வெள்ளி, 17 ஏப்ரல், 2015

TRB PG TAMIL:இனிமையாக கற்கலாம் இலக்கியம்... 1



ரு நவீன ஷாப்பிங் மால். வாசலில் இளைஞர்களும் இளைஞிகளும் காதல் மொழி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

நம் கதாநாயகன், பைக்கை நிறுத்திவிட்டு நடந்துவருகிறான். தொளதொளவென்று ஒரு சட்டை அணிந்திருக்கிறான்.

அவனை நெருங்கிய காதலி, 'என்னடா சட்டை இது? உனக்குக் கொஞ்சம்கூட நல்லா இல்லை' என்கிறாள்.

'ஏதோ, இதுதான் கைக்கு அகப்பட்டது' என்று அவன் உண்மையைச் சொல்லாமல், 'உனக்காகத்தான் கண்ணு' என்கிறான்.

'எனக்காகவா?'

'ஆமா!'

'நீ தொளதொளன்னு சட்டை போடறதுக்கும் எனக்கும் என்னடா சம்பந்தம்?'

'என் நெஞ்சுல நீ இருக்கேல்ல?'

'ஆமா, அதுக்கென்ன?'

'டைட்டா சட்டை போட்டா உனக்கு வலிக்கும்ல, அதான்!' என்கிறான் அவன். கைப்பையால் அவனை அடிக்க வருகிறாள் அவள்.

இதைக் கேலிப் பேச்சு என்று எடுத்துக்கொண்டால் கேலிதான். கவிதை என்று பார்த்தால் கவிதைதான்.

அதுவும் சாதாரணக் கவிதை இல்லை, கம்பன் கவிதை, யுத்தகாண்டத்தில் வரும் காதல் கவிதை.

யுத்தத்துக்கு நடுவே ஏதையா காதல்?

அப்படிப் பார்க்கப்போனால், மொத்த ராமாயணமும் காதல் காவியம்தான். பாலகாண்டம் தொடங்கி யுத்தகாண்டம்வரை ராமனுக்கும் சீதைக்கும் நடுவிலுள்ள காதலை அழகழகாகப் பாடுகிறார் கம்பர். 

கன்னிமாடத்தில் பார்த்த காதல், வில்லை முறித்த காதல், அதைக் கேட்டுக் களித்த காதல், கரம் பிடித்த காதல், காடு சென்றவன் பின்னால் நடந்த காதல், இருவரும் சேர்ந்து இயற்கையை ரசித்த காதல், காதலியைப் பிரிந்து தேடித் தவித்த காதல், அவன் வருவான் என நம்பிக்கையோடு தவமிருந்த காதல், அவளை மீட்பதற்காகக் கடலை வற்றவைத்து, அணைகட்டி, எவரோடும் மோதத் தயாராக இருந்த காதல், பலவிதமாகப் பேசப்படும் அக்கினிப் பிரவேசம்கூட, ஒரு கோணத்தில் காதல் சொட்டும் காட்சிதான்.

இருக்கட்டும், நாம் தொளதொள சட்டைக்கு வருவோம். அதற்கும் ராமனுக்கும் என்ன சம்பந்தம்?

யுத்தகாண்டத்தில் ராமன் போருக்குத் தயாராகும் காட்சியை வர்ணிக்கும்போது, 'கவசம் இட்டு இறுக்கி வீக்கினான்' என்கிறார் கம்பர். அதாவது, போர்க் கவசத்தை இறுக்கிக் கட்டினான்.

அதற்குக் கம்பர் சொல்லும் காரணம், 'தேவியைத் திரு மறு மார்பில் தீர்தலால் 'நோ இலள்' என்பது நோக்கினான்கொலோ?'

அதாவது, அவனுடைய மார்பில் தேவி சீதை எப்போதும் வீற்றிருப்பாள். இப்போது, அவளை ராவணன் கடத்திவிட்டான்.

ஆகவே, கவசத்தை இறுக்கிக் கட்டினாலும் அவளுக்கு வலிக்காது. அதனால்தான், ராமன் அப்படிக் கட்டினான் என்கிறார் கம்பர்.

இந்த விஷயத்தில் அவருக்கு முன்னோடி, திருவள்ளுவர். அவருடைய பிரபலமான இந்தக் குறளை எல்லாரும் வாசித்திருப்போம்:

நெஞ்சத்தார் காதலவர் ஆக, வெய்து உண்டல்
அஞ்சுதும், வேபாக்கு அறிந்து

இந்தக் காதலி சூடான பொருள்களைச் சாப்பிட மறுக்கிறாள். 'ஃபில்டர் காஃபி வேணாம், கோல்ட் காஃபி இருந்தா கொடுங்க' என்கிறாள்.

என்ன காரணம்?

அவள் நெஞ்சில் அவன் இருக்கிறானாம். சூடாக எதையாவது சாப்பிட்டால் அவனுக்குச் சுட்டுவிடுமே. அதனால் அவள் 'ஜில்'லாக மட்டுமே சாப்பிடுகிறாள்.

இந்தக் காட்சியைக் கவிஞர் வாலி ஒரு திரைப்பாடலில் எழுதினார், அவரது ஜாலியான ஆங்கில நடையில்:


Hot Boxல் வைத்த Food உண்பதில்லை, இனி       
வாழ்வில் எந்த நாளும், என்
உள்ளமெங்கும் நீ நின்றிருக்க, உனை
உஷ்ணம் தாக்கக்கூடும்!

சூடோ, ஜில்லோ, உணவு எல்லாருக்கும் அவசியம், காதலர்களுக்கும்தான். பட்டினி கிடந்து காதலிப்பது சிரமம்.

காதலனையோ காதலியையோ பிரிந்திருக்கும்போது, 'பாலும் கசந்ததடி' என்று வருந்துவது இயல்புதான். அதேசமயம் அவர்கள் சேரும்போது அந்தக் கொண்டாட்டத்தில் சாப்பாடும் ஒரு பகுதியாகிவிடுகிறது.

ஒரு காதலனும் காதலியும் திருமணம் செய்துகொண்டார்கள். மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

அந்தக் காதலியின் ஊரிலிருந்து ஒருவர் அவர்களைப் பார்ப்பதற்காக வந்தார். அவர் மனத்தில் ஒரே குறுகுறுப்பு.

காரணம், அந்தப் பெண் திருமணத்துக்கு முன்னால் செல்லமாக வளர்ந்தவள். சமையலெல்லாம் அவ்வளவாகத் தெரியாது.

இப்போது, கணவனுடன் தனியே குடும்பம் நடத்துகிறவள் எப்படிச் சமைக்கிறாள்? ஒருவேளை அவளுடைய சமையலில் ருசி இல்லை என்றால், கணவன் கோபப்பட்டுத் திட்டிவிடுவானோ? அவள் வருந்துவாளோ? இப்படியெல்லாம் கற்பனை செய்தபடி அவர்களுடைய வீட்டில் நுழைகிறார் அவர்.

சாப்பாட்டு நேரம். அவள் கணவன் சாப்பிட அமர்ந்திருக்கிறான். பரிமாறுவதற்காக அவள் வருகிறாள்.

ஆனால், இப்போது அவளைப் பார்த்தால், அடையாளமே தெரியவில்லை. பழைய அழகைக் காணோம். உடையிலெல்லாம் அழுக்கு, கண்களில் புகை படர்ந்திருக்கிறது

காரணம், சமைக்கும்போது அவள் தன்னுடைய காந்தள் மலர் போன்ற மெள்ளிய விரல்களால் தயிரைப் பிசைந்திருக்கிறாள்.

தயிர் இருக்கட்டும். காந்தள் மலர் சமாசாரம் என்ன?

ஆங்கிலத்தில் வெண்டைக்காயைப் பெண்ணின் விரல் என்பார்கள். தமிழில் காந்தள் மலர்.

கூகுளில் Flame Lily என்று தேடிப் பாருங்கள். இந்த உவமையின் பொருத்தமும் அழகும் தெரியும்!

இதுமட்டுமல்ல, இப்படிப் பல பொருத்தமான உவமைகள் பழந்தமிழ்ப் பாடல்களில் உண்டு. வாசிக்கும்போதே கூகுளையும் பயன்படுத்தினால், ஒவ்வொரு உவமையையும் புரிந்துகொண்டு ரசிக்கலாம்.

சரி, காந்தள் விரல் கொண்ட நம் கதாநாயகி என்ன செய்தாள்?

தயிர் பிசைந்தாள். பிறகு, அதைத் தன் உடையிலேயே துடைத்துக்கொண்டாள்.

அந்தத் தயிரை வைத்துதான் அவள் தன் கணவனுக்காகச் சுவையான புளிக்குழம்பு செய்திருக்கிறாள். அதற்காகத் தாளித்த புகை அவளுடைய மையிட்ட கண்களைக் கலங்கச் செய்திருந்தது.

இத்தனையும் செய்த பிறகு, அவள் தன் உடைகளை மாற்றிக்கொள்ளவோ, அலங்காரம் செய்துகொள்ளவோ நேரம் இல்லை, கணவன் சாப்பிட வந்துவிட்டான்.

ஆகவே, அவள் அப்படியே அழுக்கு ஆடையோடு, புகை படர்ந்த முகத்தோடு வந்து அவனுக்குப் புளிக்குழம்பைப் பரிமாறுகிறாள். அவன் சாப்பிடுவதை ஆவலோடு பார்க்கிறாள்.

கணவன் முதல் வாய்க் குழம்பை எடுத்து வாயில் போடுகிறான். 'நல்லாயிருக்கு' என்கிறான்.

சட்டென்று அவள் முகம் மலர்கிறது. அப்படி ஓர் அழகை அவளிடம் எப்போதும் கண்டதில்லையே என்று எண்ணி வியக்கிறார் வெளியே நின்றவர்.

கூடலூர்கிழார் எழுதிய குறுந்தொகைப் பாடல் இது:

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான் உழந்து அட்ட தீம்புளிப் பாகர்
'இனிது' எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள்நுதல் முகனே.


இந்தப் பாடல் என்ன சொல்லவருகிறது? கணவனுக்குச் சமைத்துப்போட்டு அவன் பாராட்டை எண்ணி மகிழ்வதுதான் மனைவிக்குக் கடமையா? இதுதான் காதலா?

அன்றைய இலக்கணப்படி கூடலூர்கிழார் இப்படி எழுதியிருக்கிறார். இதையே கொஞ்சம் திருப்பிப்போட்டு, காய்கறிகளை நறுக்கி, அதனால் அழுக்கான டிஷர்ட்டைக்கூட மாற்றாமல் நூடுல்ஸ் செய்து காதலிக்குப் பரிமாறி, அவள் 'சூப்பரா இருக்குடா' என்று சொல்ல, அதைக் கேட்டு மகிழும் காதலனைக் கற்பனை செய்துகொள்ளலாம்.

விஷயம் ஆணா, பெண்ணா என்பது அல்ல. தான் சமைத்ததை இன்னொருவர் பாராட்டினால் எல்லாருக்குமே சந்தோஷம் வரும், அந்த இன்னொருவர் தன் மனத்துக்குப் பிடித்தவராக இருந்துவிட்டால் அந்தச் சந்தோஷம் பலமடங்காக இருக்கும்.

'ஓர் ஆணின் இதயத்துக்கு ஷார்ட்கட், அவனுடைய வயிறுதான்' என்று ஓர் ஆங்கில வாசகம் உண்டு. அதையும் இருபாலருக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்.

சில நேரங்களில், வயிற்றுக்குச் சோறிடல் போதாது. இதயத்தில் அன்பு குறைந்துவிட்டால், எத்தனை சுவையான உணவும் கசப்பாகவே தோன்றும்.

இந்தக் காதலன், இன்னொருத்தி மீது ஆசை கொண்டுவிட்டான். ஆகவே, தன் காதலியைவிட்டு விலக ஆரம்பித்துவிட்டான்.

இதனால், அந்தக் காதலியின் தோழிக்குக் கோபம். அவன் சட்டையைப் பிடித்து, 'என்னய்யா சமாசாரம்?' என்று கேட்டுவிட்டாள்.

'ஒண்ணுமில்லையே' என்றான் அவன் சாதாரணமாக.

'நீ நடந்துக்கறது ஒண்ணும் சரியில்லை!'

'என்ன சரியில்லை? நான் எப்பவும்போலதான் இருக்கேன்!'

'அப்படியா? உன் காதலி முன்பெல்லாம் வேப்பங்காயைக் கொண்டுவந்து கொடுத்தாக்கூட, ஆஹா, என்னமா இனிக்குதுன்னு சொல்லிட்டுச் சாப்பிடுவே, ஆனா இப்போ, அவ பாதாம் அல்வாவே கொடுத்தாலும் கசக்குதுன்னு சொல்றே' என்றாள் அவள்.

இதுவும் குறுந்தொகைப் பாடல்தான். மிளைக்கந்தன் எழுதியது:

வேம்பின் பைங்காய் என் தோழி தரினே,
'தேம்பூங்கட்டி' என்றனிர், இனியே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெள் நீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
'வெய்ய உவர்க்கும்' என்றனிர்,
ஐய! அற்றால் அன்பின்பாலே!

முன்பு அவள் கொடுத்த வேப்பங்காய் 'தேம்பூங்கட்டி'யாக இனித்தது. இப்போது, அவள் தரும் தண்ணீர்கூடக் கசக்கிறது.

அதுவும் சாதாரணத் தண்ணீர் இல்லை, பாரி ஆட்சி செய்த பறம்பு மலையின் உச்சியில் பனிச்சுனையில் இருந்து எடுத்த தெளிவான நீர்.

அதையும் அவள் சாதாரணமான நேரத்தில் தரவில்லை. குளிர்ச்சியான தை மாதத்தில் தருகிறாள்.

அவனோ, 'சுடுகிறது' என்கிறான், 'உவர்க்கிறது' என்கிறான். காரணம், மனத்தில் அன்பில்லை.

இந்தப் பின்னணியோடு, 'இனிது' என உண்ட கணவனைப் பற்றி யோசித்தால், இன்னும் சில சுவையான கற்பனைகள் தோன்றும்.

உண்மையாகவே அந்தப் புளிக்குழம்பு சுவையாகத்தான் இருந்ததா? அல்லது, மனைவி தனக்காகச் சமைத்தது என்பதற்காக அவன் 'இனிது' என்றானா? அவள் முகத்தில் தோன்றும் அந்த மகிழ்ச்சியைக் காண்பதற்காக அப்படிச் சொன்னானா? நம்முடைய ஊகம்தான்!

 

காட்டில் ஓர் ஆண் மான், ஒரு பெண் மான். இரண்டுக்கும் ரொம்ப தாகம்.

வழியில் ஒரு சுனை. ஆனால் அங்கே கொஞ்சம்தான் தண்ணீர் இருந்தது. இருவர் குடிப்பதற்குப் போதாது.

ஆகவே, ஆண் மான் சொன்னது, 'நீ குடித்துத் தாகம் தீர்த்துக்கொள்'.

பெண் மான் சொன்னது. 'வேண்டாம், என்னைவிட நீதான் அதிகத் தாகத்துடன் இருக்கிறாய். நீ இந்தத் தண்ணீரைக் குடி'.

இப்படி மாறி மாறிப் பேசியபின் மான்கள் இரண்டும் ஒரு முடிவுக்கு வந்தன. 'சரி, இருவரும் ஒன்றாகக் குடிப்போம்'.

இரண்டு மான்களும் ஒரே நேரத்தில் சுனையில் வாய் வைத்தன. ஆனால், அந்த ஆண் மான் தண்ணீரைக் குடிக்கவில்லை. பெண் மானின் தாகம் தீரட்டும் என்று சும்மா பாவனை மட்டும் செய்தது.

அன்புள்ள மனம் அப்படிதான் செய்யும். குளிர் நீரைச் 'சுடுகிறது' என்று சொல்லாது, புளிக்குழம்பு எப்படி இருந்தாலும் 'உவ்வே' என்று சொல்லாது.

இந்த மான் கதை, 'ஐந்திணை ஐம்பது' என்ற நூலில் வருகிறது. மாறன் பொறையனார் எழுதிய பாடல் அது:

சுனைவாய்ச் சிறு நீரை எய்தாது என்று எண்ணிய
பிணைமான் இனிது உண்ண வேண்டி, கலைமான் தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்த நெறி


அப்படியானால், காதலன், காதலி என்ன செய்தாலும் பாராட்ட வேண்டுமா? குறை சொல்லக்கூடாதா? பிழை செய்தாலும் சும்மா இருக்க வேண்டுமா? சுட்டிக்காட்டித் திருத்துவதுதானே நல்ல நட்புக்கும் காதலுக்கும் அடையாளம்? அப்படிச் சொன்னால் கோபித்துக்கொள்வது சரியா? அது அக்கறையினால் வரும் சொல் என்று புரிந்துகொள்ள வேண்டாமா?

கணவனும் மனைவியும் தனித்திருக்கும் நேரம். அவள் அவனிடம் சில குறைகளைச் சொல்ல நினைக்கிறாள். தயக்கத்தோடு கேட்கிறாள், 'சொன்னா கோச்சுக்கமாட்டீங்களே?'

'தாராளமாச் சொல்லு' என்கிறான் அவன். 'பாகற்காய் கசக்கும்தான். ஆனா, அதுக்குள்ளே ருசியும் இருக்குமே, அதுபோல, நீ என்மேல குறை சொன்னாலும் அதுல ஒரு நல்லது இருக்கும், தயங்காம சொல்லலாம்.'

பாரதிதாசனின் 'குடும்ப விளக்கு'க் காட்சி இது:

தொண்டையிலே ஒன்றுமே அடைக்கவில்லை,
....துணைவன் அவன் சிறு கனைப்புக் கனைக்கலுற்றான்,
அண்டையிலே மங்கை போய் 'அத்தான்' என்றாள்,
....அத்தானா தூங்கிடுவான்? 'உட்கார்' என்றான்,
திண்தோளில் சந்தனத்தைப் பூசு கின்றாள்,
....சேயிழைக்கு முல்லை மலர் சூட்டுகின்றான்,
கண்டான்! கண்டாள்! உவப்பின் நடுவிலே 'ஓர்
....கசப்பான சேதி உண்டு கேட்பீர்' என்றாள்!


'மிதிபாகற்காய் கசக்கும், எனினும் அந்த
....மேற்கசப்பின் உள்ளேயும் சுவை இருக்கும்;
அதுபோலத்தானேடி? அதனால் என்ன?
....அறிவிப்பாய் இளமானே!' என்றான் அன்பன்.


இப்படி எல்லாரும் ஒத்துப்போவார்களா? சில நேரங்களில் முணுக்கென்று கோபம் வருமே.

பரவாயில்லை, 'மனம் விட்டுப் பேசினால் அந்தக் கோபம் போய்விடும்' என்கிறார் கண்ணதாசன். காதல் பாட்டில் அல்ல, குழந்தைப் பாட்டில்:

உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது, நம்
உள்ளம் என்னும் சூரியனைக் கோபம் மூடுது!
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது, பேசிக்
கலந்துவிட்டால் கோபம் மாறி நேசமாகுது!


காதலில் பேச்சுக்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது. என்னதான் பேசுகிறோம் என்று தெரியாமல் எதையாவது பேசிக்கொண்டே இருக்கச் சொல்லும் பருவமாச்சே!

பேசுவதற்குத் தனியாக ஓர் இடம் வேண்டுமே. அதற்கு எங்கே போவது?

ஒரு நாட்டுப்புறப் பாடலில் நாயகி நாயகனுக்கு வழி சொல்கிறாள்:

வேலி பிரிந்ததென்று விறகொடிக்க நான் வாரேன்,
கன்று தொலைந்ததென்று கரையோரம் நீ வருவாய்!


இப்படி ஆளுக்கு ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு ஓர் இடத்தில் சந்திக்கிறார்கள். மனம் விட்டுப் பேசி மகிழ்கிறார்கள்.

எவ்வளவு நேரம் பேசினாலும் சரி, கிளம்பும்போது மன நிறைவு இருக்காது. 'இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே!' என்றுதான் தோன்றும். அவள்(ன்) சென்ற பிறகு அந்த ஏக்கம் இன்னும் அதிகரிக்கும்.

காதலர்களுக்கே இப்படி என்றால், இன்னும் காதலைச் சொல்லாதவர்களுக்கு எப்படி இருக்கும்!

ஒரு காதலன் தன்னுடைய காதலியை எட்ட நின்று ரசிக்கிறான். அவள் கிளம்பிச் சென்ற பிறகும் அவளையே எண்ணித் தவிக்கிறான், 'யானை மாதிரி பெருமூச்சு விடறேன்' என்று அவனே சொல்கிறான்.

'இவ்ளோ தூரம் உணர்ச்சிவயப்படறியே, யாருய்யா அந்தப் பொண்ணு?'

'அட, உனக்குத் தெரியாதா அவளை?' ஆசையோடு வர்ணிக்கத் தொடங்குகிறான் அவன், 'சுனையில பூத்த பூக்களையெல்லாம் பறிச்சுத் தொடுத்துச் சூடியிருப்பாளே, அந்தத் தினை வயல்ல வர்ற கிளிங்களையெல்லாம் விரட்டுவாளே, கண்ணுகூட பூமாதிரி இருக்குமே, அந்தப் பொண்ணுதான்'.

'சரி, இன்னிக்கு வந்த கிளி நாளைக்கும் வரும், அவ கிளியை விரட்ட வருவா, போய்ப் பாரு!'

'ஆனா, நான் அவளை நினைச்சு ஏங்குறதும் என் மனசு அவகிட்ட இருக்கறதும் அவளுக்குத் தெரியுமோ, தெரியாதோ!'

குறுந்தொகையில் கபிலர் காட்டும் காட்சி இது:
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக்கிளி கடியும் பூங்கண் பேதை
தான் அறிந்தனளோ, இலளோ! பால் நாள்
பள்ளி யானையின் உயிர்த்து என்
உள்ளம் பின்னும் தன் உழையதுவே!


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக