ஞாயிறு, 12 ஜூலை, 2015

TRB PG TAMIL :திருமங்கையாழ்வார்


காவிரி நதி பாய்தலின் காரணமாகப் பயிர் வளம் சிறந்து விளங்கும் சோழ நாட்டின் பல உட்பிரிவுகளில் திருவாலி நாடு என்பதும் ஒன்று ஆகும். அந்நாடு தன்னகத்தே பல ஊர்களை உடையது. அவற்றுள் சிறப்புற்றிலங்குவது திருக்குறையலூர் என்னும் ஊராகும். இத்திருக்குறையலூரில் சதுர்த்த வருணத்தில் ஆலிநாடுடையாருக்கும் அவரது மனைவியாகிய வல்லித்திரு என்னும் அம்மைக்கும், (A.H. 8-ஆம் நூற்றாண்டு) நள ஆண்டு கார்த்திகைத் திங்கள் பௌர்ணமி திதியில் வியாழக்கிழமையன்று கிருத்திகை நட்சத்திரத்தில் சார்ங்கமென்னும் வில்லின் அமிசராய் அவதரித்தருளினார் திருமங்கையார்வார்.

இவர்க்குப் பிள்ளைப் பருவத்தில் நீலநிறத்தர் என்று பெற்றோர் திருப்பெயர் இட்டார்கள். இவர் சோழ அரசனிடம் படைத்தலைவனாக இருந்து, பல வெற்றிகளைத் தேடித் தந்து, சோழ நாட்டின் மேன்மையை எங்கும் விளங்கும்படி செய்தார். அதனால் சோழ அரசன் இவர்பால் அன்பு மிக்கவனாகி, இவருக்கு ஆலிநாட்டை அளித்து, அதற்குத் திருமங்கை என்னும் பதியைத் தலைநகராக அமைத்து, இவரைத் தன் சேனைத் தலைவர்களுள் முதன்மையானவராகச் செய்து, பரகாலன் என்னும் வீரப் பட்டத்தையும் அளித்தான். இவர்க்கு நீர்மேல்நடப்பான், நிழலில் ஒதுங்குவான், சாயை பிடிப்பான், தாளூதுவான், தோலாவழக்கன், உயரத்தொங்குவான் முதலான அமைச்சர்களும் இருந்தார்கள். இவர் ஏறும் குதிரைக்கு ஆடல்மா என்று பெயர்.

இங்ஙனம் பரகாலர் இருக்கையில், சுமங்கலை என்னும் தேவமாது தோழியருடன்

இமயமலையின் வளங்களைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வருகையில், திருமாலின் அமிசராகிய கபில முனிவர் சீடர்களுக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருந்தயையைக் கண்டார். சீடர்களுள் ஒருவர் விகார வடிவினராக இருக்க அவரைக் கண்ட சுமங்கலை ஏளனம் செய்தார். அதனால் சினமுற்ற கபில முனிவர் சுமங்கலையை நோக்கி, 'c பூமியிற் சென்றுமானிடப் பெண்ணாகப் பிறந்து, ஒரு மனிதனுடைய மனைவியாய் வாழக் கடவாய்'என்று சபித்தார். அப்பெண் அஞ்சி நடுங்கி மன்னிக்குமாறு வேண்டினாள். கபில முனிவர், அவளை நோக்கி, "பரகாலரது மனைவியாகி, அவரது போர்க்கள வேள்வியைப் போக்கித் திருமாலின் நல்லடியாராகத் திருத்தி, அவருடன் வாழ்ந்திருந்து, அதனால் உன் குறை தீர்ந்து, பொன்னாட்டை அடைவாயாக" என்று அருள் புரிந்தார். அவ்வண்ணமே சுமங்கலையும் திருவாலி நாட்டிலுள்ள திருநாங்கூர்ப் பொய்கையில் தோழியருடன் நீராடிக் குமுதமலர் கொய்து கொண்டிருந்தாள். தோழியர் இவளை விடுத்துப் போனார்கள். சுமங்கலை குமுத மலரையே தனக்குத் தாயாகக் கொண்டு அதனருகில் குழந்தையாய்த் தோன்றினாள்.

திருமாலிடம் நீங்காத அன்புடையவரும், திருநாங்கூரில் வாழ்பவருமாகிய ஒரு மருத்துவர் பொய்கைக்கு நீராடற் பொருட்டு வர, குழந்தையைக் கண்டு, யாருமின்மையால் இல்லம் எடுத்துச்சென்று மனைவியிடம் மகிழ்ச்சியுடன் அளிக்க இருவரும் அக்குழந்தைக்கு, 'குமுதவள்ளி'என்னும் பெயரிட்டுத் தம் குழந்தையே போன்று செல்வமுடன் வளர்ப்பாராயினர். குமுதவல்லியாரும் திருமணப் பருவத்தை அடைந்தார். இச்செய்தி கேட்ட பரகாலர் என்னும் பட்டப் பெயருடன் மங்கை நகரத்தை ஆட்சி புரிந்த திருமங்கை மன்னர், திருவாங்கூரிலுள்ள மருத்துவர் இல்லத்திற்கு எழுந்தருளி, அவரது வளர்ப்புப் பெண்ணாகிய குமுதவல்லியைத் தனக்குத் திருமணம் செய்து தரவேண்டும் என்று விண்ணப்பித்தார். அவ்வளவில் குமுதவல்லியார், "திருவிலச்சினையும், திருநாமமும் உள்ளவர்க்கு அன்றி மற்றவர்க்கு என்னைப் பேசவிடேன்"என்றாள். அங்ஙனமே திருமங்கை மன்னரும் திருநறையூரில் நம்பி திருமுன்னே சென்று திருவிலச்சினை தரித்து, பன்னிரண்டு திருநாமங்களையும் சார்த்திக்கொண்டு வந்தார். பின்பு குமுதவல்லியார் திருமங்கை மன்னராகிய ஆழ்வாரைப் பார்த்து, "ஓராண்டு காலம் நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைணர்களை அமுது செய்வித்து, அவர்களுடைய சீபாத தீர்த்தமும் தளிகைப் பிரசாதமும் அங்கீகரித்து நிறைவேற்றினால் உம்மைப் பதியாக அடைவேன்"என்று பணித்தாள்.

ஆழ்வாரும் அதற்கு இசைந்து, உறுதி மொழி அளிக்க, குமுதவல்லியாரும் அவரை மணம் செய்துகொள்ள இசைந்தார். அதன் பின்பு குமுதவல்லியாரை அவள் பெற்றோர் நீலநிறத்தார் ஆகிய ஆழ்வாருக்கு நாடும் ஊரும் அறிய நல்லதொரு நாளில் திருமணம் செய்தளித்தார்கள்.

குமுதவல்லியாரைத் தமது வார்க்கைத் துணைவியாக்கிக்கொண்ட திருமங்கை மன்னராகிய ஆழ்வாரும், நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அன்னம் அளித்து ஆராதித்தார். இங்ஙனம் நாள்தோறும் நடைபெறும் நல்விருந்நதினை நானிலத்தோர் நயம்படப் பலருக்கும் நவின்று வந்தனர். இச்செய்தி சோழ வேந்தனது செவிக்கும் எட்டிற்று. செம்பியன் செவிக்கு அமைச்சர்கள் ஆழ்வாரது இச்செய்தியுடன், மங்கை நகர மன்னரும் ஆழ்வாருமாகிய பரகாலரிடமிருந்து பகுதிப் பணமும் வருவதில்லை என்ற செய்தியையும் அறிவித்தார்கள். உடனே சோழ வேந்தன் சினமுற்றுத் தூதுவர் இருவரைப் பரகாலரிடம் பகுதிப் பணத்தை வாங்கிவர அரச முத்திரை தாங்கிய முடங்கலுடன் அனுப்பினான். தூதுவர்களை வரவேற்ற பரகாலர் பகுதிப் பணம் தருவதாக வாக்களித்து நாட்களைக் கடத்தினார். தூதுவர்கள் பகுதிப் பணத்தை விரைவில் தருமாறு வற்புறுத்தினார்கள். பரகாலராகிய ஆழ்வார் கோபம் கொண்டு தூதுவர்களை அடித்து விரட்டினார். அவர்களும் அஞ்சி அங்கிருந்து அகன்று, அரசனிடம் நடந்த நிகழ்ச்சியினை அறிவித்தார்கள். பரகாலர் தனது ஆணையை மீறினதற்காகக் கோபம் கொண்ட சோழ வேந்தன், தனது சேனாதிபதியை அழைத்துப் படையுடன் சென்று பரகாலனை அங்குப் பிடித்து வருமாறு ஏவினான்.

சேனாதிபதியும் யானை, குதிரை, காலாட்களுடன் சென்று பரகாலரை வளைத்துப் பிடிக்கப் பார்க்க, மங்கை மன்னர் குதிரையின் மேலேறித் தம் படைகளுடன் வந்து, ஆரவாரத்துடன் அவர்கள்மேல் விழுந்து, சேனைகளை எல்லாம் துண்டித்துத் துரத்தியோட்டிவிட்டார். சேனாதிபதியும் வெட்கப்பட்டு ஓடி அதனை அரசனுக்கு அறிவித்தான். சோழ வேந்தனும் அதனைக் கேட்டு, கோபத்தினால் கண்கள் சிவந்து அப்பொழுதே, தனது சதுரங்க பலத்துடன் புறப்பட்டு வந்து, பரகாலரைப் பிடித்துக்கொள்ளும்படி தன் படை வீரர்களுக்கு உத்தரவு அளித்தான். படையினரும் அங்ஙனமே பரகாலரை வளைத்துக்கொள்ள, பரகாலரும் முன்புபோல வாளுங்கையுமாய் ஆடல்மா என்னும் தமது குதிரையின்மேல் புறப்பட்டு வந்து, ஆரவாரத்துடன் எதிர்த்து வந்த படையினரைப் பாழக்கித் துரத்த, எல்லாரும் தோற்று ஓடிவந்து வேந்தன்மேல் விழுந்தார்கள். வேந்தனும் ஓடுகிறவர்களை மிக்க சினத்துடன் நிறுத்திப் பின்பு பரகாலரைப் படைகளின் நடுவே அகப்படும்படி வளைத்துக்கொண்டான். பரகாலரும் வீரமுடையவராய்த் தமது கையிலிருந்த வாளின் பலத்தினால் படையை மதியாமல் போரிட்டு அழிக்கத் தொடங்கினார். அதனைக் கண்ணுற்ற அரசன் இவரைப் பார்த்து, 'நீவிற் எதற்கும் அஞ்சவேண்டுவதில்லை .உமது வீரத்தினைக் கண்டு மிக்க மகிழ்ச்சியுற்றேன். நீர் செய்த தவறுகளை எல்லாம் மறந்தேன். அஞ்சாமல் என்னை நம்பி வருக' என அழைக்க, பரகாலரும் அரசனிடம் பகைமை மறந்து சென்று நின்றார். அரசனும் பரகாலரது வீரத்தைப் பாராட்டினான். பின்பு அரசன் பரகலாரை நோக்கி, தரவேண்டிய பகுதிப் பணத்தை மட்டும் தரவேண்டும் எனவும், அதுவரையில் அமைச்சர்களின் பாதுகாவலில் பரகாலர் இருக்கவேண்டும் எனவும் பணித்தார். அமைச்சர்களும் பரகாலரைப் பிடித்துக் கொண்டு வந்து ஒரு தேவாலயத்தில் சிறை வைத்தனர்.

இப்படி, ஆழ்வார் அந்தக் கோயிலில் மூன்று நாட்கள் உணவின்றிச் சிறையிருந்தார். ஆழ்வாரது கனவில் பேரருளாளர் எழுந்தருளியிருந்து, 'உமது பகுதிக்கு வேண்டிய பணம் நாம் தருகிறோம். காஞ்சீபுரத்திற்கு வாரும்'என்றருளினார். பரகாலரும் மறுநாள் அமைச்சர்களிடம், 'காஞ்சீபுரத்தில் பணம் புதைத்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்தால் உங்கள் பகுதியைத் தருகிறேன்'என்றார். அமைச்சர்கள் அதனை அரசரிடம் விண்ணப்பிக்க, அரசரும் உடன்பட, தக்க காவலுடன் பரகாலரைக் காஞ்சீபுரத்திற்கு அமைச்சர் ஒருவர் அழைத்துச் சென்றார். காவலுடன் காஞ்சீபுரம் சென்ற பரகாலர், புதையல் பொருளைக் காணாமல் வருந்திக் கிடந்தார். அவ்வளவில் கருணைத் தன்மை நிறைந்தவரான அருளாளப் பெருமாள்,

"அஞ்சாதே கொள்ளும்"என்று வேகவதி தீரத்தில் பணம் இருக்கும் இடத்தை அடையாளமாகக் காட்டியருள, இவரும் அங்கே பணம் கண்டெடுத்து, கப்பப் பணத்தைக் கொடுத்து, மிகுதியை ஸ்ரீவைணவர்க்கு உணவளித்தற்காக வைத்துக்கொண்டார்.

அமைச்சர் நிகழ்ந்த செய்தியை அரசனுக்கு அறிவித்து அரசர் முன்பாகக் கப்பப் பணத்தை வைத்தார். வேந்தன், காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் பணம் தந்த செய்தியைக் கேட்டு வியப்புற்று, இவர் மனிதர்களுள் மேம்பட்ட பெருமையுடையவர் என்று எண்ணி, அவர் அளித்த கப்பப் பணத்தைக் கருவூலத்தில் சேர்க்காமல் ஆழ்வாரை அழைப்பித்து அவரிடமே அப்பணத்தையும், சிறப்பாக வெகுமதியையும் அளித்து அவற்றை உணவிடுதற்கு வைத்துக்கொள்ளுமாறு வேண்டி, ஆழ்வாரைப் பட்டினி போட்ட பாவத்தைப் போக்கிக்கொண்டான். ஆழ்வாரிடம் உள்ள பணம் யாவும் செலவழிந்ததும், வழிப்பறி செய்தேனும் பணம் சேர்த்து ஸ்ரீவைணவர்களுக்கு உணவிளிக்கும் எண்ணங்கொண்டு, வழிப்பறி செய்து பொருள் ஈட்டி வந்தார்.

இப்படியிருக்கையில், ஆழ்வார் வழிப்பறி செய்தற்கு வேண்டும் பரிவாரத்தையும் கூட்டிக்கொண்டு, திருமணங்கொல்லையில் ஓர் அரச மரத்தில் பதுங்கியிருந்தார். ஸ்ரீவைணவர்களுக்காகவே வழிப்பறி செய்யும் பரகாலரது எண்ணத்தை உணர்ந்த பெருமாள் அவ்வழியில் மணவாளக் கோலங்கொண்டு மனைவியுடன், எல்லா அணிகலன்களையும் அணிந்து கொண்டு, பலவகைத் திரவியங்களுடன் பெருந்திரளோடு வந்துற்றார். இக்கூட்டத்தைக் கண்ட ஆழ்வார், மிக்க மகிழ்ச்சியுடன் வாளுங்கையுமாய்ப் பரிகரங்களுடன் இவரை வளைத்துக்கொண்டு, ஆடை அணிகலன்களையெல்லாம் கவர்ந்துகொண்டு, அறுகாழி மோதிரத்தைக் கடித்து வாங்க, எம்பெருமானும் இதைக் கண்டு 'நம் கலியனோ'என்றருளிச் செய்தார். பின்பு இவை எல்லாவற்றையும் சுமை சுமையாகக் கட்டி எடுக்கப் பார்க்க அவை பெயர்க்கவும் பெயராதபடியால் மணவாளனான அந்தணனைப் பார்த்து, "c மந்திரவாதம் பண்ணினாய்"என்று ஆழ்வார் வருந்தினார். பெருமாள், 'அம்மந்திரத்தை உமக்குச் சொல்லுகிறோம், வாரும்'என்று கழுத்தையணைக்க, ஆழ்வாரும் உடனே, 'c சொல்லாவிடில் இந்த வாளுக்கு இறையாவாய்'என்று தம் கையில் வாளைக் காட்டி அதிகாரத்துடன் கேட்க, எம்பெருமானும் எட்டு எழுத்தாய் மூன்று பதமான பெரிய திருமந்திரத்தை வலத்திருச் செவியில் செவிக்கின்பமாக உபதேசித்துக் காட்சி கொடுத்தார். இவ்வாழ்வார் தாம் அறிந்த திருமந்திரத்தையும், அதற்கு உள்ளீடான ஸ்ரீமந்நாராயணனுடைய வடிவமாகிய உருவத்தையும் அருள்மாரி என்னும்படி பெரிய பிராட்டியருளாலே கண்டு களித்தார்.

இதனாலுண்டான அன்பினாலும், வியப்பினாலும் அவர் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்கிற ஆறு பிரபந்தங்களையும் அருளிச் செய்தார்;நம்மாழ்வார் அருளிச் செய்த நான்கு வேதங்களின் சாரமாகிய நான்கு பிரபந்தங்களுக்கும் ஆறு அங்கமாக ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்கிற நான்கு விதமான கவிகளால் அருளிச் செய்து சிறப்புற்றார். இதனால் பரகாலருக்கு "நாலுகவிப்பெருமாள்"என்னும் பட்டப்பெயர் வழங்கலாயிற்று.

முன்பு அவர் திருமொழி அருளிச் செய்த தலங்கள்தோறும் சென்று, ஆங்காங்கு எழுந்தருளியுள்ள திருமாலை வணங்கிப் பின் சோழ மண்டலத்திற்கு எழுந்தருளினார். அவ்வமயம் ஆழ்வாரின் சீடர்கள், "நாலுகவிபெருமாள் வந்தார்:நம் கலியன் வந்தார்:ஆலிநாடர் வந்தார்! அருள்மாரி வந்தார்!கொங்கு மலர்க் குழலியர் வேள் வந்தார்!மங்கை வேந்தர் வந்தார்!பரகாலர் வந்தார்!"என்று விருது கூறிச் சென்றனர். அங்கேயிருந்த சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவரும், சீகாழிச் செல்வரும், ஞானப்பால் உண்டவரும் ஆகிய திருஞானசம்பந்தரின் சீடர்கள், திருமங்கை மன்னர் நாலுகவிப்பெருமாள் என்று விருது பெற்றவராய் விருதூதல் கூடாது என்று மறுக்க, பின்னர் ஆழ்வார் வெண்ணெயுண்ட தடாளனை எழுந்தருளுவித்துக் கொண்டு, சம்பந்தருடன் தர்க்கித்து, "ஒரு குறளாயிருநிலம்"என்ற திருமொழியை அருளிச்செய்து, தம் பெருமையெல்லாம் புலப்படும்வண்ணம் பாடல் பாடினார்.

ஞானசம்பந்தர் உடனே ஆழ்வாரை நோக்கி, "உமக்கு நாலுகவிப்பெருமாள் என்னும் விருது பொருந்துமாதலினால் விருதூதிக்கொண்டு செல்வீர்"என்று கூறினார்.

பின்பு திருமங்கை மன்னர் பல தலங்கள்தோறும் சென்று சேவித்துத் திருவரங்கம் வந்து, அங்குள்ள பெரிய பெருமாளுக்கும் அழகிய மணவாளர்க்கும் விமானம், மண்டபம், திருத்தளிகை, திருமதில், கோபுரம் முதலிய தொண்டுகள் செய்ய விரும்பினார். அதற்காக நாகப்பட்டினம் சென்று பெரும் பொன்னை எடுத்து வந்தார்:அதனை விற்றுப் பெற்ற பொருளைக் கொண்டு விமானம், மண்டபம் முதலியன கட்டுவித்து வருகையில், தொண்டரடிப்பொடியாழ்வார் பெரிய பெருமாளுக்குத் திருமாலை சேர்க்கின்ற இடம் நேர்பட, அதனைத் தவிர்த்து, ஒதுங்கியிருக்கத் திருமதிலைக் கட்டுவித்தார். இதனை அறிந்த தொண்டரடிப்பொடியாழ்வார் மலர் பறிக்கும் தமது ஆயுதத்திற்குத் திருமங்கை மன்னருடைய பெயர்களுள் ஒன்றான

'அருள்மாரி'என்னும் பெயரை இட்டு மகிழ்ந்தார்.

பின்னர் திருமங்கை ஆழ்வார் விமானம், மண்டபம், கோபுரம் முதலிய திருத்தொண்டுகளைச் செய்து உலகை வாழ்த்தருளினார்.

இவரால் பாடப்பெற்ற தலங்கள்:1. திரு அட்டபுயகரம், 2. திரு அரிமேய விண்ணகரம், 3. திரு அன்பில், 4. திரு ஆதனூர் 5. திரு இந்தளூர் 6. திரு உறையூர்,7. திருவூரகம், 
8. திருக்கண்டியூர், 9. திருக்கரம்பனூர், 10. திருக்காரகம்,11. திருக்கார்வனம், 
12. திருக்காவளம்பாடி, 13. திருக்காழிச் சீராமவிண்ணகரம்,14. திருக்கூடலூர், 
15. திருச்சாளக்கிராமம், 16. திருச்சிங்கவேள்குன்றம்17.. திருச்சித்திரகூடம், 
18. திருச்சிறுபுலியூர், 19. திருச்செம்பொன்செய்கோயில், 
20. திருத் தஞ்சை மாமணிக்கோயில், 21. திருத்தலைச் சங்க நாண்மதியம். 
22. திருக்கடன்மல்லை, 23. திருக்கடிகை, 24. திருக்கண்ணங்குடி, 25. திருக்கண்ணபுரம், 26. திருக்கண்ணமங்கை, 27. திருக்கள்வனூர், 28. திருக்குடந்தை, 29. திருக்குறுங்குடி, 30. திருக்கூடல், 31. திருக்கோட்டியூர், 32. திருக்கோவலூர், 33. திருநீர்மலை, 
34. திருவரங்கம், 35. திருவல்லிக்கேணி, 36. திருவிடவெந்தை, 37. திருவிண்ணகர், 
38. திருவெஃகா, 39. திருவேங்கடம், 40. திருநீரகம் முதலியனவாம்.



 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக