செவ்வாய், 24 ஜூன், 2014

74 வயது மாணவர்:படிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை

படிப்பதற்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 74 வயது மாணவர் தமிழ்ச்செல்வன். ஏற்கெனவே 5 பட்டங்களைப் பெற்றுள்ள இவர், சி.ஏ. படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தேசிய திறந்தநிலைப் பள்ளியில் சேர்ந்து பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

தள்ளாத வயதிலும் கல்வி மீது தணியாத தாகம் கொண்ட பெரியவர் தமிழ்ச்செல்வனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ராமச்சந்திராபுரம். அந்த கிரா மத்தில் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க வசதி இருந்தது. பக்கத்து ஊருக்குச் சென்று உயர்நிலைப் பள்ளியில் சேர குடும்ப பொருளாதார சூழல் இடம் தராததால் 8-ம் வகுப்போடு நிறுத்திவிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆபீஸ் பையனாக சேர்ந்தார்.

படிப்பு மீது தணியாத தாகம்

வேலையில் சேர்ந்தாலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் அவரை விட்டுப் போகவில்லை. திறந்தநிலை கல்வி திட்டத்தில் நேரடி எம்.ஏ. படிப்புக்கு எந்த கல்வித் தகுதியும் தேவையில்லை (இப்போது இந்த திட்டம் நடை முறையில் இல்லை) என்பதை தெரிந்துகொண்டார். 8-ம் வகுப்பு முடித்து சுமார் 20 ஆண்டுகள் கழித்து 1973-ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் நேரடி எம்.ஏ. வரலாறு படிப்பில் சேர்ந்து வெற்றி பெற்றார். இதற்கிடையே, சென்னையில் கூட்டுறவு மேலாண்மை உயர் பட்டயப் படிப்பை முடித்ததால் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கணக்காளர் வேலை கிடைத்தது. 1989-ல் பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

வீட்டில் இருந்தவர், திடீரென சட்டம் படிக்க ஆசைப்பட்டார். 2004-ல் திருப்பதி டாக்டர் அம்பேத் கர் சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. (சட்டப் படிப்பு) ரெகுலர் படிப்பில் சேர்ந்து 2008-ல் வெற்றிகரமாக முடித்தார்.

அடுத்தடுத்து பட்டங்கள்

இளமையில் வறுமை காரணமாக படிக்க முடியாமல் போனதால், வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற லட்சிய வெறி அவர் மனதில் உருவானது. சட்டப் படிப்பை முடித்த கையோடு 2008-ல் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் எம்.காம். சேர்ந்து பட்டமும் பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தபால் மூலம் பி.ஜி.எல். பட்டமும் பெற்றார். அப்போதுதான் அவரது

ஆசை சி.ஏ. படிப்பு மீது திரும் பியது. 2010-ல் சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள தென்னிந்திய கணக்கு தணிக்கையாளர் பயிற்சி நிறுவனத்துக்கு சென்று விசாரித்தார். நேரடியாக பல்வேறு பட்டங்கள் பெற்றிருந்தாலும் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 முடிக்காததால் சி.ஏ. படிப்பில் சேர முடியாது என்று அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். மத்திய அரசு நடத்தும் தேசிய திறந்தநிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படிக்கலாம் என்றும் விருப்ப முறையில் தேர்வு செய்யக்கூடிய அந்தப் பாடங்கள் சி.ஏ. படிக்க மிகவும் உதவியாக இருக்கும் என்றும் ஒரு ஊழியர் தெரிவித்துள்ளார்.

12-ம் வகுப்பில் தேர்ச்சி

அந்த ஆண்டே தேசிய திறந்த நிலை பள்ளியில் சேர்ந்த தமிழ்ச்செல்வன், 10-ம் வகுப்பை முடித்துவிட்டு, 2012-ல் பிளஸ் 2 சேர்ந்தார். தமிழ், ஆங்கிலம், வரலாறு, வணிகவியல், கணக்குப் பதிவியல், உளவியல் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்தார். தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. கணிசமான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார் தமிழ்ச்செல்வன்.

இதையடுத்து, சி.ஏ. படிப்பில் சேருவதற்கான முயற்சியில் மும் முரமாக இறங்கியுள்ளார். அத் துடன் தமிழ்ப் பல்கலைக்கழகத் தில் எம்.எஸ்சி. (புவியியல்) படிக்கும் திட்டமும் அவர் மனதில் உள்ளது. படிப்பு மீது தீராத ஆர்வம் கொண்ட தமிழ்ச்செல்வன், தற்போது ஆந்திர மாநிலம் நகரி யில் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராகப் பணியாற்றி வருகிறார்.

"படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால்போதும். எந்த வயதிலும் படிக்கலாம். படிக்க வயது ஒரு தடையே இல்லை'' என உற்சாகத்துடன் கூறுகிறார் இந்த 74 வயது மாணவர் தமிழ்ச்செல்வன்.

சென்னையில் உள்ள தேசிய திறந்தநிலைப் பள்ளியின் மண்டல அலுவலகத்துக்கு திங்கள்கிழமை தனது பிளஸ் 2 மதிப்பெண் சான்றி தழை வாங்க வந்திருந்தார் பெரியவர் தமிழ்ச்செல்வன். அவருக்கு மண்டல இயக்குநர் பி.ரவி சான்றிதழை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

அந்த வளாகத்தில் உள்ள அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி மாணவர்களிடம் தனது கல்வி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் தமிழ்ச் செல்வன். அவரது பேச்சு மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது என்றார் பள்ளியின் தலைமை ஆசிரியர் வி.வைத்தியநாதன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக