வியாழன், 30 ஏப்ரல், 2015

TRB PG TAMIL:நக்கீரர்


கடைச்சங்கத்தில் இருந்த தமிழ்ப் புலவர்கள் நாற்பத்தொன்பது பேர்களும் பெரும் புலமை பெற்றவர்கள். அவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கியவர் நக்கீரர் என்றால் அவரது பெருமை சாமான்யமானதா? கீரம் என்றால் சொல் என்று பொருள்! நக்கீரர் என்றால் நல்ல

இனிய சொற்களையுடையவர்.

நக்கீரர் ஆழ்ந்த புலமையோடு அஞ்சா நெஞ்சமும் படைத்தவர். சிவன் பாடிய பாடலிலேயே குற்றம் கண்டு அவர் தம் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டியும் "குற்றம் குற்றமே' என்று அஞ்சாத நெஞ்சுடன் சிவனிடமே வாதாடியவர். இவ்வளவு அரும் புகழ்வாய்ந்த நக்கீரர் தனது புகழ்பெற்ற "திருமுருகாற்றுப்படை' நூலைப் படைத்ததற்கு ஒரு வரலாறு உண்டு.

"கற்கிமுகி' என்று ஒரு பெண்பூதம். சிவபெருமானிடம் அளவற்ற பக்தி உண்டு அந்த பூதத்திற்கு. என்னமாதிரி பக்தி தெரியுமா? சிவபூஜை செய்பவர்கள் அதைச் சரியாகக் கவனத்துடன் செய்யாமல் முறை வழுவிச் செய்தால் உடனே அது அவர்களைத் தூரத்தில் கொண்டுபோய் ஒரு குகைக்குள் அடைத்துப் போட்டு விடும்!

ஆனால் அவர்களுக்கு வேளா வேளைக்கு நல்ல சத்துள்ள சாப்பாடு போட்டு விடும்! அதனால் குகைக்குள் அடைபட்டு கிடக்கும் ஆசாமிகளுக்கு பெரும் மகிழ்ச்சி! எந்த வேலையும் செய்யாமல் சும்மா கிடப்பவர்களுக்கு யார் நேரம் தவறாமல் நல்ல அருமையான சாப்பாடு போட்டு வளர்ப்பார்கள்? ஆனால் அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. இந்தப் பூதம் இவர்களுக்குச் சத்தான சாப்பாடு போட்டு இவர்களைக் கொழுக்க வைப்பது எதற்குத் தெரியுமா? சரியாக 1000 பேர் குகைக்குள் கைதிகளாய் வந்து விட்டால் ஒரு சுபயோக சுப தினத்தில் அந்த ஆயிரம் பேரையும் ஒரேயடியாய் விழுங்கித் தன் பசியைத் தீர்த்துக் கொள்ளும்!

அப்போது குகைக் கைதிகளாய் இருந்தவர்கள் 999 பேர். இன்னும் ஒரு நபர் கிடைத்து விட்டால் 1000 பேராகி விடும். அந்த ஒருவருக்காக அந்தப் பூதம் எங்கும் அலைந்து திரிந்து தேடிக் கொண்டிருந்தது.

அப்போது நக்கீரர் தலயாத்திரை மேற்கொண்டு ஒவ்வொரு தலமாக சிவனைத் தரிசனம் செய்து கொண்டு வந்தார்.

ஒரு நாள் ஓர் ஊரின் குளத்தில் நீராடித் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டு குளக்கரையில் அமர்ந்து சிவபூஜை செய்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் "கற்கிமுகி' என்ற அந்த பூதம் குளக்கரைக்கு அருகில் ஓங்கி வளர்ந்திருந்த ஒரு மரத்தின் மீது வந்து அமர்ந்து நக்கீரரை பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு கிளையை அசைத்து ஓர் இலையை உதிர்த்தது.

மரத்திலிருந்து உதிர்ந்த இலை பாதி நீரிலும் பிரதி நிலத்திலுமாய் விழுந்தது. நக்கீரர் இதைப் பார்க்க நேரிட்டது. அதேநேரத்தில் நீரில் விழுந்த பாதி இலை மீனாகவும் நிலத்தில் விழுந்த பகுதி பறவையாகவும் மாறியது! மீன் பறவையை நீரினுள் இழுக்கிறது. பறவை மீனை நிலத்துக்கு இழுக்கிறது! இந்த அதிசயப் போராட்டத்தைப் பார்த்த வியப்பில் நக்கீரர் மனம் சிவபூஜையில் பதியவில்லை! இதைத்தானே பூதம் எதிர்ப்பார்த்தது. ஆஹா...

ஆயிரமாவது ஆள் அகப்பட்டு விட்டான் என்று அகமகிழ்ந்து

நக்கீரரைத் தூக்கிக் கொண்டு போய் தனது குகையில் அடைத்து விட்டது!

சிவபூஜை வழுவியவர்கள் எண்ணிக்கை இந்த நபரோடு ஆயிரம் ஆகிவிட்டது. எல்லோரும் எனக்கு விருந்து படைக்கத் தயாராய் இருங்கள். நான் போய்க் குளித்துவிட்டு

வருகிறேன்!'' என்று அந்தப்பூதம்

ஸ்நானம் செய்து வரக் கிளம்பிற்று!

குகையில் ஏற்கெனவே அடைபட்டுக் கிடந்தவர்கள் எல்லாம் புதிதாய் உள்ளே வந்த நக்கீரரைப் பார்த்து கண்டபடி திட்டினார்கள்! ""மகாபாவி! நீதான் எங்களுக்கு எமனாக வந்து சேர்ந்தாய். நீ மட்டும் வராமல் இருந்தால் அந்தப் பூதம் இன்னும் எத்தனையோ காலம் எங்களுக்கு அருமையாய் சாப்பாடு போட்டு வளர்த்திருக்கும். எல்லாவற்றையும் கெடுத்து குட்டிச் சுவராக்கி விட்டாயே! நீ வந்ததால் எண்ணிக்கை ஆயிரம் ஆகிவிட்டது. இப்போது அந்தப் பூதம் நம் எல்லோரையும் ஒரேயடியாய் விழுங்கப் போகிறதே... அய்யோ...

அய்யோ!'' என்று நக்கீரரைத் திட்டியும் தங்களுக்குள் புலம்பியும் அழுது தீர்த்தார்கள்!

நக்கீரருக்கு அவர்களைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. அதனால் அவர்களைப் பார்த்து, ""நீங்கள் எவரும் இப்படி பயந்து சாகவேண்டாம். என் அப்பன் முருகப்பெருமான் இருக்கிறான். அவனை மனதார நினைத்து உருகி வேண்டினால் ஒரு கணத்தில் நம் துயரைத் தீர்த்தருள்வான். முன்பு லட்சக்கணக்கானவர்களை சிறைபடுத்தி கிரவுஞ்ச மலையில் அடைத்து வைத்திருந்த அரக்கர்களைத் தன் வேலால் அவனையும் அந்த மலையையும் பிளந்த எம்பெருமான் முருகன், நிச்சயம் நம்மைக் காப்பான். அச்சம் அகற்றுக!'' என்று கம்பீரமாகக் கூறினார்.

நக்கீரர் பேசிய பேச்சில் பெரும் நம்பிக்கையும் உறுதியும் தோன்றுவதைக் கண்ட அவர்கள் முருகப் பெருமானை மனதார நினைத்துத் துதித்தார்கள்.

நக்கீரரும் முருகவேளைப் பலவாறு துதித்து, "உலகம் உவப்ப' என்று தொடங்கி "திருமுருகாற்றுப்படை' என்று பிற்காலத்தில் பெரிதும் புகழப்பட்ட அந்த இனிய பாடலை உள்ளன்புடன் பாடினார்.

அந்த தேனினும் இனிய பாடலைச் செவியுற்ற செந்தமிழ்க் கடவுளாகிய கந்தபெருமான் தமது திருக்கரத்தில் விளங்கும் வேலை வீச அது அந்த மலைக்குகையையும் கற்கிமுகி என்ற அந்த பூதத்தையும் பிளந்து நக்கீரரையும் மற்றவரையும் காப்பாற்றியது!

திருச்செந்தூர் திருப்புகழ் பாடல், "முலைமுகந்திமிர்ந்த கலவையுந்துலங்கு'' என்ற பாடலில் ""மலைமுகஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு வழிதிறந்த செங்கை வடிவேலா'' என்ற அடிகளில் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.


 

புதன், 29 ஏப்ரல், 2015

TRB PG TAMIL:எட்டுத்தொகை நூல்கள்


 எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை நூல்கள் (1) அகம் சார்ந்தவை (2) புறம் சார்ந்தவை (3) இரண்டும் சார்ந்தவை என்று மூன்று வகையாக அமையும். அவற்றுள்,
 

  • அகம் சார்ந்தன

  • 1.நற்றிணை
    2.குறுந்தொகை
    3.அகநானூறு
    4.ஐங்குறுநூறு
    5.கலித்தொகை

    என்ற ஐந்துமாகும்.
     

  • புறம் சார்ந்தன

  • 1.புறநானூறு
    2.பதிற்றுப்பத்து

    என்ற இரண்டுமாகும்.

  • அகமும் புறமும் கலந்தமைந்த தொகுதி

  • பரிபாடல் மட்டுமே.

    இனி ஒவ்வொரு நூலின் அமைப்பும் சிறப்பும் பற்றிக் காண்போம்.

    2.2.1 நற்றிணை
     

    அகநானூறு போல் மிக நீண்டனவாகவும் குறுந்தொகை போல் மிகச் சிறியனவாகவும் அமையாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட அளவினதான 400 அகவல்கள் நற்றிணை என்ற தொகுப்பில் உள்ளன. இதன் அடியளவு 9 முதல் 12 அடிகள். இதில் 110, 379 ஆம் எண்ணுள்ள பாடல்கள் ஆகிய இரண்டும் 13 அடிகள் கொண்டவை. இந்த நூலுக்கு அமைந்த திருமால் வணக்கப் பாடல் பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியது.

    நற்றிணையில் உள்ள பாடல்களை இயற்றிய புலவர்கள் நூற்று எழுபத்தைவர். 56 பாடல்களை இயற்றியோர் பெயர் தெரியவில்லை. இதனைத் தொகுத்த புலவர் பெயரும் தெரியவில்லை. தொகுத்தவன் பாண்டியன் பன்னாடு தந்த மாறன் வழுதி.

    உண்மைக்காதல் பிறவிதொறும் தொடரும் என்பதனை,

    சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவில்
    பிறப்புப் பிறிதாகுவ தாயின்
    மறக்குவென் கொல்என் காதலன் எனவே (397)

    என்னும் அடிகள் காட்டுகின்றன.

    செல்வக் குடும்பத்தில் பிறந்தவள் தலைவி. அவளை மணந்தவன் குடி வறுமையுற்றது. அந்நிலையிலும் தலைவி தன் செல்வத் தந்தையின் உதவியை எதிர்பாராமல், எளிய உணவை வேளை தவறி உண்டு வாழ்கிறாள்.

    கொண்டகொழுநன் குடிவறன் உற்றெனக்
    கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
    ஒழுகுநீர் நுணங்கு அறல்போலப்
    பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே (110)

    என்ற பகுதி இதனைக் காட்டுகிறது.

    ஒருவனுக்கு உண்மையான செல்வம் என்பது, தன்னை நம்பியோரின் துன்பம் கண்டு மனம் நெகிழ்ந்து அவர்களின் துயர்துடைக்கும் கருணை உள்ளமே என்கின்றார் இன்னொரு புலவர்.

    சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
    புன்கண் அஞ்சும் பண்பின்
    மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே (210)

    பெரியோர் நன்கு ஆராய்ந்து ஒருவரோடு நட்புக் கொள்வர் என்றும், மாறாக நட்டபின்னர் அதன் பொருத்தத்தை ஆராயார் என்றும் ஒருவர் கூறுகின்றார். (32)

    முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
    நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் (355)

    என்ற நற்றிணைப் பகுதி 'பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்' என்றதிருக்குறளை நினைவூட்டக் காணலாம்.

    ஏனைய சங்க நூல்கள் போன்றே இந்நூலும் தமிழர் பண்பாட்டின் விளக்கமாகவும், உவமைகள் நிரம்பிய உயர்ந்த இலக்கியச் செல்வமாகவும் விளங்குகின்றது.

    2.2.2 குறுந்தொகை
     

    குறுகிய அடிகளால் ஆன 400 ஆசிரியப்பாக்களால் ஆன நூல் குறுந்தொகை ஆயிற்று. இதில் நாலடி முதல் எட்டடி வரை அமைந்த பாடல்கள் இடம் பெற்றன. இதனை இயற்றியோர் 205 புலவர்கள். இதற்குக் கடவுள் வாழ்த்தொன்று உண்டு. இதன் ஆசிரியர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இது முருகவேள் வணக்கமாக அமைந்துள்ளது. இதனைத் தொகுத்தவர் பூரிக்கோ என்பவர். தொகுப்பித்தார் பெயர் தெரியவவில்லை. இதற்குப் பேராசிரியரும், நச்சினார்க் கினியரும் எழுதிய உரைகள் கிடைக்கவில்லை. இதன் 235 பாடல்கள் பல்வேறு உரையாசிரியர்களால் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளன.

    இயற்பெயரான் அன்றிச் சிறப்புப் பெயரால் அறியப்பட்ட புலவர் பலர் இதில் இடம் பெறுவர். அணிலாடு முன்றிலார், குப்பைக்கோழியார், விட்ட குதிரையார் என்பவை அவற்றுள் சில. தாம் பாடிய பாடல்களில் இடம் பெற்ற அழகிய தொடரே இப்பெயர்களுக்கு அடிப்படையாக அமைந்தது.

    காதல் வாழ்வின் பல்வேறு சிறப்புகளும் இந்நூலில் சுவைபடக் கூறப்பட்டுள்ளன.

    இம்மை மாறி மறுமை ஆயினும்
    நீயாகியர் என் கணவனை
    யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே (49)

    (இம்மை = இப்பிறவி ; மறுமை = அடுத்து வரும் பிறவி; நெஞ்சுநேர்பவள் = மனம் கவர்ந்தவள்)

    என்ற பகுதி, காதலின் அமரத் தன்மைக்குச் சான்றாகும்.

    நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
    நீரினும் ஆரளவின்றே (3)

    என்ற பகுதியால் காதலின் ஆழமும், விரிவும், உயர்ச்சியும் உணர்த்தப்படுகின்றன.

    ஒரு பெண், ஊரார் பேசும் பழிச் சொல்லால் தன் உள்ளம் நைவதற்கு உவமையாக, யானையால் மிதிக்கப்பட்ட நன்கு முதிர்ந்த அத்திப் பழத்தைக் குறிப்பிடுகிறாள். (24)

    மற்றொரு தலைவி தனக்கும் ஆகாது, தன் காதலனுக்கும் பயன்படாது வீணாகும் தன் பெண்மை நலத்துக்கு, கன்றும் உண்ணாமல், கலத்திலும் (பாத்திரத்திலும்) கறக்கப்படாமல், மண்ணில் வீழ்ந்து பாழாகும் நல்ல ஆவின் பாலை உவமை கூறுகின்றாள் (27). தாய்வழியிலும் தந்தை வழியிலும் உறவினராகாத ஓர் ஆணும் பெண்ணும் அன்பினால் ஒன்றுபடுதலுக்குச் செம்மண் நிலத்திலே பெய்த மழையை உவமை கூறினார் ஒரு புலவர். அவரே செம்புலப்பெயல் நீரார். அவரது இறவா வரிகள்:

    செம்புலப் பெயல்நீர் போல
    அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே      (40)

    (புலம் = நிலம்)

    தன் காதலனாகிய கடுவனை இழந்த பெண் குரங்கு, தன் இளங்குட்டியைத் தன் இனத்திடம் விட்டு, மலையிலிருந்து வீழ்ந்து உயிர் துறத்தலை ஒரு புலவர் காட்டுகின்றார்.

    ஆடவனுக்குக் கடமையே உயிராக, வீட்டிலிருந்து இல்லறம் செய்யும் பெண்களுக்குத் தம் ஆடவரே உயிர் என்பதை ஒரு செய்யுள்,

    வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல்
    மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்      (135)

    என்று கூறுகிறது.

    2.2.3 ஐங்குறுநூறு
     

    இந்த நூலில் உள்ள பாடல்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளும் உயர்ந்த அளவாக ஆறு அடிகளும் கொண்டவை. இந்நூல் 500 குறும்பாடல்களால் ஆனது. ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் பாடியுள்ளனர். ஒவ்வொரு நூறும் பத்துப் பத்துக்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பத்தும் ஒரு பெயர் பெறுவது சிறப்பு. கருப்பொருள், உரிப்பொருள், பேசும் பாத்திரம், கேட்கும் பாத்திரம் முதலியவற்றுள் ஒன்று அப்பெயர்க்கு அடிப்படையாக அமையும்.

    இதற்கும் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்து இயற்றியுள்ளார். இதனைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார். தொகுப்பித்தவர் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவர். இதன் 129, 130 ஆம் செய்யுட்கள் கிட்டவில்லை.

    இதில் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்ற முறையில் திணைகள் கோக்கப்பட்டுள்ளன. இதற்குச் சுருக்கமான பழைய உரை கிடைத்துள்ளது.

    இதனை இயற்றியோர் பற்றிய விவரம் வருமாறு:

    மருதம்- ஓரம்போகியார்
    நெய்தல்- அம்மூவனார்
    குறிஞ்சி- கபிலர்
    பாலை- ஓதலாந்தையார்
    முல்லை- பேயனார்

    இதில் பல புதுமைகள் உண்டு. இதில் தொண்டிப்பத்து என்னும் பகுதி அந்தாதியாகவுள்ளது. மேலும் இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என்ற கிளவிகளும் தொடர்ச்சியாக உள்ளன. இதில் உள்ளுறையும் இறைச்சியும் மிகுதி. அவ்வாறே புதிய கிளவிகளும் பலவாக அமைந்துள்ளன.

    ஒரு குறிப்பிட்ட அரசனை வாழ்த்திப் பாடும் போக்கை இந்நூலில் மட்டுமே காண முடியும். 'வாழி ஆதன் வாழி அவினி!' என்ற அடி பாடல்தோறும் இடம் பெறலை வேட்கைப் பத்தில் காண்க.

    நாட்டில் பசியும் பிணியும், வறுமையும், அறமற்ற செயல்களும் இல்லாது ஒழியவும், அன்பும் அறமும், ஒழுக்கமும், செல்வ வளமும் பெருகவேண்டும் என வேண்டும் பெண்களை இந்நூலிலன்றி வேறெதிலும் காண முடியாது.

    தன் கணவன் ஊரில், பாலை நிலத்தில் உள்ள கிணற்றடியில் கிடக்கும் அழுகல் நீர், தன் தாய் வீட்டில் தான் உண்ட தேன்கலந்த பாலை விட இனிமையாகக் கருதும் பெண்ணைக் கபிலர் அறிமுகப்படுத்துகின்றார். (203)

    2.2.4 அகநானூறு
     

    இது 13 அடிச்  சிற்றெல்லையும் 31 அடிப்பேரெல்லையும் உடைய 400 பாடல்களைக் கொண்டது. ஆசிரியப்பா யாப்புடையது. பாரதம் பாடிய பெருந்தேவனார் இதற்கு வாழ்த்துப் பாடியுள்ளார். அது சிவ வணக்கப் பாடலாகும். இதற்கு நெடுந்தொகை என்ற பெயரும் உண்டு. இது களிற்று யானை நிரை (1-120) மணிமிடை பவளம் (121-300) நித்திலக்கோவை (301 - 400) என்று மூன்று தொகுதிகளாக உள்ளது. தொகுப்பு முறையில் இது ஏனையவற்றை விட வேறுபட்டுள்ளது. பாட்டின் எண் கொண்டு அதன் திணையைச் சொல்லும் வகையில் இவை கோக்கப்பட்டுள்ளன. ஒற்றைப்படை எண் கொண்ட 200 செய்யுட்கள் பாலைக்கு உரியன. 2, 8 என்ற எண்களில் முடிவன குறிஞ்சிக்குரியன. 4 என்ற எண்ணில் முடிவன முல்லைக்கும், 6 என்ற எண்ணில் முடிவன மருதத்திற்கும், 10, 20 என்றவாறு முடிவன நெய்தலுக்கும் உரியன. மதுரை உப்பூரிகுடி கிழாரைக் கொண்டு இதனைத் தொகுப்பித்தவன் உக்கிரப்பெருவழுதி என்பர். இதில் 175 புலவர்களின் செய்யுட்கள் உள்ளன. மூன்று பாடல்கட்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

  • அரசியல், சமூக வரலாறுகள்
     
  • அகநானூறு பண்டைத் தமிழரின் அரசியல் வரலாற்றையும், சமூக வரலாற்றையும் அறியப் பெருந்துணை செய்யவல்லது. மூவேந்தர் பலர் பற்றியும் குறுநில மன்னர் பலர் பற்றியும் இது பதிவு செய்துள்ளது. வெண்ணிப் போர், ஆலங்கானத்துப் போர் முதலான பெரும்போர்கள் உவமை வாயிலாக விளக்கப்பட்டுள்ளன. யவனரின் கப்பல்கள் முசிறித் துறை முகத்திற்குப் பொன்னொடு வந்து, மிளகொடு திரும்பியதாக ஒரு செய்யுள் குறிப்பிட்டுள்ளது (149). ஒரு கன்னிப் பெண்ணின் மனத்தைக் கவர்ந்து, 'அவளைத் தெரியாது' என்று வாதிட்ட அறம் அற்ற ஒருவனுக்குக் கள்ளுர் அவையினர் தண்டனையளித்த செய்தியும் (256) அகநானூற்றில் காணப்படுகிறது.

    வெண்ணிப்போரில் புண்பட்ட பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து மாண்ட செய்தி கேட்டுச் சான்றோர் பலர் மாண்ட செய்தியும் (58) பேசப்படுகின்றது. குடவோலை முறையில் அவை (கிராம சபை) உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டதை 77 ஆம் பாட்டால் அறியலாம். மக்களின் அன்றாட வாழ்வு பற்றியும், பழக்க வழக்கங்கள் பற்றியும் அரிய செய்திகள் இதில் உள்ளன. சிலவற்றை மட்டும் இங்குக் குறிப்போம்.

    மக்கட்பேற்றின் சிறப்பினை,

    இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
    மறுமை உலகமும் மறுவின்று எய்துப
    செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
    சிறுவர்ப் பயந்த செம்மலோர்             (66)

    (இம்மை = இப்பிறவி; இசை = புகழ்; மறுமை உலகம் = வான் உலகம்; மறு = குறை; எய்துப = அடைவார்கள்; செறுநர் = பகைவர்; செயிர்தீர் = குற்றமற்ற; பயந்த = பெற்ற; செம்மலோர் = உயர்ந்தோர்)

    என்று ஒரு புலவர் குறிக்கின்றார்.

    தமிழர் திருமணமுறை பற்றி இந்நூலின் 86, 136 ஆகிய செய்யுட்கள் விரிவாகக் கூறுகின்றன.

  • இசை
     
  • இந்நூலின் 82, 111, 352, 301 ஆகிய பாடல்கள் பண்டைத் தமிழிசையைப் பற்றி அறிய உதவுகின்றன. 352ஆம் செய்யுள் இசை இலக்கணத்தைக் குறிப்பிடுகின்றது.

  • இதிகாசச் செய்திகள்
     
  • சேதுக்கரையில் ஓர் ஆல மரத்தடியில், கடல் கடந்து இலங்கைக்குச் செல்வது பற்றிய ஆலோசனையில் இராமன் ஆழ்ந்திருந்த போது, ஆலமரத்திலிருந்து பறவைகள் ஒலி எழுப்பி இடையூறு செய்தன. அப்போது இராமன் தலைநிமிர்ந்து பார்த்த பார்வையில் அவை ஒலி அடங்கின. தலைவியின் திருமணச் செய்தி அறிந்த அலர்தூற்றுவோர் அடங்கிப் போயினர் என்பதை உணர்த்தத் தோழி இராமனது நிகழ்ச்சியை எடுத்துக் கூறுகிறாள். கம்பர் காப்பியத்தில் கூட இல்லாத இச்செய்தியை அகநானூறு (70) கூறுகிறது. கண்ணபிரான் கோபியர் தழை உடுத்திக் கொள்ளுதற்கு ஏற்ப மரத்தின் கிளையை மிதித்த செய்தி ஒருபாட்டில் காணப்படுகிறது. (59)

    2.2.5 கலித்தொகை
     

    கலிப்பா என்னும் பாவகையால் யாக்கப்பட்ட 150 பாடல்கள் கொண்டது இந்நூல். அகப்பொருளைப் பாட ஏற்ற யாப்பாகத் தொல்காப்பியரால் சொல்லப்பட்டவை கலியும் பரிபாடலும் என்பது நினையத்தக்கது.

    பிற்காலத்து வெண்பாவொன்று, இதிலுள்ள ஐந்திணைகளையும் பாடிய புலவர்களைக் குறிப்பிடுகின்றது. இதன்படி, பாடியோரும் அவர் பாடிய திணையும் பின்வருமாறு அமையும்.

    பாலை- பாலை பாடிய பெருங்கடுங்கோ
    குறிஞ்சி- கபிலர்
    மருதம்- மருதன் இளநாகனார்
    முல்லை- சோழன் நல்லுருத்திரன்
    நெய்தல்- நல்லந்துவனார்

    நல்லந்துவனார் இந்நூலைத் தொகுத்தவர் ஆவார். நூல் முழுவதனையும் ஒரு புலவரே பாடியிருக்க வேண்டும் என்ற கருத்தும் உண்டு.

    காதல் வாழ்வின் நுட்பங்களை மிக அழகாகக் கூறுவது கலித்தொகை. இதன் உவமைகள் அழகு மிக்கன; ஓசை இனிமை மிக்கது; எண்ணங்கள் மிக உயர்ந்தன.

    இருக்கின்ற ஒரே ஆடையைப் பகுத்து உடுத்து வாழும் கொடிய வறுமை நிலையிலும், மனம் ஒன்றி வாழும் வாழ்க்கையே சிறந்த இல்லற வாழ்க்கை என்பதை ஒரு புலவர் பின்வருமாறு பாடுகிறார்.

    ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
    ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை !     (18)

    காதலன் துன்பத்தில் பங்கு ஏற்றலைவிடக் காதலிக்குப் பெரிய இன்பம் இல்லை என்கிறாள் ஒரு தலைவி.

    அன்பறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு
    துன்பம் துணையாக நாடின் அதுவல்லது
    இன்பமும் உண்டோ எமக்கு?           (6)

    (அன்பற = அன்பு நீங்க; சூழாதே = கருதாமல்; ஆற்றிடை =வழியில்; நாடின் = சிந்தித்தால்)

    மனத்தில் வருத்தம் உண்டாகும்படி பிரிந்து செல்வதைப் பற்றி எண்ணாமல் உன்னுடன் வந்து வழியில் ஏற்படும் துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதைவிட வேறு இன்பம் எங்களுக்கு உண்டா? என்பது பொருள்.

    கலித்தொகையில் மதுரையும், வையையும் மீண்டும் மீண்டும் புகழப்படுகின்றன. பாண்டியனும் பல பாடல்களில் புகழப்படுகிறான். இதில் இராமாயணக் கதை நிகழ்வுகளும், பாரதக் கதை நிகழ்வுகளும் உவமைகளாக ஆளப்பட்டுள்ளன. ஆயர்கள் ஏறுதழுவிப் பெண்ணை மணத்தல் இந்நூலில் மட்டுமே காணப்படுகிறது. கைக்கிளை, பெருந்திணை ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள் இந்நூலில் மட்டுமே காணப்படுகின்றன.

    2.2.6 புறநானூறு
     

    புறப்பொருள் பற்றிய 400 அகவற்பாக்களைக் கொண்டது புறநானூறு. இதனைத் தொகுத்தாரும், தொகுப்பித்தாரும் யாவர் எனத் தெரியவில்லை. 267, 268 ஆகிய இரு செய்யுட்களும் அழிந்தன. 266 ஆம் செய்யுட்குப் பின்னர் வரும் செய்யுள்களில் சிதைவுகள் உள்ளன. இதற்கு வணக்கச் செய்யுள் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். அது சிவ வணக்கமாகும். இதற்கு 266 செய்யுட்கள் வரையில் பழைய உரை உண்டு. இதனை இயற்றியோர் 157 பேர் என்பர். பல பாடல்களை இயற்றியோர் பெயர் தெரியவில்லை. (16 செய்யுட்கள்) இதனை நமக்குத் தேடித் தந்தவர் தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயராவார்.

    தமிழரின் பொற்கால நாகரிகத்தை நாம் அறிந்து போற்றத் துணை நிற்கும் அரும்பெரும் பெட்டகம் புறநானூறு. தமிழகத்தின் அரசியல், சமூகநிலை, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், கலைச்சிறப்பு, வானியல் முதலிய அறிவுத் துறைகளில் பெற்றிருந்த வளர்ச்சி ஆகியவற்றை இந்நூல் நிழற்படம் போல் தெரிவிக்க வல்லதாகும்.

    சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடைய மூவேந்தர்கள், பாரி, காரி, ஓரி, பேகன், ஆய், அதியமான், நள்ளி என்னும் கடையெழு வள்ளல்கள் முதலிய பலருடைய போர் வெற்றிகள், கொடைவண்மை ஆகியவற்றை இந்நூல் விளக்கமாகத் தருகின்றது. மன்னர் சிலர்க்கும், புலவர் பெருமக்கட்கும் இடையே நிலவிய வியத்தகு நட்புறவும், புலவர்களின் தன்மான வாழ்வும் உலகம் வியக்கும் தன்மை உடையனவாகும்.

    கணவனை இழந்த பெண்டிர் தம் கூந்தலையும், வளையலையும், பிற அணிகளையும் களைதல், உடன்கட்டை ஏறி உயிர்விடல், இறந்தாரைத் தாழியில் இட்டுப் புதைத்தல், தீ மூட்டி எரித்தல், வீரர்கட்கு நடுகல் நட்டு வழிபடல், நோய் கொண்டு இறந்த அரச குடும்பத்தார் உடலை வாளால் கீறிப் புதைத்தல், கணவனை இழந்த பெண்டிர் கைம்மை நோன்பு மேற்கொள்ளுதல் முதலான தமிழர் பண்பாட்டு நிலைகளை இந்நூல் காட்டி நிற்கின்றது.

    தமிழர் கையாண்ட இசைக்கருவிகளைப்பற்றியும், இருபத்தொரு இசைத் துறைகளை பற்றியும் பன்னெடுங்காலத்திற்கு முன்பே தமிழர் வானியல் அறிவில் மேம்பட்டிருந்தனர் என்பது பற்றியும் இந்நூலிலிருந்து அறியலாம்.

    மானம் அழிய வந்த பொழுது, வடக்கு நோக்கியிருந்து இறத்தலையும் (219) பகைவர்க்கு முன்னறிவிப்புச் செய்து படையெடுத்தலும் (9) அக்கால மரபுகளாம்.

    உலகம் உள்ள அளவும் நிலைத்திருக்கத்தக்க உயர்ந்த அறநெறிகளின் அரங்கமாக இந்நூல் விளங்குகின்றது.

    மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (18)

    செல்வத்துப் பயனே ஈதல்
    துய்ப்போம் எனினே தப்புந பலவே (189)

    எவ்வழி நல்லவர் ஆடவர்
    அவ்வழி நல்லை வாழிய நிலனே (187)

    நெல்லும் உயிர்அன்றே நீரும் உயிர்அன்றே 
    மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் (186)

    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா (192)

    நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
    அல்லது செய்தல் ஓம்புமின் (195)

    அறநெறி முதற்றே அரசின் கொற்றம் (55)

    என்பவை அவற்றுள் சிலவாகும்.

    2.2.7 பதிற்றுப் பத்து
     

    பத்துச் சேர மன்னர்கள் பற்றிப் பத்துப் புலவர்கள் தலைக்குப் பத்துச் செய்யுள் வீதம் பாடிய 100 செய்யுட்களின் தொகுப்பு இது. இதன் முதற்பத்தும், இறுதிப்பத்தும் அழிவுற்றன. எஞ்சியவை 80 செய்யுட்களே. இதனைத் தொகுத்தார் தொகுப்பித்தார் இன்னார் எனத் தெரியவில்லை. இதற்குப் பழைய உரையொன்று உண்டு.

    இந்நூலின் ஒவ்வொரு பத்துக்கும் ஒவ்வொரு பதிகம் உண்டு. அதன் முற்பகுதி செய்யுளாகவும் பிற்பகுதி உரைநடையாகவும் உள்ளன. இது, பாடிய புலவர், பாடப்பட்ட மன்னன், அவன் பெற்றோர், செய்த அருஞ்செயல்கள், ஆண்ட கால அளவு, பாட்டுகளின் பெயர்கள், புலவர் பெற்ற பரிசில் முதலிய அரிய செய்திகளைத் தருகின்றது.

    இந்நூலிற் காணும் பத்துக்களை இயற்றியோர் பெயரும், பாடல் பெற்ற மன்னர் பெயரும் பின்வரும் அட்டவணை வழி அறிக.

    பத்தின் பெயர்

    பாட்டுடைத் தலைவன்

    பாடிய புலவர்

    முதற் பத்து

    -

    -

    இரண்டாம் பத்துஇமயவரம்பன்
    நெடுஞ்சேரலாதன்
    குமட்டூர்க்
    கண்ணனார்
    மூன்றாம் பத்துபல்யானைச்
    செல்கெழுகுட்டுவன்
    பாலைக்
    கௌதமனார்
    நான்காம் பத்துகளங்காய்க்
    கண்ணிநார்முடிச்சேரல்
    காப்பியாற்றுக்
    காப்பியனார்
    ஐந்தாம் பத்துகடல்பிறக்கோட்டிய
    செங்குட்டுவன்
    பரணர்
    ஆறாம் பத்துஆடுகோட்பாட்டுச் சேரலாதன்காக்கை பாடினியார்
    நச்செள்ளையார்
    ஏழாம் பத்துசெல்வக் கடுங்கோ
    வாழியாதன்
    கபிலர்
    எட்டாம் பத்துதகடூர் எறிந்த பெருஞ்சேரல்
    இரும்பொறை
    அரிசில் கிழார்
    ஒன்பதாம் பத்துஇளஞ்சேரல் இரும்பொறைபெருங்குன்றூர் கிழார்
    பத்தாம் பத்து

    -

    -


    இந்நூலில் உள்ள ஒவ்வொரு செய்யுட்கும், அதிலுள்ள ஒரு அழகிய தொடரால் தலைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. அருவியாம்பல், தசும்பு துளங்கு இருக்கை, பிறழ நோக்கு இயவர் என்பன அவற்றுள் சில.

    ஒவ்வொரு பாட்டுக்கும் திணை, துறை, வண்ணம், தூக்கு என்பன காணப்படுகின்றன. இவை இசையுடன் பாடப்பட்டன போலும். இதன் நான்காம்பத்து அந்தாதித் தொடையால் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    சேர வேந்தர்களின் வீரமும் கொடையும், அவர்தம் தேவியரின் அழகும், சிறப்பும், கற்பு மேம்பாடும் இப்பாடல்களில் நன்கு விளக்கப்பட்டுள்ளன.

    பந்தர், கொடுமணம் என்ற இரண்டு ஊர்களின் செல்வ வளமும் இவ்விடங்களில் சேரரின் பண்டக சாலைகள் இருந்தமையும் அறியத் தக்கன. அண்மையில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகள் இப்பகுதிகளின் பண்டைப் பெருமையைக் காட்டவல்லன.

    நன்மக்கள் வேண்டி வேள்வி செய்தல் உண்டு என்பதனை இந்நூலால் அறிகின்றோம். அந்தணரின் ஆறு கடமைகள் இன்னின்னவென்று ஒரு செய்யுள் (24) கூறுகின்றது. அறநெறிப்படி ஆளப்படும் அரசுக்குத் தடையாக அமைவன இன்னவை என இந்நூல் கூறுகின்றது. அதனைக் காண்க:-

    சினனே காமம் கழிகண்ணோட்டம்
    அச்சம் பொய்ச்சொல் அன்புமிக உடைமை
    தெறல் கடுமையொடு பிறவும் இவ்வுலகத்து
    அறம் தெரி திகிரிக்கு வழியடையாகும்      (22)

    (சினன் = கடுங்கோபம்; கழிகண்ணோட்டம் = அளவுக்கு விஞ்சிய அருள்; தெறல் கடுமை = மிகக் கடுமையாகத் தண்டித்தல்; திகிரி = சக்கரம்)

    2.2.8 பரிபாடல்
     

    எட்டுத்தொகை நூல்களுள் அகமும், புறமும் கலந்து அமைந்த நூல் பரிபாடலாகும். பரிபாடல் என்பது யாப்பு வகையால் பெற்ற பெயர். இதில், திருமால், முருகன், கொற்றவை என்ற தெய்வங்கள் பற்றியும், மதுரை நகர் பற்றியும், வையையாறு பற்றியும் புகழ்ந்து பேசும் எழுபது பாடல்கள் இருந்தன. அழிந்தவை போக இப்போது 22 பாடல்களும் சில சிதைந்த உறுப்புகளுமே எஞ்சியுள்ளன. புறத்திரட்டிலிருந்து வேறு இரு பாடல்கள் கிடைத்துள்ளன.

    இந்நூலைத் தொகுத்தார் தொகுப்பித்தார் பற்றிய விவரம் கிடைக்கவில்லை. இதிலுள்ள பாடல்களை இயற்றியோர் பதின்மூவர். இவற்றுக்கு இசை வல்லுநர்களைக் கொண்டு பண் வகுக்கப்பட்டுள்ளன. பாடலாசிரியர் பெயருடன், இசை வகுத்தவர் பெயரும், பண்ணின் பெயரும் ஒவ்வொரு பாடலுக்கும் கீழ் தரப்பட்டுள்ளன. கண்ணகனார் முதல் மருத்துவன் நல்லச்சுதனார் ஈறாகப் பத்து இசையறிஞர்கள் பண் வகுத்துள்ளனர்.

    இதில் திருமால் பற்றியனவும், முருகன் பற்றியனவுமான புராணச் செய்திகள் மிகுதி. மேலும், புதிய இலக்கணக் கூறுகளும், புதிய சொல்லாட்சியும், வடசொற் கலப்பும் மிகுந்து காணப்படுகின்றன.

    முருகப் பெருமானுக்கும் திருமாலுக்கும் தொடர்புடைய புராணச் செய்திகளும், வையையில் நீராடுவாரின் பல்வேறு செயற்பாடுகளும் சுவையுடன் இதில் கூறப்பட்டுள்ளன. இசை, கூத்து ஆகிய கலைகள் பற்றிய நுட்பமான செய்திகள் இதில் உண்டு. திருப்பரங்குன்றத்தில் ஓவிய மண்டபம் இருந்த செய்தியை அறியலாம்.

    பிற உயிர்களைக் கொல்வோர், வெகுளி உடையோர், அறநெறியைப் பின்பற்றாதார், கூடா ஒழுக்கம் கொண்டோர், மறுமையை நம்பாதோர் ஆகியோர் முருகன் அருள் பெற மாட்டார்கள் என்று ஒரு பாட்டுக் கூறுகின்றது. (5 : 73-77)

    முருகப்பெருமானிடம் பொன்னும் பொருளும் போகமும் வேண்டாமல், அருளும் அன்பும் அறனும் வேண்டும் அன்பர்களையும் இந்நூலில் காணலாம்.

    - யாம் இரப்பை
    பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
    அருளும் அன்பும் அறனும் மூன்றும்
    உருள் இணர்க் கடம்பின் ஒலிதாரோயே (5 : 78-81)
     
     

    TRB PG TAMIL:இன்னாது அம்ம இவ்வுலகம் இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே.


    ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
    ஈர்ந்தன் முழவின் பாணி ததும்ப
    புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
    பைதல் உண் கண் பனிவார் புறைப்பப்
    படைத்தோன் மன்ற அப்பண்பிலான்
    இன்னாது அம்ம இவ்வுலகம்
    இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே.

    - புறநானூறு 194

    துன்பத்தை எதிர்கொள் - துன்பத்தை இன்பமாகக் காண்
    இன்னாதது தான் உலகம் - அதில் இனியவை காண்பர் உலகின் இயல்பு உணர்ந்தோர்.

    உலகம் இன்னாதது தான் - அதன் இயல்பினை உணர்ந்துகொண்டால் அது இனிமையானதுதான்.

    இனியது என்பது இன்பமானது,
    இன்னாதது என்பது துன்பமானது என நாம் வரையறைசெய்து வாழ்ந்து வருகிறோம்.

    நம்மைச்சுற்றி நாம் வாழும் வாழ்க்கையில் கணக்கிலடங்கா இன்பமும், துன்பமும் நிறைந்திருக்கிறது. இன்பம் வந்தபோது மகிழும் மனது துன்பம் வந்தபோது துவண்டு போகிறது.

    எதிர்மறை எண்ணங்கள் நம்மைத் துவளச் செய்யும்
    நேர்மறை எண்ணங்கள் நம்மை எழச் செய்யும்

    "கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள்,
    தம் சிறகுகளை நம்பியே அமர்கின்றன"

    ஆனால் மனிதன் மட்டும் எதிர்காலம் குறித்த அச்சத்திலேயே தன் வாழ்நாளில் பாதியைத் தொலைத்துவிடுகிறான்.

    இன்பம் துன்பம் என்பதற்கான அளவீடு அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதிலேயே அமைகிறது.

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

    - கண்ணதாசன்

    மனிதப் பிறவி, ஓர் ஒப்பற்ற பிறவி. விலங்குத் தன்மையிலிருந்து விலகி, மனிதத் தன்மையை அடைந்து, இறைமைத் தன்மையை அடைய அது முயல வேண்டும். இயல்பாக, மனித வாழ்க்கை குறைவுடையது. குறையினின்றும் நீங்கி, நிறைவாழ்வு பெறுதல் வேண்டும். ஒரு விதத்தில் உலகியல், துன்பமாகவே இருந்தாலும், அதை இன்பமாக மாற்ற வேண்டும்.


     


    வினாத்தாள் வரிசை C
    வினா எண்  76
    .இளிவரல் மெய்ப்பாட்டின் 'வருத்தம்' என்ற பொருள் உணர்த்தும்  உட்கருத்து
    A.அச்சம்           B.செயல்
    C. முயற்சி          D.துன்பம்
    தொல்காப்பியம்- மெய்ப்பாட்டியலில் உள்ள இளிவரல் எனும் மெய்ப்பாட்டில் இடம்பெறும் வருத்தம் என்பதன் உட்கருத்தின் பொருள் குறித்து இவ்வினா அமைந்துள்ளது.
     தொல்காப்பியம்- மெய்ப்பாட்டியலுக்கு பல்வேறு உரைகள் உள்ளன.கீழ்கண்ட இரு சான்றுகளின் அடிப்படையில் வருத்தம் என்பதன் உட்கருத்து இங்கு ஆராயப்படுகின்றது.
    சான்று-1
    தொல்காப்பிய சூத்திரம்     
      மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு
           யாப்புற வந்த இளிவரல் நான்கே.
    கருத்து : இஃது, இளிவரல் எனும் மெய்ப்பாட்டு வகை நான்கும் அவற்றின் பொதுவியல்பும் குறிக்கின்றது.

    பொருள் : மூப்பு = முதுமை; பிணி = நோய்; வருத்தம் = இடுக்கண், அதாவது அல்லல்; மென்மையொடு = எளிமை, அஃதாவது நொய்ம்மையுடன்; யாப்புறவந்த இளிவரல் நான்கே = தொடர்ந்து படரும் மானக்குறை நான்குவகைத்தாம்.
    இச்சூத்திரம் கட்டும் இளிவரல் உயிர்வாழ ஒல்லாமல் மானம் குன்றவரும் பழிநிலையைக் குறிக்கும்.
    சான்று நூல்
    தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை
    நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல்  தொகுதி - 2
    பதிப்பாசிரியர்:
    செந்தமிழ்ச் செல்வர்', தமிழாசிரியர்
    'நல்லாசிரியர்'
    முனைவர் ச. சாம்பசிவனார்,எம்.ஏ., பிஎச்.டி.,
    ஆசிரியர், 'தமிழ்மாருதம்'
    மதுரை

    சான்று -2
    வருத்தமாவது இடுக்கண்.அஃதாவது எளிதின் முடியாமல் அரிதின்
    முயலும் முயற்சியான் வரும் துன்பம்.

    மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்
    தாமிரந் துண்ணும் அளவை
    ஈன்ம ரோஇவ் வுலகத் தானே
    (புறம்-74)
    என்பது தனக்குற்ற வருத்தம் பற்றி வந்த இளிவரலாம்.

    ஒன்றுஇரப்பான் போல்எளி வந்தும் சொல்லும்-உலகம்
    புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன்
    அன்னான் ஒருவன்றன் ஆண்டகை விட்டென்னைச்
    சொல்லஞ் சொற்கேட்டி ...?
    (கலி-47)
    என்பது பிறர்க்குற்ற வருத்தங் காரணமாகப் பிறந்த இளிவரல்.

    சான்று நூல்

    தொல்காப்பியம் பொருளதிகாரம் உவமவியல்
    ஆராய்ச்சிக் காண்டிகையுரை
    பாவலரேறு ச.பாலசுந்தரம் 
    இளிவரல்  = தொடர்ந்து படரும் மானக்குறை என்பதால் வருத்தம் என்பதற்கு துன்பம் என்ற பொருளே சரியனதாகும் எனலாம்
    மேற்காண் சான்றுகளின் அடிப்படையில் வருத்தம் என்பது பயன் தராத வீண்முயற்சியின் விளைவாக உண்டாகும் துன்பம்  எனலாம். எனவே வருத்தம் என்பதன் உட்கருத்து  துன்பம் என்பதே இதன் வழி புலானாகின்றது

     

    அஜிதனும் அரசுப் பள்ளியும்

    அஜிதனுக்கு எல்கேஜி, யுகேஜி முடிந்ததும் பத்மநாபபுரம் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்த்தோம். பள்ளியில் சொன்னார்கள், "பையன் சராசரிக்கும் மிகக் கீழே, அவனுக்கு எழுதவே வரவில்லை" என. சோதித்துப் பார்த்தால் அது உண்மை. அஜிதனுக்கு சிறு வயதிலேயே இடது கைப்பழக்கம். அதைப் பொது வாகக் கவனித்திருந்தோம் என்றாலும், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மழலையர் பள்ளியில் அவனை முரட்டுத்தனமாக வலது கைக்குப் பழக்கியிருக்கிறார்கள். அவன் அதற்குச் சரிவராதபோது அவனைத் தொடர்ந்து அடித்திருக்கிறார்கள். சின்ன வயதில் மழலையர் பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அவன் தொடர்ந்து அடம்பிடிப்பான். அது சிறுவயதில் என் வழக்கமும்கூட.

    நான் ஐந்தாம் வகுப்பு வரை அடம்பிடித்தவன். "நீ இப்படி ராப்பகலா அவன்கிட்டே கொஞ்சிக் குலவினா அவன் எப்படி ஸ்கூலுக்குப் போவான்..?" என்று என் மனைவி கேட்பாள். அதற்காகப் பிள்ளையைக் கொஞ்சாமல் விட முடியுமா? ஆக, அஜிதன் மனதில் பள்ளிக் கல்வி பற்றி மிக ஆழமான ஒரு கசப்பை, எதிர்ப்புணர்வை அந்த மழலையர் பள்ளி உருவாக்கியிருந்தது.

    நான் அவனை மீண்டும் இடது கைக்கு மாற்ற முயன்றேன். அது இன்னும் சிக்கலை உருவாக்குகிறது என்று தோன்றவே விட்டுவிட்டேன். வலது கைக்குப் பழகிவிட்டிருந்தான். ஆனால், எழுத்துகள் மிகமிகச் சிக்கலாக இருக்கும். சுந்தர ராமசாமியிடம் ஒருமுறை இதைப் பற்றிச் சொன்னேன். "நீங்க டீச் பண்ணாதீங்கோ… நீங்க அவன் எதிர்காலத்தைப் பத்தி கவலைப்பட்டு, அவன் மேல ஏறி உட்கார டிரை பண்ணுவீங்க… வேணுமின்னா, ட்யூஷன் வைங்க… அப்டியே விட்டுருங்க… செடிகள்லாம் பாறையையே மீறி வளந்திருது. குழந்தைகளுக்கு எல்லாத்தையும் தாண்டி வளரக்கூடிய உயிர்ச்சக்தி இருக்கு…" என்றார்.

    அப்போது ஆரம்பித்த டியூஷன். ஆனால், டியூஷன் ஆசிரியர்கள் என்னைத் தெருவில் பார்த்தால் புலம்புவார்கள். "இ-ங்கிற எழுத்தை மட்டும் ஒரு ரெண்டாம் கிளாஸ் பையனுக்கு ஒரு வாரமா சொல்லித் தாறேன் சார்…" என்பார்கள். அவன் எப்படியோ ஒன்றை மட்டும் கற்றுக் கொண்டான். அது, மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளைப் போன்ற பாவனை. இதை எங்கோ அவன் கவனித்திருக்க வேண்டும். ஆசிரியைகள் எது சொன்னாலும் வாயை ஒருமாதிரி காட்டுவான். மண்டையை உருட்டுவான். அவர்கள் மெல்லமெல்ல அவனை அடிப்பதை நிறுத்தவே அதைத் தொடர ஆரம்பித்தான். ஆனால், இது வெளியேதான். வீட்டில் அவன் அசாதாரணமான சுட்டி. அவனுடைய நகைச்சுவை உணர்வையும் சாகசத்தன்மையையும் நான் ஒவ்வொரு கணமும் வியந்துகொண்டிருந்தேன்.

    இரண்டாம் வகுப்பு ஆசிரியை என்னிடம் சொன்னார், "சார், பையனுக்கு எதாவது டிரீட்மென்ட் எடுங்க சார்… பொறவு சொல்லலேன்னு சொல்லப்படாது."

    அடிவயிற்றைக் கவ்விய அச்சத்துடன் "என்ன மேடம்?" என்றேன்.

    "அவனுக்கு பிரெய்ன் குரோத்ல என்னமோ பிரச்சினை இருக்கு சார்…."

    நான் கடும் சினத்துடன், "சும்மா எதாவது சொல்லி அவன் வாழ்க்கையக் கெடுத்திராதீங்க… அவனுக்கு ஒண்ணு மில்லை. கைமாறி எழுதவெச்சதுனால கொஞ்சம் எழுத்து மோசமா இருக்கும்… அதுக்காக?" என்றேன். எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது.

    "நாங்க சொல்லியாச்சு... இனி எங்க மேலே பழி சொல்லக் கூடாது."

    " ஏய்… இனி இந்தப் பேச்சை யாராவது எடுத்தீங்கன்னா வெட்டிப் போட்ருவேன்…" என்று தெருவில் நின்று கூவினேன். பையனை அணைத்தபடி கிட்டத்தட்ட ஓடினேன்.

    என் மனைவியிடம் சொன்னபோது அவள் கதறிவிட்டாள். ஒன்றும் தெரியாமல் அஜிதனும் அழுதான். அவனையே பார்த்தேன். உண்மையிலேயே மூளைத்திறனில் ஏதாவது சிக்கலா? வீடு முழுக்கப் புத்தகங்கள். இரவுபகலாகப் புத்தகம் பார்க்கும் புத்தகப் பிரியன் அவன். அந்த வயதிலேயே நான் அவனுக்குப் பல நூறு கதைகளைச் சொல்லியிருந்தேன். கணிசமான கதைகளை அவனே மீண்டும் சொல்வான். மந்த புத்தி என்று சொல்லும்படி என்ன இருக்கிறது? ஒருவேளை வளர வளரத்தான் தெரியுமோ? ஒன்றும் புரியவில்லை.

    சில நாட்கள் கழித்துத்தான் அவன் பள்ளியில் அப்படி நடிப்பதைக் கண்டுபிடித்தேன். ஆனால், அது அவனுக்கே தெரியாது. அவனுக்கு எல்லா மிஸ்ஸும் 'கெட்ட மிஸ்'தான். ஆசிரியர்கள் அவனை மனமார வெறுத்தார்கள். எல்லாப் பாடங்களிலும் அவனுக்குச் சிவப்பு மைதான். எப்போதோ ஒருமுறை எழுபது மதிப்பெண் கணிதத்துக்கு வாங்கியது தவிர்த்தால், அவன் எப்போதுமே தேர்வுகளில் வென்றதில்லை.

    ஆனால், மூன்றாம் வகுப்பு முதல் அவன் பெரும் வாசகன். அவன் 'சிவகாமியின் சபத'த்தை வாசிக்கும்போது ஐந்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். ஆசிரியையோ அவனுக்கு நூற்றுக்கு பூஜ்யம் மதிப்பெண் அளித்தார். சோவியத் ருஷ்ய வெளியீடுகளான அறிவியல் நூல்களை இரவுபகலாகப் படிப்பவனுக்கு அறிவியலில் ஒரே பாடத்தில் ஒரே வினாவைக்கூட எழுதத் தெரியவில்லை. முனைவர் அ.க.பெருமாளின் அத்தனை வரலாற்று நூல்களையும் ஆறாம் வகுப்புக்குள் அவன் வாசித்திருந்தான். வரலாற்றில் ஒருபோதும் இரட்டை இலக்க மதிப்பெண் வென்றதில்லை.

    முதல் பிரச்சினை எழுத்துதான். பூக்கோ சொல்லியிருக்கிறார் என்று நினைவு, நம் பண்பாட்டில் முதலில் குழந்தையின் விரல்களுக்கு ஆக்ரோபேடிக்ஸ் சொல்லிக் கொடுக்கிறோம் என. அதைக் கற்காமல் உலகமே அவனுக்கு இல்லை. எழுத முடியாமையில் இருந்து உருவான கசப்பு காரணமாகப் பள்ளி மேலேயே கடும் துவேஷம்.

    அதன் பின் நகர்கோவிலில் புகழ்பெற்ற கிறிஸ்துவப் பள்ளியில் அவனைச் சேர்த்தோம். அவன் வாழ்க்கையை நரகமாக்கியது அந்தப் பள்ளி. கூடவே, என் வாழ்க்கையையும். அனேகமாகத் தினமும் எனக்கான கட்டளைகள். அதன்படி பள்ளிக்குச் சென்றால், மணிக் கணக்காக யார் யாருக்காகவோ காத்திருக்க வேண்டும். அப்புறம், கொலைக் குற்றவாளியை நடத்துவதுபோல நடத்துவார்கள். இதுநாள் வரையிலான வாழ்க்கையில் நான் மிக அதிகமாக எங்காவது அவமானமும் சிறுமையும் பட்டிருக்கிறேன் என்றால், அது அந்தப் பள்ளியில்தான்.

    அஜிதனை, அவன் ஒரு உதவாக்கரை என்றும் முட்டாள் என்றும் முழுமையாக நம்பச் செய்தது அந்தப் பள்ளி. அந்தப் பள்ளி அளித்த அழுத்தம் காரணமாக நானும் அக்காலத்தில் அவனிடம் சற்றே கடுமையாக நடந்துகொண்டிருக்கிறேன். அடித்திருக்கிறேன். புத்தகங்களைக் கிழித்து எறிந்திருக்கிறேன். அதன் பின் அவனை அணைத்துக் கண்ணீருடன் சமாதானம் செய்வேன். இரவில் தூங்கும் அவனைப் பார்த்தபடி நிற்பேன்.

    அவன் ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் என் கழுத்துவலிக்காக காயத்திருமேனி எண்ணெயைப் போட்டு நீவிவிட அவனிடம் சொன்னேன். நான் குப்புறக் கிடக்க அவன் என் மீது அமர்ந்திருந்தான். மனைவி அவ்வழியாகச் சென்றாள். என்னிடம் "ஏன், சொல்லியிருந்தா நான் போட்டுவிட மாட்டேனா?" என்றாள்.

    "இதுல போட்டிருக்கு… உலகத்திலேயே நமக்கு யாரை ரொம்பப் பிடிக்குமோ அவங்கதான் போட்டுவிடணும்னு…" என்றேன்.

    சட்டென்று முதுகில் கண்ணீர் சூடாக விழுவதை அறிந்தேன். எழுந்து பார்த்தால் அழுதுகொண்டிருந்தான்.

    "என்னடா?" என்றேன்.

    குறுகி அமர்ந்து அழுதவன், "உனக்கு நெஜமாவே என்னைய ரொம்பப் பிடிக்குமா?" என்றான். "என்னடா… இது முட்டாள்தனமா கேட்டுட்டு… அப்பாவுக்கு உலகத்துலயே உன்னைத்தாண்டா ரொம்பப் பிடிக்கும்" என்றேன். அப்படியே சீறல்போன்று ஒலி எழுப்பி அழுதான். "நான் நெனைச்சேன், உனக்கு என்னைப் பிடிக்கல்லேன்னு… நீ பெரிய ஆளு… எனக்கு ஒண்ணுமே தெரியல. அதான் நீயும் அம்மாவும் என்னை அடிக்கிறீங்க. நான் இனிமே ஸ்கூலுக்குப் போகல. என்னைய ஓட்டலிலே சேத்துவிடு. நான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சு ரூபா கொண்டுவந்து அம்மாட்ட குடுப்பேன்."

    அந்த நிமிடத்தில் என் நெஞ்சு பொங்கியதை இப்போதும் கை நடுங்காமல் எண்ண இயலவில்லை. எப்போதோ அந்த ஓட்டல் பேச்சு மனைவி வாயில் வந்திருக்கிறது - படிக்காவிட்டால் ஓட்டல் வேலைக்குத்தான் போக வேண்டும் என்று. அப்படியே அவனை அணைத்துக்கொண்டேன். "நீ மக்குனு யாருடா சொன்னா?" என்றேன்.

    "எங்க மிஸ் எல்லாருமே சொல்றாங்க. அம்மாவும் சொன்னாங்க. நீகூடத்தான் சொன்னே..." என்றவனை அணைத்துக்கொண்டு, "நீ மக்குன்னா உலகத்துல யாருமே புத்திசாலி இல்லடா" என்றேன்.

    அன்று அவனை வெளியே கூட்டிப்போய்ப் பேசினேன். நான் ஒரு மாணவனாக எத்தனை கொடுமைப்படுத்தப்பட்டேன் என்று சொன்னேன். என்னைப் பெரும்பாலான ஆசிரியர்கள் வெறுத்தார்கள். அடித்தார்கள். எனக்குக் கணக்கு கொஞ்சம் கூட வரவில்லை. என் அப்பா என் விருப்பத்தை மீறி என்னை வணிகவியல் பாடத்தில் சேர்த்தார். நான் அதில் ஒரு முறைகூடத் தேர்ச்சி பெறவில்லை, படிப்பை முடிக்கவும் இல்லை.

    "எங்க அப்பாட்ட பணம் இல்லை. அதனால பயப்பட்டார். நான் அப்படி இல்லை. நீ இனிமே உனக்குப் பிடிச்சதை மட்டும் படி. இன்னும் மூணு மாசம். இந்தப் பள்ளிக்கூடத்திலேருந்து உன்னைக் கூட்டிட்டுப்போய் கவர்மென்ட் ஸ்கூலிலே சேர்க்கிறேன். இனிமே உன்னை யாருமே படிப்பு விஷயமா திட்ட மாட்டாங்க… போருமா?"

    மறு வருடம் அரசுப் பள்ளியில் சேர்த்தபோது நண்பர்கள் பலரும் எதிர்த்தார்கள். ஆனால், அப்பள்ளி அவனுக்குக் காட்டிய உலகமே வேறு. வீட்டில் சாப்பாடு இல்லாமல், பையன்கள் மதியம் சாப்பிடாமல் பசித்திருப்பார்கள் என்ற தகவல் அவன் உலகையே பல நாட்கள், பல மாதங்கள் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. தனிமையில் அதை எண்ணி அவன் கண்ணீர் விட்டிருக்கிறான். அவனது சக மாணவர்கள் சனி, ஞாயிறில் கூலிவேலைக்குச் சென்று வருவார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவே அவனுக்குக் கஷ்டமாக இருந்தது. பெரும்பாலான நாட்களில் அவன் கொண்டுபோகும் சாப்பாட்டை பையன்கள் சாப்பிட, அவன் சத்துணவாக அளிக்கப்படும் உணவை உண்பான். மீன், இறைச்சி கொண்டுபோகும் நாட்களில் பெரிய டிபன் கேரியர் நிறைய கொண்டுசென்றாக வேண்டும். எங்கே முத்தாரம்மன் கோயிலில் கஞ்சி ஊற்றினாலும் பையன் களுடன் சேர்ந்து போய்ச் சாப்பிட்டு விடுவான். புதிய பள்ளி அவனுக்கு நண்பர்களை அளித்தது. நண்பர்கள் அவனுக்கு தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தார்கள். பள்ளிக்கு மகிழ்ச்சியாகச் செல்லும் அஜிதனை முதல்முறையாகக் காண ஆரம்பித்தோம். பழைய பள்ளியில் விளையாட்டுகூட விளையாட்டு ஆசிரியரால் அளிக்கப்படும் ஒரு பயிற்சி. ஒருவரோடு ஒருவர் பேசுவதும் சிரிப்பதும் கடுமையான குற்றம். அதைவிட மோசமான விஷயம், நட்பு என்றால் தவறு என்றே கற்பிக்கப்பட்ட குழந்தைகள் அங்கே படித்தார்கள். அந்தஸ்து, சாதி, மதம் நோக்கி கணக்கிட்டே அங்கே நட்பு இருந்தது.

    இந்த அரசுப் பள்ளியில் எல்லாமே கட்டற்றுதான். சட்டை கிழியாமல் அஜிதன் பள்ளி விட்டு வரும் நாட்கள் குறைவு. சண்டைகள் சச்சரவுகள். அதைவிடத் தீவிரமான நட்புகள். பரீட்சைக்கு முந்தைய நாள் இரவில் கூப்பிட்டுப் பொங்கும் பேரார்வத்துடன் சிலபஸ் என்ன என்று கேட்கும் சக மாணவன் அஜய்குமார்தான் அஜிதனின் உயிர் நண்பன். ஒருவனின் பையிலிருந்து பணத்தைப் பிடுங்கி இன்னொருவன் சாப்பிடலாம். "எங்க வீட்ல அம்மை தேங்காத் தொவையலையே போட்டுக் கழுத்தறுக்கிறாடா. பணமில்ல பாத்துக்கோ…உங்கம்மைட்ட நல்ல கோழியா குடுத்தனுப்பச் சொல்லு'' என்று எந்தவிதமான கூச்சமும் இல்லாமல் சொல்லியனுப்பலாம். இந்த உலகமே வேறு.

    அவனுடன் எப்போதும் பேசிக்கொண்டே இருந்தேன். அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவனிடம் நான் எதை வேண்டுமானாலும் பேசலாம். "தோளுக்கு மேலே வளர்ந்தா தோழன்னு சொல்றாங்களே அப்பா" என்பான். "ஆமாடா. அது ரைட்டுதான்.." என்றால், "அப்றம் சொல்லு மச்சி…" என்பான். அதுதான் அவன் பாணி.

    ஒரு கட்டத்தில் அஜிதனுக்குப் புனைகதைகளில் ஆர்வம் போய் இயற்கையியலில் ஆர்வம் பிறந்தது. அதற்கு முதற்காரணம், சு.தியடோர் பாஸ்கரன். இரண்டாம் காரணம், அ.முத்துலிங்கம். அது தீயாகப் பற்றிக்கொள்ள அதிலேயே நாட்கள் நகர்ந்தன. பறவைகளைப் பார்ப்பது 'லைஃப் லிஸ்ட்' தயாரிப்பது, அதைப் பற்றிய நூல்களைச் சேகரிப்பது என ஒரு உக்கிரமான பொழுதுபோக்கு பற்றிக்கொண்டது. 'நேஷனல் ஜியாக்ரஃபிக்' சேனலில் ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு பெயர்கள் ஓடிக்கொண்டிருந்தன.

    "எவ்ளவு பேரு…" என்றேன். "அந்த லிஸ்ட்டுல ஒரு நாள் ஜெ.அஜிதன் பேரும் இருக்கும்" என்றான். அவனிடம் ஒரு கனவு உருவாகிவிட்டிருப்பதை நான் கண்டேன். வெற்றியும் தோல்வியும் காலத்தின் அளவிலா ஆட்டத்தில் எங்கோ, எப்படியோ தீர்மானமாகிறது. ஆனால், இதேவயதில் என்னை அலைக்கழித்தது இதேபோன்ற ஒரு பெருங்கனவுதான். உக்கிரமான மின்சாரம் ஓடும் கம்பிபோல என்னை அது தகிக்க வைத்தது அன்று. அந்த தகிப்பைக் கண்டேன். இளமைக்கு அழகு அத்தகைய கனவுதான்.

    அவனுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி இடையில் படி என்று சொல்வதும் இல்லை. அவன் மதிப்பெண்களைக் கவனிப்பதில்லை. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முடிந்தன. 460/500. 92%. கணிதத்தில் 99%. அறிவியலில் 97%. "அப்பா உன் மூஞ்சியில கரிய அள்ளிப் பூசிட்டேன்ல?" என்றான் சிரித்தபடி. "ஆமாடா" என்றேன். அஜிதன் சொன்னான்: "சும்மா ஜாலியாச் சொன்னேன்பா… உனக்காகத்தானே நான் படிச்சதே!"

    (ஜெயமோகன் எழுதிய 'தேர்வு' கட்டுரையின் சுருக்கம் இது. அஜிதன் இப்போது உதவி இயக்குநர். 'ஓ காதல் கண்மணி'யில் பணியாற்றியிருக்கிறார். )

    - ஜெயமோகன்,