தனித்தமிழ் இயக்கம் தொடங்கி, தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றிய தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் (Maraimalai Adigal) பிறந்த தினம் இன்று (ஜூலை 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l நாகப்பட்டினம் அடுத்த காடம்பாடியில் (1876) பிறந்தார். நாகப்பட்டினம் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சிறந்த மாணவராக விளங்கினார். அறுவை சிகிச்சை நிபுணராக இருந்த தந்தையின் மறைவால், கல்வி தடைபட்டது. தாயின் வழிகாட்டுதலால் பல நூல்களைக் கற்றார்.
l மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவர் நாராயணசாமி பிள்ளையிடம் இலக்கியங்களையும், சோமசுந்தர நாயக்கரிடம் சைவ சித்தாந்தமும் கற்றார். மாதந்தோறும் ரூ.50-க்கு புதிய நூல்கள் வாங்கிப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
l வார இதழ்களில் 'முருகவேள்' என்ற புனைப்பெயரில் கட்டுரைகளை எழுதினார். 16 வயதில் இந்து மத அபிமான சங்கத்தைத் தோற்றுவித்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1905-ல் சைவ சித்தாந்த மகா சமாஜத்தை ஆரம்பித்தார். 1911-ல் துறவு மேற்கொண்டார்.
l தமிழ்ப் பற்றால், 'வேதாச்சலம்' என்ற தனது பெயரை 'மறைமலை' என்று மாற்றிக்கொண்டார். சென்னை பல்லாவரத்தில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் தொடங்கி, அதன் பெயரை பொதுநிலைக் கழகம் என மாற்றினார்.
l மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், திருக்குறளாராய்ச்சி, தமிழர்மதம், வேதாந்த மதவிசாரம் என பல நூல்களைப் படைத்தார். இலக்கியம், மருத்துவம், சங்க இலக்கிய ஆய்வு, புதினம், பாடல், நாடகம், தத்துவம், வரலாறு என பல பிரிவுகளில் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
l இவரது பேச்சு பேச்சாளர்களை உருவாக்கியது; எழுத்து படைப்பாளிகளை ஈன்றது. 'அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்' என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க. புகழாரம் சூட்டியுள்ளார். 4 ஆயிரம் நூல்களுடன் தன் வீட்டிலேயே ஒரு நூலகம் அமைத்தார்.
l தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகக் கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார். தமிழ், ஆங்கிலம், வடமொழியில் புலமை பெற்றவர். சைவ சித்தாந்த நெறிமுறைகளை வெளிநாட்டவரும் புரிந்துகொள்ள 'மிஸ்டிக் மைனா', 'தி ஓரியன்டல் விஸ்டம்' ஆகிய ஆங்கில இதழ்களை நடத்தினார். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தோன்றக் காரணமாக இருந்தவர்.
l தனித்தமிழிலேயே பேச, எழுத வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்ட பிறகு, தான் ஏற்கெனவே எழுதி வெளியிட்ட நூல்களில் இருந்த பிறமொழிச் சொற்களுக்கு பதிலாக தமிழ்ச் சொற்களை மாற்றி புதிய பதிப்புகளை வெளியிட்டார். உரையாடலில், மேடைப்பேச்சில், எழுத்தில் தூய தமிழ் நடையைக் கடைபிடித்தார்.
l கோயில்கள், பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோருக்கு சம உரிமை வழங்க வேண்டும் என குரல் கொடுத்தார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்.
l வடமொழியை எதிர்க்காமல் வடமொழிக் கலப்பை மட்டுமே எதிர்த்து, கடவுளை எதிர்க்காமல் மூடத்தனமான சடங்குகளை மட்டுமே எதிர்த்து நடுநிலை தவறாமல் வாழ்ந்த பண்பாளர். தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட மறைமலை அடிகள் 74 வயதில் (1950) மறைந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக