வாழை மரம்
இத்தொடரில் வாழை என்பது நிலையான சொல். இதனை நிலைமொழி என்பர். மரம் என்பது வந்து சேர்ந்த சொல். இதனை, வருமொழி என்பர்.
நிலைமொழியும் வருமொழியும் சேரும் பொழுது எவ்வித மாறுபாடும் இல்லாமல் சேருவதை இயல்பு புணர்ச்சி என்பர்.
நிலைமொழியும் வருமொழியும் சேரும் பொழுது, ஏதேனும் ஓர் எழுத்துத் தோன்றுதல், இருக்கும் எழுத்துத் திரிதல் அல்லது கெடுதல்ஆகிய மாறுபாடுகள் அடைவதை விகாரப் புணர்ச்சி என்பர்.
வாழைமரம் - இயல்பு புணர்ச்சி
வாழைப்பழம் - விகாரப்புணர்ச்சி
மாணாக்கரே!
இயல்பு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு இயல்பு புணர்ச்சி என்ற தொடரே அமையும். இதே போல் விகாரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக, விகாரப் புணர்ச்சி என்பதே அமைதலையும் காண்க.
இவ்வாறு தோன்றல், திரிதல், கெடுதல் என்பன யாவும் சில விதிகளின் படியே அமையும். அவ்விதிகளைப் புணர்ச்சி விதிகள் என்பர்.
புணர்ச்சி என்றால் என்ன என்பதையும், அதன் அடிப்படை இலக்கணத்தையும் முன் வகுப்பில் படித்தீர்கள் அல்லவா? அதை நினைவு படுத்திக் கொண்டு, மேலும், சில புணர்ச்சி இலக்கணத்தை, விதிகளின்படி சொற்கள் புணருமாற்றை இவ்வகுப்பில் படித்தறியுங்கள்!
பல, சில என்பனவற்றின் புணர்ச்சி
பல + பல = பலபல
சில + சில = சிலசில
இவை இயல்பாகப் புணர்ந்துள்ளன.
பல + பல = பலப்பல
சில + சில = சிலச்சில
இவை வருமொழி முதலில் உள்ள வல்லின எழுத்து மிக்குப் புணர்ந்துள்ளன.
பல + பல = பற்பல
சில + சில = சிற்சில
இவற்றில், நிலை மொழியில் ஈற்றில் உள்ள அகரம் கெட்டு, லகரம் றகரமாய்த் திரிந்துள்ளன.
இவ்வாறு, பல, சில என்னும் இரு சொற்களும் தமக்கு முன் தாம் வருமாயின் (பல + பல ; சில + சில) இயல்பாகவும், வல்லெழுத்து மிக்கம், நிலைமொழி ஈற்றின் அகரம் கெட்டு லகரம் றகரமாகத் திரிந்தும் புணரும்.
மேலும், பல, சில என்னும் சொற்களின் முன், பிற் சொற்கள் வந்தால் நிலைமொழியின் அகரம் கெட்டுப் புணரும் ; கெடாமலும் புணரும் என்பதையும் அறிந்து கொள்க.
இதற்கான சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு :
பல + கலை = பலகலை ; பல்கலை
பல + சாலை = பலசாலை ; பல்சாலை
பல + தொடை = பலதொடை ; பஃதொடை
பல + மலர் = பலமலர் ; பன்மலர்
பல + நாடு = பலநாடு ; பன்னாடு
பல + வேண்டி = பலவேண்டி; பல்வேண்டி
பல + அரண் = பலஅரண் ; பல்லரண்
சில + சொல் = சிலசொல் ; சில்சொல்
சில + மலர் = சிலமலர் ; சின்மலர்
சில + வளை = சிலவளை ; சில்வளை
சில + அணி = சிலவணி ; சில்லணி
இதற்கான புணர்ச்சி விதி கூறும் நூற்பா :
பல சில எனும் இவை தம்முன் தாம்வரின்
- (நன்னூல் நூற்பா - 170)
(விகற்பம் ஆகல் - ஒரே புணர்ச்சியில் அகரம் கெட்டுப் புணர்தல் ; கெடாது நின்றும் புணர்தல்)
திசைப் பெயர்ப் புணர்ச்சி
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்பன திசையை உணர்த்தும் பெயர்களாதலால் இவை திசைப் பெயர்கள் ஆகும் என்பதை நீங்கள் அறிவீர்கள் !
ஒரு திசைப் பெயரோடு மற்றொரு திசைப் பெயரும் (வடக்கு + கிழக்கு = வடகிழக்கு) பிற பெயர்களும் (தெற்கு + நாடு = தென்னாடு) சேருவதைத் திசைப்பெயர்ப் புணர்ச்சி என வழங்குகிறோம்.
திசைப் பெயர்ப் புணர்ச்சிக்கான விதிமுறைகளை இப்பகுதியில் காண்போம்.
வடக்கு + கிழக்கு = வடகிழக்கு
வடக்கு + மேற்கு = வடமேற்கு
வடக்கு + வேங்கடம் = வடவேங்கடம்
குடக்கு + திசை = குடதிசை
(மேற்கு)
குணக்கு + திசை = குணதிசை
(கிழக்கு)
இவை நிலைமொழியின் ஈற்றில் உள்ள க் என்னும் மெய்யெழுத்தும், கு என்னும் உயிர்மெய்யெழுத்தும் கெட்டுப் புணர்ந்தன.
தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு
தெற்கு + மேற்கு = தென்மேற்கு
தெற்கு + குமரி = தென்குமரி
தெற்கு + பாண்டி = தென்பாண்டி
இவை, நிலைமொழியீற்றில் உள்ள கு என்னும் உயிர்மெய் கெட்டு, றகர மெய் னகர மெய்யாகத் திரிந்து புணர்ந்தன.
மேற்கு + காற்று = மேல்காற்று
மேற்கு + ஊர் = மேலூர்
இத்திசைப் பெயர், திசைப் பெயரல்லாத வேறு பெயர்களோடு சேரும் பொழுது, நிலைமொழியிலுள்ள உயிர்மெய்யெழுத்தான குகெட்டு, றகர மெய், லகர மெய்யாகத் திரிந்து புணர்ந்தன.
கிழக்கு + கடல் = கீழ்கடல்
கிழக்கு + நாடு = கீழ்நாடு
இத்திசைப் பெயர், பிறவற்றோடு சேரும் பொழுது, நிலைமொழியில் உள்ள ககர ஒற்றும், ஈற்றும் உயிர்மெய்யெழுத்தான குவ்வும், கிழஎன்பதில் உள்ள அகரம் கெட்டுக் கீழ் என முதல் எழுத்து நீண்டும் புணர்ந்தன.
மேற்காட்டியவாறு, திசைப் பெயர்கள் புணரும் முறைகளைக் கூறும் நூற்பா பின்வருமாறு :
திசையொடு திசையும் பிறவும் சேரின்
நிலையீற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்
றகரம் னலவாகத் திரிதலும் ஆம் பிற.
- (நன்னூல் நூற்பா - 186)
மையீற்றுப் பண்புப் பெயர்ப் புணர்ச்சி
நன்மை, தீமை, மென்மை, மேன்மை, வெண்மை, செம்மை போல்வன, மை என்னும் விகுதியைக் கொண்டு முடிந்து பண்பை உணர்த்தும் பெயர்கள். ஆதலால் இவற்றை மையீற்றுப் பண்புப் பெயர்கள் என்பர்.
இதனை அறிய, கீழ்க்காணும் நூற்பாவை அறிந்து கொள்க.
செம்மை சிறுமை சேய்மை தீமை
வெம்மை புதுமை மென்மை மேன்மை
திண்மை உண்மை நுண்மை இவற்றெதிர்
இன்னவும் பண்பின் பகாநிலைப் பதமே
- (நன்னூல் நூற்பா - 135)
மேற்காட்டிய மையீற்றுப் பண்புப் பெயர்கள் நிலைமொழியாக நின்று, வருமொழியோடு புணரும் போது அடையும் மாற்றங்களைக் கீழ்வருமாறு அறிந்து கொள்க.
1. நல்லன் = நன்மை + அன்
வெண்பட்டு = வெண்மை + பட்டு
வெண்குடை = வெண்மை + குடை
செம்மலர் = செம்மை + மலர்
இவை மை விகுதி மட்டும் கெட்டுப் புணர்ந்தன.
2. பெரியன் = பெருமை + அன்
சிறியன் = சிறுமை + அன்
பண்புப் பகுதிகளின் மை விகுதி கெடுவதோடு, இடையில் உள்ள உகரம் (ரு, று) இகரமாகத் (ரி, றி) திரிந்துள்ளன.
3. மூதூர் = முதுமை + ஊர்
பாசி = பசுமை + இ
முதுமை என்பதன் ஈறு (மை) போய், ஆதி (முதல்) நீண்டு மூதூர் என்று ஆயிற்று. பசுமை என்பதில் ஈறு போய் ஆதி நீண்டு பாசி என ஆயிற்று.
4. பைங்கொடி = பசுமை + கொடி
பைந்தார் = பசுமை + தார்
இவற்றுள் பசுமை என்பதன் ஈறு போய் முதல் நின்ற அகரம் (ப) ஐகாரமாய்த் திரிந்து (பை) வருமொழியின் முதல் எழுத்து இனவெழுத்தாய் (ங், ந்) மெய் மிகுந்து புணர்ந்துள்ளன.
5. சிற்றூர் = சிறுமை + ஊர்
வெற்றிலை = வெறுமை + இலை
இவற்றின் ஈறு போய் (மை) நடுவில் உள்ள ஒற்று இரட்டித்துப் புணர்ந்துள்ளன.
6. வெவ்வேல் = வெம்மை + வேல்
வெந்நீர் = வெம்மை + நீர்
இவற்றில், வெம்மை என்பதன் ஈறு (மை) போய், முன் ஒற்றாகிய மகர வொற்று வகர ஒற்றாகவும், 'ந'கர ஒற்றாகவும் (வ், ந்) திரிந்து முடிந்தன.
7. செங்கோல் = செம்மை + கோல்
செந்தமிழ் = செம்மை + தமிழ்
இவற்றில், செம்மை என்பதன் ஈறு (மை) போய், வருமொழி முதல் எழுத்துக்கு இனவெழுத்துகளான (ங், ந்) என்பன மிக்குப் புணர்ந்துள்ளன.
மேற்காட்டிய, மையீற்றுப் பண்புப் பெயர்கள் புணர்ச்சியில் அடையும் மாற்றங்களைக் கீழ்க்காணும் நூற்பா விளக்குகின்றது. அதனைப் படித்து, நினைவில் நிறுத்துங்கள்.
ஈறுபோதல் ; இடை உகரம் இய்யாதல் ;
ஆதி நீடல் ; அடியகரம் ஐஆதல் ;
தன்னொற்று இரட்டல் ; முன்னின்ற மெய் திரிதல் ;
இனம்மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே.
- (நன்னூல் நூற்பா - 136)
மேற்காட்டிய நூற்பாவின் அடிப்படையில் கீழ்க்காணும் முறையில், மையீற்றுப் பண்புப் பெயர்ப் புணர்ச்சியை மீண்டும் நினைவு கூர்க.
விதி எடுத்துக்காட்டு
1. ஈறு போதல் - வெண்மை + குடை = வெண்குடை
2. இடை உகரம் இய்யாதல் - பெருமை + அன் = பெரியன்
3. ஆதி நீடல் - பெருமை + ஊர் = பேரூர்
4. அடியகரம் ஐ ஆதல் - பசுமை + பொழில்= பைம்பொழில்
5. தன்னொற்று இரட்டல் - சிறுமை + ஊர் = சிற்றூர்
6. முன்னின்ற மெய் திரிதல் - வெம்மை + நீர் = வெந்நீர்
உடலும் உயிரும்
தமிழ் + ஆசிரியர் = தமிழாசிரியர்
கடவுள் + அருள் = கடவுளருள்
பொருள் + அனைத்தும் = பொருளனைத்தும்
இவை எவ்வாறு இப்படிப் புணர்ந்தன?
நிலைமொழியின் ஈற்றெழுத்து மெய்யெழுத்தாக இருந்து, வருமொழியின் முதல் எழுத்து உயிரெழுத்தாகவும் இருந்தால் அவை தாமே ஒன்று சேர்ந்து விடும்.
இதற்குரிய விதி,
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
- (நன்னூல் நூற்பா - 204)
பூப்பெயர்ப் புணர்ச்சி
பூ + கொடி = பூங்கொடி
பூ + சோலை = பூஞ்சோலை
பூ + தோட்டம் = பூந்தோட்டம்
பூ + பாவை = பூம்பாவை
பூ என்னும் சொல் நிலைமொழியாக இருந்து, வருமொழி முதலில் வல்லினம் வந்தால், அதற்கு இனமான மெல்லெழுத்துமிக்குப் புணரும்.
இதற்குரிய விதி,
பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும்
- (நன்னூல் நூற்பா - 200)
மென்மையும் - என்ற உம்மையால், அதே வல்லெழுத்து வந்து புணரும்.
(பூ + கொடி = பூங்கொடி ; பூ + கொடி = பூக்கொடி
பூ + கூடை = பூக்கூடை)
தேங்காய் - புணர்ச்சி
அன்பு மாணவ மாணவியரே !
தேங்காய் - இச்சொல்லின் பகுதி என்ன தெரியுமா 'தெங்கு' (தென்னை) என்பதாகும்.
தெங்கு + காய் = தேங்காய்
'தெங்கு' என்பது தேங்கு என நீண்டு, ஈற்றிலுள்ள 'கு' என்னும் உயிர்மெய்யெழுத்துக் கெட்டு, தேங்காய் என ஆனது.
இதற்குரிய விதி,
தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய்வரின் என்பதாகும்.
தனிக்குறில் முன் ஒற்று
கண் + ஒளி = கண்ணொளி
பண் + ஓசை = பண்ணோசை
மண் + ஓசை = மண்ணோசை
இவ்வாறு, நிலைமொழியில் தனிக்குற்றெழுத்தின் முன் மெய்வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், நிலைமொழி இறுதியில் உள்ள மெய்யெழுத்து இரட்டித்துப் புணரும். (கண்ண்+ ஒளி = கண்ணொளி)
இதற்குரிய விதி,
தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்
என்பதாகும்.
மணி + அடித்தது = மணியடித்தது. (இ)
தீ + எரிந்தது = தீயெரிந்தது (ஈ)
வாழை + இலை = வாழையிலை (ஐ)
நிலா + அழகு = நிலாவழகு (வ)
சே + அழகு = சேயழகு ; சேவழகு (ய,வ)
நிலைமொழியில் இகர, ஈகார, ஐகார ஈறுகள் வந்து வருமொழி முதலில் உயிர் வந்தால், இடையில் (ய்) யகர உடம்படுமெய் தோன்றும். பிற உயிர்கள் இருப்பின் (வ்) வகர உடம்படுமெய் தோன்றும். ஏகாரம் இருப்பின் யகரம் வகரம் ஆகிய இரண்டு உடம்படுமெய்களும் தோன்றும்.
உடம்படுமெய் விதியாவது,
இ, ஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏ முன் இவ்விருமையும்
உயிர்வரின் உடம்படுமெய் யென்றாகும்.
உடம்படுமெய் ஒரு விளக்கம் :
இரண்டு சொற்கள் புணரும் பொழுது, நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் உயிரெழுத்துகளாக இருப்பின் அவ்விரு சொற்களும் ஒன்றுபடாது விட்டிசைக்கும். அவை சேர்ந்திசைக்க வேண்டி, உடம்படாத அவ்விரண்டும் உடம்படுதற்கு (ஒன்று சேர்வதற்கு) அவற்றின் இடையே யகரமும், வகரமும் தோன்றும். இவ்வாறு, ஒன்றுபடுத்தற்காக வரும் மெய்களை உடம்படுமெய் என்பர்" என்பதறிக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக