுத்து, தங்களது பெற்றோரின் பணத்தைப் பறிகொடுத்து கல்வி கற்ற லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் தாங்கள் கற்ற பாடங்களையெல்லாம் மறந்துவிட்டு பெற்ற பட்டங்களை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு அதை மலரும் நினைவுகளாக இப்போது சொல்லிக் கொண்டிருக்கின்றனர். 
 இல்லக் கல்வி முறையானது, இந்த நிலைக்கும் புத்துயிரூட்டி மறந்ததை மீட்டெடுக்கக் கைகொடுக்கிறது. அதாவது, படித்து முடித்துப் பட்டம் பெற்றவர்களில், மிகவும் குறிப்பாகப் பெண்களில் பெரும் பகுதியினர் திருமணத்துக்குப் பிறகு தாங்கள் கற்ற கல்வியைத் துறந்து பெற்ற குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். அத்தகையோர் தங்களது கல்வியை அப்படியே தங்களது குழந்தைகளுக்கு மடை மாற்றம் செய்ய இல்லக் கல்வி முறை பெரிதும் கைகொடுக்கிறது. 
 கூடவே, அவர்கள் தங்களது குழந்தைகளுக்கு அன்றாட வாழ்வியல் பணிகளையும் பயிற்றுவித்து மேம்படுத்த முடியும். ஏனெனில், இன்றைய நமது பள்ளிக் கல்வி முறையில் வளரிளம் பருவத்துக் குழந்தைகளுக்கு அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் இருப்பதைத் தவிர வேறு எவையும் கற்றுத் தரப்படுவதில்லை. நடைமுறைப் பூர்வமான வாழ்வியல் கல்விக்கு காகிதப் பள்ளிக் கல்வி முறையில் இடமே இல்லை. இதற்கும் தீர்வாக இல்லக் கல்வி முறை அமைகிறது.
 நடைமுறையில் இருக்கும் பள்ளிக் கல்வி முறையை முழுமையாகப் புறக்கணித்துவிட்டு இல்லக் கல்வி முறைக்கு எல்லோரும் மாறியாக வேண்டும் என்பது பொருள் அல்ல. அவரவர் விருப்பத்தின்படி கல்வி கற்பது என்பது அவரவர் விருப்பமும், உரிமையும் ஆகும். 
 இல்லக் கல்வி முறை என்பது அவரவர் விருப்பமும், வசதியும், உரிமையும், தேர்வும்தானே தவிர, எவ்வகையிலும் அது கட்டாயமான சட்டாம்பிள்ளை ஒற்றைவழி அல்ல. மாறாக, அது ஒற்றை வழியாக உருவாக்கப்பட்டு நெரிசல் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கும் பள்ளிக் கல்வி முறையின் மேலும் அறிவார்ந்த விடுதலை வடிவமேயாகும்.
 18 வயது வரை அதாவது குழந்தைகள் தானாக முடிவெடுக்கும் திறனைப் பெறும் வரையில் அவர்களின் இயல்பான ஆற்றலை வளர்த்துப் பாதுகாக்க வேண்டியது சமூகத்தின், நமது கல்வி முறையின் முதன்மையான அறிவார்ந்த கடமையாகும். ஆனால், நமது வளர் இளம் பருவத்துக் குழந்தைகள் பள்ளிகளில் அடைக்கப்படுகிறார்களே தவிர, அவர்கள் அங்கே ஆளாக்கப்படவில்லை.
 எல்.கே.ஜி. படிக்கும் ஒரு குழந்தை தன் தாயையும், தந்தையையும் அதட்டி வீட்டுக் கூடத்தின் இரண்டு மூலைகளில் அமைதியாக நிற்க வைத்த காட்சியை அண்மையில் காண நேர்ந்தது. நாட்டி கார்னரில் (சஹன்ஞ்ட்ற்ஹ் இர்ழ்ய்ங்ழ்) அவர்கள் நிற்க வைக்கப்பட்டிருப்பதாக அந்தக் குழந்தை தன் மழலை மொழியில் நம்மிடம் சொல்ல, அக்குழந்தை தனக்கு நேர்ந்ததையே தனது தாய், தந்தையின் மீது நிகழ்த்திக் காட்டியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.
 அந்தக் குழந்தை தன் பெற்றோருக்குக் கொடுத்தது சரியான தண்டனைதான் என்றாலும்கூட, நாட்டி கார்னரில் நிற்க வைக்க வேண்டியவை நமது மனப்பாடக் கல்வி முறையும், அதன் வணிகக் கொள்ளை முறையும்தானே!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக