Srm 8.3 பின்னை அமைப்பியல் திறனாய்வு
அமைப்பியலில் இருந்து அதன் பின்னால் தோன்றியது என்ற பொருளில் வழங்கப்படும் பின்னை அமைப்பியல்(Post - Structuralism) எழுபதுகளின் கடைசியில் மிகவும் செல்வாக்கோடு விளங்கிய திறனாய்வு முறையாகும். படைப்புக்கும் படைப்பாளிக்கும் இருந்த முதன்மை, அமைப்பியலில் வாசகம் - வாசகன் என்பவற்றிற்குக் கிடைத்தது. இக்கருத்தை ஒரு முக்கியமான பகுதியாகக் கொண்டு அமைப்பியலிலிருந்து பின்னை அமைப்பியல் உருவாயிற்று. படைப்பிலிருந்து நகர்ந்து பனுவலை(From work to text) நோக்கிய இயக்கம்தான் அமைப்பியலிலிருந்து பின்னை அமைப்பியல் தோன்ற முக்கியக் காரணம் ஆனது என்று ரோலண்ட் பர்த் கூறினார்.
இலக்கியம் வரையறைகளுக்குட்பட்ட பொருள்களைக் கொண்டு தன்னுள் முடிவு பெற்ற அமைப்பு என்ற பழைய கருத்தை மாற்றியது பின்னை அமைப்பியல். வரையறையற்ற, பன்முகத்தன்மை கொண்ட பொருட்கள் அல்லது பொருட்குறிகள்(Signifiers) இலக்கியத்தில் இருக்கின்றன; அப்பொருட்குறிகளை ஓர் ஒற்றை மையத்திலோ, சாராம்சத்திலோ கொண்டுவந்து நிறுத்திவிட முடியாது என்பதையே பின் அமைப்பியல் தொடக்கமாகக் கொண்டது(தி.சு. நடராசன், ப. 148).
இவ்வாறு பின்னை அமைப்பியலை நோக்கி நகர்ந்த ரோலண்ட் பர்த்தைத் தொடர்ந்து, தத்துவ அறிஞர்களாகக் கருதப்படும் ழாக் தெரிதா, மிகயீல் ஃபூக்கோ ஆகியோரும் உளவியல் அறிஞராகக் கருதப்படும் ழாக் லக்கான், பெண்ணியத் தத்துவவியல் அறிஞரான ஜுலியா கிறிஸ்தவா, காயத்ரி சக்கரவர்த்தி, ஸ்பைவக் ஆகியோரும், பால்தெமான், ஜொனாதன் கல்லர் முதலியோரும் பின்னை அமைப்பியலின் வளர்ச்சிக்குத் துணை புரிந்துள்ளனர்.
இவ்வாறு அமைப்பியலிலிருந்து வளர்ந்த பின்னை அமைப்பியல் முன்வைத்துள்ள திறனாய்வுக் கூறுகளை ஒன்றன்பின் ஒன்றாகக் காணலாம்.
8.3.2 ழாக் தெரிதாவும் சிதைவாக்கக் கொள்கையும்
பனுவலைப் பன்முக வாசிப்புகளுக்கு இட்டுச் செல்கின்ற முறையினையும் அதன் பண்புகளையும் கட்டவிழ்ப்பு மூலமாகப் பின்னை அமைப்பியல் பேசுகிறது.
சிதைவாக்கம் அல்லது கட்டவிழ்ப்பு(deconstruction) என்னும் கொள்கையை முன்மொழிந்தவர் தெரிதா. இது கொள்கை(Theory) அல்லது சித்தாந்தம்(Ideology) என்பதன் கட்டுமானத்தைச் சிதைக்கிறது. தெரிதாவின் கருத்துப்படி, சித்தாந்தங்கள் என்பவை உண்மை - பொய்மை, புறநிலை - புதைநிலை, சுயம் - சுயமற்றது, அறிவு - உணர்ச்சி ஆகியவற்றுக்கு இடையே திட்டவட்டமான எல்லைக் கோடுகள் போட முயல்கின்றன. இம்முயற்சிகள் மீமெய்ம்மையியல் சார்ந்தவை. இலக்கியம் மற்றும் தத்துவவியல் பனுவல்களின் கட்டுமானங்களைத் தளர்த்தி - அதாவது கட்டமைக்கப்பட்டதற்குரிய மையத்தையும், பகுதிகளையும் தளர்த்தி அவற்றின் உட்பொருளைக் கண்டால், எதிர்முனைகள் பற்றிய அமைப்பியலாரின் கண்ணோட்டம் தவறானது என்று அறியலாம். ஆண் - பெண் என்பதனை அமைப்பியல் எதிர்முனைகளாகக் கொள்ளும். அவற்றுக்குத் தனித்தனியான பண்புகளையும் மதிப்புகளையும் முன்வைக்கும். ஆனால் பின்னை அமைப்பியல் இதனை மறுக்கிறது. 'பெண்' 'ஆணி'லிருந்து முரண்பட்ட 'ஆள்' அல்ல; ஆனால் ஆணிலிருந்து வேறுபட்ட தோற்றம் கொண்டவள் என்ற முறையில் அவனோடு நெருங்கியவள். அவனுடைய இருப்பு அவளைச் சார்ந்து இருக்கிறது. எனவே எது அந்நியமாக இருக்கிறதோ அதுவே நெருக்கமாகவும் இருக்கிறது. இவ்வாறு பழைய கட்டுமானத்தைத் தளர்த்திக் கட்டவிழ்த்துப் புதிய பொருளை முன்வைக்கிறது பின்னை அமைப்பியல்(தி.சு. நடராசன், பக். 151-152).
இலக்கியத்தில் எதிர்முனைகள் அப்படியே இருப்பதில்லை; தலைகீழாகப் புரண்டுவிடுகின்றன. இதன் காரணமாக மையத்திலிருப்பவை மையமிழக்கின்றன. நுணுக்கமான சிறுசிறு விவரங்கள் விளிம்புகளுக்குத் துரத்தப்பட வேண்டியவையாகின்றன. சிலபோது சில சிறிய விவரங்கள் மையத்தை நோக்கி நகர்ந்து பனுவலின் கட்டுமானத்திற்குப் புதிய பொருள் தரத் தொடங்குகின்றன. இவ்விதம் வேறொரு பனுவல் உருவாகிறது. ஓர் அடிக்குறிப்பு, சொல்லாட்சி, படிமம், உவமை, அடை, கொளு போன்று பனுவலின் புறவெளியில், விளிம்பில் இருப்பவை பனுவலின் அமைப்பில் புதிய ஒளியைப் பாய்ச்சக்கூடும். திருக்குறளின் ஓர் அதிகாரத்திற்கு மணக்குடவர் 'மக்கட்பேறு' எனத் தலைப்பிடப் பரிமேலழகர் 'புதல்வரைப் பெறுதல்' எனத் தலைப்பிட்டார். தலைப்புப் பெயர்கள் பனுவலுக்குப் புறத்தே உள்ளவைதாம். என்றாலும் திருக்குறளுக்குப் பொருள் காண்பதில், 'புதல்வர்' என்ற சொல் ஆணாதிக்கச் சமூக உணர்வைக் காட்டிப் பனுவலை வேறு தளத்திற்குக் கொண்டு போகிறது(தி.சு. நடராசன், பக். 152-153).
கட்டவிழ்ப்பின் பயன் என்ன? உள்ளிருப்பது, வெளியிலிருப்பது என்ற வேறுபாடின்மையை அது உணர்த்துகிறது. பேராசிரியர் அ.அ. மணவாளன் ஓர் எடுத்துக்காட்டு மூலம் இதனை விளக்குகிறார்.
உள்ளி (வெங்காயம்) நல்ல கட்டமைப்புள்ளதொரு இயற்கைப் பொருள். இந்தக் கட்டமைப்பே உள்ளியா, அல்லது அதனுள்ளே வேறு ஒரு பொருள் உண்டா என்று ஒவ்வொரு மேலீடாக உரித்துக்கொண்டே சென்றால் இறுதியில் ஒன்றுமில்லாமல் முடியும். உரித்துக் கழிக்கப்பட்ட மேலீடுகளைத் தவிர உள்ளே தனியே ஒன்றும் இல்லை. கட்டமைப்பும் அதுவே; கட்டமைப்பின் உள்ளடக்கமும் அதுவே; புற அமைப்பும் அதுவே; அக அமைப்பும் அதுவே; அதாவது புறத்தே தெரியும் உள்ளி என்னும் ஓர் அமைப்பிற்கு அடிப்படையான தனியான உள் அமைப்பு என்று ஒன்றும் இல்லை என்பது கருத்து(அ.அ.மணவாளன், ப.84).
இவ்வாறு தெரிதாவின் சிந்தனையின் மையப்புள்ளியே இதுதான்; அதாவது ஒருமைப்பாட்டினைச் சிதைத்து வித்தியாசங்களைக் கண்டடைந்து அர்த்த வேறுபாடுகளின் முடிவிலா விளையாட்டில் பங்கெடுப்பதுதான்.
மொழியில் அர்த்தப்படுத்திக்கொள்ளும் செயற்பாங்கில் தாக்கம் ஏற்படுத்தும் பல்வேறு கூறுகளுக்கிடையே 'இடைவெளி விடுதல்'(Spacing) என்ற நிகழ்வும் ஏற்படுகிறது. எழுத்திலும் சரி; பேச்சிலும் சரி, இம்மாதிரியான இடைவெளி அல்லது மௌனத்தின் ஒரு சிறு துண்டுகூட அர்த்த வித்தியாசங்கள் ஏற்படுத்துவதில் முக்கியமான பங்கு வகிக்கின்றது. ஆக, மொழிக்குள் அர்த்தம் என்பது வெளிப்படையாக இருத்தல் மூலமாகவும் நிகழ்கிறது; இன்மையின் மூலமாகவும் நிகழ்கிறது. அதாவது ஒவ்வொரு சொல்லும் தன்னுடைய விளக்கத்திற்காக மற்றொரு சொல்லை எதிர்பார்க்கிறது. அவற்றுள் ஒவ்வொரு சொல்லும் இன்னொரு அர்த்தம் தரும் வேறு சில சொற்களையும் எதிர்பார்க்கிறது. இவ்வாறு சங்கிலித் தொடராக நீண்டு அர்த்தம் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே போகிறது. இவ்வாறு அலைபாயும் ஒத்தி வைத்தலில்தான் அர்த்தத்தின் இருப்பு உள்ளதே ஒழிய, அர்த்தத்துக்கான மையம் என ஒன்று எங்கும் கிடையாது(கோபிசந்த் நாரங், ப. 217).
8.3.3 ழாக் லக்கானும் சிதைவாக்கத் திறனாய்வும்
உளவியல் அறிஞரான ழாக் லக்கான் (1901-1981) தனக்கு முந்திய சிக்மண்ட் ஃபிராய்டினுடைய உளவியல் கோட்பாடுகளை மறுவாசிப்புக்குட்படுத்தி முன்வைத்த கருத்தாக்கங்கள் பின்னை அமைப்பியல் திறனாய்விற்குப் பெரும்பங்களிப்பாக அமைந்தன.
இவருடைய ஆய்வு, இலக்கியத் திறனாய்விற்கு மனிதத் தன்னிலை(Subject) என்ற புதிய கோட்பாட்டை வழங்கியது. இந்த 'மனிதத் தன்னிலை' மனிதக்குழந்தை, மொழியெனும் குறியீட்டு உலகிற்குள் நடமாடத் தொடங்கிய பிறகுதான் உருவாகிறது என்று மொழியை முதன்மைப்படுத்தி விளக்கினார். மேலும் தன்னைத் தனியாகவும், பிறரை மற்றவராகவும் அடையாளம் காண்பதற்குத் தேவையான சுயம்(Self) மொழி மூலமாகத்தான் குழந்தைக்குக் கிடைக்கிறது என விளக்கினார். குழந்தை, மனிதனாக வளர்வதற்கு அது பிறரை மற்றவர்களாக உணர வேண்டியது தேவையாகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் குழந்தை மனிதனாவது மொழி மூலமாகத்தான்.
இவ்வாறு உருவாகும் மனிதத் தன்னிலைக்கு எழும் ஆசைகள்(Wish) அல்லது விருப்பம் கூட மொழியின் சொல்லாடல் மூலமாகத்தான் உருவாகின்றன. இந்த ஆசைக்கும் நடப்பியலுக்கும் முரண் முற்றும்போது நனவிலி மனத்தின் ஆதிக்கம் உண்டாகிறது. இந்த நனவிலி மனம், ரோமண்ட் யாக்கப்சன் வருணிப்பது போல மொழியை உருவக அணிகளாகவும், ஆகு பெயர்களாகவும் மாற்றிப்பேசிக் கனவுகள், நகைச்சுவைத் துணுக்குகள், கலை இலக்கியங்கள் முதலியவற்றை உருவாக்கும் தளமாக அமைகிறது. அதனால்தான் லக்கான் ''நனவிலி, மொழியின் அமைப்பு போன்றது'' (The Unconscious is structured like language) என்ற ஒரு அழகான வாக்கியத்தை அமைக்கிறார். சசூரின் குறிப்பான் மற்றும் குறிப்பீடு என்ற சொல்லிணைகளைத் தனது நனவிலிக்கொள்கை அடிப்படையில் விளக்குகிறார். இதை விளக்கக் கீழே கண்டவாறு இரண்டு S குறி போடுகிறார். ஒன்று பெரியது; ஒன்று சிறியது.
இதன் மூலம் அவர் சொல்ல வருவது சசூரின் மொழிக்கோட்பாட்டுக்கு மாறான கருத்தாகும். குறிப்பான் மற்றும் குறிப்பீடு இரண்டும் ஒருமை கொண்டவை அல்ல. குறிப்பான்தான் உறுதியானது. அது கண்ணுக்குப் புலப்படக்கூடியது. ஆனால் அர்த்தம் அல்லது குறிப்பீடு நீர் போன்ற தன்மை உடையது; நிலையின்றி மிதந்து கொண்டிருப்பது. திடமடைந்து நிலைபெற முயலும் தனது முயற்சியைத் தானே தோற்கடித்துக் கொண்டிருப்பது. இவ்வாறு அர்த்தங்களின் அலைபாயும் தன்மை குறித்து மேலே நாம் பார்த்த ழாக் தெரிதா சொல்வதைத்தான் லக்கானும் உளவியல் அடிப்படையில் முன்மொழிகிறார்.
அர்த்தங்களின் இந்தத் தன்மையோடு மனிதத் தன்னிலைகளையும் ஒப்பிடுகிறார். 'மனிதத் தன்னிலை' தற்போக்கான ஒன்றல்ல; மாறாக, தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு செயல்பாடு. ஒவ்வொரு கணமும் புதிது புதிதாக உருவாகிற முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது; மாறுதலுக்கும் உட்பட்டது. இந்தச் சிந்தனையை அப்படியே இலக்கியப் பனுவலுக்கும் பொருத்தி, இலக்கியம் நிலைத்தன்மையுடையதன்று; உண்மையில் தன்னைத்தானே மறுத்துக்கொள்ளக்கூடிய அல்லது அழித்துக்கொள்ளக்கூடிய வாய்ப்புகளைத் தனக்குள் அதிகமாகக் கொண்டிருக்கும் என்கிறார். இவ்வாறு பின்னை அமைப்பியல் வலியுறுத்தும் மையமற்ற தன்மையினை - முழு ஒழுங்கிற்குள் அடங்காத தன்மையினை - உளவியல் அறிவு மூலம் விளக்கிக் காட்டிய பெருமை ழாக் லக்கானையே சாரும்.
8.3.4 மிகயீல் ஃபூக்கோவின் 'சொல்லாடல்' கருத்தாக்கம்
பின்னை அமைப்பியல் கருத்தாக்கத்தின் வரிசையில் வெளிப்படும் மற்றொரு கோட்பாடு 'சொல்லாடல்'(discourse) என்ற கருத்தாக்கம் ஆகும். அதிகார விளையாட்டில் பெரிய அளவில் பங்குபெறும் ஒன்று இந்தச் 'சொல்லாடல்'. இந்தச் சொல்லாடலைக் கையிலே வைத்திருக்கிற கூட்டத்தினர்தாம் மனிதர்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதைத் தீர்மானிக்கிற சக்தியாக இருக்கிறார்கள் என்கிறார் ஃபூக்கோ. பாரிசில் பிறந்த ஃபூக்கோ(1926-1984) எனும் தத்துவவாதி மனிதர்களின் அனைத்து அறிவும், ஆதிக்க விருப்பத்தினையே(Will to power) வெளிப்படுத்துகின்றன என்ற கருதுகோளை முன் வைத்தார். இந்த ஆதிக்க விருப்புறுதியை நோக்கிக் கட்டமைக்கப்படும் மொழியாடலைத்தான் அவர் சொல்லாடல்(discourse) என்றழைக்கிறார். சான்றாக, ஒரு சமூகத்தில் நிலவும் பைத்தியம், பாலியல் சார்ந்த குற்ற உணர்வுகள், சிறைச்சாலை முதலியவை குறித்த உணர்வுகள் ஆதிக்க சக்திகளின் நலத்திற்காக வடிவமைக்கப்பட்ட சொல்லாடல்கள் மூலமாக உருவாக்கப்பட்டவைதான் என்கிறார். இது போலவே, மருத்துவம், சட்டம், உளவியல் ஆகிய குறிப்பிட்ட அறிவுத்துறை சார்ந்த சொல்லாடல்களும் தன்னலம் சார்ந்த குறிப்பிட்ட சிலரின் நலனுக்காகத்தான் செயல் புரிகின்றன என்றார்.
நிகழ்வுகளை வகைப்படுத்தி ஒழுங்குபடுத்துகிற ஒரு வகையான வழிமுறைதான் சொல்லாடல். இந்தச் சொல்லாடல்கள் மூலம் அதிகார மையங்கள் உருவாகின்றன, அவை மனிதத் தன்னிலைகளைக் கட்டுப்படுத்துகின்றன. இந்தச் சொல்லாடல் கட்டமைக்கும் அதிகாரச் சட்டங்கள், மற்ற குரல்களின் ஓசையை வெளிவராமல் அடக்கிவிடுகின்றன; அது மட்டுமல்லாமல், பண்பாட்டு வடிவங்களாகி மனித மனத்திற்குள் பேசப்படாத ஆவணக்கிடங்குகளாக உறைந்து கிடந்து, மனிதர்களை அவர்கள் அறியாமலேயே அதிகாரத்திற்குப் பணிந்து நடக்கும்படி செய்கின்றன என நுட்பமாக விளக்குகிறார். இத்தகைய ஆற்றல் வாய்ந்த 'சொல்லாடலை' அமைப்பது மொழிதானே! எனவேதான் பின்னை அமைப்பியலில் ஃபூக்கோவின் அதிகாரக் கட்டமைப்புக் குறித்த இந்தச் சிந்தனை பெரிதும் போற்றப்படுகின்றது.
8.3.5 பால்தெமானும் சிதைவாக்கத் திறனாய்வும்
ழாக் தெரிதாவையும் சிதைவாக்கத் திறனாய்வையும் அமெரிக்காவின் இலக்கியத் தளத்தில் அறிமுகப்படுத்தியவர்களில் இன்றியமையாதவர் பால்தெமான் ஆவார். இலக்கியப் பனுவல்களின் வாசிப்புக் குறித்தும் திறனாய்வு குறித்தும் இவர் முன் வைத்த கருத்துகள் இலக்கியத் திறனாய்வைப் படைப்பாகக் கருத வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்தன. இவர் மொழியை வெறும் தகவல் கருவியாக மட்டும் பயன்படுத்த வாய்ப்பே இல்லை என்றார். ஏனென்றால் மொழி உருவகங்களாலும் அலங்கார அணிகளாலும் நிறைந்து கிடக்கிறது. எனவே இலக்கியத் திறனாய்வில்கூடப் பனுவலை வாசிப்பது என்பது எப்பொழுதும் தவறான வாசிப்பாகத்தான் இருக்கிறது என்கிறார். காரணம் மேற்கூறப்பட்ட மொழியின் உருவகக் குணம்தான். எனவே, திறனாய்வு என்பதும் ஓர் உருவகக் கதை போன்றதுதான். அதாவது ஒரு பனுவலைக் குறித்து எழுதப்பட்ட மற்றொரு பனுவல்தான். இவ்வாறு மொழியின் தன்மைகளை வேறுபட்ட ஒரு கோணத்தில் வெளிப்படுத்தினார் பால்தெமான்(கோபிசந்த் நாரங், ப. 225).
8.3.6 பின்னை அமைப்பியல் - சில விமர்சனக் குறிப்புகள்
பின்னை அமைப்பியல், பனுவலுக்குள் செயல்பட்டு மொழியின் தன்மைகளால் உள்ளே அமைந்து கிடக்கும் மர்மங்களைக் கைக்குள் பிடிக்க முயன்ற அமைப்பியலுக்கு நேர் எதிராகச் செயல்பட்டு, அப்படி ஒருபோதும் பிடிக்க முடியாது; அது அடைய முடியாத இலக்கு என்று கூறியது. மொழியின் அர்த்தம் அணுப் போல அலைபாய்ந்து கொண்டிருக்கும்போது அடைவதற்கான பொருள் என்பது என்னவாக இருக்க முடியும் என்ற வினாவை எழுப்பிச் சூனியவாதத்தை முன்மொழிபவர்களாக இவர்கள் கருதப்பட்டனர். இத்தகைய நிச்சயமற்ற தன்மை உருவாகும்போது, பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துகிறது பின்னை அமைப்பியல் என்று இதனை விமர்சித்தனர். ஆதிக்க சக்திகளின் விளையாட்டில் அமைந்துள்ள புதிர்களை வெட்ட வெளிச்சமாக்கும்போது இத்தகைய அதிர்வுகள் ஏற்படுவது இயல்பு. மையங்களைக் கட்டமைப்பதன் மூலம் அதிகாரத் தளங்கள் உருவாகின்றன என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்கிறது. இதன் மூலம் திறனாயும் மனிதப் பண்பை மேலும் வீரியமுள்ளதாக வளர்த்திருக்கிறது. அர்த்தம் என்பது ஆயிரம் அபிநயம் கொண்ட அழகி. அதனுடைய ஒரு முகபாவத்தைப் பிடித்து வைத்துக்கொண்டு அதுதான் எல்லாம் என்று சாதிக்கும் மையவாதத்தைத் தகர்த்திருக்கிறது இத்திறனாய்வு முறை. எல்லா அர்த்தங்களும் வந்து சேரும்படியாக, எல்லா வாசல்களையும் திறந்து வைக்க முயன்றிருக்கிறது. இந்தத் திறந்த மனப்பான்மை இருப்பதால்தான் வினாக்களை எழுப்பத் தெரிந்த அளவிற்கு, இத்திறனாய்வு அணுகுமுறைக்கு விடை சொல்லத் தெரியவில்லை என்ற விமர்சனமும் பிறந்தது. 'அப்படியும் இருக்கலாம்' என்று மிக அமைதியாக ஒத்துக் கொள்கிறது பின்னை அமைப்பியல். எதிலும் உறுதியற்ற தன்மையை மேற்கொள்வதுதான் பின்னை அமைப்பியல்.
8.4 அமைப்பியலுக்கும் பின்னை அமைப்பியலுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைக் கூறுகள்
மிகவும் நுட்பமும் சிக்கலும் வாய்ந்த அமைப்பியல் மற்றும் பின்னை அமைப்பியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் இரண்டிற்கும் பொதுவானவைகள்தாம். அவைகளைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்திக் கொள்ளலாம்.
1. அமைப்பியல் சிந்தனைகள் சசூரின் மொழி குறித்த புதிய பார்வையில் இருந்து கிளைத்து எழுந்தவை. அதற்கு முன்பு மொழி என்பது வெறும் தகவல் கருவி; வெறும் பெயர்ப்பட்டியல்; மனிதர்களின் தயவில் மொழி இருக்கிறது என்ற கருத்துகள் நிலவி வந்தன. சசூர் இவைகளைத் தலைகீழாக மாற்றினார். மொழி ஒரு ஒழுங்கமைப்பு(Sign - System); குறிகளால் ஆனது; தன்னிச்சையானது(Orbitrary).
2. குறிகளுக்கிடையே வித்தியாச உறவுகளால் அர்த்தம் உருவாக்கப்படுகின்றது.
3. குறி என்பது(Sign) குறிப்பானும் குறிப்பீடும் சேர்ந்து செயலாற்றும் ஓர் அமைப்பு.
4. மொழி, வடிவற்ற (அரூபமான) மொழிக்கிடங்கு(Langue) என்ற கூறினையும் வடிவுடைய (உருவமான) பேச்சு (Parole) என்ற கூறினையும் கொண்ட ஒரு ஒழுங்கமைப்பு.
5. முழுமையான அர்த்தமோ, அல்லது அதன் பகுதிகளோ மொழிக்குப் புறம்பாக வெளியே இல்லை. மேலும் இந்த அர்த்தங்கள் மொழியின் அமைப்புப்படிதான் நிச்சயிக்கப்படுகின்றன.
இவ்வாறு அமைப்பியல் ஆய்விற்கு அடிப்படைகளாக விளங்கும் இவைகளிடமிருந்து பின்னை அமைப்பியல் எந்தெந்த இடங்களில் விலகிச் செல்கிறது என்பதைக் காணலாம்.
1. மேலே கூறிய ஐந்து அடிப்படைகளில் மூன்றாவதாகக் கூறப்பட்ட அர்த்தம் என்பது குறிப்பான், குறிப்பீடுகளால் ஐக்கியப்பட்டுக்கிடக்கிறது என்ற சசூரின் கருதுகோளுக்கு மட்டுமே பின்னை அமைப்பியல் அறைகூவல் விடுத்தது. அதாவது, குறிப்பான், குறிப்பீடு, குறி என்ற முறையில் அர்த்தத்தை ஐக்கியப்படுத்த முடியாது. காரணம், அர்த்தங்கள் மையமழிந்தவை; நிலையற்றவை; ஒத்திவைப்புக்குள்ளாகின்றவை என விளக்கியது.
2. அர்த்தம் நிச்சயமற்றது என்ற நிலையில் இலக்கியப் பனுவல், தன்னிறைவு பெற்றதாக அமைய முடியாது. அது ஒரு புறவயப்பட்ட பொருளும் அன்று.
3. ழாக் லக்கானின் கருத்துப்படி மனிதத் தன்னிலையும் மையமிழந்தது. இதனை இலக்கியப் பனுவலுக்கும் பொருத்திப் பார்க்கிறது பின்னை அமைப்பியல். எழுத்தாளனுக்கு இலக்கியப் பனுவலின் மேல் தனிப்பட்ட உரிமை கிடையாது. படைப்பு வெளிவந்ததுமே படைப்பாளி அதில் இல்லாமல் போய்விடுகிறான். அப்பொழுது பனுவலிலிருந்து அர்த்தத்தை உற்பத்தி செய்து கொள்ளும் செயற்பாடு வாசகர்களால் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
எனவே, அர்த்த உற்பத்தியில் பனுவல், வாசகர், வாசிப்பு ஆகிய மூன்றுக்கும்தான் இடமுண்டு. படைப்பாளிக்கு இல்லை.
4. பனுவல் குறித்த எந்த வாசிப்பும் இறுதியானது அல்ல; எந்த விளக்கமும் இறுதியான விளக்கமும் அல்ல.
5. பனுவலுக்குக் கற்பிக்கப்பட்டுள்ள மரபான அர்த்தங்களுக்குள் வினைபுரியும் ஆதிக்க அரசியலை அடையாளங் கண்டு அதற்கு நேர்மாறான அர்த்தத்தைப் பனுவலுக்கு வழங்க முடியும் என்கிறது பின்னை அமைப்பியல். இத்தகைய இடத்தில் பின்னை அமைப்பியல் புரட்சிக்கான விதைகளைக் கொண்டுள்ளது.
6. அர்த்தங்கள் மையமிழந்தவை. அவற்றுக்கு எங்குமே முற்றுப்புள்ளி கிடையாது என்பதைப் பின்னை அமைப்பியல் வலியுறுத்துவதால் இதுதான் 'பின்னை அமைப்பியலுக்கான கவிதையியல்' என ஒன்றைச் சுட்டிக்கூற மறுத்துவிடுகிறது, பின்னை அமைப்பியல்.
8.5 தொகுப்புரை
மாணவர்களே! உருவவியல், அமைப்பியல், பின்னை அமைப்பியல் என்ற இந்த எட்டாவது பாடத்தில் இம்மூன்றிற்கும் உள்ள பொதுவான கூறுகளை முதலில் விளங்கிக் கொண்டோம். உருவவியல் என்றால் என்ன? என விளங்கிக் கொண்டீர்கள். உருவவியல் அணுகுமுறையின் பங்களிப்புக் குறித்து அறிந்தீர்கள். கதைப்பின்னல், இழைபொருள்(Motif) குறித்த உருவவியலார் கருத்துகளையும் ரோமண்ட் யாக்கப்சன் கூறும் 'ஆதிக்கம் மிக்க முனைப்புகள்' குறித்தும் தெளிவாக விளங்கிக்கொண்டீர்கள். மிகயீல் பக்தினின் கருத்துகள் உருவவியலை அமைப்பியல் நோக்கிச் செலுத்தத் தொடங்கின எனக் கண்டீர்கள்.
தமிழ்ச்சூழலில் எண்பதுகளில் விறுவிறுப்பாகப் பேசப்பட்டது அமைப்பியல் திறனாய்வு. தமிழவன் எழுதிய 'ஸ்ட்ரக்சுரலிசம்' என்னும் விரிவான நூல், இத்திறனாய்வை அறிமுகப்படுத்தியது. சசூரின், மொழி பற்றிய மொழிக்கிடங்கு, பேச்சுமொழி, குறிப்பான், குறிப்பீடு, இணை முரண்கள், தளப்பார்வை - காலப்பார்வை ஆகியவற்றைக் கொண்டு பனுவலும் அமைப்பியல் திறனாய்வும், பனுவலும் வாசிப்பும் பற்றிய தெளிவுகளைப் பெற்றீர்கள். தொடர்ந்து அமைப்பியலுக்கு விளாதிமிர் பிராப் வழங்கிய 31 செயற்கூறுகளைக் குறித்தும் விரிவாகப் பார்த்தோம்.
பின்னை அமைப்பியல் சிந்தனைகளில் ழாக் தெரிதாவின் எழுத்துகள் ஆற்றியுள்ள பங்கினை விரிவாக விளங்கிக்கொண்டோம். தொடர்ந்து உளவியல் அறிஞரான ழாக் லக்கான், பின்னை அமைப்பியலுக்கு வழங்கிய 'மனிதத் தன்னிலை' குறித்த சிந்தனைகளையும் மிகயீல் ஃபூக்கோ வழங்கிய 'சொல்லாடல்' குறித்த சிந்தனைகளையும், பால்தெமான் எவ்வாறு திறனாய்வுப் பனுவலையும், இலக்கியப் பனுவலையும் ஒன்றாகப் பார்க்கிறார் என்பது குறித்தும், பின்னை அமைப்பியல் மேல் எழுப்பப்படும் சில விமர்சனங்கள் குறித்தும் இப்பாடத்தின் மூலம் தெளிவாக விளங்கிக்கொண்டீர்கள்.
கீழ்க்காணும் தன்மதிப்பீடு வினாக்களுக்கான விடைகளை எழுதிப் பாருங்கள். உங்கள் விடைகளை விடை இணைப்புப் பகுதியில் உள்ள விடைகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
தன்மதிப்பீடு - 2 : வினாக்கள்
1.
பனுவல் பற்றி அமைப்பியல் திறனாய்வு முன்வைத்த கருத்து யாது?
விடை
2.
'எழுத்தாளன் இறந்துவிட்டான்' என அறிவித்த திறனாய்வாளரின் பெயர் என்ன?
விடை
3.
'இன்மை எல்லா இருப்புகளையும் கொண்டிருக்கிறது' எனும் தொடர் உணர்த்துவன யாவை?
விடை
4.
விளாதிமிர் பிராப் கூறும் கதை மாந்தர்களின் செயற்கூறுகள் எத்தனை?
விடை
5.
எழுத்து வடிவம், பேச்சு வடிவம் குறித்த தெரிதாவின் கோட்பாடு யாது?
விடை
6.
கட்டவிழ்ப்பில், பனுவலிலிருந்து வேறொரு பனுவல் உண்டாவது எவ்வாறு?
விடை
7.
ழாக் லக்கானின் தன்னிலை (Subject) எனும் கோட்பாட்டை விளக்குக.
விடை
8.
மனிதத் தன்னிலையை இலக்கியப் பனுவலுடன் இணைத்துக் காணும் லக்கானின் கருத்தைக் கூறுக.
விடை
9.
மையவாதத்தைப் பின்னை அமைப்பியல் தகர்ப்பதை விளக்குக.
விடை
10.
பின்னை அமைப்பியலுக்கு எதிரான விமர்சனங்கள் யாவை?
விடை
Sent from my iPad
Chandra Shekhar CR , Good explanation to understand Post -Structuralism, 'Humen Self' ,Humen Psychology, simple and an ideal description.
பதிலளிநீக்குவணக்கம். எனது பின் அமைப்பியல் கட்டுரையின் பல பகுதிகளை எனது பெயரில்லாமல் இங்கு வெளியிட்டுள்ளீர்கள். இது தவறு. எனது பெயரைக் குறிப்பிட்டு கட்டுரையை நீங்கள் பயன்படுத்துவதுதான் உழைப்பிற்கு நீங்கள் செய்யும் மரியாதை. ந. இரத்தினக்குமார், மதுரை. rathnastamil@gmail.com
பதிலளிநீக்கு