செவ்வாய், 21 ஜூலை, 2015

வல்லினம் மிகும் இடங்களும் மிகாவிடங்களும்



     தமிழில் சொற்களையும் சொற்றொடர்களையும் எழுதும்பொழுது கருத்திற் கொள்ள வேண்டுவன பற்றிச் சிறிது காண்போம். 

     எழுதும்பொழுது, சில இடங்களில் வல்லெழுத்துகள் (க், ச், த், ப்) மிக்கு வரும் ; சில இடங்களில் மிகாமல் வரும். மிக்கு வர வேண்டிய இடங்களில் அவற்றை எழுதாமலும், மிகா இடங்களில் அவற்றை எழுதியும் விடுவதால் பிழை தோன்றும் ; மொழி மரபும் சிதையும்.

     எடுத்துக்காட்டாக, யானைத் தந்தத்தால் செய்த பொம்மையைக் குறிப்பிடும் பொழுது தந்தப்பொம்மை என்று வல்லினம் மிக்கு எழுத வேண்டும். அவ்வாறு எழுதாமல் தந்த பொம்மை (வல்லினம் மிகாமல்) என்று எழுதினால், 'யாரோ ஒருவர் தந்த பொம்மை' என்று பொருள் மாற்றம் ஏற்பட்டு விடும்.

     இது போன்ற பிழை ஏற்படாமல் எழுதிட, வல்லினம் மிகும் இடங்கள், வல்லினம் மிகா இடங்கள் பற்றிய இலக்கண மரபு மாணாக்கருக்குத் தெரிந்திருந்தல் வேண்டும்.

     அவை பற்றி, பின்வருமுறையில் சில எடுத்துக்காட்டுகளுடன் அறிந்து கொள்க.

வல்லின எழுத்துகள் மிகும் இடங்கள்

1. அந்த, இந்த - முதலான சுட்டுத் திரிபுகளுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்.

     அந்த + பையன் = அந்தப்பையன்

     இந்த + பெட்டி = இந்தப்பெட்டி

2. அத்துணை, இத்துணை, எத்துணை என்னுஞ் சொற்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.

     அத்துணை + புகழ் அத்துணைப் புகழ்

     இத்துணை + செழுமை = இத்துணைச் செழுமை

எத்துணை + கொடுமை எத்துணைக்கொடுமை

3. அவ்வகை, இவ்வகை, எவ்வகை என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.

     அவ்வகை + காடு     = அவ்வகைக்காடு

     இவ்வகை + தோப்பு = இவ்வகைத்தோப்பு

     எவ்வகை + பெயர் = எவ்வகைப்பெயர்

4. மற்ற, மற்று, மற்றை - என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்.

     மற்ற + கலைகள்     = மற்றக்கலைகள்

மற்று + சிலை     = மற்றுச்சிலை

மற்றை + பயன்     மற்றைப்பயன்

5. "இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்" வரும் வல்லினம் மிகும்.

     மோர் + குடம்     = மோர்க்குடம்

     மலர் + கூந்தல்     = மலர்க்கூந்தல்

     தயிர் + பானை     தயிர்ப்பானை

     தண்ணீர் + தொட்டி = தண்ணீர்த்தொட்டி

6. "மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்" வரும் வல்லினம் மிகும்.

     மரம் + பெட்டி     = மரப்பெட்டி

     இரும்பு + தூண்     = இரும்புத் தூண்

தங்கம் + தாலி     = தங்கத்தாலி

7. "நான்காம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்க தொகையில்" வரும் வல்லினம் மிகும்.

     குடை + கம்பி     = குடைக்கம்பி

     சட்டை + துணி     = சட்டைத்துணி

8. "ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில்" வரும் வல்லினம் மிகும்.

     அடுப்பு + புகை     = அடுப்புப்புகை

     விழி + புனல்     = விழிப்புனல்

9. "பண்புத் தொகையில்' வரும் வல்லினம் மிகும்.

     புது + குடம்     = புதுக்குடம்

     வட்டம் + பலகை     = வட்டப்பலகை

     பொய் + செய்தி     = பொய்ச்செய்தி

10. 'இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில்' வல்லினம் மிகும்.

     வேழம் + கரும்பு     = வேழக்கரும்பு

     தாமரை + பூ     = தாமரைப்பூ

     மார்கழி + திங்கள் = மார்கழித்திங்கள்

11. 'உவமைத் தொகையில்' வரும் வல்லினம் மிகும்.

     தாமரை + கண்ணன் = தாமரைக்கண்ணன்

     பவளம் + செவ்வாய் = பவளச்செவ்வாய்

     மலை + தோள்     = மலைத்தோள்

12. "அரை, பாதி என்னும் எண்ணுப்பெயர்ச் சொற்களின்" பின்வரும் வல்லினம் மிகும்.

     அரை + காணி     = அரைக்காணி

     அரை + படி     = அரைப்படி

     பாதி + பங்கு     = பாதிப்பங்கு

     அரை + தொட்டி     = அரைத்தொட்டி

     பாதி + செலவு     = பாதிச்செலவு

13. 'முற்றிலுகரச் சொற்களின் பின்' வரும் வல்லினம் மிகும்.

     திரு + கோவில்     = திருக்கோவில்

     புது + பை     = புதுப்பை

     பொது + சாலை     = பொதுச்சாலை

14. "தனிக்குறிலை அடுத்து வரும் 'ஆ'காரத்தின் பின்வரும் வல்லினம் மிகும்.

     வினா + குறி     = வினாக்குறி

     பலா + பழம்     = பலாப்பழம்

15. 'ஆய், போய் என்னும் வினை எச்சங்களுக்கப்' பின்வரும் வல்லினம் மிகும்.

     கருத்தாய் + கேட்டாள் = கருத்தாய்க்கேட்டாள்

     அன்பாய் + சொன்னார் = அன்பாய்ச்சொன்னார்

     போய் + பார்     = போய்ப்பார்

16. முன்னர், பின்னர் என்னும் இடைச்சொற்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்.

     முன்னர் + கண்டோம் = முன்னர்க்கண்டோம்

     பின்னர் + காண்போம் = பின்னர்க்காண்போம்

முன்னர் + செல்க     = முன்னர்ச்செல்க

பின்னர் + பணிந்தார் = பின்னர்ப்பணிந்தார்

17. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வரும் வல்லினம் மிகும்.

     பட்டு + சேலை     = பட்டுச்சேலை

     பத்து + பாட்டு     = பத்துப்பாட்டு

வல்லின எழுத்துகள் மிகா இடங்கள்

     வல்லின எழுத்துகளாகிய க், ச், த், ப் என்பன மிக்கு வரக்கூடிய இடங்கள் எவையென முன்பகுதியில் படித்தீர்கள். அல்லவா? இனி, இப்பதியில் அவ்வெழுத்துகள் மிகா இடங்கள் எவை என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் காண்போம்.

1. 'அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு' - என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகாது.

     அவ்வளவு + பெரிது     = அவ்வளவுபெரிது

     இவ்வளவு + கனிவா     = இவ்வளவு கனிவா?

     எவ்வளவு + தொலைவு     = எவ்வளவு தொலைவு?

2. 'அத்தனை, இத்தனை, எத்தனை' - என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது.

     அத்தனை + புத்தகங்களா = அத்தனை புத்தகங்களா?

     இத்தனை + தொழில்களா = இத்தனை தொழில்களா?

     எத்தனை + கருவிகள்     = எத்தனை கருவிகள்?

3. வினாப் பொருள் உணர்த்தும் ஆ, ஓ, ஏ என்னும் வினா எழுத்துகளின் பின்வரும் வல்லினம் மிகாது.

     அவனா + கேட்டான்     = அவனா கேட்டான்?

     அவளா + சொன்னாள்     = அவளா சொன்னாள்?

     யாரே + கண்டார்     = யாரே கண்டார்?

4. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் தவிர, மற்றப் பெயரெச்சங்களுக்குப் பின்வரும் வல்லினம் மிகாது.

     பெரிய + பெண்      = பெரிய பெண்

     கற்ற + சிறுவன்     = கற்ற சிறுவன்

     நில்லாத + செல்வம்     = நில்லாத செல்வம்

     அழியாத + கல்வி     = அழியாத கல்வி

5. 'எட்டு, பத்து' ஆகியவை தவிர மற்ற எண்ணுப்பெயர்களின் பின்வரும் வல்லினம் மிகாது.

     ஒன்று + கேள்          = ஒன்று கேள்

     ஒரு + பொருள்     = ஒரு பொருள்

     இரண்டு + புத்தகம்     = இரண்டு புத்தகம்

     இரு + பறவை     இரு பறவை

     மூன்று + குறிக்கோள்     = மூன்று குறிக்கோள்

     நான்கு + பேர்     = நான்கு பேர்

     ஐந்து + கதைகள்     = ஐந்து கதைகள்

     ஆறு + கோவில்     = ஆறு கோவில்

     அறு (ஆறு)     + சீர்     = அறுசீர்

     ஏழு + சான்றுகள்     = ஏழு சான்றுகள்

     ஏழு + பிறப்பு     = எழு பிறப்பு

     ஒன்பது + சுவைகள்     = ஒன்பது சுவைகள்

6. 'இரட்டைக் கிளவியிலும், அடுக்குத் தொடரிலும்' வல்லினம் மிகாது.

கல + கல= கலகல
சட + சட= சடசட- இரட்டைக் கிளவிகள்
பள + பள= பளபள

தீ + தீ= தீதீ
பார் + பார்= பார்பார் !- அடுக்குத்தொடர்கள்

    

7. வியங்கோள் வினைமுற்றுகளின் பின் வல்லினம் மிகாது.

     கற்க + கசடற      = கற்க கசடற

     வெல்க + தமிழ்     = வெல்க தமிழ்

     வீழ்க + தண்புனல்     = வீழ்க தண்புனல் 

8. 'அஃறிணைப் பன்மை' முன்வரும் வல்லினம் மிகாது.

     பல + பசு     = பல பசு

     சில + கலை     = சில கலை

     அவை + தவித்தன     = அவை தவித்தன

9. 'ஏவல் வினை' முன் வரும் வல்லினம் மிகாது.

     வா + கலையரசி     = வா கலையரசி

     எழு + தம்பி     = எழு தம்பி

     போ + செல்வி     = போ செல்வி

     பார் + பொண்ணே     = பார் பெண்ணே ! 

10. 'மூன்றாம் வேற்றுமை உருபுகளாகிய ஒடு, ஓடு' ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.

கோவலனொடு + கண்ணகி வந்தாள்     = கோவனொடு கண்ணகி வந்தாள்.

     துணிவோடு + செல்க     = துணிவோடு செல்க.

அண்ணனோடு + தங்கை வந்தாள்     = அண்ணனோடு தங்கை வந்தாள்.

11. 'செய்யிய' என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் வரும் வல்லினம் மிகாது. 

     காணிய + சென்றேன்     = காணிய சென்றேன்

     உண்ணிய + சென்றாள்     = உண்ணிய சென்றாள்

12. "பொதுப் பெயர், உயர்திணைப் பெயர்களுக்குப்" பின்வரும் வல்லினம் மிகாது.

     தாய் + கண்டாள்     = தாய் கண்டாள்.

     கண்ணகி + சீறினாள்     = கண்ணகி சீறினாள்.

13. 'ஐந்தாம் வேற்றுமையின் சொல் உருபுகளான இருந்து, நின்று' என்பவைகளின் பின் வரும் வல்லினம் மிகாது.

     மாடியிலிருந்து + கண்டேன் = மாடியிலிருந்து கண்டேன்.

     மரத்திலிருந்து + பறித்தேன் = மரத்திலிருந்து பறித்தேன்.

     மலையினின்று + சரிந்தது     = மலையினின்று சரிந்தது.

14. "வினைத் தொகையில்" வல்லினம் மிகாது. 

     விரி + சுடர்     = விரிசுடர்

     பாய் + புலி     = பாய்புலி 

15. "உம்மைத் தொகையில்" வல்லினம் மிகாது.

     காய் + கனி     = காய்கனி

     தாய் + தந்தை     = தாய்தந்தை

16. 'அது, இது' என்னும் சுட்டுகளின் பின் வல்லினம் மிகாது.

     அது + பறந்தது     = அது பறந்தது.

     இது + கடித்தது     = இது கடித்தது.

17. எது, யாது என்னும் வினாச்சொற்களின் பின் வல்லினம் மிகாது.

     எது + பறந்தது = எது பறந்தது?

     யாது + தந்தார் = யாது தந்தார்?

18. 'விளித் தொடரில்' வல்லினம் மிகாது.

     கண்ணா + பாடு     = கண்ணா பாடு.

     அண்ணா + கேள்     = அண்ணா கேள் ! 

19. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் 'கள், தல்' என்னும் விகுதிகள் வரும்பொழுது வல்லினம் மிகாது.

     எழுத்து + கள்     = எழுத்துகள்

     கருத்து + கள்     = கருத்துகள்

     வாழ்த்து + கள்     = வாழ்த்துகள்

     போற்று + தல்     = போற்றுதல்

     நொறுக்கு + தல்     = நொறுக்குதல்

20. 'இரண்டு வட சொற்கள்' சேரும் பொழுது வல்லினம் மிகாது.

     கோஷ்டி + கானம்     = கோஷ்டி கானம்

     சங்கீத + சபா     = சங்கீத சபா

     இதுவரை கண்டது போல், வல்லின எழுத்துகள் மிகும் இடங்கள், மிகா இடங்கள் ஆகியவற்றுக்கு மேலும் பல எடுத்துக்காட்டுகளைக் கண்டு தொகுத்துக் கொள்ளுங்கள்; பயன்படுத்தி மொழி வளம் பெறுங்கள் ! 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக