வெள்ளி, 27 ஜூன், 2014

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தம் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்ப்பது வெட்கக்கேடு!


எளிய மக்களின் வாழ்வை அவர்களுடைய மொழியிலேயே தந்து சமகாலத் தமிழுக்குச் செழுமை சேர்த்த படைப்பாளிகளில் முக்கியமானவர் இமையம். 'கோவேறு கழுதைகள்', 'செடல்', 'மண்பாரம்' எனத் தன்னுடைய படைப்புகள் வெளியாகும் போதெல்லாம் தமிழ் இலக்கிய உலகில் அதிர்வுகளை உருவாக்குபவர் இப்போது பொதுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி மேடைகளில் பேசி அதிரவைக்கிறார்.

அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் இமையம் கல்வித் துறைக்கு உள்ளிருந்தே கொடுக்கும் கலகக் குரல் ஆசிரியர்களோடு, கல்வித் துறையோடு, பெற்றோர்களோடு என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியுடனும் உரையாடுகிறது.

அரசுப் பள்ளிகளின் தொடர் வீழ்ச்சிக்கு எது அடிப்படைக் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

ஆசிரியர்களோட பொறுப்பற்றத்தனம், அதிகாரி களோட அக்கறையின்மை, தனியார் பள்ளியில, அதுவும் ஆங்கிலத்தில படிச்சாதான் வேலை கிடைக்கும்கிற பெற்றோர்களோட மூடநம்பிக்கை எல்லாமும்தான் இதுக்குக் காரணம். ரொம்ப அடிப் படையா சொல்லணும்னா, அரசுப் பள்ளின்னா தரமற்றது, அரசு மருத்துவமனைன்னா தரமற்றது, அரசு நிர்வாகம்னாலே தரம் கெட்டது அப்படிங்கிற எண்ணம் சமூக உளவியலா இங்கே உருவாயிடுச்சு.

அப்படியென்றால் அரசு முக்கியமான காரணம் இல்லை என்கிறீர்களா?

நிச்சயமா அரசுதான் முக்கியமான காரணம். கல்வி அமைச்சர் பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்தார்ங்கிற செய்தியைப் படிச்சு எத்தனை வருஷங்கள் இருக்கும் ஞாபகப்படுத்திப்பாருங்க. அட, தொடக்கக் கல்வி இயக்குநர், அரசு செயலர்கள்கூட பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வுக்குப் போறதில்லையே? ஆசிரியர்களுக்கு பய உணர்வு இல்லை. அதிகாரிகளுக்கும்தான். அரசு எதுவும் செய்யாது, நிர்வாகம் எதுவும் செய்யாதுங்கிற நம்பிக்கை. அதுதானே உண்மையும்?

தனியார் பள்ளிகள் பெருக்கத்துக்கு எது முக்கியக் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

ஆங்கில மோகம்.

ஆங்கில மோகம் மட்டும்தானா காரணம்? தனியார் பள்ளிகளைப் பெற்றோர்கள் சும்மா நாடிப்போக வில்லையே? ஓரளவுக்கேனும் அங்கு உத்தரவாதப் படுத்தப்படுகிறது இல்லையா?

ஆங்கில மோகம் முக்கியமான காரணம். கல்வியில மட்டும்தான் மோகம் இருக்குன்னு சொல்ல முடியாது. நம்மோட நடை, உடை, பாவனை, பேச்சு, செயல், வாழ்க்கைமுறை எல்லாத்திலுமே ஆங்கில மோகம் இருக்கு. தன்னோட குழந்தை தாய்மொழியில பேசறத விரும்பாத தாய்மார்கள் இன்னைக்குப் பெருகிட்டாங்கங்குறதுதான் உண்மை. கொடுமை என்னன்னா தனியார் பள்ளிகள்ல படிக்குற புள்ளைக்கு ஆங்கிலமும் தெரியலை; தமிழும் தெரியலை.

உலகத் தரமான கல்வியைக் கொடுக்குறோம்னு சொல்ற தனியார் பள்ளிகள்ல எத்தனை பேருக்கு முறையா ஆங்கிலத்தில பேச தெரியும்? ஒரு கடிதம் எழுதத் தெரியும்? மொதல்ல உலகத் தரம்னு சொல்லி விளம்பரப்படுத்துறாங்களே அப்படின்னு ஒண்ணு இருக்கா? எல்லாம் கல்வியைத் தவறான பொருள்ல புரிஞ்சுகிட்டதால ஏற்பட்ட விளைவு.

ஆனால், நடைமுறையில் ஆங்கிலத்துக்கு என்று சமூகத்தில் ஒரு மதிப்பு இருக்கத்தானே செய்கிறது?

சர்வதேச அளவுல கல்வியாளர்கள், உளவியல் அறிஞர்கள் எல்லாருமே தாய்மொழி வழிக்கல்விதான் சிறந்ததுன்னு சொல்றாங்க. ஒரு விஷயத்தைப் பிற மொழியில படிச்சிப் புரிஞ்சிக்கிறதைவிட தாய்மொழியிலதான் எளிதா புரிஞ்சிக்க முடியும்ன்னு சொல்றாங்க. அது அறிவியல்பூர்வமான உண்மையுங்கூட. ஆங்கிலம் நமக்கு எதிரியில்லை. அரசுப் பள்ளிகள்ல படிக்குற புள்ளைங்க ஆங்கிலம் பேசுறது இல்லையா என்ன? ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும்.

ஆங்கிலம் ஒரு மொழி; அவ்வளவுதான். அதுவே, அறிவு இல்லை. எந்தச் சமூகத்திலேயும் திறமைக்குத்தான் முன்னுரிமை. பேசுற மொழிக்கு இல்லை. ஆங்கிலம் தெரிஞ்சாலே நாம அறிவாளி, நமக்கு எல்லாம் கிடைக்கும்னு நாம நம்புறது நம்மளோட கற்பனை. காலனியாதிக்க அடிமை மனோபாவத்தோட வெளிப்பாடு.

உலகமயமாக்கச் சூழலில் ஆங்கிலம் இல்லா விட்டால் பிழைக்க முடியாது என்ற கூற்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறதே?

ஆங்கிலம் தெரிஞ்சாதான் உலகத்துல பிழைக்க முடியும்ன்னு நம்புற மாதிரி முட்டாள்தனம் வேறு எதுவும் கிடையாது. இன்னைக்கு உலகத்தில தொழில்நுட்பத்திலேயும் பொருளாதாரத்துலேயும் மேலோங்கி இருக்கிற ஜப்பான்ல, சீனாவில இப்படிச் சொன்னீங்கன்னா சிரிப்பாங்க. அங்க எல்லாமே தாய்மொழியிலதான் படிப்பு. இந்தியாவுல தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் அப்படியொரு பொய்யைப் பரப்புறாங்க. காரணம், அதுலதான் அவுங்க பிழைப்பு இருக்கு!

அப்படியென்றால், எது உண்மையான கல்வி என்று சொல்கிறீர்கள்?

தெரிஞ்சுக்குறது. சுய சிந்தனையை வளர்த்துக் குறது, சமூகத்தைப் புரிஞ்சிக்குறது, சமூகத்தோட இணைஞ்சு வாழக் கத்துக்குறது, அறிவியல் மனப்பான்மையை, வரலாற்று மனப்பான்மையை வளர்த்துக்குறது, இயற்கையைப் புரிஞ்சுக்குறது, இயற்கையோட தன்மைக்கேற்ப வாழ, பழகக் கத்துக்குறது... இதெல்லாம்தான் கல்வி.

எந்த வகையில் சமூகத்தைப் படிக்க அரசுப் பள்ளிகள் முக்கியம் என்கிறீர்கள்?

ஒரு குழந்தைக்கு இடம் எவ்வளவு முக்கியம்னு உளவியலாளர்கள்கிட்ட கேளுங்க சொல்வாங்க. ஒவ்வொரு அரசுப் பள்ளிக்கூடமும் குறைஞ்சது, பத்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைஞ்சிருக்கு. இட வசதி, வெளிச்சம், காற்றோட்டம் உள்ள இடமா இருக்கு. கல்வி ஒரு உரையாடல். அரசுப் பள்ளிக்கூடங்கள்லதான் மாணவருக்கும் ஆசிரியருக்குமான உரையாடல் சாத்தியம். சமூகங்கிறது பல முகங்களை, பல குரல்களை உள்ளடக்குனது இல்லையா, அப்படிப் பல முகங்களையும் குரல்களையும் அரசுப் பள்ளிகள்லதானே பார்க்க, கேட்க முடியுது?

அரசுப் பள்ளிக்கூடங்கள்ல பிரச்சினைகள் இல்லாமல் இல்ல. ஆனா, தனியார் பள்ளிகளைவிட மோசம் இல்லை. அரசுப் பள்ளிக்கூடங்களோட ஆக்கபூர்வமான செயல்பாட்டுக்கு உதாரணம்தானே அப்துல் கலாமும், மயில்சாமி அண்ணாதுரையும்? அட, நீங்களும் நானும் எங்கே படிச்சு வந்திருக்கோம்?

நீங்கள் இவ்வளவு பேசுகிறீர்கள். ஆனால், ஓர் ஆய்வு சொல்கிறது… அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளில் 70% பேர் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர் என்று. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

நீங்க சொல்றது 100% உண்மை. பெரிய வெட்கக்கேடு இது. தன்னையே கேவலப்படுத் திக்கிறோம்ங்கிற அறிவுகூட இல்லாமதான் இந்த வேலையைச் செய்யுறாங்க. மொதல்ல அரசுப் பள்ளியைப் புறக்கணிச்சது, தரமில்லைன்னு சொன்னது, தனியார் பள்ளிகளை உருவாக்குனது, எல்லாமே அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான். அரசுப் பள்ளி வீழ்ச்சிக்கு ஆசிரியர் சமூகம் முக்கியமான காரணம்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இந்தப் போக்குக்கு அப்படி என்னதான் காரணம்? ஒருவேளை உங்களுக்கு வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கின்றனவா?

ஆமாம், நானும் ஆசிரியர்தான்; என் மனைவியும் ஆசிரியர்தான். ரெண்டு பேரும் சேர்ந்து மாசம் லட்ச ரூபாய் சம்பாதிக்கிறோம். நூறு ரூபாய்க்கு இந்த நாட்டுல மக்கள் எவ்வளவு கஷ்டப்படறாங்கன்னு நேர்ல போய்ப் பார்த்தோம்னா நாங்கள்லாம் பிரச் சினைங்கிற வார்த்தையையே உச்சரிக்கக் கூடாது. ஆசிரியர்களுக்கு அப்படி என்ன பிரச்சினை? உண்மையைச் சொல்லணும்னா அதிக சம்பளம் வர்றது பெரிய பிரச்சினை.

மனை வாங்குறது, வீடு கட்டுறது, வாடகைக்கு விடறது, வட்டிக்கு விடறது, நாட்டுலேயே எது சிறந்த பள்ளி, கல்லூரின்னு விளம்பரம் வருதோ அதுல கொண்டுபோயி தங்களோட பிள்ளைகளைச் சேர்க்குறது, மேலும்மேலும் வருமானத்தைப் பெருக்கிக்க யோசிக்குறது இதெல்லாம் அடுத்தடுத்த பிரச்சினைகள். நான் கேட்டுக்கிறதெல்லாம் ஆசிரியப் பணியைக் கடவுளுக்கு அடுத்த நிலையில வைச்சுப் பார்த்தெல் லாம் நாம நடந்துக்க வேணாம், வாங்குற சம்பளத்துக்காகவாவது உண்மையா உழைங்கங்குறதுதான்.

சரி, அரசுப் பள்ளிகளை எப்படி மீட்டெடுப்பது?

அரசுப் பள்ளிகள மீட்டெடுக்க முடியாதுன்னு ஒண்ணும் இல்லை. அரசு நெனச்சா ஒரு வருஷத் துல சரி செய்ய முடியும். மக்களாலேயும் மீட்க முடியும். அரசுப் பள்ளி பொதுச் சொத்து. அதைப் பாதுகாக்கிறது நம்ம ஒவ்வொருத்தரோட கடமை; இலவசமாக் கல்வி கெடைக்கும்போது-ஏன் பணம் கொடுத்துவாங்கணுங்கிற எண்ணம் உருவாகணும். ஆசிரியர்களாலேயும் முடியும். இன்னைக்கும் ஆசிரியர் தொழிலை ஒரு தவமா செய்யுறவங்க இருக்காங்க. அவங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. இந்த அமைப்பை அழிஞ்சுட விட மாட்டாங்க.

சரி, அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ… படிப்புதான் சோறு போடும் என்ற எண்ணத்தையும் கல்வியைப் பிழைப்புக்கான கருவியாகப் பார்க்கும் மனோபாவத்தையும் எப்படி மாற்றுவது?

எல்லாத் தொழிலுமே முக்கியம்தான். மருத்துவர் ஒரு சமூகத்தில் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு விவசாயி முக்கியம். ஆனா, இது ஏன் நமக்கு உறைக்கலை? மருத்துவரும் பொறியிய லாளரும் மட்டும் ஒரு சமூகத்தில் இருந்தா போதுமா? அவுங்க சோறு எப்பிடிச் சாப்பிடுவாங்க? தொழில்ல ஏற்றத்தாழ்வு இல்லங்கிற எண்ணம் வந்தா-நமக்கு படிப்பு மட்டுமே சோறும் போடும்ங்கிற எண்ணம் வராது. கல்விங்குறது அறிவை விருத்திப்

பண்ணிக்குறது. எந்தத் தொழிலுக்கு நாம போனாலும் நாம படிக்குறது ஏதோ ஒரு வகையில உதவத்தான் செய்யும். அதுக்காகப் படிப்பைப் பிழைப்புக் கருவியா மாத்திடுறது பிள்ளைகளைப் பணம் சம்பாதிக்குற இயந்திரமாக்குறதுக்குச் சமம். இந்த எண்ணத்தை மாத்துற வேலையையும் நாம பள்ளிக்கூடத்துலேர்ந்துதான் ஆரம்பிக்கணும்!

The Hindu 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக