3.2 தொல்காப்பியம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
இன்று நமக்குக் கிடைக்கும் நூல்களுள் மிகவும் தொன்மையான முதல்நூல் தொல்காப்பியம். இது முழுமுதலான பேரிலக்கண நூல். தமிழ் மொழியின் பெருமையையும், தமிழ் மக்களின் வாழ்வியல் கோட்பாடுகளையும், அவர்தம் அறிவு மேம்பாட்டையும் உலகறியச் செய்யும் பெருமை உடையது தொல்காப்பியம். வாழ்க்கையை அகம், புறம் என்று பிரித்து, அவற்றை இலக்கியமாகப் படைப்பதற்கு இலக்கணம் வகுத்துத் தந்தது தொல்காப்பியம். | ||||||||||||||||||||||||||||||||||||||||
தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர் எனப்படுகிறார். பல தொன்மைக்காலப் பெரும் புலவர்களின் வரலாறு சரிவர அறியப்படாதவாறு போல் இவர் வரலாறும் அறியப்படவில்லை. தொன்மையான காப்பியக்குடி என்னும் ஊரினர் என்பதால் இப்பெயர் பெற்றார் என்பர் ஒரு சாரார்; தொன்மையான தமிழ் மரபுகளைக் காக்கும் நூலை இயற்றியமையால் இவ்வாறு பெயர் பெற்றதாகவும் கூறுவர். இவர் அகத்தியர் மாணவர் என்றும் குறிப்பிடுவர். | ||||||||||||||||||||||||||||||||||||||||
தொல்காப்பியர் காலம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
தொல்காப்பியரின் காலம் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. தொல்காப்பியம் கி.மு.3-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும், கி.மு.5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும் கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்றும் கருத்துகள் உள்ளன. சங்க இலக்கியங்களில் தொல்காப்பியக் காலத்திற்கு மாறான, தொல்காப்பியர் கூறாத புதிய இலக்கண, இலக்கிய வழக்காறுகள் நுழைந்துள்ளன. எனவே தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலே என்பது பெரும்பாலோர் கருத்தாகும். | ||||||||||||||||||||||||||||||||||||||||
தொல்காப்பியருக்கு முன்னுள்ளோர் | ||||||||||||||||||||||||||||||||||||||||
தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்னரும் இலக்கண ஆசிரியர் வாழ்ந்தனர் என்பதைத் தொல்காப்பியத்தால் அறிய முடிகிறது. இது பற்றி முன்னரே குறிப்பிடப்பட்டது. 'என்ப', 'என்மனார் புலவர்', 'யாப்பறி புலவர்', 'தொன்மொழிப் புலவர்', 'குறியறிந்தோர்' எனத் தம் காலத்திற்கு முன்னுள்ளோரைத் தொல்காப்பியர் தம் நூலில் குறிப்பிடுகின்றார். தமிழின் பல இலக்கணக் கோட்பாடுகளைத் தமக்கு முன்பிருந்த இலக்கண ஆசிரியர்கள் கூறியுள்ளதாகத் தொல்காப்பியர் எடுத்துக் காட்டுவது, தமிழ் மிகு பழங்காலத்திலேயே இலக்கிய இலக்கணச் செம்மை பெற்றிருந்தது என்பதை அறியத் துணைபுரிகிறது. இதுவும் தொல்காப்பியத்தின் சிறப்பாகும். இடைச்சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் தொல்காப்பியம் இலக்கணமாக இருந்தது என இறையனார் களவியல் உரையாசிரியர் குறிப்பிடுகின்றார். | ||||||||||||||||||||||||||||||||||||||||
இந்நூல் நூற்பா யாப்பில் அமைந்துள்ளது. இது, எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் ஒன்பது இயல்கள் அமைந்துள்ளன. அவ்வியல்களின் பெயர்களைக் கீழ்க்காணும் பட்டியலில் காண்க. | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
எழுத்ததிகாரம் | ||||||||||||||||||||||
இதில், உயிர் பன்னிரண்டும், மெய் பதினெட்டுமாகிய முப்பது முதல் எழுத்துகள், அவை முறையே குறில், நெடில் என்றும், வல்லினம், மெல்லினம், இடையினம் என்றும் பகுக்கப்படுதல், சார்ந்து வரும் இயல்புடைய குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் எழுத்துகள் ஆகியவை பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. சொல்லின் முதலிலும் இறுதியிலும் வருபவை இன்னின்ன எழுத்துகள் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. | ||||||||||||||||||||||
ஒலிகளின் அளவு (மாத்திரை), அவை பிறக்கும் முறைகள் போன்றவற்றை நீண்ட பழங்காலத்திலேயே கணித்துக் கூறிய தொல்காப்பியரின் பேரறிவை வியக்காமலிருக்க இயலாது. இவ்வதிகாரத்தின் பெரும்பகுதியும் சொற்கள் நிலைமொழியாகவும், வருமொழியாகவும் நின்று புணரும் புணர்ச்சி இலக்கணத்தையே விளக்குகிறது. புணர்ச்சியை வேற்றுமைப் புணர்ச்சி என்றும் வேற்றுமை அல்லாத புணர்ச்சி என்றும், இயல்பு புணர்ச்சியென்றும், விகாரப் புணர்ச்சி என்றும் பாகுபாடு செய்து விளக்குகின்றார் ஆசிரியர். எழுத்துகள் இணைவதும் எழுத்துகளாலாகிய சொற்கள் இணைவதும் ஆகிய இலக்கணம் மிகத் தெளிவான முறையில் விளக்கப்பட்டுள்ளது. எழுத்துகளின் மாத்திரை பற்றிக் கூறும் போது தமிழ்நாட்டில் வழங்கிய இசை இலக்கணத்தையும் தொல்காப்பியர் தமது நூலில் குறிக்கின்றார். அதனை நரம்பின் மறை என்று குறிப்பிடுகின்றார். சொல்லதிகாரம் தமிழ் இலக்கணத்தில் சிறப்பாக அமைந்த கூறுகளுள் திணைப் பாகுபாடும் ஒன்று. உயர்திணை அஃறிணை என்ற அடிப்படையிலே பெயர்கள் தோன்றுவதனை விளக்கி, இருதிணைக்கும் உரிய ஐந்து பால்களையும், அவற்றுக்கு உரிய ஈறுகளையும் விளக்குகின்றார் தொல்காப்பியர். வேற்றுமை உருபுகள், அவை உணர்த்தும் பொருள்கள், ஒரு வேற்றுமைப் பொருளை இன்னொரு வேற்றுமையின் உருபு கொண்டு உணர்த்தும் வேற்றுமை மயக்கம், இருதிணைப் பெயர்களும் விளியேற்கும் மரபு, விளியை ஏற்காத பெயர்கள் முதலானவை பற்றி விளக்கப்பட்டுள்ளது. பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல் ஆகியவற்றின் பொது இலக்கணமும், அவற்றின் பாகுபாடுகள், பெயரெச்சம், வினைஎச்சம், வினைமுற்று, தெரிநிலை முற்று, குறிப்பு முற்று, வியங்கோள், எதிர்மறை முற்றுகள் ஆகியனவும், வேற்றுமைத் தொகை, உவமத்தொகை, வினைத்தொகை முதலான தொகைச் சொற்களின் இலக்கணமும், சொற்கள் பொருள் உணர்த்தும் முறையும், செய்யுளில் பயன்படும் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நால்வகைச் சொற்களின் தன்மைகளும் சொல்லதிகாரத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. பொருளதிகாரம் பொருள் என்பது எழுத்தாலாகிய சொல்லால் வெளிப்படுவது. அதாவது இலக்கியம். இலக்கியம் வாழ்க்கையின் வெளிப்பாடு. ஆகவே பொருள் இலக்கணம் என்பது வாழ்க்கைக்கும் அதன் மொழிவழி வெளிப்பாடாகிய இலக்கியத்திற்கும் வழிகாட்டும் இலக்கணம் ஆகும். இப்பொருள் இலக்கணம் தமிழுக்கே உரிய சிறப்பான ஒன்று. இது, அகம் புறம் என்ற இரு பாகுபாடுகள் கொண்டது. இவ்வாறு இலக்கியங்களை உருவாக்கும் படைப்பாளன் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வகுத்துக் கூறுகின்றது பொருளதிகாரம். கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்னும் ஏழு அகத்திணைகளும், அவற்றின் கூறுகளும் அகத்திணை இயலில் சொல்லப்பட்டுள்ளன. அகத்திணை ஒவ்வொன்றிற்கும் புறமாகப் புறத்திணைகள் வகுத்துரைக்கப்பட்டுள்ளன; அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பன. அகத்திணை இலக்கியம் களவு, கற்பு என்ற இரு பிரிவுகளில் (கைகோள்) அமைகிறது. இவ்விரு ஒழுக்கங்களிலும் இடம் பெறும் மாந்தர், அவர்களின் பல்வேறு இயக்கங்களின் போது அவர்கள் பேசும் பேச்சுகள் முதலியனவே களவியலிலும் கற்பியலிலும் விவரிக்கப்பட்டுள்ளன. மெய்ப்பாட்டியலில் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, வெகுளி, உவகை, அச்சம், பெருமிதம் என எட்டு மெய்ப்பாடுகளும் அவற்றிற்குரிய நிலைக்களன்களும் விளக்கப்பட்டுள்ளன. மெய்ப்பாடுகள் நடைமுறை வாழ்வில் காணத்தக்கவை; இலக்கியத்தில், நாடகத்தில் நாம் காண்பவை என்பதை அறிவீர்கள். செய்யுளியலில் ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி என்ற நான்கு வகையான யாப்புகளையும் கூறுகின்றார் தொல்காப்பியர். இலக்கியப் படைப்பின் வடிவமைப்புக்கும் பொருளமைப்புக்கும் தேவையான இன்றியமையாத இலக்கணம் தொல்காப்பியச் செய்யுளியல். தொல்காப்பிய மரபியல் உயர்திணைப் பொருள்களையும் அஃறிணைப் பொருள்களையும் அவற்றின் அறிவுத் தகுதி கொண்டு பாகுபடுத்திக் காட்டுகிறது. அவற்றை எவ்வாறு அழைப்பது எனும் மரபுகளையும் எடுத்துரைக்கிறது. தமிழினம் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு தொல்காப்பியத்தைப் பெற்றமையே எனலாம். இலக்கணம் என்பது எழுத்து, சொல், தொடர் என்ற அளவில் மட்டும் அமைந்திருக்கும். அதாவது இலக்கணம் மொழி தொடர்பானதாக மட்டுமே இருக்கிறது. இது உலகில் எல்லா மொழிகளிலும் உள்ள ஒரு பொது இயல்பு. ஆனால் இதற்கு விதிவிலக்காக அமைகிற மொழி தமிழ் மட்டுமே. மொழியின் இலக்கணத்தோடு மொழியைப் பேசும் மக்களின் வாழ்வியல் இலக்கணத்தையும் அது கொண்டிருக்கிறது. தொல் பழம் காலத்திலேயே வாழ்வியல் இலக்கணமாகிய பொருள் இலக்கணத்தையும், மொழி இலக்கணத்துடன் இணைத்துத் தந்த பெருமை தொல்காப்பியத்திற்குண்டு. பொருள் இலக்கணத்தில் அகம் புறம் எனப் பகுத்த பாகுபாடு என்றும் எங்கும் பொருந்தி வருவது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். அகப்பொருளுக்கும் புறப்பொருளுக்கும் இலட்சிய நோக்கில் உயர்ந்த மரபுகளைப் படைத்தளித்தது தொல்காப்பியம். முன்பே நாம் கண்டதுபோல, வாழ்க்கைக்கும் அதன் மொழி வழி வெளிப்பாடாகிய இலக்கியத்திற்கும் இணைப்புப் பாலமாக நின்று வழியமைத்தது தொல்காப்பியரின் மேன்மையைக் காட்டும். இலக்கியப் பொருளை, அகம், புறம் என இருபெருங் கூறுகளாகப் பிரித்து அவைகளைத் திணை, துறை எனப் பகுக்கும் ஒழுங்கமைந்த, செப்பமான அமைப்பு வேறு எந்த மொழியிலும் இல்லை. அக வாழ்வு என்பது, இல்வாழ்வு, இல்லற வாழ்வு, உள்ளத்தால் வாழும் உணர்வு வாழ்வு. புற வாழ்வு என்பது அக வாழ்வில் இருந்து கிளர்ந்து விரிவாக்கமுற்று உலக வாழ்வாகத் திகழ்வது. அக வாழ்வு இல்லையெனில், புற வாழ்வு இல்லை. அறம் என்பதன் தோற்றமே அக வாழ்வின் தோற்றம். அறம் தழுவிய அக வாழ்க்கை கைகோள் எனப்பட்டது. 'கை' என்றால் ஒழுக்கம் என்று பொருள். 'கோள்' என்றால் கொள்ளுதல் என்று பொருள். அறத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள அக வாழ்க்கையாகிய இல்வாழ்க்கையைப் பற்றி விரிவாகத் தொல்காப்பியம் கூறுகிறது. அகத்திணையை அடுத்து வைக்கப்பட்ட புறத்திணை, தமிழர்களின் புற வாழ்வை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அகம், புறம் என்பவை முரண்பட்டவை அல்ல, வாழ்வின் இருபக்கங்கள் அவை என்பது தொல்காப்பியம் உணர்த்தும் கருத்து. அகத்திணைக்குக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என்னும் ஏழு திணைகளை வகுத்த தொல்காப்பியம் அவற்றின் புறங்களாக, முறையே வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்னும் ஏழு புறத்திணைகளையும் அமைத்துள்ளது. திணைப் பெயர்கள் தமிழர்களுக்கு மிகவும் அறிமுகமான மலர்களின் பெயர்கள். தமிழர் வாழ்வாகிய அகம் புறம் என்னும் இரண்டும் பூக்களால் குறியீடு பெற்றமை, இயற்கையோடு இணைந்து வாழ்ந்த தமிழர்களின் சீர்மையை வெளிப்படுத்தும். 'தமிழ் இலக்கியக் கொள்கையின் அடிப்படைத் தளம் தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணமாகும்' என்று குறிப்பிடுகிறார், பேராசிரியர் க.செல்லப்பன். இலக்கியக் கொள்கைகள் தொல்காப்பியர், இடத்தையும், காலத்தையும் முதற் பொருளாகக் கருதுகிறார். அவை ஒவ்வொன்றையும் ஐந்து கூறுகளாகப் பகுக்கிறார். ஐந்து இடங்களுக்கும், ஐந்து காலங்களுக்கும் தொடர்புள்ளனவாக வாழ்வின் இயக்கங்கள், அதாவது இலக்கியப் பொருள் (உரிப்பொருள்) தொல்காப்பியத்தில் அமைக்கப்பட்டிருப்பதைப் பேராசிரியர் செல்லப்பன் சுட்டிக் காட்டுகிறார், இந்த அடிப்படைக் கூறுகளை, நார்த்ராப் ப்ரை (Northrop Frye) எனும் இலக்கியக் கோட்பாட்டாளரின் ஆய்வுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறார். ப்ரை மூலக் கூறுகளை அடிப்படையாகக் கொண்ட (Archetypeal Criticism) ஆய்வை விளக்கிப் புகழ்பெற்றவர். அத்தகைய ஆய்வு தொல்காப்பியரின் கோட்பாட்டுடன் ஒப்பிடத்தக்க நெருக்கம் கொண்டிருக்கிறது என்றால், காலம் பல கடந்தும் நீடிக்கக் கூடிய ஓர் இலக்கியக் கோட்பாட்டைத் தொல்காப்பியர் அறிந்திருக்கிறார் என்பதுதானே பொருள்! இதுதான் க.செல்லப்பன் வெளிப்படுத்திக் காட்டும் உண்மை. தொல்காப்பியத்தின் இலக்கியக் கொள்கை பெரும்பாலும் உலகத்தை அடிப்படையாகக் கொண்டது. அது, போலச் செய்தல் (Mimetic Theory) என்பதாகும். உலக வழக்கையும், நாடக வழக்கையும் வேறுபடுத்தி, அவர் வாழ்வை நாடக இலக்கியப் பாங்கில் பகுத்துத் தொகுத்துத் தருகிறார். இது பிளோட்டோவின் (Plato) மூலப் படிவச் சிந்தனையுடன் ஒத்த சிந்தனையாக உள்ளது. மேலை நாட்டு மரபில் இலக்கிய வகைமை கொள்கைக்கு வித்திட்டவர்களாகப் பிளேட்டோவையும் அரிஸ்டாட்டிலையும் குறிப்பிடுவர். அதைப்போல இந்திய மரபில் இலக்கிய வகைமைக் கொள்கைக்கு வித்திட்டவர் தொல்காப்பியர் ஆவார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக