ஞாயிறு, 5 ஜூலை, 2015

TRB PG TAMIL:தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்



தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்

பிறப்பு: 08-01-1901, இறப்பு: 27-08-1980

the_po_meenakshisundaramஇவரைப் போல இன்னொரு மகன் எனக்கு கிடைப்பானா என தமிழே ஏங்குமளவிற்கு ஆழ்ந்த அறிவும் புலமையும் பெற்று தன் பணிகளால் தமிழுக்கு பெருமையும் புகழையும் ஈட்டித் தந்தவர். பன்மொழிப் புலவர்,பல்கலை வித்தகர். சங்க இலக்கிய வரலாற்றை தமிழிலும் ஆங்கிலத்திலுமாக படைத்தவர். தன் முப்பத்தி ஆறாம் வயதிலேயே பன்மொழிப் புலவர் எனும் பட்டம் ஈன்ற பெருமகனார் தென்பட்டினம் பொன்னுசாமி மீனாட்சிசுந்தரனார்.

சென்னையை அடுத்த தென்பட்டினம் எனும் கடற்கரை கிராமத்தில் பிறந்தவர். தந்தையார் பொன்னுசாமி கிராமணியார். இவரே ஒரு பழுத்த அறிஞர்,அஷ்டாவதானம் சுப்புராய செட்டியாரின் மாணவர். இதனாலேயே தனது குருவின் குருவானமகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் மீது இவருக்கு மாறாத காதல் கிளைத்தது. இதனாலேயே தனக்கு பிறந்த ஆண் மகவுக்கு மீனாட்சிசுந்தரம் என்றே பெயரிட்டார். இதன் காரணமாகவோ என்னவோ சிறுவன் மீனாட்சிசுந்தரத்துக்கும் தமிழின் மீது தணியாத காதல். அது மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் பருவத்தில் அவரது தமிழறிவை வளர்க்க வடிவேலு செட்டியார், கோவிந்தராச முதலியார், மற்றும் திருமணம் செல்வகேசவராய முதலியார் போன்ற தமிழறிஞர்கள் பெரிதும் உதவினர்.

வரலாறு, அரசியல், சட்டம் முதலிய துறைகளில் பட்டம் பெற்றவர். தமது இடையறாத முயற்சியால் தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல், சமயம், தத்துவம், ஒப்பிலக்கியம், காந்தியியல் முதலிய பல்வேறு துறைகளில் கற்றுத் தேர்ந்து அனைவரும் வியக்கும் வகையில் இணையற்ற அறிஞர் ஆனார். எதைக் கற்றாலும் அதில் முடி முதல் ஆழம் வரை கற்று அதில் புலமையும் வியத்தகு ஆற்றலும் அடையப் பெற்ற மீனாட்சியாரின் அறிவும் புலமையும் வேறொருவர் எளிதில் நெருங்க இயலாதது. அதன் காரணமாகவே பலவேறு துறைகளின் தலைமைப் பதவிகள் அவரைத் தேடி வந்து அரியணையிட்டு அமரச் சொல்லி கெஞ்சிக் கொண்டன.

எல்லாத் துறைதோறும் தலைவர் ஆவது என்பது எத்தனை சிரமம் மிக்கது என்பதை ஏதெனும் ஒருதுறையில் தலைவர் ஆகுபவரால் மட்டுமே உணர முடியும். அவர் எண்ணற்ற மொழிகளைக் கற்றிருந்தாலும் ஈராயிரம் ஆண்டு தமிழ் மொழியிலும் இலக்கியங்களிலும் அவர் பெற்ற புலமைக்கு ஈடில்லை. மொழியின் மீது அவர் கொண்ட மாறாத ஆர்வமும் மாசற்ற காதலுமே இதற்கு காரணம்.

1920ல் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ., 1922ல் பி.எல். பட்டம், 1923ல் எம்.ஏ. பட்டம், பின் வரலாறு, பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் தொடர்ச்சியான முதுகலைப் பட்டம் என தன் கல்விப் பயணத்தை சாதனைப் பயணமாக மேற்கொண்டவர்.

1924ல் சென்னை நகராண்மைக் கழக உறுப்பினராகப் பணியாற்றினார். 1925ல் அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராய் இருந்து தொண்டு புரிந்தார். தமிழ் இலக்கிய இலக்கண ஆர்வத்தால் 1934க்குள் பி.ஓ.எல், எம்.ஓ.எல். பட்டங்களும் பெற்றார். 1941ல் நாட்டு உரிமைக்காக மறியல் செய்து சிறை சென்றார்.

இவரது தமிழ்ப் புலமையால் மையல் கொண்ட அண்ணாமலை அரசர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு இவரைப் பேராசிரியராக பணி செய்ய அழைப்பு விடுத்தார். 1944 முதல் 1946 வரை அங்குப் பணியாற்றினார். மீண்டும் 1958ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல், இலக்கியத் துறைகளின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். அது மட்டுமல்லாமல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1961ல் தமிழ்ப் பேராசிரியராக பொறுப்பேற்று தமிழுக்கு சிறப்பு சேர்த்தார். மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகவும் 1966 முதல் 1971 வரை பணியாற்றினார்.

அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று தமிழின் புகழ் பரப்பிய பெருமகனார் தெ.பொ.மீ. யுனெஸ்கோவின் "கூரியர்" என்னும் இதழ்க் குழுவின் தலைவராக விளங்கிய இவர், ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் எனில் மிகையில்லை. மொழியியல் என்ற புதிய துறையின் புதுமையைத் தமிழுக்குக் கொண்டுவந்து அதை வளர வைத்த முதல் முன்னோடி பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ.தான்.

தமிழிலக்கிலக்கியம் குறித்து இவர் எழுதிய பல ஆய்வு நூல்கள் இன்றும் என்றும் தமிழுக்கு அழியா சொத்து ஆகும். உலகக் காப்பியங்களோடும், உலக நாடகங்களோடும் சிலப்பதிகாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து, அதை "நாடகக் காப்பியம்" என்றும் "குடிமக்கள் காப்பியம்" என்றும் ஒரு வரியில் கூறியவர். சிலப்பதிகாரத்துக்கு இவரைப் போன்று வேறு யாரும் திறனாய்வு எழுதியதில்லை.

ஆர்வியின் குறிப்பு: பத்மபூஷண் விருது பெற்றவர். ஒரு காலத்தில் பிரபல நாடக ஆசிரியராக இருந்த (பதிபக்தி, பம்பாய் மெயில், கதரின் வெற்றி மற்றும் பல நாடகங்களை எழுதியவர்)தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர் இவரது அண்ணா.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக