புதன், 4 செப்டம்பர், 2013

TNTET NEWS UPDATE : ANSWER KEY 2,000 பேர் ஆட்சேபனை

 கடந்த ஆக., 17, 18 தேதிகளில், ஆசிரியர் தகுதிக்கான, டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. இதை, 6.5 லட்சம் பேர் எழுதினர். தேர்வுக்கான, தற்காலிக விடைகள், டி.ஆர்.பி., இணையதளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டன. விடைகள் குறித்து, 2,000 பேர், ஆட்சேபம் தெரிவித்துள்ளதாக, டிஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம், மேலும் கூறியதாவது: பெற்றுள்ள விண்ணப்பங்களில் பெரும்பாலும் தமிழ்ப் பாட விடைகள் மீது தான், ஆட்சேபம் தெரிவித்து உள்ளனர். பல விடைகள், எங்களுக்கே குழப்பமாக உள்ளன. குறிப்பாக, குமரகுருபரர், எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பது கேள்வி. இதற்கு, 6ம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில், 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும், 8ம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இரு புத்தகங்களையும், பாடநூல் கழகம் வெளியிட்டு உள்ளது. நிபுணர் குழு, 17ம் நூற்றாண்டு தான் சரி என, தெரிவித்து உள்ளது. பாடநூல் கழகம், தவறான தகவலை வெளியிட்டு உள்ளதால், இந்தக் குழப்பம் ஏற்பட்டது. இதுபோல், பல தவறுகள் உள்ளன. அவற்றை, பாட வாரியான நிபுணர் குழு, ஆய்வு செய்து வருகிறது. ஒரு பாடத்திற்கான விடைகளை, மூன்று ஆசிரியர் குழு, ஆய்வு செய்கிறது. அதன்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வு விடைகளை ஆய்வு செய்யும் பணியில், 25 ஆசிரியர்களும், இரண்டாம் தாள் விடைகளை ஆய்வு செய்யும் பணியில், 25 ஆசிரியர்களும் ஈடுபட்டு உள்ளனர். இவர்களில், ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் அடங்குவர். ஆட்சேபனை விண்ணப்பங்கள் மீது, முழுமையாக ஆய்வு நடத்தி, முடிவு எடுக்கப்பட்டதும், இறுதி விடைகள் வெளியிடப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. பாடத்திட்டங்களின் அடிப்படையில், பல்வேறு ஆசிரியர்கள் எழுதிய நூல்களில் இருந்து, கேள்விகளும், விடைகளும் தயாரிக்கப்படுகின்றன. பாட வாரியாக, அனுபவம் வாய்ந்த நிபுணர் குழுக்கள் தான், கேள்விகளையும், விடைகளையும் தயாரிக்கின்றன. இதில், ஏதாவது சில கேள்விகளுக்கான விடைகள், தவறாக அமைவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்படி அமைந்திருந்தால், அதைப் பற்றி, தேர்வர்கள், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு, உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கும் போது, அது குறித்து ஆய்வு செய்து, தவறான விடைக்குரிய மதிப்பெண்களை வழங்குகிறது அல்லது சம்பந்தபட்ட கேள்வியை நீக்கி, மீதமுள்ள கேள்விகளுக்கு மட்டும் மதிப்பெண்களைக் கணக்கிட்டு, முடிவை வெளியிடுகிறது.ஆட்சேபனைகளுக்குப் பின், இறுதி விடைகள் தயாரிக்கப்பட்டு, மீண்டும், இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இதன்பிறகே, பணி நியமனத்திற்கான தேர்வுப் பட்டியல் தயாராகிறது. தேர்வர்கள் பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில், தற்காலிக விடை, இறுதி விடை என்ற முறையை, டி.ஆர்.பி., கையாள்கிறது. இதே முறையை, டி.என்.பி.எஸ்.சி.,யும் கடைப்பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக