மதுரை கே.புதூரை சேர்ந்த விஜயலட்சுமி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் காலியாக உள்ள 605 தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான தேர்வு ஜூலை 21ல் நடந்தது. தேர்வின் போது, ஏ, பி, சி, டி என நான்கு பிரிவு கேள்வித்தாள் வழங்கப்பட்டது. அதில் பி பட்டியலில் இருந்த 150 கேள்விகளில் 47 கேள்விகளில் அச்சுப்பிழை இருந்தது. இதனால்,கேள்வியின் அர்த்தம் மாறியிருந்தது. விடைகளிலும் பிழை காணப்பட்டது.கேள்வித்தாளில் இருந்த தவறு குறித்து தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்தேன். அவர் தவறை சரி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, பிழையுள்ள கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கவும், என்னை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யவும் உத்தரவிட வேண்டும்.
இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை, தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்
.
மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு:
தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ள நேரத்தில் இதுபோன்ற தவறுகளுடன் கேள்வித்தாள் தயாரித்ததை ஏற்க முடியாது. இதற்காக அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும். அதிக எண்ணிக்கையில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது கவனம் செலுத்தாமல் கேள்வித்தாள் தயாரித்தது தவறு. 47 கேள்விகளில் தவறு இருந்துள்ளது. இதை ஏற்க முடியாது. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் இயக்குனர் செப். 16ல் நேரில் ஆஜராக வேண்டும். அதுவரை தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக