வெள்ளி, 27 ஜூன், 2014

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

பெருமை வாய்ந்த மாணவர்களை உருவாக்கிய மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

தமிழ் இலக்கிய வரலாற்றில் 18,19-ம் நூற்றாண்டுகளில் எண்ணற்ற தமிழ்ச் சான்றோர் தோன்றினர். இந்த நூற்றாண்டுகளைச் சிற்றிலக்கியக் காலம் என்றும் கூறுவர். இந்தக் காலத்தில் திருத்தலங்களின் வரலாறு கூறும் தல புராணங்கள் பெருமளவில் பாடப்பெற்றன. அக்காலகட்டத்தில் தலபுராணங்களைப் பாடிய பெருமை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களையே சாரும்.

பல பெரியோர்களின் பெருமை, அவர்களிடம் கல்வி கற்ற மாணவர் களாலும், மாணவர்களின் பெருமை அவர்களுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர் களாலும் உலகுக்குத் தெரியவரும். அத்தகைய பெருமை வாய்ந்த மாணவர்களை உருவாக்கிய சிறப்பு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு மட்டுமே வாய்த்தது. வித்துவான் தியாகராசச் செட்டியார், உ.வே. சாமிநாதய்யர் போன்ற தலைசிறந்த மாணவர்கள் அவருக்குக் கிடைத்தனர்.

1815-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளியில் பிள்ளையவர்கள் பிறந்தார். தன் தந்தையாரைக் குருவாகக் கொண்டு ஆரம்பக் கல்வியைக் கற்கத் துவங்கிய அவர், சான்றோர் முதல் சாதாரணமானவர் வரை என யாரிடமெல்லாம் கற்க வேண்டியன உள்ளனவோ அவர்களிடமெல்லாம் கைப்பொருள் கொடுத்துக் கல்வி பயின்று மகாவித்துவான் ஆனார். சிவபக்தி, வெகுளாமை, விருந்தோம்பும் பண்பு, சாதி, மதம் நோக்காத உயர்ந்த நெஞ்சம், கற்றாரைப் போற்றும் பெருந்திறம், ஆன்மீகக் கற்பனை மிக்க கவிதைகளை விரைந்தியற்றும் பேராற்றல் இத்தகைய பெருமைகளைப் பெற்றிருந்த பேராளர் அவர். தம்மிடம் வாய்த்திருந்த கல்வித் திறனைச் சாதி மதம் பாராது எவ்விதக் கைமாறும் பெற்றுக்கொள்ளாமல் வந்து சேர்ந்த மாணவர்களச் சொந்த மக்களைப் போலக் வாரி வழங்கிய திறம் என அவரது பெருமைகள் பல. அவரது மாணவர் உ.வே.சா., அவரது பெயரை எழுத்தால் எழுதுவதற்கு அஞ்சுவதாகக் குறிப்பிடுவார். மாணாக்கர்களிடம் அத்தகைய குருபக்தியை ஏற்படுத்தியவர் மகாவித்துவான். தம்மை நாடி வந்த அனைத்து மாணவர்களுக்கும் உணவளித்துத் தங்குமிடமும் அளித்துக் கல்வி புகட்டியவர் அவர். அவர் இயற்றிய புராணங்கள் 22. பிற காப்பியங்கள் ஆறு. பிள்ளைத்தமிழ் முதலியன 45. எண்ணிறந்த தனிப்புராணங்களும் இயற்றியுள்ளார்.

நீதிபதி வேதநாயகம் பிள்ளையின் பால் இவர் பெருமதிப்பு கொண்டிருந்தார். அவரைப் பாராட்டிக் குளத்துக்கோவை என்னும் நூல் இயற்றியுள்ளார். தகுதியில்லாத யாரையும் புகழ்ந்து பாடும் பழக்கத்தைக் கொண்டிராத மகாவித்துவான் பாடிய பாடல் அவரது சமயப் பொறைக்கும் சமயம் கடந்த சிறந்த நட்புக்கும் சிறந்த சான்றாகும். பிறருக்குக் கல்வி கற்பிப்பதில் வள்ளலாக வாழ்ந்த அந்தப் பெருந்தகையின் வாழ்வு இன்றைய ஆசிரியப் பெருமக்களுக்ககெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாகும்.



Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக