"தினமணி' நாளிதழும் சென்னைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்த
இருக்கும் தமிழ் இலக்கியத் திருவிழா வரும் ஜூன் 21, 22 தேதிகளில்
சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற
இருக்கிறது. பிரபல நாதஸ்வரக் கலைஞர் இஞ்சிக்குடி சுப்பிரமணியத்தின்
மங்கள இசையுடன் தொடங்கும் நிகழ்வை இந்தியக் குடியரசின் மேனாள்
தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார்.
அவ்வை நடராஜன் தலைமையில் "இன்றைய தேவையும் இலக்கியமும்', ஞான.ராஜசேகரன் தலைமையில் "காட்சி ஊடகத்தில் கலை, இலக்கியம்', மாலன் தலைமையில் "தகவல் ஊடகத்தில் தமிழ்', சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமையில் "மொழியும் பெயர்ப்பும்', சுதா சேஷய்யன் தலைமையில்
"சமயமும் தமிழும்', ம. இராசேந்திரன் தலைமையில் "வாசிப்பும் பழக்கமும்', இ.சுந்தரமூர்த்தி தலைமையில் "வேர்களைத் தேடி- இலக்கியம்', இரா. நாகசாமி தலைமையில் "வேர்களைத் தேடி- கலைகள்' என்று எட்டுத் தலைப்புகளிலான அமர்வுகளில் 24 அறிஞர்கள் தங்கள் கருத்துக்களைப்பதிவு செய்ய இருக்கிறார்கள்.
ஒவ்வொரு அமர்வுக்குப் பிறகும், ஒரு அரசியல் தலைவர், இம்மியும் அரசியல் கலப்பின்றி "என்னைச் செதுக்கிய இலக்கியம்' என்கிற தலைப்பில்அரை மணி நேரம் பேச இருக்கிறார். பழ. நெடுமாறன், திருச்சி சிவா,தமிழருவி மணியன், பழ. கருப்பையா, தொல். திருமாவளவன், வைகோ ஆகியோரின் இலக்கியச் சொற்பொழிவுகள்தான், தமிழ்இலக்கியத் திருவிழாவின் சிறப்பம்சங்களாகத் திகழப் போகின்றன.
இத்துடன் நின்று விடாமல் இரண்டு நாள்களும் மாலையில்கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.நமது பரதநாட்டியத்தை, சர்வதேச அரங்கில் எடுத்துச்
சென்று கொண்டிருக்கும் இளம் நாட்டியக் கலைஞர் "கலைமாமணி' ஜாகிர்
உசேன் குழுவினரின் "தசாவதாரம்' நாட்டிய நாடகம் முதல் நாளும்,
சொர்ணமால்யா குழுவினரின் "ராஜராஜன்' நாட்டிய நாடகம் இரண்டாவது நாளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. புத்தகப் பதிப்பாளர்கள் சங்கத்திடம், முன்னணிப் பதிப்பாளர்கள்
வெளியிட்டிருக்கும் இலக்கியத் தரமான படைப்புகளை மட்டும்,விழா அரங்கத்திற்கு வெளியே விற்பனை செய்ய வேண்டுகோள்விடுத்திருக்கிறோம்.
"நம்மால் அழிந்துவரும் தமிழ்மொழிக்கு ஆக்கத்தைச் சேர்க்க இயலுமா? தமிழ் ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக, கல்வி மொழியாகத் திகழ என்னதான் வழி? விளம்பரப் பலகைகளில் தமிழ் ஒளிரவும், செய்தித்தாள், தொலைக்காட்சி, திரைப்படங்களில் கொலை செய்யப்படும் தமிழைக் காக்கவும் என்ன செய்யப் போகிறோம்?' இவையெல்லாம் தமிழகத்தின்ஒவ்வொரு ஊரிலும் இயங்கி வரும் தமிழ் அமைப்புகளின், லட்சக்கணக்கான தமிழ் ஆர்வலர்களின் மனக்குமுறல். ஆனால், அவரவர்ஆங்காங்கே மனப்புழுக்கத்துக்கு வடிகால் கிடைக்காமல் புலம்பித் தீர்ப்பதால்என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது? தமிழை நேசிக்கும் ஆர்வலர்கள்ஆண்டுக்கு ஒரு முறையாவது கூடினால்தானே, ஒருவரை ஒருவர்
சந்தித்து அறிமுகமானால்தானே, தமிழைப் பாதுகாக்கும் முயற்சி ஆக்கமும் வீரியமும் பெறும்? தமிழை மீண்டும் தமிழர்களின் மன அரியணையில் ஏற்றி அமர்த்தும் முயற்சிதான் இலக்கியத் திருவிழாவே தவிர, தீர்மானம் போடவோ, போராட்டம் நடத்தவோ எடுக்கப்படும் முயற்சி அல்ல. இது ஏன் மாநாடாக அல்லாமல் திருவிழாவாக நடத்தப்படுகிறது என்றால்,
திருவிழாக் கூட்டத்தைப் போலக் கூடிப் பேசி, ஒருவருக்கொருவர் அறிமுகமாகி, அதன்மூலம் ஆக்கபூர்வ சிந்தனைக்கு வழிகோலவும், தமிழைப் பேணவும், பாதுகாக்கவும் ஒன்றுபட்ட முயற்சிக்கு வித்திடவும்தான். சிதம்பரம் ஆருத்ரா தரிசனம், மதுரை சித்திரைத் திருவிழா,திருப்பதி பிரம்மோற்சவம், ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி, பழனி தைப்பூசம், வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா, நாகூர் கந்தூரி விழா என்று இறையுணர்வாளர்கள் பெருந்திரளாகக் கூடி மகிழ்வதுபோல, தமிழன்பர்கள் ஆண்டுதோறும் ஒன்றுகூடிக்
களிக்கும் நிகழ்வாக "தினமணி' நாளிதழின் தமிழ் இலக்கியத்திருவிழா அமைய வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். ஆக்கபூர்வமான, மொழி வளர்ச்சிக்கான விவாதங்களை மையப்படுத்தி, தமிழ் உணர்வாளர்களையும், வாசக அன்பர்களையும், அறிஞர்களையும் ஓரிடத்தில் ஒருங்கிணைக்கும் முயற்சி இது. ஊர் கூடித் தேர் இழுப்பதுபோல, தமிழை நேசிக்கும் அன்பர்களும்,அமைப்புகளும், படைப்பாளிகளும், அறிஞர்களும் ஒன்றுகூடித்
தமிழுக்கு விழா எடுத்து மகிழ்வோம்.
வாருங்கள்.... தமிழால் இணைவோம்! தமிழுக்காக இணைவோம்!!
"தினமணி'
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக