வியாழன், 26 செப்டம்பர், 2013

சீலிடப்பட்ட கேள்வித்தாள், நேரடியாக தேர்வு அறைகளில் -வரும் பொதுத்தேர்வில் செயல்படுத்த,தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது

    தேர்வுத்துறையில், அடுக்கடுக்காக, பல்வேறு சீர்திருத்தநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், வரும் பொதுத்தேர்வில் இருந்து, கேள்வித்தாள் கட்டுகளை, நேரடியாக, தேர்வு மையங்களுக்கு அனுப்ப,தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. 

இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன்,நேற்று கூறியதாவது: 
தற்போது,ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும், தேவையான கேள்வித்தாள்கள், மொத்தமாக அனுப்பப்படுகின்றன. 100, 150 கேள்வித்தாள்கள், ஒன்றோ அல்லது இரண்டு பார்சலாகவோ அனுப்பப்படுகிறது. தேர்வு துவங்குவதற்கு முன், அவற்றை பிரித்து, ஒவ்வொரு தேர்வு அறை வாரியாக தேவைப்படும் கேள்வித்தாள்கள் பிரித்து,வழங்கப்படுகின்றன. இதற்கு,
தேவையில்லாமல், அரை மணி நேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. மேலும், கேள்வித்தாள்களை, பாதுகாப்புடன், தேர்வு அறைகளுக்கு செல்வதை உறுதி செய்யும் வகையில், புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து உள்ளோம். அதன்படி, மாநிலம் முழுவதும், மொத்த தேர்வு மையங்கள், ஒவ்வொரு மையத்திலும் அமைக்கப்படும் தேர்வு அறைகள் எண்ணிக்கை, ஆகியவை கணக்கிடப்பட்டு, ஒவ்வொரு தேர்வு அறைக்கும், தலா, 20 கேள்விகள் என்ற வீதத்தில் கணக்கிடப்பட்டு, அதற்கேற்ப, அச்சகங்களில்
பார்சல் செய்யப்படும். சீலிடப்பட்ட கேள்வித்தாள் கட்டுகள், நேரடியாக மாவட்டங்களில் உள்ள வினாத்தாள்பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பப்படும். அங்கிருந்து, பள்ளிகளுக்கு அனுப்பப்படும். பள்ளிகளுக்கு சென்றதும், தேர்வு துவங்குவதற்கு சற்று முன், 20 கேள்வித்தாள் அடங்கிய, சீலிடப்பட்ட கவர்கள், தேர்வு கண்காணிப்பு அலுவலர்களுக்கு வழங்கப்படும். சீலிடப்பட்ட கவரை, மாணவர்கள் கண் முன் பிரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அச்சகங்களில் சீலிடப்படும் கேள்வித்தாள் கவர்,      
தேர்வு அறைகளில் தான் பிரிக்கப்படும். பெரிய கவருக்குள், மற்றொரு கவர் இருக்கும். அதனுள் தான், கேள்வித்தாள்கள் இருக்கும். ஒரு கவரை பிரித்தால், அதை மீண்டும் சரிசெய்ய முடியாது. எனவே, கேள்வித்தாள்கவர் பிரித்தால், அதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். 

இவ்வாறு, தேவராஜன் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக