வெள்ளி, 27 ஜூன், 2014

மனிதநேயத்துடன் மருத்துவம்


பணம், காசு என அலையும் இந்த காலத்திலும் பணத்தை ஒரு பொருட் டாகப் பார்க்காமல் கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு மனிதநேயத்துடன் மருத்துவம் பார்த்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த டாக்டர் வி. ராமமூர்த்தி.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் வசித்து வரும் இவருக்கு சொந்த ஊர் முடிகொண்டான் கிராமம். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது வயது 79. மயிலாடுதுறையில் அதே இடத்தில் 1959-ம் ஆண்டு முதல் மருத்துவம் பார்த்துவரும் இவரை தெரியாதவர்கள் அந்த ஊரில் யாரும் இருக்க முடியாது.

இன்றும் அதே துடிப்புடனும் அக்கறையுடனும் சிகிச்சைக்கு வருபவர்களை அணுகி மருத்துவம் செய்கிறார். சிகிச்சை பெற கட்டணமாக இவ்வளவு தர வேண்டுமென இவர் கேட்பதில்லை. அவர் பணத்தை கைநீட்டியும் வாங்குவதில்லை. தங்களால் எவ்வளவு முடியுமோ (ரூ.5 அல்லது ரூ.10 தான்) அவரது மேஜை மீது வைத்துச் செல்லலாம். காசு இல்லை என்றாலும், போயிட்டு வா என தோளைத் தட்டி அனுப்பி விடுவார். இவர் எழுதும் மருந்துகளும் ரூ.20 அல்லது ரூ.30-க்குள்தான் இருக்கும்.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்தால் நீ எந்த ஊரு, என்ன படிக்கிற, எங்க தங்கியிருக்கிற என வாஞ்சையோடு விசாரித்து விட்டு, ஊருக்கு செல்ல செலவுக்கு பணம் வைத்திருக்கியா, இந்தா இதை வைச்சுக்கோ என ரூ.10 அல்லது ரூ.20 கொடுத்து அனுப்புவார் டாக்டர் ராமமூர்த்தி.

எப்படி உங்களால் இது முடிகிறது என அவரிடமே கேட்டதற்கு அவர்  கூறியது:

சென்னை மருத்துவக் கல்லூரியில்தான் மருத்துவம் படித்தேன். அங்கு பேராசிரியர்களாக இருந்தவர்கள் மருத்துவத் துறையில் மிகப்பெரிய ஜாம்பவான்கள். இவர்கள் யாரும் தனியாக கிளினிக் வைத்து பணம் சம்பாதித்தவர்கள் அல்லர். இவர்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்ததெல்லாம் மருத்துவத்தை மனிதாபிமான அடிப்படையில் செய்யுங்கள், பணத்துக்காக செய்யக் கூடாது என்பதுதான்.

ஏழைகளிடம் காசு வாங்காதே, ஒத்தாசையாக இரு என 45 ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சி மகா பெரியவர் கூறினார். அதை இன்றும் கடைப்பிடித்து வருகிறேன்.

என்னிடம் வரும் மக்கள் பாசத்துடன் வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்கிறேன். மருத்துவத் தொழில் இன்று அப்படி இல்லை. பணம் கொடுத்துதான் மருத்துவராக வேண்டியிருக்கிறது. அந்த பணத்தை திரும்ப சம்பாதிக்க மக்களிடம் பணம் அதிகமாக வாங்க வேண்டியிருக்கிறது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 20 ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது பல்வேறு பணிகளுக்காக ஏராளமானோருக்கு லட்சக்கணக்கான கையொப்பங்களை (அட்டெஸ்டெட்) இலவசமாகவே போட்டிருக்கிறேன்.

நான் பெற்ற பெரும் பாக்கியமே எனது மனைவி நீலாதான். எனது மனிதாபிமான சேவைக்கு எனது மனைவியும் முக்கிய காரணம். திருமணமானதிலிருந்து இதுவரையில் பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென அவர் கேட்டதில்லை. அதனால்தான் மருத்துவத் தொழிலை சேவையாக செய்ய முடிகிறது. நான் சொத்துகள் எதுவும் சேர்க்கவில்லை, ஆனால் ஏழை மக்களின் பாசத்தைத்தான் சொத்தாக சேர்த்துள்ளேன்.

எனது மகன் சீனிவாசன் மருத்துவம் படித்துவிட்டு சென்னையில் சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறையிலிருந்து வருகிறோம் என யார் சென்றாலும், அவர்கள் மீது தனி அக்கறை எடுத்து மருத்துவம் செய்கிறார். பலரும் இங்கு வந்து அதை என்னிடம் சொல்லும்போது எனக்கு பெருமையாக இருக்கும். அவன் கார் வாங்கியுள்ளான், பங்களா வாங்கியுள்ளான் என்பதில் எனக்கு திருப்தி இல்லை. அவனும் ஏழைகளுக்கு உதவுகிறான் என்பதில்தான் எனக்கு திருப்தி என்றார் மனிதநேய 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக