செவ்வாய், 28 ஜூலை, 2015

யாருக்கு இல்லை பணம் சம்பாதிக்கும் ஆசை?


யாருக்கு இல்லை பணம் சம்பாதிக்கும் ஆசை? எல்லோரும் தான் பணம் பண்ண நினைக்கிறார்கள். ஆனால் சிலருக்கு மட்டுமே செல்வம் கொழிக்கிறது. பலருக்கு நிராசையாகத் தானே இருக்கிறது? நினைப்பது தான் நடக்கும் என்றால் எல்லாரும் பணக்காரர்கள் ஆகியிருக்க வேண்டுமே! ஏன் நம்மில் பலருக்கு பணப்பற்றாக்குறை உள்ளது? ஆழ்மனச் சக்தி, அஃபர்மேஷன், நேர்மறை சிந்தனை எல்லாம் வேலை செய்யவில்லையா பண விஷயத்தில்?

இதற்குப் பதில் சொல்வதற்கு முன் பணம் இல்லை என்று குறை சொல்பவர்களைக் கொஞ்சம் அலசலாமா?

பண பயம்

"பணம் என்ன மரத்திலயா காய்க்குது!, " பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படணும்." "பணம் வந்தா நிம்மதி போயிடும்", " நம்ம ராசி சாண் ஏறுனா முழம் சறுக்கும்", "பண விஷயத்தில யாரையும் நம்ப முடியாது" "அளவுக்கு அதிகமா ஆசைப்படக்கூடாது", "ஒரு செலவு போனா அடுத்த செலவு கரெக்ட்டா வந்திரும்" "நம்மளுக்கு கை கொடுக்க ஆளில்லை", "நமக்கு இதுவே ஜாஸ்தி", "ஒரு ஜாக்பாட் அடிச்சா எல்லாம் சரியாயிடும்" "கடனைக் கடன் வாங்கித்தான் அடைக்க வேண்டியிருக்கு" - இப்படி அதிகமாக அவர்கள் பேசும் எண்ணங்கள் என்ன என்று கூர்ந்து நோக்குங்கள். காரணம் புரியும்.

பணம் சம்பாதிக்கும் லட்சியத்தை விடப் பணம் பற்றிய பயமும் பேராசையும்தான் தவறான முடிவுகளை எடுக்கவைக்கும்.

தடால் தீர்வு

பணச்சிக்கலில் இருப்பவர்கள் பெரும்பாலும் எந்தப் பணத்தேவையையும் ஏதாவது ஒன்றைத் தடாலெனச் செய்து தீர்க்க நினைப்பார்கள். பணம் தேவையா? எங்காவது கடன் வாங்கு அல்லது அடகு வை அல்லது எதையாவது விற்று ஏற்பாடு பண்ணு. எதையாவது செய்து பணம் புரட்டு. இந்த அவசரமும், எதையும் அலசி ஆராயாமல் எடுக்கும் முடிவுக்குக் காரணமான எண்ணம்: "இதை இப்போது சமாளிக்கலாம். பிறகு வருவதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்!" என்பதுதான்.

இந்த எண்ணமும் செயலும் காலம் காலமாய்த் தொடரும். பிறகு இது வாழ்க்கை முறை ஆகும்.

ஒரு நண்பர் சொன்னார்: "எனக்கு வர வேண்டிய கடன் தொகை 16 லட்சம். கொடுக்க வேண்டிய கடன் 12 லட்சம் தான். ஆனால் வர வேண்டியது நேரத்துல வராததால் சொத்தை வச்சு கடன் வாங்கிக் கொடுக்க வேண்டிய கடனை அடைக்கிறேன்.." ரொட்டேஷன் என்பது தமிழ்ச்சொல் போலவே ஆகிவிட்டது. இது நாயர் பிடித்த புலி வால் கதைதான். முதலில் வாங்கிய கடனை அடைக்க இன்னொரு புது ஆளிடம் கடன் வாங்குவது. எந்தக் காலத்திலும் செலவும் குறையாது. கடனும் முடியாது. கடனால் மூழ்கிய குடும்பங்கள் பல எனக்குத் தெரியும்.

பணக் கண்ணோட்டம்

வரவுக்கும் மேலே செலவு செய்வது, தெரியாத தொழிலில் முதலீடு செய்வது, பணம் இல்லை என்பதற்காக எந்தச் செலவையும் குறைத்துக் கொள்ளாதது, எப்படியாவது கடன் வாங்கலாம் என்ற துணிச்சல், தவறான பொருளாதார முடிவுகள் எடுப்பது, பிறர் கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது என்று ஏராளமான தவறான முடிவுகளுக்குக் காரணம் பணம் பற்றிய பிசகான எண்ணங்களே. பண ஆசை இருந்தும் பணம் பற்றிய பிழையான எண்ணங்கள் தவறான முடிவுகளையே எடுக்க வைக்கும்.

உலகின் பணம் கொழிக்கும் மக்கள் கூட்டத்தைப் பாருங்கள். அவர்கள் யூதர்களாக இருந்தாலும் சரி, மார்வாடிகளாக இருந்தாலும் சரி, செட்டியார்களாக இருந்தாலும் சரி. அவர்களுக்குப் பணம் பற்றிய சில அடிப்படையான கண்ணோட்டங்கள் உண்டு.

வேலை,தொழில் தரும் பணம்

சிக்கனம் முக்கியம். சின்ன வரவு செலவுக்கும் கணக்கு வேண்டும். உறவு என்றாலும் பண விஷயத்தில் சரியாக இருக்க வேண்டும். வீணான பகட்டுச் செலவை விடக் கையிருப்பு சொத்தே சமூக மதிப்பு. எல்லா வயதிலும் உழைக்க வேண்டும். எளிய வாழ்க்கை வாழ வேண்டும். உத்தரவாதம் தராத தொழில்களில் முதலீடுகள் கூடாது. எல்லாவற்றையும் விட "பணம் சம்பாதிப்பது மிக முக்கியம். அதைத் திறன்படச் செய்வது தான் உயர்வுக்கு வழி" என்பதை உணர்ந்தவர்கள்.

மீட்டர் வட்டி, சீட்டுக்கம்பெனி மோசடி என அனைத்துப் பொருளாதார மோசடிகளிலும் பாதிக்கப்படுபவர்கள் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். "எதையாவது செய்து சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும்" எனும் எண்ணம் தான் அவர்களைப் புதைகுழியில் தள்ளுகிறது.

நல்ல வேலையில், நல்ல தொழிலில்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்று எண்ணுபவர்கள் பணத்தை எண்ணுவதை விட அதன் காரணமான வேலையையும் தொழிலையும் பற்றி அதிகம் எண்ணுவர். தொழில் மேம்படும்போது செல்வம் கொழிக்கும்.

பற்றாக்குறை மனநிலை

பிடித்ததை நம்பிக்கையுடன் செய்யும்போதும் பணம் வரும். இதுதான் உண்மை. பணம் பற்றிய பயம் இல்லாதபோது பணம் வரும். பணம் பற்றிய எண்ணத்துடன் கோபம், வெறுப்பு, பொறாமை போன்றவை உள்ளபோது செல்வம் சேராது.

பற்றாக்குறை மன நிலையில் பணத்துக்காகப் போராடுகையில் பணம் என்றும் பற்றாக்குறையாகவே இருக்கும்.

பணம் கொடுக்கும்போதும், வாங்கும்போதும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் இருங்கள். லக்ஷ்மி வரும் போது வரவேற்பது போல, போகும்போதும் வாழ்த்தி, நன்றி சொல்லி, மீண்டும் வர வேண்டும் என பிரார்த்தியுங்கள்.

பணம் தரும் பாடங்கள்

"எனக்குப் பணம் பெரிசில்லை...!" என்று பேசிவிட்டுப் பணம் இல்லை என்று புலம்பாதீர்கள். பணம் உங்கள் வாழ்க்கைத் தேவைகளை, லட்சியங்களை அடையவும் உதவுகிறது. அதை முறையாகப் பெறவும், சிறப்பாகச் சேமிக்கவும், முதலீடு செய்யவும், சரியான பொருளாதார முடிவுகள் எடுக்கவும் பணம் பற்றிய சுகாதாரமான எண்ணங்கள் வேண்டும்.

பணம் சேர வேண்டுமா? " எனக்குத் தேவையான செல்வம் எனக்கு என்றும் கிடைக்கிறது!" என்று சொல்லி வாருங்கள். பணப்பெட்டி முதல் பர்ஸ் வரை சுத்தமாக வையுங்கள். கடன் வாங்குவதிலும் குறுக்கு வழியில் பணம் பண்ணுவதிலும் உங்கள் சிந்தனையைச் செலவிடாமல் உங்கள் திறமைகளைப் பற்றி அதிகம் சிந்தியுங்கள்.

பணம் சேர வேண்டுமா? " எனக்குத் தேவையான செல்வம் எனக்கு என்றும் கிடைக்கிறது!" என்று சொல்லி வாருங்கள். பணப்பெட்டி முதல் பர்ஸ் வரை சுத்தமாக வையுங்கள். கடன் வாங்குவதிலும் குறுக்கு வழியில் பணம் பண்ணுவதிலும் உங்கள் சிந்தனையைச் செலவிடாமல் உங்கள் திறமைகளைப் பற்றி அதிகம் சிந்தியுங்கள்.

பணக்கஷ்டம் பற்றி அன்னியருடன் புலம்புவதை நிறுத்தி, அதன் பாடங்களை மட்டும் கற்றுக்கொள்ளுங்கள். பணத் தட்டுப்பாடு சில பாடங்களை உங்களுக்கு வழங்க முயல்கிறது. அந்த பாடங்களை நீங்கள் கற்கும் வரை அவை உங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும்!


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக